Thursday, 23 April 2020

அண்டியவர்களை காத்தருளும் தங்கம்மை தாயம்மை.!!

கோட்டாறு, நாகர்கோவில்

திருவாரூரை தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை மனு நீதிச்சோழன் ஆண்டு வந்தான். அந்த காலக்கட்டத்தில் காஞ்சிபுரம், சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்ததால்,  காஞ்சிபுரத்தில் இருந்த நகரத்தார்கள்  சமூகத்தினரை  காவிரிப் பூம்பட்டினத்திற்கு வந்து இருக்கும்படி மனுநீதிச்சோழன் அழைப்பு விடுத்தான். இதனைத் தொடர்ந்து பெருமளவிலான நகரத்தார்கள் காவிரிப் பூம்பட்டினத்திற்கு வந்து வாழ ஆரம்பித்தனர். நகரத்தார் செல்வ செழிப்புடனும், பெயரோடும், புகழோடும் வாழ்ந்து வந்தனர். ஒரு சமயம் சோழநாட்டை ஆண்டு வந்த பூவந்திசோழனுக்கு அண்டை நாட்டில் இருந்து பெருமளவில் பவளங்கள் கிடைத்தது. சோழ மன்னன் அதனை தன் மனைவிக்கு மாலையாக அணிவித்து அழகு பார்க்க நினைத்தான். அரண்மனை பொற்கொல்லர்களிடம் கூறினான். அவர்கள் இதை நுனுக்கமாக செய்ய வேண்டும். பவள மாலை செய்வதற்கு பவளங்களை கோர்க்க வேண்டும்.
பவளங்கள் மீது  கருவிகளை பயன்படுத்தி துளைபோட அஞ்சி, எங்களால் இயலவில்லை எனக்கூறி மன்னனிடமே திரும்ப கொடுத்தனர். மன்னன் என்ன செய்வது என்று யோசித்து அரண்மனை செட்டியாரை அழைத்துவர ஆணையிட்டான். செட்டியாரும் வந்தார். அரசன் அந்த பவளங்களை செட்டியாரிடம் கொடுத்து நீர் யாது செய்வீரோ தெரியாது. இப்பவளங்களை நாளை காலைக்குள் மாலையாக கோர்த்து தொகுத்து தர வேண்டும் என்று கட்டளையிட்டான். செட்டியாரும் அரசனின் கட்டளையை மீற முடியாது என்பதால் பவளங்களை பெற்றுக்கொண்டு பெரும் கலக்கத்துடன் வீடு வந்து சேர்ந்தார். தந்தையின் முகவாட்டத்தை கண்ட அவரது மகள்கள் தங்கம்மையும், தாயம்மையும் அவரிடம் விபரங்களை கேட்டனர். அவரும் அரண்மனையில் நடந்ததை கூறினார். அதை கேட்ட பெண்கள் தந்தைக்கு ஆறுதல் கூறினர்.
தங்கம்மை கூறினார். ‘‘அப்பா, ஏன் கவலைப்படுறீங்க மூலமுதல்வனாக திகழும் அந்த விநாயகனை நினைத்து செயலில் இறங்குகிறோம் நிச்சயம் நல்லதாய் முடியும் நாளை காலையில் நீங்கள் மாலையுடன் அரண்மனைக்கு செல்லலாம். என்றாள். உடனே தாயம்மை கூறினாள் ‘‘இப்போ நல்லா தூங்குங்கப்பா’’ என்றனர். பவளங்களை பெற்றுக் கொண்ட அந்த பெண்கள் இருவரும் பவளங்களில் துளைபோடவேண்டிய இடத்தில் கருப்புக்கட்டி நீரைத்தொட்டு வைத்து அதனை தங்கள் வீட்டின் பின் பக்கத்தில் உள்ள எறும்பு புற்றுகள் வாயில் வைத்தனர். அங்கு வந்த எறும்புகளும் பவங்களில் உள்ள இனிப்பை உண்ண பவளம் அரிக்கப்பட்டு துளை தானாக உருவாகியது. அவ்வாறு துளைகள் உருவான பவளத்தை பட்டு நூலில் மாலையாக்கி கோர்த்து தந்தையிடம் வழங்கினர். செட்டியாரும் அதனை எடுத்து சென்று மன்னனிடம் கொடுத்தார்.
மன்னரும் செட்டியாரை பாராட்டி மாலையை கோர்த்த முறையை பற்றி கேட்டார். செட்டியாரும் நடந்தவைகளை அப்படியே கூறினார். மன்னனும் இத்தகைய அறிவுடைய பெண்களை காண செட்டியார் வீட்டிற்கே சென்றார். தாயம்மை, தங்கம்மையை கண்டார் மன்னன். பட்டு சரிகை கொண்ட பாவாடை சட்டை தாவணியில் இருவரும் அழகு பதுமையாய் ஜொலித்தனர். அப்பெண்களின் அழகில் மயங்கிய மன்னன் ‘‘இவர்கள் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல எனது அரண்மனை. அதுவும் எனது துணைவியர்களாக’’ என்று கூறி செட்டியாரிடம் தங்கம்மையையும், தாயம்மையையும் எனக்கு மணமுடித்து தருமாறு கேட்டான். மன்னனின் ஆணையை மீற முடியாத செட்டியார் ஒரு நாள் தவணை தாருங்கள். என் மனைவியிடத்தில் பேசி நல்ல பதிலை சொல்கிறேன் என்று கூறிவிட்டு  வீட்டிற்கு வந்தார்.
‘‘ஏழையானாலும் ஒரு வைசியனுக்குத்தான் எனது மகளை மணமுடித்து கொடுப்பேன். ஏற்கனவே மணமுடித்திருக்கும் மன்னனுக்கு இரண்டு மகள்களையுமா மணமுடித்து கொடுப்பது. இது எந்த தேசத்து நியாயம். மானம் கெட்டு வாழ்வதை விட மாண்டு போவதே மேல்’’ என்று முடிவு செய்த செட்டியார் வீட்டிற்கு பலவகை இனிப்பு பலகாரங்களை வாங்கி வந்தார். மகள்களிடம் உங்கள் செயலைக்கண்டு மெய்சிலிர்த்த மன்னன் அன்பளிப்பாக கொடுத்த பணத்தில் இந்த பலகாரங்கள் வாங்கி வந்துள்ளேன். நான் பெற்ற செல்வங்களை இவ்வளவு அறிவு கூர்மையானவர்களாக பிறக்க வைத்த அந்த பிரம்மனுக்கும், அன்றாடம் வழிபடும் அந்த கற்பக விநாயகனுக்கும் கோடான கோடி நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியவாறு கண்ணீர் வடித்தார். தாயம்மை, ஏனப்பா, பேசும்போதே கண்ணீர் சிந்து கிறீர்களே என்றாள். அதற்கு தாயம்மை கூறினாள். அது அப்பாவின் ஆனந்தக்கண்ணீர் என்றாள்.
இரண்டு பேர்களின் பேச்சையும் கேட்டு எதுவும் உரைக்காமல் உயிரிழந்த ஜடம் போல் நின்றார் செட்டியார்.  மறுநாள் அப்பளம், பாயாசத்துடன் ஒன்பது வகை கூட்டுடன் மதிய உணவு செய்யுமாறு மனைவியிடம் கூறினார் செட்டியார். ‘‘ஏன் என்று’’ கேட்ட மனைவியிடம், சினம் கொண்ட முகத்துடன் ‘‘சொன்னதை செய்’’ என்றார். மாலையிட்ட மணாளன் பேச்சை மறுக்காத மனைவி அதை செய்தாள். மதிய உணவு தயாரானது. மகள்களை புத்தாடை அணியச் செய்து வீட்டிலிருந்து பிள்ளையாருக்கு பூஜை செய்து விட்டு மதிய உணவு உண்டனர். பின்னர் தனது மகள்களை அழைத்தார். ஊரில் திருடர்கள் அதிகமாகி விட்டனர். அதனால் நமது வீட்டிலிருக்கும் செம்பு சாமான்களை, வீட்டில் உள்ள நிலவறையில் பத்திரமாக வைக்க வேண்டும். நான் எடுத்து தருகிறேன். நீங்கள் இருவரும் உள்ளே அடுக்கி வையுங்கள் என்று கூறி தனது மகள்களை அனுப்பி வைத்தார்.
பத்து பாத்திரங்களை எடுத்து கொடுத்தவர் மறுகனம் ஆவேசம் கொண்டு அங்கே கல், மண்ணை போட்டு நிலவறையை மூடினார். தங்கம்மையும், தாயம்மையும் ஜீவசமாதி ஆனார்கள். பின்னர் ‘பசி, பட்டினி, பஞ்சத்தால் இந்த தேசம் அழிந்து போகட்டும்’ என்று சாபமிட்டவாறே நாக்கை பிடுங்கி மாண்டு போனார். இந்த சம்பவத்திற்கு பிறகு பொலிவிழந்த காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த செட்டிகுல மக்கள் அங்கிருந்து வெளியேறினர். தங்கள் வழிபட்டு வந்த கோயில் மூலவர் மரகத விநாயகரையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். தென் மாவட்டம் வந்து தங்கினர். அங்கே கோயில் எழுப்பினர்.
அக்கோயிலே புகழ்பெற்ற கோட்டாறு தேசிக விநாயகர் கோயில் ஆகும். இக்கோயில் அருகே தங்கள் குலக்கொழுந்தான தங்கம்மை, தாயம்மைக்கு தங்களது சமூக வழிபாட்டு கோயிலான முத்தாரம்மன் கோயிலில் நிலையம் கொடுத்து வழிபடலானார்கள். முத்தாரம்மன் மூலவராக இருக்கும் இந்த கோயிலில் தங்கம்மை, தாயம்மைக்கு தனி சந்நதி உள்ளது. இங்கு தினசரி பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. கோட்டாறு போன்று இரணியல் வள்ளியாற்றின் கரையில் உள்ள நாகரம்மன் கோயிலிலும் தங்கம்மை, தாயம்மைக்கு கோயில் உள்ளது. அங்கு அவர்களுக்கு பீடமாக அமைத்து வழிபடுகின்றனர்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment