கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரைச்சாலையில் உள்ள கிராமம் மண்டைக்காடு. இங்கு அருட் பாலிக்கிறாள் பகவதி அம்மன். மண்டைக்காடு முன்பொரு காலத்தில் அடர்ந்த வனமாகவும், மணல் மேடாகவும் இருந்தது. இப்பகுதியைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலுள்ள மக்கள், தங்கள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக வனத்திற்கு ஓட்டி வருவார்கள். தற்போதைய தம்மத்துக்கோணத்தைச் சேர்ந்த சிலர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டு பசு மாடுகளை வளர்த்து வந்தனர். இந்த மாடுகளை பெரும்பாலும் வனத்திலே விட்டுத்தான் வளர்ப்பார்கள். அந்த மாடுகளை மலை மாடுகள் என்று கூட அழைப்பதுண்டு. இந்த மலை மாடுகள் இரவிலும் அங்கேயே பட்டியல் வைத்து அடைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு மாடுகள் அடைக்கப்படும், அல்லது கூடும் இடத்தை மந்தை என்று அழைப்பார்கள். அந்த வகையில் இவ்விடம் மந்தைக்காடு என்று அழைக்கப்பட்டது.
அது மருவி மண்டைக்காடு என்று அழைக்கப்படலாயிற்று.
முன்னொரு காலத்தில் இப்போதைய மண்டைக்காடு பனங்காடாக இருந்தது. இப்பகுதியில் பருத்திவிளையைச் சேர்ந்த பொன்னையா நாடார் குடும்பத்திற்குச் சொந்தமான பனை விளையும் இருந்துள்ளது. இங்குள்ள பன மரங்களில் இருந்து இப்போதைய அனந்தநாடார் குடியிருப்பு, வைராகுடியிருப்பு, காரவிளை, எள்ளுவிளை, புல்லுவிளை, மேலசங்கரன்குழி, பாம்பன்விளை, கீழசங்கரன்குழி, எறும்புக்காடு, பூச்சிவிளாகம்
(குறிப்பு. இவையெல்லாம் இடைக்காலத்தில் உருவான ஊர்ப்பெயர்கள்) பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிலர் பதநீர் இறக்கும் தொழிலை செய்து வந்தனர். இவர்களில் அனந்தன் நாடாரும் ஒருவராவார். மக்கள் பெருக்கம் அதிகமாக இல்லாத காலம் ஆகையால் மக்கள் நடமாட்டம் இவ்விடத்தில் மிகக் குறைவாகவே இருக்கும். அனந்தன் நாடார் இறக்கி வைக்கும் பதநீரை அவரது மனைவி பொன்னம்மை குடிசைக்கு எடுத்துச் சென்று பதப்படுத்துவது மற்றும் காய்ச்சி கருப்புக் கட்டியாக்குவது அவர்களின் அன்றாடப்பணியாகும்.
தென் நாட்டு நாடார் மக்களின் குல தெய்வம் பத்திரகாளி. இதை மலைநாடான கேரளா மற்றும் அதையொட்டியுள்ள குமரி மாவட்டத்தில் பத்திரகாளியை “பகவதியென்று” அழைப்பது வழக்கம். பனையேறும் நாடார் தொழிலாளிகள் பருவ காலத்தில் முதல் முதலாவதாக இறக்கும் பதிநீரை பத்திரகாளிகுப் படைத்த பிறகுதான் தங்களது வீட்டுற்கு எடுத்துச் செல்வதை ஒரு மரபாக அக்காலத்தில் கடைபிடித்து வந்துள்ளனர்.
அதுபோல் அனந்தன் நாடார் பதநீரை இறக்கி வைத்துவிட்டு, அருகேயிருக்கும் ஓடையில் குளித்து விட்டு வந்து பத்திரகாளியை வணங்கி விட்டு கலயத்தை எடுத்துச் செல்வார். ஒரு நாள் கலயத்தை இறக்கி வைத்து விட்டு ஓடைக்கு குளிக்கச் சென்றுள்ளார். அவ்வேளையில் அவரது மனைவி பொன்னம்மை பதநீரை வீட்டிற்கு எடுத்து குடிசை வீட்டிற்கு வந்துவிட்டார். குளித்து விட்டு திரும்பிய அனந்தன்நாடார் பதநீரை காணாததால் திடுக்கிட்டார். படையல் செய்வதற்கு முன் பதநீரை எடுத்துச் செல்வது நெறி தவறிய செயலாகும். எனவே அவர் மனம் வெதும்பியது. இந்நிலையில் குடிசைக்குச் சென்றார். அங்கு பதநீரை மனைவி எடுத்து வந்து அடுப்பேற்றி இருந்ததைக் கண்டு சினம் கொண்டார்.
விவரம் அறியாத பொன்னம்மை அவரின் கோபத்திற்கு காரணம் என்ன என்று வினைவினாள். “காரணமா கேட்கிற அம்மனுக்கு படையல் வைக்கும் முன்னாடி யார் உன்னை பதிநீரை எடுத்து வரச் சொன்னது’’ என்று சத்தமிட்டு, ஆத்திரத்தால் பெண்பனைப்பூவை பதப்படுத்தும் கடிப்பு ஆயுதத்தால் ஓங்கி தலையில் அடித்து விடுகிறார். மண்டையில் பலமாக இறங்கிய அடியால் பொன்னம்மை அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தாள். சிறிது நேரத்தில் அவள் உயிர் பிரிந்தது. ஆத்திரத்தில் அறிவிழந்து விட்டோமே என அஞ்சிய அனந்தன்நாடார் ஊராருக்கும், போலீசாருக்கும் பயந்து எவரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு ஓடி தலைமறைவானார். கால் போன போக்கில் பயணமானவர் மலையாள (கேரளா) நாட்டிற்கு சென்றுவிட்டார்.
அவர் சென்ற பிறகு மறுநாள் பக்கத்து வீட்டினர் வந்து பார்க்கையில் பொன்னம்மை ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டனர். உடனே ஊரார்கள் ஒன்று கூடி பொன்னம்மையின் சடலத்தை எடுத்து வந்து பனங்காட்டு கடலோரத்திலுள்ள மந்தைக்காட்டில் புதைத்து விட்டனர். இந்த புதைகுழியின் அருகாமையில் ஊருக்கு பொதுவான குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. அக்கிணறு இன்றும் உள்ளது. அக்கிணற்றில் ஊர் பெண்கள் தண்ணீர் எடுத்துவரச் செல்வது வழக்கம். பொன்னமையின் இந்த அகால மரணத்தால் அவரது ஆவியானது சில இளம் பெண்களை தொந்தரவு செய்து, சாமி ஆடினதாக பெரியார்கள் இன்றும் கூறுகின்றனர். இதனால் அச்சம் கொண்ட ஊரார்கள் பொன்னம்மையின் ஆவியை சாந்தப்படுத்துவதற்காக சாவு பூஜை நடத்தி படையல் போட்டனர். இப்படையல் அவள் இறந்த நாளான மாசி மாதம் 20-ம் நாள் போடப்பட்டது. அவளது புதை குழிக்கரையில் படையல் வைக்கப்பட்டது. நாஞ்சில் நாட்டில் படையல் போடுவதை படுக்கை என்றும் சிறப்பு வழிபாடு என்றும் அழைப்பதுண்டு. அந்த வகையில் குமரி மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலும் படுக்கை என்றே அழைப்பர்.
பொன்னம்மைக்கு படுக்கை செய்து வழிபட்ட பின்னர் பயமின்றி பெண்களும், குழந்தைகளும் ஊரில் உலா வந்தனர். இதனிடையேஆண்டுகள் பல கடந்தாலும் அனந்தன்நாடார் ஆழ்மனதில் தனது மனைவி சாவுக்கு தான் காரணமாகிவிட்டோமே என்ற வருத்தம் இருந்தது. மீண்டும் சொந்த ஊரான பருத்திவிளை பனங்காட்டிற்கு வந்து மனைவியின் பூத உடல் என்னவாயிற்று என்று அறந்திட ஆர்வம் கொண்டு, ஒரு பண்டார வேடமணிந்து பனங்காட்டிற்கு வந்தார்.
உறவினர் ஒருவர் மூலம் நடந்ததை அறிந்துக் கொண்ட அனந்தன்நாடார், மனைவியின் சமாதிக்கு வருகிறார். சமாதியில் புற்று ஒன்று வளர்ந்திருந்ததையும், அதில் படுக்கை பூசைகள் செய்யப்பட்டதையும் கண்டு அங்கு ஏதோ தெய்வத்தன்மை நிலவுவதாக நம்பிய அவரும் சடங்குகளைச் செய்து, படுக்கை போட்டுவிட்டு திரும்பவும் கொல்லம் சென்றுவிட்டார்.
ஆண்டுகள் சில ஆன நிலையில் பொன்னம்மாள் சமாதியை யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் காலங்கள் சில கடந்த நிலையில் இந்த மண்டைக்காடு பகுதியில் காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்களால் மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகினர். இந்த நோயின் தாக்கத்தை மந்திரவாதிகள் பேய், பிசாசு, இறந்து போனவர்களின் ஆவி என்று பலவாறு கூறி மக்களிடம் பணம் பறித்து வந்தனர். குறிப்பாக மந்தைக்காடு பகுதியில் இருந்த சுணை அருகே கணவனால் கோபத்தில் தாக்கப்பட்ட பெண் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தாள். அந்த பெண்ணை அவ்விடத்தில் அடக்கம் செய்திருந்தனர். அந்த பெண்ணின் ஆவி தான் காரணம் என்று கூறி நோயின் தாக்கத்தில் இருந்தவர்களிடம் பேய் விரட்டினேன் என்று கூறி பணம் மற்றும் கோழி, ஆடு முதலான பொருட்களை வாங்கிக்கொண்டு தங்களை மந்திரவாதிகள் வசதியாக்கிக் கொண்டனர்.
இவைகளைப் பற்றி கேள்வியுற்ற அவ்வழியாக பயணம் செய்த ஒரு மடாதிபதியின் சீடர் ஒருவர் மந்தைக்காட்டிற்கு விஜயம் செய்தார். சுணை(நீர் ஊற்று, தற்போது கிணறாக உள்ளது) அருகே வந்தார். 63 கோணங்களுடன் ஒரு சக்கரம் வரைந்து, தினமும் பூஜை செய்தார். அப்பகுதி மக்கள் அவ்விடத்தில் கூடினர். தம் தவ வலிமையால் மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்தார். நீண்டகாலம் அங்கே தங்கியிருந்த சுவாமிஜி, மக்களின் நோய்களைத் தீர்த்து வைத்ததுடன், சிறுவர்களை மகிழ்விக்க சித்து விளையாட்டுகளும் செய்து காட்டினார். சாது ஸ்ரீசக்கரம் வைத்து வழிபட்ட இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. ஒருமுறை ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, சிறுவர்கள் அவ்விடத்தில் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். புல்லை மேய்ந்துகொண்டிருந்த ஓர் ஆடு, அங்கு வளர்ந்திருந்த புற்றை மிதித்துவிட்டது.
உடனே புற்றிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ந்துபோன சிறுவர்கள், புற்றை உதைத்ததால் ஆட்டின் காலில் அடிபட்டு ரத்தம் வந்திருக்குமோ என்று நினைத்து, ஆட்டின் காலைப் பார்த்தபோது, காயம் எதுவும் இல்லை. புற்றிலிருந்துதான் ரத்தம் வருகிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட சிறுவர்கள், ஊர்ப் பெரியவர்களிடம் சென்று கூறினார்கள். அவர்களும் புற்று இருந்த இடத்துக்கு வந்து, சிறுவர்கள் கூறியது உண்மைதான் என்பதைப் புரிந்துகொண்டார்கள். மேலும், ஏதேனும் தெய்வக் குற்றம் நிகழ்ந்துவிட்டதோ என்று அச்சப்பட்டார்கள். பின்னர் இத்தகவல் திருவிதாங்கூர் மன்னருக்கு தெரிய வந்தது. பரிவாரங்களுடன் வந்து பார்த்த மன்னரும் அதிர்ச்சி அடைந்தார். அப்போது ஒரு பெண் குரலாக அசரிரீ கேட்டது ‘‘புற்றிலிருந்து வடியும் ரத்தம் நிற்கவேண்டுமானால், புற்றில் களபம் (அரைத்த சந்தனம்) சாத்தி வழிபடவேண்டும்’’ என்று கூறியது. மறுநாள் மன்னர், அமைச்சர், காவலர்கள் மற்றும் அரண்மனை ஜோதிடர்களையும் அழைத்துக்கொண்டு மண்டைக்காடு வந்து, புற்றின் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். பின்னர், புற்றில் சந்தனம் சாத்தி வழிபட்டார். மன்னர் களபம் சாத்தி வழிபட்டதும் புற்றில் ரத்தம் வடிவது நின்றது. பிறகு புற்றைச் சுற்றிலும் ஓலை வேயப்பட்டு நித்தமும் விளக்கேற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
மக்களின் பிணி தீர்க்க வந்த கேரளத்து சாது, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு எதிரே இடது புறத்தில் ஆழமாக ஒரு குழி தோண்டினார். பின்னர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, ‘‘நான் இந்தக் குழியில் தியானம் செய்யப்போகிறேன். நான் தியானத்தில் ஆழ்ந்ததும், இந்தக் குழியை மண்ணால் மூடிவிட்டு மறுநாள் காலையில் வந்து பாருங்கள்’’ என்று கூறினார். சிறுவர்கள், சாது கூறியபடியே, அவர் தியானத்தில் ஆழ்ந்ததும் மண்ணைக் கொட்டி குழியை நிரப்பினர். சிறுவர்கள் நடந்ததை ஊர்மக்களிடம் தெரிவித்தனர். மறுநாள் சிறுவர்கள் சுட்டிக்காட்டிய இடத்தில் மண்ணைத் தோண்டிப் பார்த்தபோது, குழிக்குள் சாது தியானத்தில் ஆழ்ந்ததுபோல் இருந்தார்.
அவரிடம் எந்த ஒரு சலனமும் இல்லை. அவர் சமாதி அடைந்துவிட்டார் என்பதை உணர்ந்த மக்கள், குழியின் மேல் பலகை வைத்து அதன் மேல் மண்ணைக் கொட்டி, குழியை மூடிவிட்டனர். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு எதிரில் இப்போது அமைந்திருக்கும் பைரவர் சந்நதிதான், சாதுவின் சமாதி என்று கூறுகிறார்கள். மண்டைக்காடு பகவதிக்கும், பின்னர் சாதுவின் சமாதி பீடத்திலும் நைவேத்தியம் செய்கிறார்கள். ஓலைக்குடிசையாக இருந்த இந்தக் கோயில், வழியாக கேரள மாநிலம் கொல்லம் உள்ளிட்ட இடங்களிலிருந்து வியாபாரிகள் மாட்டுவண்டியில் தேங்காய், புளி போன்ற பொருள்களை கோட்டாறு சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டுசெல்வது வழக்கம். ஒருநாள் கொல்லத்தைச் சேர்ந்த வியாபாரி, தன் வியாபாரத்தை முடித்துவிட்டு மாட்டுவண்டியில் மண்டைக்காடு வழியாக வந்துகொண்டிருந்தார்.
அப்போது இரவாகிவிட்டது களைப்படைந்த வியாபாரி, மண்டைக்காடு கோயில் அருகே ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவரிடம், ‘‘பசி வயிற்றைக் கிள்ளுகிறது. இந்தப் பகுதியில் ஊணு களிக்க கடை ஏதும் உண்டா?’’ என்று கேட்டார். அந்த நபர், விளக்கொளியில் மிளிர்ந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலைச் சுட்டிக்காட்டி, ``அதோ வெளிச்சம் தெரிகிறதே அங்கு சென்றால் உணவு கிடைக்கும்’’ என்று கேலியாகச் சொன்னார். அதனை நம்பிய வியாபாரி, கோயிலுக்குள் நுழைந்தார். அங்கு வியாபாரி எதிர்பார்த்தபடி கோயில் விடுதியாகக் காட்சியளித்தது. அங்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவரிடம், ``அம்மச்சி சாப்பிட ஏதும் கிட்டுமா’’ என்று கேட்கவும், இலையில் அறுசுவை உணவைப் படைத்து வழங்கினார் அந்த மூதாட்டி.
அத்துடன் நிற்காத மூதாட்டி வண்டி மாடுகளுக்குத் தண்ணீரும் தீவனமும் தயாராக இருப்பதாகக் கூறினார். காளை மாடுகளுக்கு உணவு கொடுத்த வியாபாரி, நள்ளிரவு ஆகிவிட்டதால் அங்கேயே தங்கினார். காலையில் கண்விழித்துப் பார்த்தபோது, மூதாட்டி அங்கு இல்லை. இரவு வீடு இருந்த இடத்தில் கோயில் இருப்பதைக் கண்டார். இரவு தனக்கு உணவளித்தது பகவதி அம்மை தான் என்பதை உணர்ந்தார். நெஞ்சுருகி அம்மன் பாதத்தில் விழுந்து வணங்கினார். வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை துணியில் கட்டி கோயில் திருப்பணிக்கான காணிக்கையாக வைத்தார். கொல்லத்துக்குச் சென்று மண்டைக்காட்டில் நடந்த அதிசயத்தை மக்களிடம் சொன்னதுடன், அமுது படைத்த பகவதி அம்மனுக்கு பொங்கல் சமைத்து படையல் செய்வதற்காக, ஆண்டுதோறும் இருமுடி கட்டி மண்டைக்காட்டுக்கு வரத் தொடங்கினர்.
இருமுடியில் ஒருமுடியில் பொங்கலிடத் தேவையான பொருட்களும் மற்றொரு முடியில் பூஜைக்குத் தேவையான பொருட்களும் இருக்கும். ‘‘அம்மே சரணம், தேவி சரணம், மண்டைக்காட்டம்மே சரணம், சரணம் தா தேவி, சரணம் தா தேவி பொன்னம்மே’’ என்று சரண கோஷம் ஒலிக்க, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் இருமுடி சுமந்து பக்திப் பரவசத்துடன் மண்டைக்காட்டுக்கு ஆண்டுதோறும் வருகிறார்கள். இக்கோயில் நாகர்கோவிலிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். குளச்சலில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பெண்கள் 41 நாட்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால் ‘பெண்களின் சபரிமலை’ என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது...
சு.இளம் கலைமாறன்
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment