மார்கழி மாதம் இறைவனுக்கு உகந்தது. பெண்கள் அதிகாலை வாசலில் வண்ணக்கோலமிட்டு பூசணி பசுஞ்சாணி பிள்ளையார் வைத்து மஹாலஷ்மியை மகிழ்விப்பார்கள். குடும்பத்திலுள்ள ஆண்களும், நண்டுகளும், சிண்டுகளுமாய் இணைந்து மார்கழி மாத பஜனையில் கலந்துகொண்டு வீதியுலா செல்வார்கள்.
மார்கழி மாதம் தேவர்களுக்குரிய மாதம். அதிலும் அதிகாலைப் பொழுது. அப்போது இறைவன் விழித்தெழும் நேரம் என்பதால் தேவர்கள் முன்கூட்டியே எழுந்து திருப்பள்ளி எழுச்சி செய்யத் தயாராவார்கள். அவர்களோடு நாமும் இணைந்து இறைவனின் துதிப்பாடி கடவுள் திருநாமங்களைச் சொல்லி தேவர்களோடு இணைந்து வழிபடுவதால் தேவர்களும் இறைவனும் நம்மை காப்பார்கள் என்பது ஐதிகம்.
நான் சிறுவயதாக இருந்த போது கடவுளின் நாமம் சொல்லி பஜனை பாடும் பக்தர்களுடன் மேளதாளங்கள் முழங்க அதிகாலைப்பொழுதில் வீதியுலா வருவார்கள். ஒவ்வொரு வீதிக்குள்ளும் நுழையும் போதே அவர்களது பாடல்களும் மேளதாளங்களையும் மீறி ஜால்ரா சத்தங்கள் காதுகளில் இனிமைப் பயக்கும். “அம்மா பஜனை நம் வீதிக்கு வரும்போது என்னை எழுப்பிவிடேன்” என்று சொல்லி அம்மா எழுப்பும் போது சோம்பல் படாமல் உற்சாகத்துடன் ஓடியிருக்கிறோம்.
பக்தர்கள் பக்தி பரவசத்தோடு கண்ணனை நினைத்துத் துதிபாடும் சமயம் சிறுவர்களுடன் இணைந்து பெண் குழந்தைகளாகிய நாங்களும் வீதியுலா செல்வோம். அதிலும் ஜால்ராவைக் கையிலெடுக்கவே சிறுவர்களுக்குள் போட்டி உண்டாகும். யார் முதலில் கோயிலுக்குள் வருகிறார்களோ அவர்கள்தான் பஜனையில் ஜால்ரா அடிக்க வேண்டும் என்று எழுதப்படாத விதிமுறையே அப்போதிருந்தது. இதற்காகவே முந்தியடித்து தோழிகள் புடைசூழ ஓடிவிடுவோம். எனினும் மாதத்தில் ஒரு நாள் ஜால்ராவை பஜனையுடன் தட்டி வரும்போது ஒரு வித பெருமையுடன் வீதியைக் கடப்போம். கூடவே பஜனை வீதியுலா முடிந்து தரும் பிரசாதமும் அமிர்தமாக இருக்கும். தினம் ஒரு பிரசாதத்துடன் கோயிலைச் சுற்றி வரும் போது அந்த வயதுக்குரிய குதூகலமும் இணைந்தே வளர்ந்தோம்.
ஆண்டாளின் பெருமையும் ஆண்டவனின் மகிமையும் அறியாத அக்காலத்தில் இறைவனுக்கான பூஜை என்பது மட்டுமே மார்கழியில் எங்களுக்கு தோன்றும். பெரும்பாலும் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் தான் பஜனை வெகுபிரசித்தமாக இருக்கும். காலங்கள் மாறிய கையுடன் நாகரிகமும் வளர்ந்து கிராமங்கள் கிராமாமாக இருந்தாலும் நாகரிகம் என்னும் போர்வையில் பஜனை என்பதும் பழமையாகிவிட்டது. கடவுளை துயில் எழுப்ப பஜனை செய்யும் கூட்டங்களின் பின்னால் செல்லும் கூட்டம் குறைந்து பஜனை பாடுவோரின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. மார்கழி 30 நாட்களும் பஜனை படு சிறப்பாக நடப்பது மாறி வெறும் சம்பிரதாயத்துக்காக வீதியுலா வருவது வருத்தத்துக்குரியதாக மாறிவிட்டது..
நாம் புதுமை என்னும் பெயரில் பழமையை தொலைத்துக்கொண்டிருக்கிறோமா.. சிறுவயது பஜனையும் பக்தர்கள் கூட்டமும் கண்ணிலிருந்து மறைந்துகொண்டிருப்பதை மீட்க முடியாமல் செய்வதறியாமல் திகைத்துக்கொண்டிருக்கிறேன்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment