Sunday, 19 April 2020

காவல் தெய்வங்களான அய்யனார், சுடலைமாடன், கருப்பன் ஆகியோரது வாகனம் குதிரை வாகனமாகும். !!

காவல் தெய்வங்களான அய்யனார், சுடலைமாடன், கருப்பன் ஆகியோரது வாகனம் குதிரை ஆகும். இந்த வாகனம் சம்ஹார கோலத்தைக் காட்டுவதாகும்.  குதிரையின் கால்களாக தர்மம், அதர்மம், காமம், மோட்சம் ஆகியவை உள்ளன. கிரியை, ஞானம் ஆகியவை கண்களாகவும், விதியானது குதிரையின் முகமாகவும்,  மந்திரங்கள் ஆபரணங்களாகவும், வால் ஆகமங்களாகவும், பிரணவ மந்திரம் கடிவாளமாகவும் சேணம் உபநிஷதங்களாகவும் இருக்கும்.
குதிரை வேதக் குதிரை என்றும் கூறப்படுகிறது. இவர்களுக்கு குதிரை ஏன் வாகனமாக வழங்கப்பட்டுள்ளது என்றால், காவல் புரியும் தெய்வமாச்சே, வேகமாக  வரவேண்டாமா! அதன் பொருட்டுதான் வேகமாக வரவேண்டும் என்பதற்காக குதிரையை வாகனமாக கொடுத்துள்ளனர். அது மட்டுமல்ல பறந்து வரும் பட்சிகளை  வாகனமாக வைத்திருக்கலாமே என்று நீங்கள் நினைக்கலாம். சுடுகாடு ஆனாலும் இடுகாடு ஆனாலும் பள்ளம், மேடு ஆனாலும், கல்லும், முள்ளும் நிறைந்த  பாதையாக இருந்தாலும், அடர்ந்த சோலையாக இருந்தாலும் அக்னி சுவாலையாக இருந்தாலும் குதிரை மட்டும் வீரம் கொண்டு, வேகம் கொண்டு ஓடி வரும்.
நம்மூரு காவலர்களுக்கு வேகமாக வருவதற்காகத்தான் அடையாளம் காட்டப்படக்கூடிய காவல் என்கிற பெயரோடும், ஒலி எழுப்பும் சுழல் விளக்கும் கொண்ட  வாகனம் கொடுக்கப்பட்டுள்ளது. அது போலத்தான் காவல் தெய்வங்களுக்கும் வாகனம் வேண்டும் என்பதற்காகத்தான் குதிரை வாகனமாக கொடுக்கப்பட்டுள்ளது. மாகாளி அவதாரத்திற்கு பிறகு பூலோகத்தில் தெய்வ சக்தி குன்றி மந்திர சக்தி அதிகரித்தது. மந்திரவாதிகளின் செயல் திறன் அதிகரித்து ஏவல், செய்வினை  முதலான கொடுஞ்செயல்கள் உருவாகின. குடியான பாமரன் முதல் நாடாளும் மன்னன் வரை மந்திரவாதிகளைக்கண்டு அஞ்சினான்.
இதுகுறித்து தேவர்கள், ஈசனிடமும், மகாவிஷ்ணுவிடமும் முறையிட ஈசன், 64 மாடன்களையும், மாடத்தியையும் படைத்தார். அவர்களை கண்காணிக்கும்  பொருட்டு தன்னுள் ஒரு சக்தியை சுடர் ஒளியினில் மகவாக பிறக்கச்செய்தார். அதுவே சுடலைமாடன். இதுபோல் திருமால் தனது சக்தியை பிறவி எடுக்கச்  செய்தார் அதுவே கருப்பன். இவர்களை வழிநடத்தவே அய்யனாரை பிறவி எடுக்கச் செய்தனர். மூவருமே காவல் தெய்வங்களாக அருள்கின்றனர். சுடலைமாடன்,  மந்திர மூர்த்தி, மாசானம், மாயாண்டி, பலவேசம் என பல நாமங்களில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார்.

‘‘தில்லை வனம் சென்றவனே
பிள்ளை மனம் கொண்டவனே
வெள்ளை குதிரை வாகனனே
எல்லை காக்கும் சுடலை ஈசனே’’

என, இவர் குறித்து வரும் பாடல்கள் மூலம் குதிரை வாகனத்தை கொண்டவர் என்பது தெரிய வருகிறது. இதுபோல் கருப்பன், கருப்பசாமி, கருப்பண்ணசாமி,  காத்தவராயன் என பல நாமங்களில் கேரளம், தமிழகம் பகுதிகளில் பரவலாக கோயில் கொண்டுள்ளார்.

வீச்சருவா கரத்தோடும்
முறுக்கு மீசை முகத்தோடும்
குதிரையில சாமப் பொழுதில
ஊர வலம் வரும் கருப்பனே!

என்ற வரிகள் கருப்பசாமிக்கும் குதிரைதான் வாகனம் என்பதை காட்டுகிறது.

வெட்டுக்கத்தி கையில் கொண்டு
எட்டுத்திக்கும் கேட்கும் வண்ணம்
குதிரை மேலேறி வருபவரே
ஊரை காக்கும் அய்யனாரே!

இந்த பாடலின் வரி, அய்யனாருக்கு குதிரை தான் வாகனம் என்பதை காட்டுகிறது. கிராமம் முதல் நகரம் தொட்டு தமிழகம் எங்கும் காவல் தெய்வமாக  அருள்பாலிக்கிறார் அய்யனார்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment