கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மணக்குடி செல்லும் சாலையில் 7 கிலோ மீட்டர் தொலைவில் இடதுபுறம் அமைந்துள்ள ஊர் பறக்கை. பறக்கை ஊரின் பழமை 1200 ஆண்டுகள் வரை செல்கிறது. இவ்வூர் முற்காலத்தில் பாண்டியர், பிற்காலச்சோழர், வேணாடு அரசர்கள், திருவிதாங்கூர் சமஸ்தான அரசர்கள் ஆகியோர் ஆட்சியின் கீழ் அடங்கியிருந்திருக்கிறது.
பறக்கை கோயிலின் சிற்பங்களை வடித்த ‘‘கோட்டாறு கொம்மண்டை நயினான் முதலி” என்ற சிற்பிக்கு இந்த ஊர் பெருமக்கள் நிலம் விட்டுகொடுத்தனர் என்றும் ஊர் கூட்டம் போட்டு அச்சிற்பியின் கோயில் உரிமையை பறை சாற்றியதும் ஆகிய செய்திகளை 1544 ம் ஆண்டு கல்வெட்டு கூறுகிறது. சுசீந்திரம் கன்னியாகுமரி தலபுராணச்செய்திகளிலும் பட்சிராஜபுரம், வேதவனம், வில்வவனம் என்றும் கல்வெட்டுக்களில் ப்ரம்மதேய கிழார் மங்கலம், கிழார்மங்கலம் அபிதானமேரு சதுர்வேதி மங்கலம் என்றும் அரசு அங்கிகாரம் பெற்ற ஆவணங்களில் பறக்கை என்றும் பெயர் பெற்றுள்ளது.
பட்சிராஜன் என்ற வடமொழிபெயர் கருடனை குறிப்பது. பட்சிராஜனை தமிழில் பறவைக்கு அரசன் என்று கூறலாம். கன்னியாகுமரி மாவட்ட கல்வெட்டுக்களில், கரியமாணிக்கபுரம் கோயில் கல்வெட்டு மட்டும் பறவைக்கு அரசு என்ற சொல்லை குறிக்கிறது. எனவே மிகப்பழைய பெயரான பட்சிராஜபுரம், தமிழில் பறவைக்கரசன் என்று ஆகி பறவைக்கரசூர் என்று மாறி பறக்கை என ஆகியிருக்கலாம். ‘‘ராஜநாராயண சதுர்வேதி மங்கலம்” என அழைக்கப்படும் கரியமாணிக்கபுரம் (கோட்டாறு) விண்ணகர ஆழ்வாரின் கோயிலில் உள்ள கி.பி 1411ம் ஆண்டு கல்வெட்டு பறவைக்கரசு என்ற பெயரை குறிப்பிடுகிறது.
பறக்கை மதுசூதனர் கோயில் கல்வெட்டுகளிலும், ஓலை ஆவணங்களிலும், வாய்மொழி மரபிலும் கோயில் எழுத்து சான்றுகளிலும் மதுசூதனப்பெருமாள் கோயில் என்று வழங்கப்பெறுகிறது. மது என்ற அரக்கனை விஷ்ணு வதம் செய்ததால் அவர் மதுசூதனன் என்ற பெயரும் பெற்றார் என்று பாகவதம் கூறுகிறது. காஞ்சிபுரம் எனும் ஊரில் வாழ்ந்த சிற்பி ஒருவன் கருடனின் உருவத்தை செய்து கொண்டிருந்தார். தத்ருபமாக அமைந்த அச்சிலையை பார்த்த பிறகு அதை உருவாக்க பணித்த அரசனிடம் தர விருப்பமில்லை. அந்த சிலை தர முடியாது என சொல்லவும் முடியாது. சிற்பி அதை தன்னிடம் வைத்து கொள்ள விரும்பினார்.
அதனால் அக்கருடன் சிலையின் சிறகில் உளியால் தட்டி குறைபடுத்தினான். குறைபாடுடைய சிற்பத்தை அரசன் விரும்பமாட்டான் என்பது அச்சிற்பியின் திண்ணம். ஆனால் சிற்பி நினைத்தது நடக்கவில்லை. குறைபாடுடைய கருடன் உருவம் வானில் பறந்தது. காஞ்சிபுரம் விட்டு தெற்கு நோக்கி வந்தது. மதுசூதனன் கோயில் கொண்டிருந்த ஊருக்கு வந்தது. பலநாள் களைப்பால் சோர்ந்து போன கருடன் ஒரு புன்னை மரத்தில் அமர்ந்தது. தண்ணீர் அருந்த வேண்டும் என ஆவலாய் பார்த்தது . அருகே ஒரு குளம் இருந்தது.
“கண்டேன் குளம்” எனக் கூவியது. மதுசூதனன் கோயில் கொண்ட இடத்தை அடையாளம் கண்டு அங்கே அமர்ந்து கருடன் வணங்கியது. பறவைக்கு அரசன் குடியேறிய இடம் பறக்கை ஆனது. 1200 ஆண்டுகாலமாக பழமையுடன் போற்றிபுகழப்படும் இக்கோவிலில் இன்றளவிலும் கருடனுக்கு தனிச்சந்நதியும், இங்கே நடைபெறும் பங்குனி மாத தேரோட்ட திருவிழாவின் ஐந்தாவது நாள் திருவிழாவில் “கருடனுக்கு கண் திறக்கும்” வைபவம் கோயில் கொடிமரத்திற்கு அருகில் வைத்து கண்திறப்பார்கள்.
பின்பு மதுசூதன பெருமாள் உற்சவர் சிலை இந்த கருடர் மீது ஏற்றி வைத்து கட்டப்பட்டு பிறகு சுவாமி புறப்பாடு நடைபெறும். பிறகு கோயிலின் பின்புற மதில் சுவரில் “கருடர்முக்கு” என்னும் சிற்பத்தின் கீழ் பகுதியில் வந்த பிறகு அக்கருடனையும் , மதுசூதனப் பெருமாளையும் வணங்கி அவ்விடத்தில் தேங்காய் உடைப்பார்கள்...
ச.சுடலைகுமார்
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment