அல்லிக்குண்டம், உசிலம்பட்டி
எதிரிகளால் பலிவாங்கப்பட்ட தனது கணவனின் உடலுக்கு சிதை மூட்டியபோது உடன் கட்டை ஏறி உயிர் நீத்துப்போன சிவனம்மாள். தன்னைப்போன்ற நிலை வேறு எந்தப்பெண்ணுக்கும் வரக்கூடாது என்றெண்ணி தன்னை நம்பி கை தொழும் பெண்களின் துயரை துடைத்து, அவர்களின் சிரமங்களை போக்கி அருள்கிறாள். தான் கோயில் கொண்டுள்ள அல்லிகுண்டம் கிராம மக்கள் மட்டுமன்றி சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் தெய்வமாக திகழ்கிறாள். அல்லிகுண்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவிலுள்ளது. கண்டமனூர் ஜமீன்தாருக்கு பாதுகாவலனாக இருந்தவர் நல்லத்தேவன். இவரது தாய்வழி உறவினர், அதாவது பெரியம்மா மகன் நல்லுத்தேவன்பட்டியைச் சேர்ந்த வெள்ளப்பின்னத் தேவன். இவர் கேட்டதற்காக, அவர் மனைவி வழி உறவினரான அப்பகுதியைச் சேர்ந்த நிலக்கிழார் படிவு என்பவரை சிரச்சேதம் செய்தான். அதுபோல மற்றொரு பெரியம்மா மகனான அண்ணன் அல்லிகுண்டத்தைச் சேர்ந்த இருளப்பதேவனுக்காக அந்த ஊர் தலைவனாக இருந்த மண்டலன் என்பவனை கொலை செய்தான் நல்லதேவன்.
இப்படி தனது அண்ணன் மார்கள் குடும்பத்துக்காக பகைவர்களை பழி தீர்த்தான். இதனால் நல்லதேவனை தீர்த்துக்கட்ட இரண்டு பேரின் பங்காளிகளும் தருணம் பார்த்திருந்தனர். இந்நிலையில் நல்லதேவனிடம் வரிவசூல் பணத்தை மதுரைமன்னர் திருமலை நாயக்கருக்கு மாதாமாதம் குதிரையில் சென்று கட்டி
வரும் பொறுப்பை கண்டமனூரு ஜமீன் ஒப்படைத்தார். மாதம், மாதம் மதுரைக்கு சென்று மன்னரிடம் வரிப்பணத்தை செலுத்திவிட்டு வரும்போது, உரப்பனூரில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த அழகான இளமங்கை சிவனம்மாளை கண்டான். அவளிடம் பேச்சு கொடுத்தான். அவளை மணமுடிக்கும் பொருட்டு, நல்லதேவன் சிவனம்மாள் பெற்றோரிடம் பெண் கேட்டான். ஒரே இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தபோதும் நல்லதேவனுக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டனர். ஒருநாள் மன்னரிடம் வரியை செலுத்திவிட்டு வரும்போது உரப்பனூரில் வயல்பகுதியில் இருந்த சிவனம்மாளை குதிரையில் தூக்கிகொண்டு கண்டமனூர் சென்று விட்டான். தகவலறிந்த சிவனம்மாள் பெற்றோர்கள் மற்றும் பெரியோர்கள் திரண்டு அல்லிகுண்டம் இருளப்பத்தேவனிடம் சென்று கூறினர்.
அப்போது இருளப்பத்தேவன் மற்றும் குடும்பத்தினர்கள் சிவனம்மாளை கண்கலங்காமல் காப்பாத்துவான் நீங்க கவலைப்படவேண்டாம். என்று கூறி அனுப்பி வைத்தார். ஆண்டுகள் இரண்டு கடந்த நிலையில் கண்டமனூரில் நடைபெற்ற மிகப்பெரிய திருவிழாவில் ஜமீனின் தலைமையில் வழுக்குமரம் ஏறும் போட்டி நடைபெற்றது. அதில் ஏராளமானோர் போட்டியில் கலந்து கொண்டு மரம் ஏறமுடியாமல் தோற்றனர். அப்போது வழுக்குமரத்தில் உச்சியில் மஞ்சள்துணியில் பொற்காசுகள் முடித்து கட்டப்பட்டிருந்தது. நல்லதேவன் எண்ணெய் தடவிய வழுக்குமரத்தில் ஏறத்துவங்கினான். பலமுறை வழுக்கியும் தொடர்ந்து முயற்சித்து அதன் உச்சியிலுள்ள பொற்காசுகள் முடித்துள்ள துணியை எடுத்தான். அந்த நேரம் கூட்டத்தின் பின்னே இருந்த ஒருவன் ஈட்டியில் விஷம் தடவி நல்லதேவன் முதுகை நோக்கி வீசினான். ஈட்டி பாய்ந்த வேகத்தில் ரத்தம் பீறிட வழுக்குமரத்தின் உச்சியிலிருந்த பொற்காசுகளின் மஞ்சள்துணியை கையில் பிடித்தபடியே கீழே விழுந்தான். விஷம் தடவிய ஈட்டி என்பதால் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து இறந்தான்.
நல்லதேவன் இறந்த தகவலறிந்து சிவனம்மாள் நல்லதேவன் கொலையுண்டு கிடந்த இடத்திற்கு ஓடி வருகிறாள். உடல் அருகே வந்தமர்ந்தவள். சிகப்பு கண்டாங்கி சேலை முந்தானையை எடுத்து நல்ல தேவன் உடலில் பீறிட்டு வந்து கொண்டிருந்த உதிரத்தை துடைத்தாள். துடைக்க, துடைக்க கொட்டிய ரத்தம், சிவனம்மாளின் கண்ணீருடன் கலந்து ஆறு போல ஓடியது.‘‘ஊரே திரண்டு வந்தாலும் ஒத்தையில மல்லுக்கு நிப்பியேளே முன்னே நின்ன மோத முடியாத பயலுக, முதுகில குத்திட்டானேன்னு போயிட்டேளா, மாடு மேய்ச்சிட்டு நின்னவளே குருத மேல தூக்கியாந்து கல்யாணம் செஞ்சேளே, இப்படி என்ன தனியா விட்டுட்டு போகத்தானா பெத்தவங்களா மறந்து கட்டுவனே தெய்வமுன்னே இருந்தேனே இப்படி நட்டாத்துல விட்டுட்டேளே, வீரத்தில வெற்றி பெற்று வந்த நீங்க விளையாட்டுல வெற்றி பெற ஆசப்பட்டு, உசுர விட்டுட்டேளே, என் சாமி கண்ண திறந்து பாரு, உன் சிவனம்மா வந்திருக்கேன்.’’ என்று கண்ணீர் மல்க அழுதாள், அவள் அழுகையால் அணிந்திருந்த நீல நிற ரவிக்கை, கருப்பு நிறமானதே.
இறந்த நல்லதேவன் உடலை எரிக்க ஜமீன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. சிவனம்மாள் நல்லதேவன் இறந்தபின்பு ‘‘அவரில்லாமல் என்னால் வாழ முடியாது. அவர் உடம்பில் எரியும் என்னையும் எரிக்கட்டும்’’ என்றாள். இது உடன்கட்டை ஏறுவது. அவ்வளவு சுலபமில்லை. என்றனர். அப்போது தான் குழந்தை முதல் குமரி ஆனது வரை அனுதினமும் வணங்கி வந்த குலதெய்வம் சின்னக்கருப்பசாமி வேண்டினாள் சிவனம்மாள்.‘‘ஏம்மா, உன் தெய்வம் சக்தி உள்ளதா இருந்தா, நீ போய் மதுரை மன்னரிடம் சென்று உடன்கட்டை ஏற அனுமதி பெற்று, அதற்கான தீக் கங்குகள் வாங்கி வரவேண்டும், அதுவும் உனது சேலை முந்தானையில் கொண்டு வரவேண்டும் முடியுமா’’ என்றனர். ஜமீனும், ஊர் பெரியவர்களும். ‘‘சரி’யெனக்கூறி சிவனம்மாள் மதுரை மன்னரைக்காணச் சென்றாள். மலை மற்றும் காட்டுப்பகுதியில் நடந்து சென்றாள், அப்போது தனது அண்ணனை துணைக்கு அழைக்க (தெய்வம்) சின்னக்கருப்பசாமியை வேண்டிக்கொண்டே சென்றாள். அப்போது சிவனம்மாள் அண்ணன் உருவத்தில் சின்னக்கருப்பசாமி சிவனம்மாளுக்கு துணைக்கு சென்றது.
மதுரை மன்னரிடம் அனுமதி பெற்றாள். தீக்கங்குகள் கேட்டாள், சேலை தீப்பற்றுமே என்றனர். ‘‘என் கணவன் மீது நான் கொண்டு பதிபக்தி உண்மையானால், நான் உத்தமி என்பது உண்மையானால், என் குலசாமி சின்னக்கருப்பன் சக்தி உள்ள தெய்வம்தான் என்பது உண்மையானால் சேலையில் போட்ட தீ கங்கு,
என் உடல் மீது பற்றும் வரை படாராமலும், அணையாமலும் இருக்கும். போடுங்கள் தீக்கங்கை’’ என்றாள். அரண்மனை ஊழியர் தீக்கங்கை போட, அதை முந்தானையில் வாங்கி கொண்டு நல்லதேவன் இறந்து கிடக்கும் கண்டமனூருக்கு சின்னக்கருப்பசாமி உதவியுடன் வந்து சேர்ந்தாள். அப்போது உடன் வந்த அண்ணனை காணவில்லை, அப்போதுதான் உடன் வந்தது அண்ணன் இல்லை சின்னக்கருப்பசாமி என சிவனம்மாளுக்கு தெரியவந்தது. நல்லதேவன் உடலருகே அழுதபடி நின்று கொண்டிருந்தான் சிவனம்மாளின் அண்ணன்.
ஊர் மக்கள் அனைவரும் சிவனம்மாள் ஒரு தெய்வப்பிறவி சேலை முந்தானையில் தீக்கங்கை எடுத்து வந்து விட்டாலே என காலில் விழுந்து வணங்கினார்கள். விறகுகள் அடுக்கிவைக்கப்பட்டு அதன் மேல் நல்லதேவனின் உடல் வைக்கப்பட்டிருந்தது கொண்டுவந்த தீக்கங்குகளை போட்டு விட்டு சிவனம்மாள் உடன் கட்டை ஏறினாள். இரண்டு உடல்களும் எரிந்து சாம்பலானது. சிவனம்மாள் தீக்கங்குகள் கொண்டுவந்த முந்தானை மட்டும் தீயில் வேகாமல் புத்தம்புதியதாக இருந்தது. அதனைக்கண்டு பிரமித்துபோனார்கள் ஊர் மக்கள். இதனைப்பார்த்த ஜமீன் எனக்கு பாதுகாவலனாக விளங்கிய நல்லதேவனையும் சிவனம்மாளையும் தெய்வமாக வைத்து வழிபட தீயில் எரிந்து போகாத முந்தானையையும், அவர்களது அஸ்தியையும் வைத்து வழிபட்டார். ஆனால் ஜமீனுக்கு எந்த விருத்தியும் ஏற்படவில்லை, அதற்கு மாறாக துன்பமும் கஷ்டமும் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த முனிவர் ஒருவர் ஜமீனிடம், நல்லதேவன் உடலுக்கு மரியாதையோடு அனல் மூட்டியிருக்க வேண்டும். மாறாக சிவனம்மாள் உலகமாக இருந்தவன் மாண்டு கிடக்க, அவளை நோகடித்து அலைய விட்டதால் உனக்கு இத்தனை துன்பங்கள் நேர்ந்தது.
எனவே அவர்களின் உறவினர்களிடமே விட்டு விடுங்கள், அப்போதுதான் நீங்கள் துன்பங்கள் நீங்கி வாழ முடியும் என்றார். அதன்படி அல்லிகுண்டம் ஊருக்கு மேற்கு எல்லையில் தற்போதுள்ள சிவனம்மாள் கோவில் உள்ள இடத்தில் வைத்து விட்டு, நல்லதேவன் உறவினரான இருளப்பத்தேவன் வகையறாவிடம் உங்கள் தெய்வத்தை உங்களிடமே விட்டு செல்கிறோம் என்று கூறி விட்டு ஜமீன் சென்றார். அதன் பின்பு இருளப்பத்தேவனின் குடும்பத்தினர்கள் சிவனம்மாள், நல்லதேவனை வணங்கி வந்தனர். இன்றும் சிவனம்மாளை வணங்கி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி குடும்பங்கள் சிறந்து விளங்கும் என்பது இவர்களின் முழுமையான நம்பிக்கையாக உள்ளது. இந்த கோயிலில் மாசி மாதம் சிவராத்திரியையொட்டி 3 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்தில் முதலாவதாக பெண் பிள்ளை பிறந்தால் சிவனம்மாள் என்று பெயரிடுகின்றனர். ஆண் பிள்ளை பிறந்தால் நல்லுச்சாமி என்று பெயர் சூட்டுகின்றனர். நல்லதேவன் என்று பெயரிட்டால் சாமியை கூப்பிட்டது போல இருக்கும் என்றெண்ணி நல்லுச்சாமி, நல்லச்சாமி என பெயர் சூட்டுகின்றனர்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment