பெண்களுக்கு சில குணாதிசயங்கள் கட்டாயமாக இருக்கவேண்டும் என்று, நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இந்த குணாதிசயங்களை பெற்றிருக்கும், பெண்ணாக பட்டவள் எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய வாழ்க்கையை, நல்ல முறையில் வாழ்ந்து விட முடியும். இந்த குணாதிசயங்கள் பெண்களிடம் இல்லை என்றாலும், கஷ்டப்பட்டாவது, அவசியம் வர வைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக பெண்களை அடிமையாக இருக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஆனால், இந்த குணாதிசயங்கள் எல்லாம் பெண்களிடம் இயற்கையாகவே இருந்தது தான். காலப்போக்கில் மாறிவிட்டது. பிரச்சனைகளும் புகுந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
பெண்கள் மட்டும்தான் இவைகளை கடைபிடிக்க வேண்டுமா? ஆண்களுக்கு கிடையாதா? என்ற விதாண்டாவாத கேள்விகளுக்கு எல்லாம் இந்த இடத்தில் இடமில்லை. ஏனென்றால், குடும்பத்தை நல்லபடியாக வழிநடத்திச் செல்லும் பொறுப்பு ஆண்களை விட, ஒருபடி அதிகமாக பெண்களுக்கு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அப்படியிருக்க நம்முடைய குணாதிசயம் அடுத்தவர்களை புண்படுத்த கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. கடைப்பிடிப்பதற்கு கஷ்டமாக இருந்தாலும், பெண்களிடம் அவசியம் இருக்க வேண்டிய குணாதிசயங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
முதலில் பெண்ணிற்கு இரண்டு வீடு. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். பிறந்த வீடு, புகுந்த வீடு. பிறந்த வீட்டில் எப்படி வாழ்ந்திருந்தாலும், நாம் செல்லும் புகுந்த வீட்டின் சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். நாம் எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த இடத்திற்கு, ஏற்றவாறு நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுதான் ஆகவேண்டும். பிறந்த வீடோ! புகுந்த வீடோ! எந்த வீடாக இருந்தாலும், முதலில் பெண்கள் சூழ்நிலைக்கு ஏற்ப பேச கற்றுக்கொள்ள வேண்டும். பழகக் கற்றுக் கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப உடை அணிந்து கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப அலங்காரம் பண்ணி கொள்ள கற்றுக் வேண்டும். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு செலவு செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு எந்த ஒரு பெண் சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்கிறாளோ, அவள் பிரச்சனைகளை சுலபமாக சமாளித்து விடுவாள்.
அடுத்ததாக, எந்த காரணத்தைக் கொண்டும் ‘இந்த வேலையை பிறகு செய்து கொள்ளலாம்’ என்று பெண்கள் தள்ளிப் போடவே கூடாது. சோம்பேறித்தனம் கூடவே கூடாது. அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலைகளை செய்ய வேண்டிய அவசியம் பெண்களுக்கு கட்டாயம் உண்டு. சில வீடுகளில் காலை உணவையே, சில பெண்கள் மதியம் தான் சமைப்பார்கள். இது மிகப்பெரிய தவறு. அந்த வீட்டில் இருக்கும் அனைவரும் காலை உணவு அருந்தாமல், வயிறு மறுத்துப் போய், மதியம் உணவை உண்ணுவதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. தயவுசெய்து அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலையை முடிப்பது உங்களது பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் மன தைரியத்தோடு இருக்க வேண்டும். தேவையில்லாத பயம் உங்கள் மனதிற்குள் வரவே கூடாது. ‘தைரியம் வேறு’ ‘தலைக்கணம் வேறு’ நன்றாக புரிந்து கொள்ளுங்கள்!
எந்த ஒரு சூழ்நிலையிலில், பிரச்சனை வந்தாலும் அதை பக்குவமாக கையாள கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பெண்ணுக்கு அவசியம் தேவை அனுபவப் பாடம். நம்முடைய ஒவ்வொரு நாள் வாழ்க்கையுமே, அனுபவப் பாடம் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
பெண்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதுமே சுயநலமாக இருக்கக்கூடாது. ‘பிறர் நலத்தை யோசித்து எடுக்கும் முடிவில், தன்னுடைய நலமானது சிறிது பாதிக்கப்பட்டாலும், அதை பொருட்படுத்தாமல் முடிவு எடுப்பவள் தான் பெண்’ என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நம்முடைய வீடு தேடி வருபவர்களையோ அல்லது நாம் வெளியில் செல்லும்போது நம் உடன் வருபவர்களையோ நாம் நடத்தும் விதம் மிக மரியாதையான முறையில் இருக்க வேண்டும். இதேபோல் நாம் யாருடனாவது செல்கின்றோம் என்றால், ‘இந்தப் பெண்ணை கூட்டிட்டு போனாளே தொல்லைதான்’ என்ற எண்ணம் யாருக்கும் வரவே கூடாது. ‘இந்தப் பெண்ணை அழைத்துச் சென்றால் முடியாத காரியம் கூட முடிந்துவிடும்’ இப்படி சொல்லும் அளவிற்கு பெண்கள் நடந்து கொள்ள வேண்டும்.
சேமிப்பை தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கற்றுத்தர வேண்டியது பெண்களின் அவசியமான கடமைகளில் ஒன்று. உங்களது சேமிப்பு அடுத்தவர்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு பிரச்சனை ஏற்படும் சமயத்திலும், நீங்கள் கோபத்தின் உச்சகட்டத்திற்கு போகக்கூடாது! உங்களை யாராவது பாராட்டும் சமயத்திலும் புகழை நினைத்து சந்தோஷத்தில் திகைத்து, அதிலும் உச்சக்கட்டத்திற்கு போகக்கூடாது. அதாவது சோகமாக இருந்தாலும், சந்தோஷமாக இருந்தாலும் அதை சமமாக பாவிப்பவளே சிறந்த பெண்மணியாக கருதப்படுகிறாள். மேற்குறிப்பிட்ட விஷயங்களை எல்லாம், கடைபிடிப்பதும் கடை பிடிக்காததும் அவரவர் இஷ்டம் தான். ஆனால், கடைப்பிடிப்பதால் பெண்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment