Tuesday, 7 May 2019

கண் கோடி வேண்டும் காண... பன்னிரண்டு கருட சேவையை.!!

அட்சய திருதியை


மாதம் தோறும் திருதியை வரலாம். அவற்றிற்கெல்லாம் இல்லாத மகிமை சித்திரை மாதம் பௌர்ணமியை யொட்டி வரும் திருதியைக்கு உண்டு.   அந்த திருதியைத்தான் அட்சய திருதியை என்கிறோம். இந்த அட்சய திருதியை அன்று தான் பூமிக்கு கங்கை நதி வந்தது. நான்கு யுகங்களுள்  முதன்மையானதான கிருத யுகம் தொடங்கிய நாளும் அன்று தான். திருமால் பரசுராமராக அவதரித்ததும் இந்நாளில்தான். மகாலட்சுமியின் அருளால்  குபேரன் செல்வந்தனானதும் அட்சய திருதியை அன்று தான். கண்ணனின் அருளால் குசேலன் குபேரன் ஆனது, தனது தாயை மீட்க,  தேவலோகத்திலிருந்து அமுதத்தைக் கருடன் எடுத்து வந்தது. அன்னபூரணி தேவி தோன்றியது,  மகாபாரதத்தை வியாசர் கூற, விநாயகர் 
எழுதத் தொடங்கியது.

தர்மபுத்திரர் அட்சய பாத்திரத்தைப் பெற்றது. திரௌபதிக்குக் கண்ணன் புடவை சுரந்து காத்த நாளும் இந்த அட்சய திருதியை அன்று தான். இத்தகைய பற்பல சிறப்புகள் நிறைந்த நாள் அட்சயதிருதியை ஆகும். சித்திரை மாத அமாவாசைக்கும், வைகாசி மாத அமாவாசைக்கும் இடைப்பட்ட காலத்துக்கு  வைசாக மாதம் என்று பெயர். வைகாசி மாதம் வேறு, வைசாக மாதம் வேறு. வைசாக மாதத்தில் வளர்பிறையில் வரும் திருதியை, திதியை அட்சய  திருதியை என்று அழைக்கிறோம்.

அட்சயம் என்றால் குறையாத என்று பொருள். அட்சய திருதியை அன்று கற்கும் கல்வியும், செய்யப்படும் தானமும், நற்செயல்களும் குறைவின்றித்  தொடர்கதையாகத் தொடர்வதால், அட்சயதிருதியை என்ற பெயர் ஏற்பட்டது. அட்சயதிருதியை அன்று சூரியன், சந்திரன் இருவருமே உச்சத்தில், சம  அளவு ஒளியுடன் திகழ்வதாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

சிறப்பு உற்சவங்கள் அண்மைக் காலங்களில் அட்சயத்ருதியை தினத்தில் தங்க நகைகள் வாங்கினால்,  தங்க நகை வாங்கும் நிலை அட்சயமாகத்  தொடர் கதையாகத் தொடரும் என்ற நம்பிக்கை படர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. எனினும் சாஸ்திரங்களைக் கூர்ந்து நோக்குகையில்,  தானியங்களைச் சமர்ப்பித்துத் திருமாலை வழிபட வேண்டிய நாளாக அட்சயதிருதியை கருதப்படுகிறது. பற்பல விஷ்ணு ஆலயங்களில் அட்சய  திருதியையை யொட்டிச் சிறப்பு உற்சவங்கள் நடைபெறுகின்றன.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு அருகிலுள்ள சிம்மாசலம் நரசிம்மர் கோயிலில், எப்போதும் சந்தனக்காப்பால் மூடப்பட்டிருக்கும் நரசிம்மரை  அட்சயதிருதியை அன்று மட்டும்  சந்தனக் காப்பு இல்லாமல் முழுமையாகத் தரிசிக்கலாம். உலகப் புகழ்ப்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கான  ரதங்களை ஒவ்வொரு வருடமும் அட்சயதிருதியை அன்று தான் வடிவமைக்கத் தொடங்குவார்கள்.

பத்ரிநாத்தில் குளிர்காலம் முடிந்து கோயில் நடைதிறக்கப்படும் நாள் அட்சயதிருதியை ஆகும். இந்த நாளில் நடைபெறும் மேலும் சில வைபவங்கள்.  தமிழ்நாட்டில் சோழ மண்டலத்தில், அட்சய திருதியை தினத்தில், கும்பகோணம் பெரிய கடைவீதியில் நடைபெறும் பன்னிரண்டு கருட சேவை வடுவூர்  ராமர் கோயிலில் காலை ஒரு முறை, மாலை ஒரு முறை என இரண்டு முறை நடைபெறும் கருட சேவை மன்னார்குடி ராஜகோபாலனின் கருட  சேவை போன்ற கருட சேவை உற்சவங்கள் பிரசித்தி ஆனவை. குடந்தை பன்னிரு கருட சேவை வரும் அட்சயதிருதியை நாளன்று 7-5-2019  திருக்குடந்தை என்று ஆழ்வார்களால் போற்றப்பட்ட கும்பகோணத்தில், பெரிய கடைத் தெருவில் ஸ்ரீமத் அகோபில மடத்திற்கு முன் உள்ள பந்தலில்  காலை 9 மணியளவில் ஆராவமுதாழ்வான் எனப்படும் சார்ங்கபாணிப்பெருமாள் அவருக்கே உரிய பெரிய கருடவாகனத்திலே முன்னே எழுந்தருளி  இருப்பார். இதுவே முதல் கருட வாகனம்.

அவருக்கு வலப்புறத்தில் ஸ்ரீசக்ரபாணிப் பெருமாள் இரண்டாவது கருட வாகனத்தில் எழுந்தருளிப்பார். இடப்புறத்தில் ராமபிரானும் கருடவாகனத்திலே  வீற்றிருப்பார். இது மூன்றாவது கருட வாகனம். இவர்களுக்குப் பின்வரிசையில் ஆதி வராகப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்வார். (இது  நான்காவது கருட வாகனம்) அவருக்குப் பின் பெரிய கடைவீதி ராஜகோபாலன் ஐந்தாவது கருடவாகனத்திலே காட்சி தருவார்.

இந்த ஐவருக்கும் பின் கொட்டையூர் ஸ்ரீநவநீதகிருஷ்ணன் ஆறாவது கருடவாகனத்திலும், மேலக்காவிரி வரதராஜப் பெருமாள் ஏழாவது கருட  வாகனத்திலும், தோப்புத் தெரு ஸ்ரீராஜகோபாலன் எட்டாவது கருட வாகனத்திலும், பாட்ராச்சாரியார் தெரு நவநீத கிருஷ்ணன் ஒன்பதாவது கருட  வாகனத்தில் ஸ்ரீமத்வர்கள் வழிபடும் பட்டாபிராமன் எழுந்தருள்வார். பத்தாவது கருட வாகனத்தில் ஐந்து பெருமாள்கள் எழுந்தருள்வர்.

இது தவிர, இவர்களை  வழிபடும் சிறிய திருவடியான ஆஞ்சநேயர் முன்னே எழுந்தருளி இருப்பார்.  சார்ங்கபாணி-சக்ரபாணி பெருமாள்களுக்கு  முன்னே போடப்பட்டிருக்கும் சிறிய பந்தலில் சௌராஷ்ட்ரப் பெருமக்களுடைய சிறப்பான வழிபாட்டிலே உள்ள ஸ்ரீவேதநாராயணன் பதினொன்றாவது  கருட வாகனத்திலும், ஸ்ரீவரதராஜன் பன்னிரெண்டாவது கருட வாகனத்திலும்  எழுந்தருள்வார். 

இந்த வரிசையில் தான் குடந்தை கடைவீதியில் பன்னிரு கருட சேவை உற்சவம் நடைபெற்று வருகிறது. பெரிய பந்தலில் பின் வரிசைகளில் ஸ்ரீமத்  அகோபில மடத்து ஸ்ரீலட்சுமி நரசிம்மர் போன்ற சில, பல பெருமாள்களும் கருடவாகனத்திலே காட்சி தருவதும் உண்டு. அதனால் சில வருடங்களில்  கருட சேவையின் எண்ணிக்கை  பதினான்கு, பதினைந்து என்று வளர்வதும் உண்டு.

அட்சயதிருதியையும் கருடனும் அட்சயதிருதியைக்கும் கருடனுக்கும் என்ன தொடர்பு? அதை அறிய ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள ஒரு  சரித்திரத்தைக் காண்போம்.சூரியகுலத்தைச் சேர்ந்த சகரன் என்னும் சக்கரவர்த்திக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவியான அம்பைக்கு அசமஞ்ஜன் என்ற ஒரு மகனும்,  இளைய மனைவியான சுமதிக்கு 60,000 மகன்களும் பிறந்திருந்தார்கள். அசமஞ்ஜன் தனது மகனான அம்சுமானை நாட்டில் விட்டுவிட்டுக் காட்டுக்குத்  தவம் செய்யச் சென்றான்.

99 அசுவமேத யாகங்கள் செய்த சகர சக்கரவர்த்தி, தனது நூறாவது அசுவமேத யாகத்தைச் செய்ய முற்பட்டபோது, அதைத் தடுக்க நினைத்த  இந்திரன், வேள்விக் குதிரையைக் கவர்ந்து சென்று, பாதாள லோகத்திலுள்ள கபில முனிவரின் ஆசிரமத்துக்கு எதிரே கட்டிவைத்தான். களவு போன  குதிரையைத் தேடிச் சகர மன்னரின் 60,000 மகன்களும் சென்றார்கள். வசிஷ்டரின் ஆலோசனைப்படி, அவர்கள் பாதாள லோகத்தில் குதிரையைத்  தேடினார்கள். கபிலரின் ஆசிரமத்துக்கு எதிரே குதிரை இருப்பதைக் கண்ட அவர்கள், அங்கு தவம் செய்து கொண்டிருந்த கபிலர் தான் குதிரையைக்  கவர்ந்து சென்றதாகத் தவறாக எண்ணினார்கள். கபில முனிவரைக் கள்வனே என்று அழைத்து ஆரவாரம் செய்தார்கள். தவம் கலைந்து கண் விழித்துப்  பார்த்தார் கபிலர். அவரது பார்வைத் தீயில் அறுபதாயிரம் பேரும் சாம்பலானார்கள்.

குதிரையத் தேடிப் போனவர்கள், நீண்ட நாட்கள் ஆகியும் மீளாததால் அவர்களைத் தேடிச் சென்றான் அம்சுமான். கபிலருடைய குடிலின் வாசலில்  அறுபதாயிரம் சடலங்களைக் கண்டு அயர்ந்து போனான். இறந்த 60,000 பேரும் அம்சுமானுக்குச் சித்தப்பன்மார்கள் ஆவர். அவர்களுக்கு அங்கேயே  தர்ப்பணம் செய்ய நினைத்தான் அம்சுமான். அப்போது அங்கே கருடன் தோன்றினார். இறந்தவர்களின் தாயான சுமதி, கருடனுக்குத் தூரத்து உறவினள்  ஆவாள். இறந்த உறவினர்களைக் காண வந்த கருடன் அம்சுமானிடம், அம்சுமான் முன்பு திருமால் உலகளந்த போது, பிரம்மதேவர் அவரது  திருவடிகளுக்குத் தன் கமண்டலத்திலுள்ள நீரால் திருமஞ்சனம் செய்தார். 

திருமாலின் ஸ்ரீபாத தீர்த்தமாகிய அந்த கங்கா நதி, பிரம்ம லோகத்தில் தொடங்கி, சொர்க்க லோகம் வரை பாய்கிறது. அந்த கங்கா நீரைப் பூமிக்குக்  கொண்டு வந்து, அந்த நீரைக் கொண்டு தர்ப்பணம் செய்தால் அன்றி, உனது அறுபதாயிரம் சித்தப்பன்மார்களும் நற்கதி அடைய வேறு வழியில்லை  என்றார். சாதாரண நீரால் தர்ப்பணம் செய்தால் அவர்களுக்கு நற்கதி கிட்டாதா என்று கேட்டான் அம்சுமான். பெரும் தபஸ்வியான கபிலரின்  கோபத்துக்கு உள்ளாகி இவர்கள் இறந்திருக்கிறார்கள். எனவே திருமாலின் திருவடி தீர்த்தமாகிய கங்கையைத் தவிர வேறு எந்த நீராலும் இவர்களுக்கு  நற்கதியை அளிக்க இயலாது என்றார் கருடன்.

தன் உறவினர்களின் நலன் மட்டுமின்றி, உலக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டே கருடன் இவ்வாறு அம்சுமானிடம் கூறியுள்ளார். ஏனெனில்,  சொர்க்கத்தில் ஓடிக் கொண்டிருக்கும் கங்கையை அம்சுமான் பூமிக்குக் கொண்டு வந்தால், பூமியில் வாழும் அனைத்து மக்களும் கங்கையில் நீராடிப்  புண்ணியத்தைப் பெறலாமல்லவா? இத்தகைய பரந்த நோக்கில் தான் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வரும் ஆலோசனையை அம்சுமானுக்கு  வழங்கினார் கருடன்.

கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர என்ன வழி என்று சிந்தித்து, எந்த வழியும் புலப்படாத நிலையில், அந்தக் கவலையிலேயே அம்சுமானும் அவனது  மகன் திலீபனும் மாண்டு போனார்கள். திலீபனின் மகனான பகீரதன் பிரம்மாவைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தான். கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர  வழிகாட்டும் படி, பிரம்மாவிடம் பிரார்த்தித்தான். அவனுக்குக் காட்சி தந்த பிரம்மா, கங்கை வெள்ளம் பூமியை அடித்துச் செல்லாமல் இருக்க  வேண்டுமென்றால், சிவபெருமான் அதை முதலில் தனது சடையில் தாங்கி, அதன்பின் மெதுவாகப் பூமியில் செலுத்த வேண்டும் என்றார்.

பிரம்மாவின் அறிவுரைப்படி சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்த பகீரதனுக்கு சிவன் காட்சி தந்தார். கங்கையைத் தன் தலையில் தாங்கிட  ஒப்புக்கொண்டார். ஆரம்பத்தில் பூமிக்கு வர விரும்பாத கங்கை, கோபத்துடன் வேகமாகப் பரமசிவனின் சடையில் வந்து விழுந்தாள். அவளது  இறுமாப்பை அடக்க எண்ணிய சிவன், அவளைத் தன் சடைக்குள் அடைத்து வைத்தார்.

கங்கை பூமிக்கு வராததால் மீண்டும் தவித்தான் பகீரதன். மீண்டும் தவம் புரிந்து பரமசிவனைப் பிரார்த்தித்தான். அவனது பிரார்த்தனையை ஏற்று  கங்கை பூமியில் வந்து விழ ஏற்பாடு செய்தார் பரமசிவன். சதுமுகன் கையில் சதுர்புயன் தாளில் சங்கரன் தலையில் தங்கி கதிர் முக மணிகொண்டு  இழிபுனல் கங்கை என்ற பெரியாழ்வாரின் பாசுரத்துக்கேற்ப, பிரம்மாவின் கையில் தொடங்கி, திருமாலின் திருவடியை அடைந்து, அதன்பின் சிவனின்  சடையை அடைந்து, அதன்பின் பூமியைக் கங்கை அடைந்த நன்னாள் தான் அட்சயதிருதியை என்னும் பொன்னாள். 

அந்த கங்கா ஜலத்தில் தனது முன்னோர்கள் அறுபதாயிரம் பேருக்கும் பகீரதன் தர்ப்பணம் செய்தான். இத்தனை கடும் முயற்சி மேற்கொண்டு பகீரதன்  கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்ததன் நினைவாக, மனிதர்கள் யாரேனும் கடுமையாக உழைத்தால், பகீரதப் பிரயத்தனம் என்று குறிப்பிடும்  வழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கங்கா நதி பூமிக்கு வர முதல் காரணமாக இருந்தவர் யாரென்று ஆராய்ந்தால், அது கருடனே. அவர் தான்  முதன்முதலில் கங்கையில் சகர புத்திரர்களுக்குக் கங்கையில் தர்ப்பணம் செய்யச் சொல்லி அம்சுமானுக்கு ஆலோசனை வழங்கினார். கங்கையைப்  பூமிக்குக் கொண்டு வர வழிவகை செய்த கருடனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வருடா வருடம் கங்கை பூமிக்கு வந்த நாளான அட்சயதிருதியை  அன்று, குடந்தையில் பன்னிரு கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது.

அந்த உற்சவத்தில், திருமாலைத் தன் தோளில் ஏற்றியபடி, அவரது திருவடிகளைத் தன் கையில் தாங்கிய படி வரும் கருடன், நம்மைப் பார்த்து,  பக்தர்களே இதோ இந்தத் திருவடிகளைக் கழுவிய கங்கை உங்கள் சாபங்களையும் பாபங்களையும் போக்க பூமிக்கு வந்த நன்னாள் இது என்று  அறிவிக்கிறார். அட்சய திருதியை தினத்திலே கங்கையில் நீராடுவது பெரும் புண்ணியம். ஆனால் கங்கைக்குச் சென்று நீராட இயலாதவர்கள்,  குடந்தை பன்னிரண்டு கருடசேவையைத் தரிசித்தால், கங்கையில் நீராடிய பலன் அவர்களுக்குக் கிடைக்கும்.

ஏன் பன்னிரு கருட சேவை கருடனுக்கும் அட்சயதிருதியைக்கும் உள்ள தொடர்பு புரிந்து விட்டது. ஆனால் குடந்தையில் அட்சயதிருதியையில்  பன்னிரண்டு கருடசேவை ஏற்படக்காரணம் யாது? திருமாலைத் தியானிக்கும் முறையைக் கூறும் ஆகம சாஸ்திரங்கள், நம் உடலில் பன்னிரு  இடங்களில் பன்னிரு திருப்பெயர்களுடன் திருமால் வீற்றிருப்பதாகத் தியானிக்கச் சொல்கின்றன. கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன்,  விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகியவையே அந்தப் பன்னிரண்டு திருப்பெயர்கள்.

அந்தப் பன்னிரு வடிவங்களையும் தியானிக்க இயலாதவரான நம் போல்வார் மேல் கருணை கொண்ட சார்ங்கபாணிப் பெருமாள், தானே பன்னிரு  வடிவங்கள் எடுத்துக் கொண்டு அட்சயதிருதியை அன்று குடந்தை கடைவீதியில் காட்சி தருகிறார். இந்தப் பன்னிரண்டு பெருமாள்களையும்  தரிசிப்பவர்கள், ஆகமங்கள் கூறும் பன்னிரண்டு மூர்த்திகளைத் தியானித்த பலனைப் பெறுவார்கள்.

‘‘அந்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி
புண்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் வாராணஸ்யாம் விநச்யதி
வாராணஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி
கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி’’

என்பது பிரசித்தியான ஸ்லோகம். சாதாரண ஊர்களில் செய்த பாபங்களைப் புண்ணியத் தலங்கள் போக்கிவிடும். புண்ணியத் தலங்களில் செய்யப்பட்ட  பாபங்களைக் காசி நகரம் போக்கிவிடும். காசியில் பாபம் செய்தால், அதைக் கும்பகோணத்திருத்தலம் போக்கும். கும்பகோணத்திலேயே ஒருவன் பாபம்  செய்தால், அவன் வேறு தலத்தைத் தேடிப் போகத்தேவையில்லை, கும்பகோணமே அந்தப் பாபத்தைப் போக்கி விடும் என்பது இதன் பொருள்.

எனவே அட்சயதிருதியையில் குடந்தையில் கருடசேவையைத் தரிசிப்பவர்களுக்குக் காவிரிக் கரையிலே கங்கையில் நீராடிய பலன் கிடைப்பதோடு  அவர்களின் பாபங்கள் அனைத்தும் கழிகின்றன. அமுதனுடன் ஆழ்வார்கள் ஆராவமுதாழ்வான் எனப்படும் சார்ங்கபாணிப் பெருமாளைப் பாடிய  ஆழ்வார்கள் பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசைப் பிரான், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் மற்றும் திருமங்கை ஆழ்வார். இவர்களுள்  ஆண்டாள் நீங்கலாக மற்றைய ஆறு ஆழ்வார்களும், ராமாநுஜரும், வேதாந்த தேசிகனும் சார்ங்கபாணிப்  பெருமாளின் முன் பந்தலில் எழுந்தருள்வது  வழக்கம். அவர்கள் ஆராவமுதாழ்வானைப் பற்றிப் பாடிய பாசுரங்களை அத்யாபகர்கள் பந்தலில் ஓத, ஆழ்வார்களுக்கும் ஆசார்யர்களுக்கும் மரியாதை  செய்யப்படும். 

தற்பொழுது திருமழிசைப் பிரான், நம்மாழ்வார், பெரியாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகிய நால்வர் மட்டுமே பந்தலுக்கு எழுந்தருளுகின்றனர்.  அவர்களோடு அகோபில மடத்துத் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருள்கிறார். அட்சயதிருதியைப் பந்தலில் பன்னிரண்டு மணி வரை காட்சி தந்தருளும்  பெருமாள்கள், அதன்பின் ஒருவர் பின் ஒருவராகத் தங்களது திருக்கோயில்களைச் சென்றடைகிறார்கள்.

சார்ங்கபாணிப் பெருமாள் பந்தலில் இருந்து கோயிலுக்குச் செல்லாமல்,  பெரிய கடை வீதியிலுள்ள ஸ்ரீவித்யா ராஜகோபாலன் கோயிலுக்கு  எழுந்தருள்வார். மதியம் முழுவதும் அங்கேயே பெருமாள் ஓய்வெடுப்பார். பிறகு மாலை 5 மணி அளவில், ராஜகோபாலன் கோயில்  திருப்பள்ளியறையில் உள்ள மஞ்சத்துக்கு எழுந்தருளும் சார்ங்கபாணிப் பெருமாள், அமுதமணம் கமழும் சந்தனம் பூசி, அழகிய புஷ்ப மாலைகளுடன்  காட்சி தருவார். அருகே மற்றொரு மஞ்சத்தில் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் சர்வாலங்கார பூஷிதனாக எழுந்தருள்வான். அதற்கருகில் ஓர் சிறிய  மஞ்சத்தில் ஸ்ரீநடாதூர் அம்மாள் எழுந்தருள்வார். இரவு எட்டு மணியளவில் ராஜகோபாலன் கோயிலில் இருந்து புறப்படும் சார்ங்கபாணிப் பெருமாள்,  பெரிய கடைவீதி வழியாகத் தன் சந்நதியை அடைகிறார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment