Thursday, 23 April 2020

அடி தொழுவாரை அரவணைப்பான் அம்பலக் கூத்தன்.!!

உலகாளும் ஈசன், தான் அருள்பாலிக்கும் ஒவ்வொரு தலத்திலும் திருவிளையாடல் ஒன்றை நடத்தி, ஆலயம் உருவாக அவரே காரண கர்த்தாவாக இருப்பார். அந்த வரிசையில் பொன்னால் ஆன நாயின் உருவசிலையை பால் குடிக்க வைத்து அதிசயம் நிகழ்த்தினார். அருணாச்சலேஸ்வரர். பொன் நாயி பால் குடித்ததாலே ஊரின் பெயர் பொன்னாக்குடி ஆனது. ஆலயம் உருவாகி ஊரும் கூடியது. தேரும் ஓடியது. சில ஆண்டுகள் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டு விட்டது. காரணம் அறிய முடியவில்லை.

Advertising


Advertising


அது தொடர்பான கல்வெட்டுகளும் தென்படவில்லை. புதர் மண்டி சிதைவுற்று போனது ஆலயம். ஓரிருவர் உதவியுடன் உள்ளூர் அர்ச்சகர் குடும்பத்தினர் கட்டிடம் புதர் மண்டி கிடந்தாலும் கருவறை இறைவனுக்கு சக்தி குறைந்து போகாது என்றெண்ணி இருவேளை பூஜையை எதிர்பார்ப்பின்றி செய்து வந்தனர். ஒரு நாள் அடைக்கப்பட்ட கோயிலுக்குள்ளே இருந்து அம்மா என்றொரு குரல் மானிட குரலுக்கும், மாட்டின் கன்று குரலுக்கும் வித்தியாசம் காட்டும் வகையிலே இருந்தாலும் அந்த குரல் மூன்று முறை கேட்டது.
இதைக் கேட்ட கோயிலைச் சுற்றி வசிக்கும் சிலர் வியப்புடன் கேட்டனர். பிரதோஷம் தோறும் ஐந்துக்கும் குறைவானவர்களே வந்த நிலையில் அதே மாதம் வந்த பிரதோஷ பூஜையில் பத்துக்கும் குறைவான நபர்கள் பங்கேற்று இருந்தனர். பூஜை நடந்து கொண்டிருந்தது. அந்த நேரம் மாலை 5.58 மணிக்கு...கற்சிலையாக இருக்கும் நந்தி வாய் திறந்து அம்மா...என குரலெழுப்ப. சனி பிரதோஷமான அன்று  பூஜையில் பங்கேற்றவர்கள் வியப்புடன் பார்த்தனர்.
மூலவர் சந்நதியில் அபூர்வ ஒளி தெரிந்தது. சிறிது நேரத்தில் அந்த ஒளி மறைந்தது. ஆம். இந்த அதிசயம் நிகழ்ந்தது ஐம்பது, நூறு ஆண்டுகளுக்கு முன்பு அல்ல. 17 ஆண்டுகளுக்கு முன்பு தான் 26.01.2002 அன்றைய தினம்தான் இந்த வியப்புக்குரிய நிகழ்வு நடந்தது. இது அரங்கேறியது திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் கன்னியாகுமரி செல்லும் சாலையில் உள்ள பொன்னாக்குடியில் அமைந்திருக்கும் ஸ்ரீ உண்ணாமுலை உடனுறை ஸ்ரீ அருணாச் சலேஸ்வரர் ஆலயத்தில் தான்.
இந்த ஆலயம் சுமார் 3500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்தலமாகும். இத்தலத்தில் சித்திரை திருவிழா முன்பு நடந்துள்ளது. அப்போது தேரோட்டம் மற்றும் தெப்பத்திருவிழா உள்ளிட்ட பத்து நாள் உற்சவம் மிக விமர்சையாக 1937ம் ஆண்டு வரை நடந்திருக்கிறது. 30.05.1924ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதற்கான ஆதார சான்றாக கல்வெட்டு ஒன்று கோயிலில் அம்பாள் சந்நதியின் வெளிப்பிராகாரத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பிற்பாடு கோயிலில் விழாக்கள் எதுவும் நடைபெறாமல் கோயிலும் பொலிவற்ற நிலையில் காணப்பட்டது. உள்ளூர் அர்ச்சகர் குடும்பத்தினர் இரு வேளை பூஜை செய்து வந்தனர்.
உள்ளூர் பக்தர்கள் சென்று வணங்கி வந்தனர். நந்தி அழைப்பிற்கு பின்னர் இக்கோயில் சிறப்புற்று விளங்குகிறது. வேண்டுதல் நிறைவேறப்பட்ட பக்தர்களின் வருகையும், அவர்கள் மூலம் அறிந்த அக்கம் பக்கத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்தும், நாள்தோறும் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இறையன்பர்கள் அளித்த உதவியால் பக்தர்கள் வழிபாட்டுக்குழு அமைப்பினர் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து கோயிலை சீரமைத்து பின்னர் 14.07.2014ல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இன்றும் தேர் சிதைந்தும். தெப்பக்குளம் பாசிபடர்ந்தும் காணப்படுகிறது.
முன்னொரு காலத்தில் இப்போதைய சுந்தரபாண்டி குளம் என்று அழைக்கப்படும் குளம் ஒரு சிறிய குட்டையாக இருந்தது. அதன் கரையில் ஒரு சித்தர் கற்குகை அமைத்து அதனுள் வாசம் செய்தார். குளத்திலிருந்து கிழக்கே சற்று தொலைவில் அவர், ஒரு கல்லை நட்டு அதனை லிங்கமாக பாவித்து தினமும் பூஜை செய்து வந்தார். தனக்கு உதவியாக ஒரு நாயை வளர்த்தார். அந்த நாய் அவருக்கு பாதுகாவலனாகவும், ஏவலனாகவும் இருந்தது. பொன்னாக்குடி அந்த காலத்தில் மரங்கள் அடந்து வளர்ந்த சோலையாக இருந்தது. பாளையம் கோட்டையிலிருந்து நாங்குநேரி செல்வதற்கு இந்த கானகமே பாதையாக இருந்தது.
 ஒரு நாள் இரவில் பாண்டிய வம்சா வழியில் வந்த மன்னன் வேட்டைக்கு வந்தான். அப்போது குதிரைகளின் வேகமான காலடி சத்தத்தை கேட்டு குகையிலிருந்து வெளியே வந்த சித்தரின் நாய், அவர் தூங்குவதற்கு இந்த குதிரைகளின் காலடி சத்தம் இடையூறாக இருக்கிறதே என்றெண்ணி குரைத்தது. நாய் குரைத்ததால் ஆத்திரம் அடைந்த மன்னன் நாயின் மீது ஈட்டியை எறிந்து விரட்டினான். ஆனால் ஈட்டி குறி தவறி நாயின் உடலில் பாய்ந்தது. நாயும் இறந்தது. நாயின் சத்தம் கேட்டு சித்தர் வெளியே வந்தார்.
அன்று பௌர்ணமி தினம். நாயின் அருகே மன்னன் வந்தான். நாயை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த சித்தரிடம். சுவாமி என்னை மன்னியுங்கள். நாயை கொன்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஈட்டியை எறிய வில்லை. நான் ஒரு சிவபக்தன் என்றான். சரி இதனை மாற்றுங்கள் என்று சொன்னதும், மன்னர் கண் அசைக்க மன்னருடன் வந்த காவலர்கள் நாயை அடக்கம் செய்தனர். சுவாமி என்னை சபித்து விடாதீர்கள் என்றான் மன்னன்.
அதற்கு நான் சபிக்க வில்லை, ஆனால் இந்த தோஷம் உன்னை விட்டு நீங்காது என்றார். தோஷம் நீங்க நான் என்ன செய்ய வேண்டும் சுவாமி என்று மன்னன் கேட்க, அதற்கு சித்தர் தங்கத்தால் நாய் பொம்மை செய்து கொண்டு வா... உன் பக்தியினால் அந்த நாய் பால் குடிக்க வேண்டும் என்று கூறினார். சுவாமி என் பக்தியை சோதிப்பதற்கு வேறு வழியே கிடைக்கவில்லையா? பொம்மை நாய் பால் குடிப்பது அது எப்படி சாத்தியமாகும். என்றான் மன்னன். உன் பக்தி உண்மையானால் அது சாத்தியமாகும் என்றார் சித்தர்.
மன்னனும் அதன் படியே தங்கத்தால் ஆன நாய் பொம்மையை செய்து கொண்டு வந்தான். சித்தர் பூஜை செய்து வந்த சிவலிங்கம் முன்பு தங்கத்தால் ஆன நாய் பொம்மை பால் குடித்தது. பொன்னால் ஆன நாய் பால் குடித்ததால் பொன்னாக்குடி (பொன் நாய் குடி) என்று அந்த பகுதி விளங்கிற்று. பிற்காலத்தில் ஆயன்குளத்து இடைகுலத்தவர்கள் ஆநிரைகளை மேய்க்க இந்த கானகம் பகுதிக்கு வந்தனர். அப்போது பெண் ஒருத்தி புல் அறுத்துக் கொண்டிருந்தபோது புல் அறுக்கும் பன்னறுவா ஒரு கல் மீது பட்டது. அந்த கல்லில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.
உடனே அச்சத்தோடு அதிசயத்த அந்த பெண், பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த தனது கொண்டவனிடத்தில் கூறினாள். அவனும் ஓடி வந்து அந்த கல் மீது மண்ணை அள்ளி வைத்துப்பார்த்தான். தண்ணீர் எடுத்து ஊற்றினான். ரத்தம் நிற்கவில்லை. பசுவிடமிருந்து பாலை கறந்து ஊற்றினான். ரத்தம் நின்றது. பயபக்தியோடு வழிபட்டான். இதை அறிந்த சுந்தரபாண்டிய மன்னன். அந்த இடத்தில் கோயில் கட்ட எண்ணி அதற்கான பணியில் ஈடுபட்டான். எப்படி கட்டுவது என்று மந்திரிகளோடும், வேதியர்களிடமும் ஆலோசித்தான் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவர்கள் திட்டமிட்டபடி கோயில் பணியை தொடங்கினர். மன்னன் கனவில் திருவண்ணாமலை கோயில் வந்தது.
அதனால் அதன் சாயலில் கோயிலை எழுப்பிய மன்னன் அவர் பெயரிலேயே சுவாமியையும், அம்பாளையும் பிரதிஷ்டை செய்தான். நாமும் இத்தலத்தை தரிசிப்போம் வாருங்கள்.வாசல் முன்பு வெளிப்புரத்தில் வலது பக்கம் கணபதி இருக்கிறார். இடது பக்கம் வள்ளி தெய்வானையோடு முருகன் நின்ற கோலத்தில் உள்ளார். அவர் அருகே கருப்பண்ணசாமி காவல் தெய்வமாக உள்ளார். உள்ளே சென்றதும், பலிபீடம், அடுத்த கொடி மரம் உள்ளது.
உள்பிராகாரத்தில் சூரியன், சந்திரன் மேற்கு நோக்கி சுவாமியை பார்த்து இருக்கின்றனர். அதிகார நந்தி வடக்கு பார்த்து உள்ளார். அருகே சாஸ்தா வீற்றிருக்கிறார். அவர் அருகே நாகராஜாவும் உள்ளார். அடுத்த சுவாமியை பார்த்த படி நந்தி தேவர் உள்ளார். சுவாமி சந்நதியில் துவார பாலகர்கள் உள்ளனர். சுவாமி அருணாசலேஸ்வரர், திருவண்ணாமலையில் உள்ளது போலவே இருக்கிறார். ஸ்ரீ உண்ணாமலை அம்மை நின்ற கோலத்தில் மீனாட்சி அம்மன் அலங்கார ரூபத்தில் கையில் கிளியுடன் காட்சி தருகிறார். அம்பாளின் கண்களில் கருணை தெரிகிறது. பொன் நகையோடு புன்னகை கொண்ட தாயின் முகத்தை ஒரு முறை பார்த்தால் எல்லா துன்பங்களும் விலகி உள் மனதில் சாந்தம் நிகழ்கிறது.
அம்பாளின் சந்நதி முன்பு சுரதேவர் மூன்று முகத்தோடும், நான்கு கரத்தோடும் நின்ற கோலத்தில் உள்ளார். அவரை அடுத்து வடக்கு பார்த்த நிலையில் புத்தம் புது சிலைகளாக 63 நாயன்மார்களும், அவர்களோடு 10 சிவனடியார்கள் என 73 பேர் நின்ற நிலையில் உள்ளனர். அவர்கள் எதிரே தட்சிணாமூர்த்தி தியான நிலையில் இருக்கிறார். சப்த கன்னிகள் உயர்ந்த பீடத்தில் அமர்ந்த நிலையில் வடக்கு நோக்கி இருக்கின்றனர். கன்னிமூலையில் கன்னி விநாயகர் வீற்றிருக்கிறார்.
அதனையடுத்து கொலுமண்டபம் உள்ளது. சுவாமிக்கு பின்பக்கம் லிங்கோத்பவர் உள்ளார். அக்னி மூலையில் முருகன் வள்ளி தெய்வானையுடன் நின்ற நிலையில் உள்ளார். இத்தலத்தில் சனி பகவான் தனிச்சந்நதியில் உள்ளார். அடுத்த சண்டிகேஸ்வரர் இருக்கிறார். கால பைரவர் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். வெளிப் பிராகாரம் திருகல்யாண மண்டபம் உள்ளது. அம்பாள் சந்நதி வெளிப்பிராகாரத்தின் மேலே 12 ராசிகளும் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இத்தலத்தின் தல விருட்சம் மாமரமாகும்.
இத்தலத்தில் முன்பு பூஜித்த சித்தர் இருந்த குளக்கரையில் சுந்தர பாண்டிய மன்னன் பெயரில் பிள்ளையார் கோயில் உள்ளது. அவர் சுந்தரபாண்டி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். அந்த குட்டையை மன்னன் குளமாக விரிவு படுத்தியதால் அவரது பெயரால் சுந்தரபாண்டி குளம் என்று அழைக்கப்படுகிறது. லிங்கத்தை கண்ட இடைக்குல குடும்பத்தை சார்ந்தவர்கள் இப்போதும் கோயிலுக்கு பால் வழங்கி வருகின்றனர். இது குறித்து அருணாசல கோனார் கூறும் போது நாங்கள் தலைமுறை தலைமுறையாக கோயிலுக்கு பால் வழங்கி வருகிறோம் என்றார்.
குழந்தை பாக்யம் வேண்டுவோர், இத்தலத்து கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று, 16 மிளகு வாங்கி அதை சிகப்பு துணியில் கட்டி, நெய் விளக்கு ஏற்றினால் அடுத்த ஆண்டுக்குள் குழந்தை பாக்யம் கிடைக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். கோயில் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். மேலும் பௌர்ணமி கிரிவலம், பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடக்கிறது. காலபைரவருக்கு பரணி நட்சத்திரம் அன்றும் தேய்பிறை அஷ்டமியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment