பூஜை, விரதங்கள், வழிபாடு இவற்றில் பெண்களின் பங்கு அளவிட முடியாதது. அந்த விரதங்களும் தனக்காக, இல்லாமல் தன் குடும்பத்தினருக்காக இருப்பதில் பெண்களுக்கு எப்போதுமே சந்தோஷம் தான். தன் பிள்ளைகளுக்கு வாக்குவன்மை சிறக்க வேண்டும், மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்,மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும், என்பதில் ஆரம்பித்து அவர்களின் வேண்டுதல் பட்டியல் சற்று நீளம் தான்.
இத்தகைய விரதங்களில் பெண்கள், தங்கள் கணவனின் நலனுக்காக இருக்கும் விரதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவற்றுள் மாங்கல்ய பாக்கியம் தரும் மகத்தான நோன்பாக காரடையான் நோன்பு போற்றப்படுகிறது. தன் கணவன் நலமுடனிருக்க சுமங்கலிகளால் நோற்கப்படும் இந்த நோன்பு,மாசியின் முடிவில் பங்குனியின் துவக்கத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
புராண கதை
மத்ர தேசத்து மன்னன் அச்வபதி தன் மகள் சாவித்திரியிடம்,"உனக்கு ஏற்ற கணவனை உன் விருப்பத்திற்கேற்ப நீயே தேர்ந்தெடுத்துக் கொள்'' என்று முழு உரிமையை வழங்கினார். அந்த காலக்கட்டத்தில், சால்வ தேசத்து மன்னர் எதிரிகளால் விரட்டப்பட்டு, தனது மனைவி மற்றும் மகன் சத்தியவானுடன் காட்டில் வாழ்ந்து வந்தார்.
ஒரு சமயம் தன் தோழிகளுடன் வனப் பகுதிக்கு சென்ற சாவித்ரி, அங்கு சத்தியவானைக் கண்டதும், அவன் மீது காதல் கொண்டாள்.நாடு திரும்பியதும், தன் தந்தையிடம் தன் விருப்பத்தைச் சொன்னாள். அந்த வேளையில் அங்கு வந்த நாரதர்,"சத்தியவான் ஆயுள் பலம் இல்லாதவன். இன்னும் ஒரு வருடத்தில் அவன் இறக்கும் வாய்ப்பு உள்ளது'' என்று எச்சரித்தார். இருப்பினும், "சத்தியவானைத் தான் மணப்பேன்' என்று சாவித்திரி உறுதியாக இருந்ததால், தன் மகளின் விருப்பப்படி திருமணம் செய்து வைத்தார் சாவித்திரியின் தந்தை.
தன் கணவன் அடி தொடர்ந்து, அவன் வசிக்கும் காட்டிற்குச் சென்று வசித்து வந்தாள் சாவித்திரி. தினமும் காட்டில் விறகு வெட்டி அதனை விற்று பெற்றோருடனும் தன் மனைவியுடனும் வாழ்ந்து வந்தான் சத்தியவான்.
"நாரதரின் எச்சரிக்கையை மனதில் ஏற்றுக்கொண்ட சாவித்திரி, தன் கணவனின் ஆயுளை நீடிக்க விரதம் மேற்கொள்ளத் தீர்மானித்தாள். அதன்படி பார்வதி தேவி கடைப்பிடித்த விரதத்தினை மேற்கொண்டாள்.
தன் கணவனை விட்டு சற்றும் பிரியாத சாவித்திரி, அவன் விறகு வெட்டச் செல்லும் போதும் கூடவே சென்றாள். அதற்கு முன்பு,கார் அடையும் வெண்ணெயும் தயார் செய்து, தன் குல தெய்வத்திற்குப் பூஜை செய்து, மஞ்சள் சரடை பூஜையில் வைத்து, அதில் ஒன்றைக் கையில் கங்கணமாகக் கட்டிக் கொண்டாள். நல்ல சுப வேளையில் திருமாங்கல்யச் சரடையும் மாற்றிக் கொண்டாள். அந்த நாள் மாசிமாதக் கடைசியும் பங்குனி மாதம் ஆரம்பமாகும் சுப வேளையாக இருந்தது.
காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்த போது, திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். மிகவும் தர்மவானாக இருந்தபடியினால், சத்யவானின் உயிரைக் கவர எமதர்மராஜனே வந்தான். சாவித்திரி எமனைப் பின் தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி, கணவன் ஆயுட்காலம் குறைவு என்று தெரிந்தும், மனோ தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டவள், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்ற பல உத்தம குணங்களைக் கொண்டவள் என்பதால், அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார்.
கொஞ்சமும் மனம் கலங்காமல், எமனிடம், “நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித் தர வேண்டும்” எனக் கேட்டாள். சத்யவானின் உயிருக்கு பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார் எமன். சாவித்திரியும் சளைக்காமல், “என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும்” என்றாள்.
அவளிடம் இருந்து கிளம்பினால் போதும் என்று நினைத்த எமதர்மனும், சற்றும் யோசிக்காமல், “தந்தேன்” என்றார். “எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே. அவரது உயிரை திரும்பக் கொடுங்கள்”, என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானின் உயிரை திருப்பி தந்து, வாழ்த்திவிட்டு சென்றார்.
சாவித்திரி அனுஷ்டித்து வந்த நோன்பு கௌரி நோன்பு எனக் கூறப்படுகிறது. சாவித்திரி காட்டில் இருந்து இந்த நோன்பை மேற்கொண்டபோது அங்கு அவளுக்குக் கிடைத்த காராமணி, கார் அரிசி ஆகியவற்றைக் கொண்டு காரடை செய்து நிவேதனம் செய்ததால், இந்த நோன்பு நோற்கும் பெண்கள் நிவேதனத்தில் காரடை வைத்து, "உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன்; ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேண்டும்' என வேண்டி நோன்புக் கயிறு கட்டிக் கொள்வார்கள்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment