கங்கா சப்தமி : 11-05-2019
குருக்ஷேத்திரப்போர்க்களம். யுத்தத்தில் சிங்கம் போலச்சுற்றித்திரிந்த பீஷ்ம பிதாமகர் அர்ச்சுனனால் வீழ்த்தப்பட்டு, அம்புப் படுக்கையில் சயனித்துக் கொண்டிருந்தார். உடல் முழுவதையும் அம்புகள் தைத்திருந்தாலும் பீஷ்மரின் தேஜஸ்சும் கம்பீரமும் குறையவேயில்லை. அந்த வேதனையான நிலையிலும் பாண்டவர்களுக்கு அவர் தர்ம சாஸ்திரங்களைப் போதித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த, தர்மருக்கு ஒரு சந்தேகம் வந்தது.
“பாட்டனாரே. நீங்கள் இதுவரைச் சொன்ன தர்மங்கள் அனைத்தும் தலை சிறந்தவையே. அதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் அவை எளிதில் இந்த சம்சார சாகரத்தைக் கடக்க வழிவகைச் செய்வதில்லை. மேலும் அவை கடைப்பிடிக்க மிகவும் கடினமாக உள்ளது. ஆகவே எந்த தர்மம் நினைத்த மாத்திரத்திலேயே இந்தப் பிறவிக் கடலைக் கடக்கச் செய்யுமோ, அந்த தர்மத்தை தயவுகூர்ந்து உபதேசித்தருளுங்கள்.” என்று தன்னுடைய சந்தேகத்தை பீஷ்மரிடம் தருமர் கேட்டார். இதை கேட்டவுடன் பீஷ்மர், அங்கு நடப்பதற்கும் தனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லாதது போல் நின்று கொண்டிருந்த கண்ணனை நோக்கிக் கை குவித்தார். பக்தியில் அவரது கண்கள் குளமானது.
இப்படி ஒரு கேள்வியை தருமரை கேட்கச்செய்தது சாட்சாத் அந்த கண்ணனே என்பது அவருக்கு புரிந்தது. மனக்கண்ணில் அந்த பரமனின் விஸ்வரூபம் தெரிந்தது. மெல்லப்பேச ஆரம்பித்தார். “ அப்பனே! தர்மா! இதோ இங்கு இருக்கிறானே இந்த கண்ணன் இவனது நாமங்களை கேட்டாலே போதும். கோடான கோடி ஜென்மத்தில் நீ செய்த பாவங்கள்எல்லாம் உடன் அழிந்துபோகும். அவன் நாமங்களை சதா ஜெபித்தால் ஆழமான இந்த சம்சாரக்கடல் அறவே வற்றிப்போகும். நான் இப்போது, அவன் நாமங்களை உள்ளம் உருகச் சொல்கிறேன். அதை நன்கு மனதில் பதித்துக்கொள்.” என்றபடி பீஷ்மர் கண்களை மூடினார்.
அந்த மாயக் கண்ணனை தியானித்தார். அவரது உதடுகள் மெல்ல விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தது. அனைவரும் அதைக் கேட்டு மெய்மறந்தனர். அமுத மழை பொழிவதைப் போல மாலவனின் ஆயிரம் நாமங்களை பீஷ்மர் சொல்லி முடித்தார். பஞ்ச பாண்டவர்களும் பீஷ்மரிடம் ஆசி பெற்று தங்களது வசிப்பிடத்திற்குத் திரும்பினார்கள்.
பாண்டவர்கள் அனைவரின் மனமும் பீஷ்மரின் உபதேசங்களைக் கேட்டபின் தெளிந்த நீர்ப்போல இருந்தது. ஆனால் சகாதேவன்மனது மட்டும் வருத்தத்தில் வாடிக்கொண்டிருந்தது. அதை உணர்ந்தது போல மாதவன் சட்டென்று அங்கு வந்தான்.
கையில் புல்லாங்குழலை வைத்துக்கொண்டு நின்ற அவனைக் கண்டதுமே சகாதேவனின் மனம் அமைதி அடைந்தது. அவனது மோகனப் புன்னகை ஆளை மயக்கியது.கருநீல மேகம் போன்ற அவனது மேனியின் நிறம் அவன் பொழியப்போகும் கருணை மழையை உணர்த்தியது. கண்ணனின் பாத மலர்களில் சகாதேவன் கையிலிருந்து நழுவியப் பொருளைப் போல விழுந்தான்.
“ கண்ணா! பரம்பொருளே! வைகுண்டவாசா! உலகம் உய்யபீஷ்ம பிதாமஹரின் வாயிலிருந்து உனது ஆயிரம் நாமங்களை வரவைத்தாய். ஆனால் மனிதர்களாகிய நாங்கள் பீஷ்மரின் வாயிலிருந்து உதிர்ந்தமுத்துக்களைசேமித்து வைக்க வில்லையே. ஆம் பிரபோ! உனது ஆயிரம் நாமங்களை செவிக்குளிறக் கேட்ட நாங்கள் யாரும் அதை குறித்து வைத்துக்கொள்ளவில்லையே. பெறுதற்கு அறிய பேறு பெற்ற பின்பும் அதை நழுவ விட்ட எங்களது துர்பாக்கியத்தை என்னவென்று சொல்வது? மாயக்கண்ணா! உன்னால் ஆகாததும் உண்டா. நீ நினைத்தால் எங்களுக்கு அந்த பொக்கிஷத்தை மீண்டும் தரமுடியும்.
தயவு செய்து இந்த எழைகளின் மீது கருணைப் பொழிந்து அருள்செய்வாய். உனது ஸஹஸ்ரநாமத்தை முழுவடிவில் நாங்கள் பெற ஒரு உபாயம் சொல்வாய்.” என்றபடி சஹாதேவன் மாதவனின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். சரணடைந்தவர்களை ஒரு போதும் கைவிடாத பரம்பொருள் அல்லவா அந்த கேசவன். உற்ற பக்தன் சஹாதேவனைக் கைவிடுவானா?. அவனுக்கு அருள்மழை பொழிய சித்தம் கொண்டான்.
“கலங்காதே சஹாதேவா, பீஷ்ம பிதாமகர் உத்தராயணம் பிறந்ததும் என்னோடு இரண்டறக் கலப்பார். பின்பு அவரது கழுத்தில் இருக்கும் ஸ்படிக மாலையை எடுத்து நீ அணிந்துக் கொள். என்னை மனமாற த்யானி. உன் வாயிலிருந்து தானாகவே சஹஸ்ரநாமம் அருவி போல கொட்டும். உன் மூலமாக இந்த வையகம் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் என்ற அருமருந்தை மீண்டும் பெறும்.” என்றபடி கண்ணன் சஹாதேவனின் தோளில் தன் திருக்கரங்களை வைத்து சமாதானம் செய்தான்.
ஆனால் சஹாதேவனின்மனம்தான், சாந்தி அடையவில்லை. சாதாரண ஸ்படிகமாலைக்கு இவ்வளவு மகத்துவம் எங்கிருந்து வரும் என்ற கேள்வி மனதில் உதித்தது. கூடவே கண்ணன் நம்மிடம் விளையாடுகிறானோ என்ற சந்தேகமும் வந்தது. அதை அவனது முகம் அப்பட்டமாக காண்பித்தது. அதை கவனித்த கண்ணன், “ என்ன சஹாதேவா சாதாரண ஸ்படிக மணிக்கு இவ்வளவு மகத்துவமா? என்று சிந்திக்கிறாயா?” என்று கேட்டார்.
கண்ணனிடமிருந்து இந்த கேள்வியை சற்றும் எதிர்ப் பார்க்காத சஹாதேவன் சற்று விழிக்கத்தான் செய்தான். அதை கண்ட மாயக்கண்ணன் கம்பீரமான குரலில் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தான். பல ஆண்டுகளுக்கு முன்னால் பீஷ்மரின் இளமை காலத்தில் நடந்த சம்பவம் அது...... கங்கை ஆற்றங்கரை. அதில் சிந்தித்தப்படியே ஒரு வாலிபன் நடந்துக் கொண்டிருந்தான். அந்த சிறுவயதில் அவனுக்கு இருந்த வீரமும் கம்பீரமும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.ஆனால் அவனது முகத்தில் கவலையின் சாயல். கவலையைத் தீர்க்க ஒரு வழி கண்டவன் போல் கங்கா நதியைப் பார்த்துப் பேசத்தொடங்கினான்.
“ அம்மா!உலகில் உள்ளவர்கள் உன் பெருமையை எண்ணி உன்னை கங்கா மாதா என்று அழைக்கிறார்கள். ஆனால் எனக்கோ , என்னைப் பெற்றத் தாயே நீதான். அம்மா, தந்தை சந்தனு மகாராஜா மச்சகந்தி என்ற பெண்ணை விரும்பினார். ஆனால் அவர் அந்தப் பெண்ணை மணக்க என் திருமண வாழ்வு தடையாக இருக்கும் என்பதை அறிந்த நான், சட்டென்று கொதித்து எழுந்தேன். இனி என் வாழ்வில் இறுதி மூச்சு உள்ளவரை நான் பிரம்மச்சாரியாக வாழ்வேன் என்று சபதம் எடுத்தேன். அனைவரும் சிந்திக்கக் கூடத் தயங்கும் காரியத்தை நான் செய்ததால் தேவர்கள் எனக்கு பீஷ்மன் என்றப் பெயரைச் சூட்டினார்கள்.
ஆனால் உண்மையான சிக்கல், இனிதான் தொடங்க உள்ளது தாயே. என் வாழ்வில் நான் நூலளவும் பிழறாமல் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு உண்டான சக்தியை என்னை கருவில் சுமந்த தாயான நீதான் தரவேண்டும். ஆம் நீதான் தரவேண்டும்.” என்று கங்கா நதியின் முன் மண்டியிட்டு வேண்டினார் அந்த வாலிபன். அது வேறு யாரும் இல்லை சாட்சாத் பீஷ்மர் தான்.
அவர் இப்படி பிரார்த்தனை செய்தது தான் தாமதம். கங்காதேவி அவர் முன் பிரத்யட்சமாக காட்சி தந்தாள். தனக்கு அருள வந்த தாயின் பொற்பாத கமலங்களை இளவயது பீஷ்மர் வணங்கினார். அவரைத் தொட்டு, தூக்கி , தாயன்பு பெருக மார்போடு அணைத்துக் கொண்டாள் கங்கா தேவி. “ மகனே தேவவிரதா இல்லை இல்லை பீஷ்மா. ஆம் அதுதானே உன் புதிய பெயர்.
நீ செய்த செயல் என்னை பூரிப்பில் ஆழ்த்தியுள்ளது மகனே. இனி உலகம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும். கவலைப் படாதே. எங்கே கையை நீட்டு” என்று பீஷ்மரைப் பார்த்து, கங்காதேவி அன்புக் கட்டளையிட்டாள். பீஷ்மரும் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்ப் போல தன் இரண்டு கைகளையும் தாயின் முன் நீட்டினார். கங்கா தேவி , கங்கா நதியின் ஜலத்தை சிறிது தன் கைகளில் எடுத்து அதை பீஷ்மரின் கைகளில் விட்டாள். அந்த நீர் சூரிய ஒளியில் மின்னிக்கொண்டே பீஷ்மரின் கைகளில் சேர்ந்தது.
பீஷ்மர் தன் கைகளைப் பார்த்தார். ஆனால் அதில்கங்கா ஜலத்தை காணவில்லை. அதற்குப்பதில் ஸ்படிக மணிகள் மின்னிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்த பீஷ்மரின் கண்கள் ஆச்சரியத்தில் அகண்டு விரிந்தது. அதைக்கண்ட கங்கா தேவி, தன் மகன் கேட்கும் முன்னால் தானே விளக்கம் தர ஆரம்பித்தாள். “ மகனே பீஷ்மா. தூய்மையான கங்கா ஜலமே உன் கைகளில் ஸ்படிக மணிகளாக மின்னுகிறது. இதை மாலையாக அணிந்துக்கொள். இதன் வடிவில் உன்னோடு இருந்து உன்னை நான் எப்போதும் வழி நடத்துவேன். கவலை வேண்டாம். இந்த ஸ்படிகம் போல உன் மனமும் நிச்சலமாக என்றும் இருக்கும். ஆசிகள்” என்று கூறி தனது மகன் பீஷ்மரின் தலையில் தனது கரத்தை வைத்து ஆசீர்வதித்துவிட்டு கங்காஜலத்துடன் கங்காதேவி கலந்தாள்.......
“இப்படி பீஷ்மர் மேற்கொண்ட கடுமையான விரதத்தை,நிறைவேற்ற கங்கா தேவியே ஸ்படிக மணிகளாக மாறி தனது மகனுக்கு துணை நின்றாள். ஆகவே, பீஷ்மருக்குள் இருக்கும் ஞானம் அந்த ஸ்படிக மணிகளிலும் இருக்கும். புரிந்ததா சகாதேவா?” என்றபடி மாதவன் யாரும் அறியாத ஒரு தேவ ரகசியத்தை தன் பக்தனுக்காக போட்டு உடைத்தான்.
“ எனக்கு பீஷ்மரின் பிரம்மச்சரிய விரத்தத்திற்கு துணை நின்றது யார் என்றும் புரிந்தது. கங்கா தேவிக்கு எப்படி உலகமே போற்றும் பீஷ்மரை குழந்தையாகப் பெறும் பாக்கியமும், பீஷ்மருக்கு துணை நிற்கும் பாக்கியமும் எப்படி கிடைத்தது என்றும் புரிந்தது.
ஆம்கண்ணா. உனக்கு உன் வாமன அவதாரம் நினைவில் உள்ளதா? அதில் நீ இரண்டடியால் உலகை அளந்த போது பிரம்மதேவர், தன் கமண்டலத்து நீரால் உன் திருப்பாதங்களுக்கு அபிஷேகம் செய்தார். அந்த நீரே இன்று வையகத்தில் பாவம் போக்கும் புண்ணிய நதி கங்கையாக திகழ்கிறது. இல்லையென்றால் சாதாரண ஒரு நதிக்கு பாவம் போக்கும் பேராற்றல் எப்படி வரும். அது மட்டுமா? உன் பாத தீர்த்தத்தை என்றும் தலையில் சூடிக்கொண்டல்லவா பசுபதியான பரமேஸ்வரனும், சுடுகாட்டில் திரிந்தாலும் பக்தர்களால் சிவன் அதாவது, மங்களமானவன் என்று அழைக்கப்படுகிறார்?. இத்தனை மகத்துவமும் கங்கைக்கு வந்ததற்குக் காரணம் உன் ஸ்ரீ பாத வைபவமே. ஆகவே அந்த பாதத்தில் சரணாகதி செய்கிறேன் மாதவா!” என்று மாதவன் பாதங்களில், சகாதேவன் சாஷ்டாங்கமாக விழுந்தான்.
பிறகு அவன் பீஷ்மரின் ஸ்படிக மாலையை அணைத்துக் கொண்டு, ஸ்ரீமன் நாராயணனை த்யானித்தான். அவன் வாயிலாக இந்த வையகத்திற்கு மீண்டும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கிடைத்தது. இப்படி, கங்கா மாதா, நமது பாவங்களை மட்டும் போக்கவில்லை. சம்சாரம் என்னும் கடலில் துரும்பைப் போல தத்தளிக்கும் நமக்கு, படகு போல விளங்கும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் மீட்டுத் தந்திருக்கிறாள். இன்னும் அவள் மகிமைகளும் பெருமைகளும் ஏராளம்.அவளது மகிமைகளை உணர்ந்து, அவற்றை அவள் உதித்த நாளான கங்கா சப்தமியன்று (11-05-2019) நினைவு கூறுவோம். அதோடு மட்டும் நில்லாமல் அவளைத் தூய்மையாக நமது அடுத்த சந்ததியினரிடம் சேர்ப்போம் என்று உறுதிமொழி எடுப்போம். ஜெய ஜெய கங்கே! ஹர ஹர கங்கே...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment