Wednesday, 10 June 2020

திருப்பங்கள் அருள்வார் திருச்செந்தூர் செந்தில்நாதர்.!!

சிவன், பிரம்மன், திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் நானே என்று உலகறியச் செய்யும் விதமாய் திருமுருகன் வீற்றிருக்கும் அதி அற்புத தலம் திருச்செந்தூர். முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். அந்த அவதார நோக்கம் பூர்த்தியான திருச்செந்தூரே முருகனின் தலங்களில் தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.

தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் பாடல் பெற்ற தலம் திருச்செந்தூர். முருகன் தீம்புனல் அலைவாய் என்று தொல்காப்பியத்திலும் (களவு சூத் 23), வெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில் நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை (பாடல் 55) என்று புறநானூறிலும், திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய் (பாடல் 266) என்று அகநானூறிலும். உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய் என்று திருமுருகாற்றுப்படையிலும், சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் என்று சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேகங்கள் இன்புற்று உலவும் வானாகவும், ஆகாயத்தில் அன்று தோன்றிய காற்றாகவும், பெருங்காற்றுடன் கூடி நெருங்கி வரும் பகைகளை நீறாக்கும் வன்மை கொண்டுள்ள எரிகின்ற நெருப்பாகவும், கடல் என்னும் நீர் சூழ்ந்த ஆடையை அணிந்த பூமியாகவும், ஏழு உலகங்களும் புகழ்கின்ற நீயாகவும், நானாகவும், தாமரை மலரில் வாழும் பிரம்மனாகவும், தம் தந்தையாகிய சங்கரர் ஆகவும், அச்சம் தரும் அண்டக் கூட்டங்கள் ஆகவும், எதிலும் இறுதியில் தோயாது இருக்கின்ற மாயவனாகிய திருமாலின் மருகனே, தெளிந்த நீர்க்குளங்களும் சோலைகளும் நிறைந்த ஊரும் சங்குகள் விளங்கும் நகரும் ஆகிய திருச்செந்தூர் பதியில் வாழ்பவனே எமை ஆளும் வேலவனே என்று அருணகிரிநாதர் புகழ்ந்து பாடிய திருச்செந்தூர் பதி எண்ணற்ற சிறப்புகள் வாய்ந்தது.
திருச்செந்தூர் கடலைத் தாண்டி அமைந்திருந்த வீர மகேந்திரபுரியைத் தலைநகராகக் கொண்டு, சூரபதுமன் என்னும் அசுரன் ஆட்சி செய்து வந்தான். சிவனை நோக்கி பல தவம் புரிந்து ஏராளமான வரங்கள் பெற்றான். ஒரு வரம் பெற்றாலே தலைகால் புரியாதவர்கள் வாழும் உலகில் பல வரம் பெற்றவன் சும்மா இருப்பானா? அசுர பலங்கொண்டு மூவுலகையும் வென்று தேவாதி தேவர்களை துண்புறுத்த துவங்கினான்.
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவர்களை மண்ணிற்குள் அனுப்பிய அந்த ஈசனுக்கு தெரியாதா இதற்கு எதிர்விணை என்ன செய்ய வேண்டுமென்று?

தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். அதிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீபபொறிகளை கங்கை ஏற்று சரவணப் பொய்கையில் இட அவை ஆறு குழந்தைகளாக மாறின. பார்வதியின் திருக்கரங்களால் குழந்தைகள் ஒண்றிணைந்து ஆறுமுகத்துடனும், பன்னிரு திருக்கரத்துடனும் பகலவனை மிஞ்சும் ஞான ஒளியுடன் வளர்ந்தது. உரிய காலம் வந்ததும் சிவன் தன் ஞான சக்தியை வேலாயுதமாக வழங்க, லட்சத்து ஒன்பது படை வீரர்களுடன் தென்திசை வந்தார் திருமுருகன்.
செந்தூர் வேலன் இப்பதிக்கு வருவான் என்பதை ஞானத்தால் அறிந்த தேவர்களின் குருவான வியாழ பகவான் திருச்சீரலைவாய் கடலோரம் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகன் அவர் மூலம் அசுரர்களின் வரலாற்றை கேட்டறிந்தார். பின்னர் தனது படைத்தளபதி வீரபாகுவை தூது அனுப்பினார். ஆனால் தூதனை சூரன் எள்ளி நகையாட வினைப்பயனாய் போர் மூண்டது.
இறை சக்தியின் முன்னால் வேறு எந்த சக்தியாலும் வெல்ல முடியாது என்பதை நிரூபித்த சுந்தரவடிவேலன் தன் வேலாயுதத்தால் சூரனையும் அவனது தம்பி, பிள்ளைகளையும் வீழ்த்தினார். செயலற்ற மாமரமாய் நின்ற சூரனை ஞானவேல் பிளக்க ஒரு புறம் சேவலாகவும், மறுபுறம் மயிலாகவும் மாறின.
சேவலைத் தனது வெற்றிக் கொடியாகவும், மயிலைத் தனது வாகனமாகவும் ஏற்றுக் கொண்டார். சம்காரம் முடிந்ததும், முருகப் பெருமான் தனது தந்தையாகிய சிவனை பூஜை செய்ய விரும்பிய போது, வியாழ பகவான் தேவதச்சனான மயனை அழைத்து உருவாக்கியதே திருச்செந்தூர் தலமாகும்

சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இத்தலத்து இறைவன் ‘செயந்தி நாதர்' என அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இப்பெயரே ‘செந்தில்நாதர்' என மருவியது. தலமும் ‘திருசெயந்திபுரம்' என அழைக்கப்பெற்று ‘திருச்செந்தூர்' என மருவியது. முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாகவும் அமைந்துள்ளது.
இக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணியர் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்யும் கோலத்திலேயே காட்சி தருகிறார். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார். தலையில் ஜடாமுடியுடன், வலக்கை மேற்கையில் சக்தி ஹஸ்தமும், கீழ்க்கையில் பூஜைக்குரிய மலருடனும், இடது மேற்கையில் ஜெப மாலையும், கீழ்க்கையை இடுப்பில் வைத்தும் காட்சி தருகிறார்.
தெய்வானையை மணப்பதற்கு முன்னுள்ள பிரம்மச்சரிய கோலமாகும். இதனால் இருபுறமும் வள்ளி, தெய்வானை கிடையாது. இவரது பாதத்தின் அருகில் வலப்புறம் வெள்ளியால் ஆன ஸ்ரீபெலியும், இடப்புறம் தங்கத்தாலான ஸ்ரீபெலியும் உள்ளன. கருங்கல்லிலான இவருடைய அற்புதக் காட்சியை வேறு எங்கும் காண முடியாது.
மூலவரின் இச்சிலை மன்னர் திருமலை நாயக்கரின் பிரதிநிதியான வடமலையப்பபிள்ளை என்பவரால் திருநெல்வேலி குறுக்குத்துறையிலிருந்து கல் எடுத்துச் செய்யப்பட்டதாகும். மூலவருக்கு நேர் எதிரில் சிவனின் வாகனம் நந்தியும், முருகனின் வாகனமாக இந்திரனும், சூரபத்மனும், இருமயில்களாக உள்ளனர்.
மூலவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.
மூலவரின் கருவறைக்கு இடது பக்கத்தில் உள்ள சிறிய வாசல் வழியாக குனிந்து சென்றால் மூலவரின் பின்பக்கமாக சென்று அவருடைய வலது பக்கம் வந்து விடலாம். அங்கு ஐந்து லிங்கங்களைத் தரிசிக்கலாம். உலகை ஆளும் பஞ்ச சக்திகளும் சிவனே என்று சுட்டிக்காட்டும் விதமாக முருகப் பெருமான் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இறைவனை தரிசித்தாலே புண்ணியங்கள் கோடி என்பர். இந்த சந்நிதியின் சற்று முன்பக்கம் மேற்கூரையில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியாக தேவர்கள் பூஜை செய்வதற்கு வந்து செல்வதாக ஐதீகம் நிலவுகிறது.
மூலவர் மற்றும் பஞ்சலிங்கங்களைத் தரிசித்து விட்டு, இடது பக்கமாக வந்தால் முதலில் ஜெயந்தி நாதரை தரிசிக்க முடியும். இவரே மூலவரான பாலசுப்ரமணியரின் உற்சவ மூர்த்தியாவார். இருபக்கமும் வள்ளி தெய்வானை உள்ளனர். வீதி உலா வருதல், யாக சாலைக்கு எழுந்தருளல், சூரபத்மனை வதம் செய்வது, தங்கத் தேரில் பவனி வருவது அனைத்தும் இவர்தான். இவரது சந்நிதியில் இடது பக்கத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது. அது சந்திரலிங்கம் எனப்படுகிறது.
அடுத்ததாக சண்முகர் சந்நதி அமைந்துள்ளது. இவர் ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளில் பத்து கைகளில் பத்து விதமான ஆயுதங்களுடனும், வலக்கைகளில் ஒன்றை ஆசிர்வதித்தும், இடக்கைகளில் ஒன்றை தன்னுடைய பாதத்தைக் காட்டியும் அருள்புரிகிறார். இவருடைய இடது பக்கமுள்ள தெய்வானை குமுத மலரையும், வலது பக்கமுள்ள வள்ளி தாமரை மலரையும் கைகளில் ஏந்தியுள்ளார். இவரது முகத்தில் தழும்புகள் போன்று புள்ளிகள் உள்ளன. டச்சு நாட்டைச் சேர்ந்த கொள்ளைக்காரர்கள் இவரைக் கவர்ந்து சென்று தப்பி ஓடிய காலத்தில் எழும்பிய பெரும் புயலால் கடலில் இவரை வீச, மீன்களால் கொத்தப்பட்ட புள்ளிகள் என்பர் சிலர். இவரது வலது புறமுள்ள மாடக்குழியில் ஒரு லிங்கம் உள்ளது. அது ஆத்ம லிங்கம் எனப்படும்.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் முன்புறம் மன்னார் வளைகுடா கடல் ஆர்ப்பரிப்பதால் கோயிலின் மேற்கு வாசலில் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி ஸ்வாமிகள் காலத்தில் இக்கோபுரம் சுமார் 300 ஆண்டுகளுக்குள் தான் கட்டப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் தன் கனவில் தோன்றியிட்ட கட்டளையை ஏற்று, பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத நிலையிலும், தளராமல் இப்பணியை செய்து முடித்துள்ளார். பணியாளர்களுக்கு தினமும் சம்பளத்திற்குப் பதில் இலையில் பொதிந்த விபூதியையே அளித்துள்ளார். அவர்களும் பக்தி சிரத்தையோடு அதை பெற்றுக் கொண்டு தூண்டுகை விநாயகர் முன்னிலையில் அவற்றை பிரித்த போது, அது அவரவர்களுக்கு உரிய சம்பளமாக மாறியிருப்பதைக் கண்டு சிலிர்த்தனர்.

முருகப் பெருமான் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு முகம்மதியர் கனவில் தோன்றி, ஸ்வாமிகளுக்கு ஒரு மூடை உப்பு கொடுக்கப் பணித்துள்ளார். மறுநாள் காலை அம்மூடை முழுவதும் தங்கக்காசுகளாக நிரம்பியிருந்தது என்றும் இதுவே கோபுரம் கட்டி முடிக்கப் போதுமானதாக இருந்தது என்றும் கூறுவர். இக்கோபுரம் 9 நிலைகளுடன் 137 அடி உயரத்தில் 9 செப்பு கலசங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
இக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் நாழிக்கிணறு சென்று நீராட வேண்டும். கோவிலிலிருந்து சுமார் 200 அடி தூரத்தில் இக்கிணறு அமைந்துள்ளது. தரை மட்டத்திலிருந்து 24 அடி ஆழமுள்ள இக்கிணற்றுக்குள் படிகள் மூலம் இறங்கினால் ஒரு சதுர அடி பரப்பளவில் நாழிக்கிணறு அமைந்துள்ளது. இக்கிணற்றிலிருந்து நீரை அள்ள அள்ள குறையாமல் ஊறிக் கொண்டேயிருக்கிறது. இக்கிணற்றின் ஆழம் 7 அடியாகும். தன் படை வீரர்களின் தாகம் தணிக்கவும், சிவபூஜைக்காகவும் முருகப்பெருமான் தனது வேலாயுததால் இங்கு குத்தியதால், இக்கிணறு தோன்றியதாகக் கூறுவர். இத்தலத்தில் 24 தீர்த்தக் கட்டங்கள் இருப்பினும் மிகவும் கீர்த்தி பெற்றது நாழிக்கிணறுதான்.
நாழிக்கிணற்றில் நீராடிய பின்னர், பக்தர்கள் ஈரத்துணியுடனேயே கடலில் சென்று குளிக்க வேண்டும். பின்னர் தூண்டுகை விநாயகரை முதலில் தரிசிக்க வேண்டும். தனது தம்பியை தரிசிக்கச் செல்லும்படி மக்களை தூண்டிக் கொண்டேயிருப்பதால், இவருக்கு இப்பெயர் வந்தது என்பர். இவர் முன்பு சிதறு தேங்காயை உடைத்து , தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிட வழிபட்ட பின்னரே , முருகனின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.
கிரிவீதி வலம் வந்த பின், சண்முக விலாச மண்டபம் வழியாக கோயிலுக்குள் செல்லலாம். இம்மண்டபத்தில் தான், ஆவணி மற்றும் மாசி திருவிழாக்களின் போது சண்முகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இம்மண்டபத்திலிருந்து கோவிலுக்குள் செல்லும் முன், ஆண் பக்தர்கள் தங்கள் மேலாடைகளைக் கழற்றி விட்டுத் தான் படிக்கட்டுகள் வழியாகக் கீழிறிங்கி சீபலி மண்டபம் எனப்படும் வெளிப் பிரகாரத்தை சுற்றி வலம் வர வேண்டும்.

தெற்கு வாயிலைக் கடந்து சீபலி மண்டபத்தில் படிக்கட்டுகள் மூலம் இறங்கியவுடன் , மேற்குத் திசை நோக்கினால், முதலில் நமக்கு காட்சி தருவது சித்தி விநாயகர். இம்மண்டபத்தின் தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தி, மேற்குப் பகுதியில் 108 லிங்க மகாதேவர் உள்ளனர். அவருக்கு அடுத்து சுவரில் சூரசம்கார லீலை செதுக்கப்பட்டுள்ளது. அடுத்து மேற்குப் பகுதியில் பல லிங்கங்களையும் அருணகிரிநாதரையும் தரிசிக்கலாம். அடுத்து கோபுர வாசல் படிகள் உள்ளன. எதிரில் முக்குறுணி விநாயகர் உள்ளார். இவரே கோபுரம் கட்டிய போது சாரம் சரியாமல் காத்த விநாயகர் என்பர்.
இந்த முதல் பிரகாரத்தின் வடபகுதியில் வெங்கடேசப் பெருமாள் சந்நிதி உள்ளது. இவர் அருகில் கஜலட்சுமியையும், பள்ளி கொண்ட ரெங்கநாதரையும் தரிசிக்கலாம். ஸ்ரீதேவி, பூதேவி, நீலா தேவி மற்றும் பன்னிரண்டு ஆழ்வார்களையும் தரிசிக்கலாம். முருகனுக்கு சக்ராயுதம் வழங்க பெருமாள் வந்ததாகச் சிலர் கூறுவர். வேறு சிலர் தாரகாசூரனிடமிருந்து சக்ராயுதத்தை மீட்டு, திருமாலிடம் முருகன் கொடுத்ததாகவும் கூறுவர்.
முதல் பிரகாரத்தின் கிழக்குப் பகுதியில் செப்புக் கொடிமரம் உள்ளது. ஆவணிப் பெருந்திருவிழா, மாசி பெருந்திருவிழா தொடக்கத்தின் போது இங்கு தான் கொடியேற்றப்படும். கொடி மரத்திற்கு எதிரில் உள்ள சுவற்றில் உள்ள ஒரு துவாரத்தின் மூலம் ஆழ்கடலையும், அலைகளையும் காணலாம். இத்துவாரத்தில் காதினை வைத்துக் கேட்டால் ‘ஓம்’ என்னும் பிரணவ ஒலி கேட்கும். அடுத்து கம்பத்தடி விநாயகரை வணங்கி இரண்டாம் பிரகாரம் செல்லலாம்.

இரண்டாவது பிரகாரத்தில் இடப்பக்கத்தில் முதலில் குமரவிடங்கப் பெருமான் என்னும் முருகனை தரிசிக்கலாம். இவர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். ஆறுமுகர் ஆண்டிற்கு 4 நாட்கள் மட்டுமே ஊருக்குள் எழுந்தருளுவார். பிற விசேஷ நாட்களில் ஆறுமுகருக்கு உற்சவ மூர்த்தி போன்று குமரவிடங்கரே எழுந்தருளுவார். இவரை வழிபட்ட பின் மேற்கு நோக்கி சென்றால், 63 நாயன்மார்களையும், 9 தொகை அடியார்களையும், எதிரில் தட்சிணாமூர்த்தியையும் தரிசிக்கலாம். அடுத்து வள்ளியம்மை சந்நிதி உள்ளது. வள்ளியம்மை சந்நிதியில் மட்டுமே பள்ளியறை உண்டு. இக்கோவிலுக்குப் பின்புறம் சங்கர நாராயணர், சிவன், நந்தி, காசி விஸ்வநாதர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து தெய்வானை சந்நிதி உள்ளது.
இரண்டாம் பிரகாரம் மேற்குப் பக்கத்தில் வள்ளி -தெய்வானை சந்நிதிகளுக்கிடையே யாகசாலை கூடம் அமைந்துள்ளது. இங்கு தான் கந்த சஷ்டி திருவிழா 6 நாட்களும் யாகங்கள் நடைபெறும்.
இரண்டாம் பிரகாரம் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் சண்டிகேஸ்வரர் , நடராஜர், சனீஸ்வரர், பைரவர் சந்நிதிகள் உள்ளன. இப்பிரகாரத்தின் கிழக்குப் பகுதியில் தங்கக் கொடிமரம் உள்ளது. அருகில் உள்ள மகாபலி பீடத்தில் நமது பாவங்களை இங்கு பலியிட்டு விட்டு மூலவரை தரிசிக்க மகா மண்டபத்திற்குள் செல்ல வேண்டும்.
மகா மண்டபத்திற்குள் இடது புறம் பார்வதி அம்மனையும் கரிய மாணிக்க விநாயகரையும் தரிசிக்க வேண்டும். மூலவர் சந்நிதியின் இருபக்கமும் வீரபாகுதேவரும், மகேந்திர தேவரும் உள்ளனர். இவர்களுடைய அனுமதி பெற்று மூலவரைத் தரிசிக்க வேண்டும்.

இயற்கை ஒளியிலும் திருவிளக்கின் ஜோதியிலும் மூலவரை காண கண் கோடி வேண்டும். ஞானம் எனும் வேல்தாங்கி நிற்கும் அந்த அற்புத தெய்வத்தின் முன் நின்றாலே போதும். நம் மனக்கண் நினைப்பதை அவனது ஞானக்கண் அறிந்து விடும். பற்றற்று நிற்கும் மலர் மரத்தின் பாதம் பணிவது போல் நம் மணம் முருகனின் திருப்பாதங்களை சரணடைந்து விடும். உன்னைப் பற்றிய எல்லாம் எனக்கு தெரியும். நீ சென்று வா... வென்று வா... என திருச்சீரலை மன்னன் வாழ்த்துவதை உணர முடியும். அவனது திருத்தரிசனம் ஒருமுறை கிட்டினாலே நமக்கு என்றும் ஜெயம்தான்.
தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும். மார்கழி மாத நாட்களில் காலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கந்த சஷ்டி 6 நாட்கள் , ஜனவரி 1 ஆம் தேதி , தைப் பொங்கல் , வைகாசி விசாக நாட்களில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
ஒவ்வொரு விசாக நட்சத்திரம், சஷ்டி, கார்த்திகை நாட்களிலும் , மாதப் பிறப்பு நாள், கடைசி வெள்ளி, சித்திரை முதல் நாள் , புரட்டாசி மாதம் நவராத்திரி நாட்களிலும் , சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாத முதல் நாளில் அன்னாபிஷேகமும், பங்குனி உத்திரத்தன்று வள்ளி திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறுகின்றன. வைகாசி மாதம் பௌர்ணமியும் , விசாகமும் கூடிய நன்னாள் முருகனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும்.
ஆவணி மற்றும் மாசி மாதம் சிறப்பு திருவிழாக்கள் நடைபெறும். இம்மாதங்களில் 12 நாட்கள் திருவிழா நடைபெறும். முதல் 9 நாட்கள் ஸ்ரீ ஜெயந்தி நாதர் காலையும் , மாலையும் வீதிவுலா வருவார். குமரவிடங்கப் பெருமான் ஊருக்குள் இருக்கும் சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்திலிருந்து 9 நாட்களும் வீதிவுலா வருவார்.
7ம் திருநாள் காலையில் வெட்டிவேர் சப்பரத்திலும், மாலையில் சிவப்பு பட்டாடை, சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகர் வீதிவுலா வருவார். இதற்கு சிகப்பு சாத்தி என்று பெயர். அப்போது முன்புறம் முருகப் பெருமானாகவும், பின்புறம் நடராஜர் கோலத்திலும் காட்சி தருவார். சிவனின் அம்சமே தான் என்று இத்திருக்கோலம் உணர்த்தும்.
8ம் திருநாள் அதிகாலையில் அனைத்தும் வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு சண்முகர் எழுந்தருளுவார். இதற்கு வெள்ளை சாத்தி என்று பெயர். பிரம்மாவும் நானே என உணர்த்தும் வகையில் இது அமைந்திருக்கும்.
8ம் நாள் மாலையில் சண்முகர் பச்சைப் பட்டுகளாலும், பச்சை மரிக்கொழுந்து மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு பச்சை கடைசல் சப்பரத்தில், பச்சை வண்ணன் ஆன திருமாலும் நானே எனக் குறிக்கும் வகையில் எழுந்தருளுவார். 10ம் நாள் அன்று தேரோட்டம் நடைபெறும்.

ஐப்பசி மாதம், கந்த சஷ்டி திருவிழாவின் முதல் 5 நாட்கள் யாகசாலையில் ஜெயந்தி நாதர் எழுந்தருளுவார். மாலையில் தங்கரதம் கிரிவீதி விழா நடைபெறும். 6 ஆம் நாள் அதிகாலையில் விஸ்வரூப தரிசனமும் யாக சாலை பூஜை முடிந்து கந்த சஷ்டி மண்டபத்திற்கு ஜெயந்தி நாதர் எழுந்தருள்வார். மாலையில் கடற்கரையில் சூரசம்கார லீலை நடைபெறும். மறுநாள் திருக்கல்யாணமும் நடைபெறும்.
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே என்று கந்தரலங்காரத்தில் அருணகிரிநாதர் புகழ்வதைப் போல் இத்தலத்தில் உறையும் இறைவனை வணங்கியவர்களின் விணைகள் அனைத்தும் அறுந்து போகும். என்றும் நலம் மட்டுமே கிடைக்கும்.

அருள் பெற்றோர் அனேகர்
இங்கு மூலவர் சந்நிதியில் வழங்கப்படும் இலை விபூதியை உண்டு ஆதிசங்கரர் காச நோயிலிருந்து விடுதலை பெற்றார். அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் நடராஜர் கோலத்தைக் காட்டியதால் மாசி 7, 8 திருவிழாக்களில் சண்முகருக்குப் பின்பக்கம் நடராஜர் அலங்காரம் செய்யப்படுகிறது. முருகனின் அருள் பெற்றவர்களில் முக்கியமானவர் திருவைகுண்டத்தில் அவதரித்த குமரகுருபரர். 5 வயது வரை ஊமையாக இருந்தார். இவரின் பெற்றோர் இக்கோவிலில் 48 நாட்கள் விரதமிருந்து பயனில்லாததால் உயிரை மாய்க்க இருந்த போது அருகில் குழந்தையாக இருந்த குமரகுருபரர் முருகனருளால் ‘பூமேவு செங்கமலம்’ எனப் பாடத் தொடங்கினார். நக்கீரரை சிறையிலிருந்து விடுவித்தவர் செந்திலாதிபனே என்பது அவர் பாடியுள்ள திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலிருந்து தெரிகிறது. பிறவியிலேயே இருக்கண் பார்வையும் இல்லாத கந்தசாமிப் புலவர் என்பவருக்கு இருக்கண் பார்வையும் கொடுத்தவர் செந்திலாண்டவர் என்பர். இப்படி பட்டியலிடத் துவங்கினால் பக்கங்கள் போதாது.

திறக்கப்படாத ராஜகோபுரம்
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.

இரு மூலவர்களில் கருவறையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி தனியாக உள்ளர். சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியுள்ளார்.

திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.

திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்

திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.

திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.

திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.

திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

திருச்செந்தூர் கோவிலில் மொத்தம் 24 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் நாழிக்கிணறு, வதனாரம்ப தீர்த்தம் இரண்டும் முக்கியமானவை. வதனாரம்ப தீர்த்தம் கடலில் பாறைகள் நிறைந்த பகுதியில் உள்ளது. எனவே அங்கு நீராடுவது பாதுகாப்பற்றது.

கலிங்கதேசத்து மன்னன் மகள் கனக சுந்தரி பிறக்கும் போதே குதிரை முகத்துடன் பிறந்தாள். அவள் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கபெற்று நல்ல முகத்தை பெற்றாள் என்பது வரலாறு.

திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

முருகப் பெருமானோடு இணைந்து போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டனர்.

முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.

அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டினம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.

முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்றும் குறிப்பிடப்படுவதுண்டு.

திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.

முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.

உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.

இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.

இத்திருக்கோவிலுக்கு வருபவர்கள் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் சுத்தான்னம் எனப்படும் வெறும் வெள்ளைச் சோற்றுக் கட்டிகளை தானமாக வழங்குவர்....

சு.இளம் கலைமாறன்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment