திருச்சியின் மத்தியப் பகுதியில் பெரிய கம்மாளத் தெருவில் உள்ளது காளிகா பரமேஸ்வரி கோயில். இங்கு அருட்பாலிக்கும் அன்னை காளிகா பரமேஸ்வரி காமாட்சி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.
ஆலயம் வடதிசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைத் தாண்டியதும் மகா மண்டபம் உள்ளது. மண்டபத்தின் நடுவே கொடி மரமும், பஞ்சமுக பலிபீடமும், சிங்க வாகனமும் உள்ளன. மகாமண்டபத்தின் இடதுபுறம் முருகன் கிழக்கில் பைரவர், வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருட்பாலிக்கின்றனர். வலதுபுறம் விராட் விஸ்வப்ரம்மன் அருட்பாலிக்கிறார். திருச்சுற்றில் மேற்கில் துர்க்கை அம்மன் 18 கரங்களுடன் அருட்பாலிக்கும் அழகு நம்மை சிலிர்க்க வைக்கக் கூடியது. இந்த துர்க்கை அஷ்ட தசபுஜ துர்க்கை என அழைக்கப்படுகிறாள்.
அர்த்த மண்டப நுழைவாயிலில் துவார சக்திகள் அருள்பாலிக்க அடுத்துள்ள கருவறையில் அன்னை காளிகா பரமேஸ்வரி அமர்ந்த நிலையில் முகத்தில் இளநகை தவழ கருணை ததும்பும் கண்களுடன் அமர்ந்துள்ளாள். காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த அன்னைக்கு நான்கு கரங்கள். டமருகம், பாசம், சூலம், கபாலம் ஆகியவற்றை சுமந்து காட்சி தரும் அன்னையிடம் வேண்டிக் கொள்ளும் கன்னியருக்கு திருமணப்பேறு விரைவில் கிடைக்கிறது. திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகளின் தாலியை அன்னையின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து பெற்றுக்கொள்ளும் வழக்கம் இங்கு உள்ளது.
நிராலம்ப மகரிஷ பாரத தேசத்தில் பல இடங்களில் தவம் செய்த பின் கடைசியாக இவ்வூருக்கு வந்து காவிரி நதியின் தென்கரையில் பூமியில் படாமல் அந்தரத்தில் எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் அந்தர்யோக முறையில் அன்னையை நோக்கி தவம் செய்யத் தொடங்கினார். அவரது தவத்தைக் கண்டு மனம் இளகிய பராசக்தியானவள் ஸ்ரீகாளிகா பரமேஸ்வரியாக அவருக்கு காட்சி தந்தாள். அந்த காட்சியை கண்டு களித்த நிராலம்ப மகரிஷியிடம் என்ன வரம் வேண்டுமென அன்னை வினவினாள்.
ஜெகன் மாதாவாகிய தாங்கள் இக்கலியுகத்தில் மனித குலம், சத்தியம், தர்மம், நீதி, நேர்மை, ஒழுக்கம் முதலான நன்னெறிகளிலிருந்து விலகி பாவச் செயல்களைச் செய்து, பஞ்சமா பாதகங்களால் பீடிக்கப்பட்டு, நிம்மதியும், சுகமுமின்றி வேதனையோடு நரக வாழ்க்கை வாழும் போது அவர்களை கருணையோடு பார்த்து தாயுள்ளத்தோடு அவர்களது பாவங்களை எல்லாம் போக்க வேண்டும். அவர்களை அன்போடு அரவணைத்து அவர்களுக்கு சகல சௌபாக்யங்களையும் வழங்கி அவர்களை வாழ வைக்க வேண்டும்’’ என்று நிராலம்ப மகரிஷி வேண்ட அன்னை காளிகா பரமேஸ்வரியும் ‘‘அப்படியே அருள்கிறேன்’’ என அனுக்ரகம் செய்தாள்.
நிராலம்ப மகரிஷிக்கு அம்பாள் காட்சி கொடுத்த இடமே இந்த ஆலயம் உள்ள இடம். இத்தலத்தில் காளிகாபரமேஸ்வரி அனுக்ரஹகாளியாக வடக்கு நோக்கி அமர்ந்த வண்ணம் மூன்று வீதி சங்கமத்தில் அருட்பாலிக்கிறாள். அந்தரத்தில் தவம் செய்த மகரிஷிக்கு உயர்வாக அமர்ந்து காட்சி தந்ததால் உயர்வான இரண்டு அடுக்கு பீடத்தில் அன்னை அமர்ந்து காட்சி தருகிறாள். பௌர்ணமி தினத்தில் அன்னைக்கு மகா அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான கல்வி, தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, புத்திர பாக்யம், புகழ், கீர்த்தியும், அஷ்டலட்சுமி கடாட்சமும், உண்டாகும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபாரிகள் நிறைந்த இடம்.
தங்களுடைய நிறுவனத்தை காலையில் திறக்கும் முன் சாவி கொத்தை அன்னையின் காலடியில் வைத்து தினசரி எடுத்துச் செல்லும் வழக்கம் இப்பகுதி வணிகர்களிடையே உள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். இரவு நேரங்களில், நடுநிசியில் கொலுசு சப்தத்தை இந்த பகுதி மக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அன்னை இரவில் உலா வருவதால் ஏற்படும் சப்தம் இது என்கின்றனர் கேட்டவர்கள். காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். அன்னை காளிகாபரமேஸ்வரி கோயில். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள பெரிய கம்மாளத் தெருவில் உள்ளது...
ஜெயவண்ணன்
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment