கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து மேற்கு பகுதியில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் பழமை வாய்ந்த இளமையாக்கினார் கோயில் உள்ளது. கோயிலின் தல வரலாற்றைப்பார்ப்போம்.
தல வரலாறு: ஒரு சமயம் சிதம்பரத்தில் குயவர் குலத்தில் தோன்றிய திருநீலகண்டர் என்பவர் நடராஜப்பெருமானை வழிபட்டு தம் குலத்தொழிலாகிய மண்பாண்டங்களை செய்து விற்று வந்துள்ளார். சிவனடியார்கள் யாசிப்பதற்கு பயன்படும் திருவோடுகளை பக்தியுடன் தயாாித்து இலவசமாக வழங்கி வந்துள்ளார். திருநீலகண்டர் ஒரு நாள் பரத்தையின் இல்லம் சென்று வந்துள்ளார். இதனை அறிந்த அவர் மனைவி ரத்தினசலை கோபம் கொண்டு இனி எம்மை தீண்டாதீர் என கூறியுள்ளார். இதனால் இனி இந்த உலகில் எந்தப் பெண்ணையும் மனதால் கூடத் தீண்டுவதில்லை என திருநீலகண்டரும் உறுதி பூண்டார்.
இந்நிலையில் இவர்களின் இல்வாழ்க்கை சிறப்பை அறிந்து கொள்வதற்காக சிவபெருமான், சிவயோகியார் வேடம் கொண்டு திருநீலகண்டரின் வீட்டிற்கு வந்தார். அவரிடம் ஒரு பழைய திருவோட்டைக் கொடுத்த இறைவன் இது ஒரு அற்புத திருவோடு. கவனத்துடன் பாதுகாத்து வா. நான் கேட்கும் போது திருப்பி தந்து விடு என்று கூறி சென்றார். சில காலம் கழித்து சிவபெருமான் அந்த திருவோட்டை மறைய செய்தார். பின்னர் துறவி கோலத்தில் வந்து திருநீலகண்டரிடம் திருவோட்டைக் கேட்டபோது அதைக்காணவில்லை. இதனால் திருநீலகண்டர் வேறு புதிய திருவோடு செய்து தருகிறேன் என சிவயோகியிடம் வேண்டினார். அதைக்கேட்ட சிவயோகியார் நீ பொன்னால் செய்து திருவோடு கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
என் ஓட்டினை நீ தொலைத்து விட்டது உண்மையாயின் உன் மனைவி கைப்பற்றி நீரில் மூழ்கி சத்தியம் செய் என கூறினார். வேறு வழியின்றி மனைவியைத் தீண்டாத உண்மையைக் கூறினார் திருநீலகண்டர். பிறகு மூங்கில் குச்சியின் இரு முனைகளையும் இருவரும் பற்றிக்கொண்டு குளத்தில் மூழ்கி எழுந்தனர். என்ன ஆச்சர்யம் இருவரும் முதுமை நீங்கி இளமையடைந்திருந்தனர். துறவி மறைந்து விண்ணில் பார்வதியுடன் பரமேஸ்வரன் தோன்றி காட்சியளித்து அருள்புரிந்துள்ளார். இந்த அற்புத நிகழ்வு நடந்த இடம் தில்லை திருப்புலீச்சுரம். திருநீலகண்ட நாயனாரும் அவரது மனைவி ரத்தினசலையும் இளமைபெற்ற கோயில் என்பதால் இளமையாக்கினார் கோயில் என பெயர்பெற்றது.
குளத்தில் மூழ்கி இளமை பெற்றதால் இளமையாக்கினார் குளம் என போற்றப்படுகிறது. இங்கு சுவாமி இளமையாக்கினார் எனவும், அம்பாள் இளமைநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள். வடமொழியில் யவனேஸ்வரா் என்றும் அம்பாள் யவனாம்பாள் எனவும் போற்றப்படுகிறார்கள். இந்த கோயில் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதற்கான கல்வெட்டு குறிப்புகள் உள்ளன. கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்களுடன் பிரமாண்டமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் லிங்க வடிவில் யவனேஸ் வரர் காட்சியளிக்கிறார். கருவறையில் சாமிக்கு எதிரே உள்ள அர்த்த மண்டபத்தில் சுவாமியை வணங்கியபடி வியாக்கிரபாதா் காணப்படுவது சிறப்பு.
தெற்கு நோக்கிய தனி சன்னதியில் அம்பாள் யவனாம்பாள் அருள்புரிகிறார். ராஜகோபுர வாயிலில் ஆக்ஞா கணபதியும், சுயசாம்பிகாதேவி சமேத அதிகார நந்தியும் அருள்புரிகின்றனர். கோயிலின் தென் கிழக்கில் சூரிய பகவானும், வியாக்கிரபாதரும், தெற்கு பிரகாரத்தில் கணம்புல்ல நாயனாரும், இளமை பெற்ற திருநீலகண்டர், அவருடைய மனைவி ரத்தினசலை ஆகியோரும் தரிசனம் தருகிறார்கள். ஆண்டு தோறும் தை மாதம் சுவாதி, விசாக நட்சத்திர தினங்களில் நடைபெறும் திருநீலகண்டர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இக்கோயிலுக்கு சென்று வழிபட்டால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள் என்ற ஐதீகம் உள்ளதால் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
செல்வது எப்படி? சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த கோயிலுக்கு மினி பஸ்சிலும், ஆட்டோவிலும் செல்லலாம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment