சென்னை நங்கநல்லூரில் தான் வேள்வி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார் ஜமதக்னி முனிவர். ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமனின் தந்தையான அவருக்கு ஓர் ஆசை இருந்தது. அது பிரஹ்லாதனுக்காக தூணைப் பிளந்துகொண்டு வந்த ஸ்ரீ நரஸிம்ஹரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல். அதற்கான யாகம் நடத்திக் கொண்டிருந்தார். ஸ்ரீ நரஸிம்ஹ மஹா யக்ஞம். ஜமதக்னி நடத்திய யாகத்தில் எழுந்த அக்னி. தேவலோகம் வரை சென்றது. மெதுவாக ஸ்ரீ விஷ்ணு லோகத்துக்குள் எட்டிப் பார்த்து. அவ்வளவுதான் மறுகணம் உஷ்ணமான யாகத்தீயின் நடுவே உக்கிரமான கோலத்தோடு தோன்றினார் ஸ்ரீ நரசிம்மர்.
ஸ்ரீ நரசிம்மரைக் கண்டு பரவசப்பட்டார் ஜமதக்னி முனிவர். அதே சமயம் தான் தரிசித்த ஸ்ரீ நரசிம்மரை பிறரும் தரிசிக்க வேண்டும் என்று எண்ணினார். அதையே வரமாகக் கேட்டார். அதோடு சினம் நீங்கிய சாந்த வடிவினராய் அருட்பாலிக்கும்படி வேண்டினார். அப்படியே ஆகட்டும் என்று ஆசியளித்த ஸ்ரீ நரசிம்மர் அமைதி தவழும் திருமுகத்தினராய் திருமகள் இணைந்திருக்க ஸ்ரீ லட்சுமிநரசிம்மராய் இங்கே திருக்கோயில் கொண்டு எழுந்தருளினார்.
அன்றைய தட்சிண தீபாலயம் இன்றைய நங்கைநல்லூர் என்ற பெயரோடு விளங்குகிறது. நங்கை என்ற பெயர் ஸ்ரீ மஹாலட்சுமியைக் குறிக்கும். ஸ்ரீ மஹாலட்சுமி வாசம் செய்யும் திருத்தலம் என்ற பொருளில் நங்கைநல்லூர் என அழைக்கப்பட்டு நங்கநல்லூராக மருவியுள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் விளங்கிய ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் ஆலயம் காலப்போக்கில் பூமிக்குள் புதையுண்டது. பக்தனுக்காக தூணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்ட ஸ்ரீ நரசிம்மர் பல காலம் கடந்த பின்னர் பூமிக்குள்ளிருந்து வெளிவந்து காட்சி தர மனம் கொண்டார்.
அதன் விளைவாக, தன்னைப் பூஜிக்கப் பயன்படுத்திய தூபக்கால், தீபத்தட்டு, மணி போன்றவற்றை பூமிக்குமேல் வெளிப்படுத்தினார். அதைக் கண்டவர்கள் அதிசயிக்க ஆய்வாளர்களோ எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை அவை என்றார்கள். அதைத் தொடர்ந்து அப்பகுதி கவனமாகத் தோண்டப்பட்டது. சங்கு சக்ரதாரியாக வெளிப்பட்ட மஹாவிஷ்ணுவின் விக்ரகம், சிதைந்த ஆலயம் இருந்ததை நிரூபிக்க, மிக விரைவாக எழுந்தது ஸ்ரீ லட்சுமிநரசிம்ம நவநீதகிருஷ்ணன் ஆலயம்.
இத்திருத்கோயிலின் கருவறை, ஸ்தம்ப (தூண்) வடிவில் காட்சியளிக்கிறது. தூணைப் பிளந்து கொண்டு வந்து ஸ்ரீ நரசிம்மருக்கு தூண் வடிவிலே கருவறை அமைந்திருப்பது சிறப்பு. இங்குள்ள துவஜஸ்தம்பம் (கொடிமரம்) மற்றும் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் உற்சவமூர்த்தி விக்ரஹங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாரால் நன்கொடையாக வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு திருக்கரங்களோடு விளங்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் மேலிரு திருக்கரங்களால் சங்கு சக்கரம் தாங்கியவராக, வலதுகீழ் திருக்கரத்தில் அபய முத்திரையுடன் இடது கீழ் திருக்கரம் மடி மீது எழிலே உருவாக வீற்றிருக்கும் ஸ்ரீ மஹாலட்சுமியை அணைத்துக் கொண்டு திருவருட்பாலிக்கிறார்.
ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் வலப்புறம் உள்ள சந்நதியில் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், இடப்புறம் உள்ள சந்நதியில் ஸ்ரீ கோதண்டராமன் அருட்பாலிக்கின்றனர். மேலும், ஸ்ரீநிவாஸப் பெருமாள், சஞ்சீவி ஆஞ்சநேயர், ஸ்ரீ ஆழ்வார்கள், ஸ்ரீ ஆச்சார்யர்கள் ஸ்ரீ ஆண்டாள் ஆகியோருக்கு தனித்தனி சந்நதிகள் அமைந்துள்ளன. சீர்மிகு தேர் வடிவில் அமைந்த தனிச்சந்நதியில் காட்சி தருகிறார். ஸ்ரீ சக்கரத்தாழ்வார் (ஸ்ரீ ஸுதர்சன பகவான்). இவரது சந்நதியில் அனைத்துமே சக்கர வடிவில் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பு. பதினாறு வகைச் செல்வங்களையும் குறிப்பிடும் வகையில் பதினாறு திருக்கரங்களில் பதினாறு வகையான ஆயுதங்களைத் தாங்கியிருக்கிறார் ஸ்ரீ ஸுதர்சனர், ஸ்ரீ மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களிலும் அவரை விட்டுப் பிரியாமல் இருக்கும் பேறு பெற்றவர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் என்பதால் மிக உயர்ந்தவர்.
ஸ்ரீ ஸுதர்சனரின் பின்புறம் வீற்றிருக்கிறார் ஸ்ரீ யோக நரசிம்மர், பஞ்சபூதங்களும் தனக்குக் கட்டுப்பட்டவை என உணர்த்தும் வழியாக பஞ்சமுக நாகத்தின் மீது அமர்ந்து காட்சி தருகிறார். நான்கு வேதங்களும் நான்கு சக்கரங்களாக இவரது திருக்கரங்களில் திகழ்கின்றன.ஒவ்வொரு வேதத்துக்கும் இரண்டு லட்சுமிகள் அதிபதி என்பதால் அஷ்டலட்சுமியரும் இவருடைய சந்நதியைச் சுற்றி அமைந்துள்ளனர். எட்டுதிக் பாலகர்களையும் குறிக்கும் விதமாக எட்டுத்தூண்களும் இவரது சந்நதியில் உண்டு. ஸ்ரீ ஸுதர்சனரின் நான்கு வேதங்கள், பஞ்ச பூதங்கள், அஷ்டலக்ஷ்மிகள், எட்டு திக்பாலகர்கள் என்று இவர்களை வழிபடுவோர்க்கு பதினாறு வகைச் செல்வங்கள் கிடைக்கின்றன. ஸ்ரீ ஸுதர்சனர், ஸ்ரீ யோக நரஸிம்மர் சந்நதியைச் சுற்றி வந்து வணங்கிட துன்பங்கள் உருண்டோடி வாழ்வில் யோகம் வந்து சேரும் என்கின்றனர்.
பிராகாரத்தில் வலம் வரும்போது வெண்ணெய் பூசிய மேனியராய் காட்சி தருகிறார் அமெரிக்க ஆஞ்சநேயர். ஸ்ரீ ராமனுக்காக கடலைத் தாண்டிக் கடந்தவர் ஸ்ரீ ஹனுமான். இங்கு அமைந்துள்ள இவரை வணங்கி பலர் கடல் கடந்து வெளிநாடுகளில் வேலை கிடைத்துச் சென்றிருப்பதால் இவர் அமெரிக்க ஆஞ்சநேயராகிவிட்டாராம். பூமிக்கடியிலிருந்து கிடைந்த ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் பிரயோக சக்கரம் இங்கு பிரார்த்தனை சக்கரமாக அமைந்துள்ளது. இந்த ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மண்டபத்தினை தியான மண்டம், ஸ்ரீ தசாவதார மண்டபம், வாகன அலங்கார மண்டபம், திருக்கல்யாண உற்சவ ஊஞ்சல் மண்டபம் ததீயாராதனை மண்டபம் என்று பல வகைகளில் அழைக்கிறார்கள். இது அழகான மண்டபமாக காட்சி அளிக்கிறது. இங்கு பிரார்த்தனை சக்கரத்தின் மீது பக்தர்கள் தங்கள் கைகளை வைத்து வணங்கி எம்பெருமானை பிரார்த்திக்க தடைகள் நீங்கி காரியஸித்தி கிட்டும் என்பது பலர் அறிந்த உண்மை.
இத்திருக்கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகை அற்புதமாக அழகுக்கு அழகூட்டும் விதத்தில் சிறப்பாக வேறு எத்திருக்கோயிலிலும் இல்லாத வகையில் அமைந்துள்ளது கண்கொள்ளாக் காட்சி, ஒவ்வொரு மஹாபிரதோஷ தினத்தன்றும் நடைபெறும் விசேஷ திருவாராதனம் சிறப்பு மிக்கதொன்றாகும். திருமாங்கல்யச் சரடு உத்ஸவம் எனும் திருக்கல்யாண உத்ஸவம் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 3-வது வெள்ளியன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் எம்பெருமான் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ மஹாலட்சுமியும் திருமணக்கோலத்தில் காட்சி தருகின்றனர். தாயாருக்கு பத்தாயிரத்துக்கும் மேலான திருமாங்கல்யச் சரடுகள் சாத்தப்பட்டு பின்னர் சுமங்கலிகளுக்கும், கன்னியருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. மங்களங்கள் அனைத்துக்கும் அன்னையின் திருமாங்கல்ய சரடு காப்பாகக் கருதப்படுகிறது.
7.3.2007 பிரம்மோத்ஸவத்தின் போது தீர்த்தவாரி உத்ஸவத்திற்காக சிறிய குளம் கட்டப்பட்டு மேற்படி உத்ஸவம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இத்திருக்குளத்தை ஸ்ரீ பத்ம புஷ்கரிணீ என்றும் ஸ்ரீ பத்ம தீர்த்தம் என்றும் அழைக்கின்றனர். மற்ற எந்த ஒரு ஆலயங்களும் செய்யாத ஓர் அற்புத சேவையை இந்த ஆலயம் செயல்படுத்தி வருகிறது, மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிமாதம் 10ம் தேதியன்று ரூ.200/- வீதமும், தீபாவளி மற்றும் பொங்கல் திருநாட்களில் ரூ.500/-ம் சிறப்பு உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது. இந்த மகத்தான கைங்கரியத்திற்கு உதவ நினைப்போர்கள் 96772 62183 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், பிறந்த நாள் அல்லது திருமண நாள் பற்றி அர்ச்சகரிடம் தெரிவித்தால் பக்தர்களுக்கு பாகுபாடு இன்றி நரசிம்மரின் சந்நதியில் தக்க மரியாதை செய்யப்படுகிறது. பிரதி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை கோபூஜை நடைபெறுகிறது. காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். ஸ்ரீமட்டபல்லி நாதாய நைமிசாரண்ய ரூபிணே நங்கைநல்லூர் நிவாஸாய ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம். இக்கோயில் சென்னை மடிப்பாக்கம் கூட்டு ரோட்டிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. மூவரசம்பேட்டை குளக்கரை வழியாகவும் ஆலயத்திற்கு வரலாம்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
No comments:
Post a Comment