Tuesday, 4 December 2018

வேழமுகத்தானை குளிர்வித்த அருகம் புல்.!!

இறைவன் படைப்பில் எதுமே அற்பம் இல்லை என்பதை அடியவர்களுக்கு உணர்த்தும் வகையில் நிறைய விஷயங்களை அந்த பரம் பொருளே முன்னெடுத்துள்ளது. அத்தகைய ஒன்று தான் நாம் விநாயகருக்கு சாற்றும் அருகம் புல். கிராமப்புற  சாலையோரங்களிலும், விவசாய நிலங்களிலும்  எளிதில் காணப்படும்  அருகம்புல்லானது  மழை இல்லாவிட்டாலும் எப்படிப்பட்ட கடுமையான வெப்பத்தையும் தாங்கி நிற்கும் தன்மைக் கொண்டது.

ஒரு இடத்தில் நட்டு வைத்தால் சுலபமாக பரவி தழைக்க்கூடியது. அதனால் தான் நம் முன்னோர்கள் மணமக்களை ஆசீர்வதிக்கும் போது கூட ‘ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி’ என்று வாழ்த்தினார்கள். கோடைக்காலத்தில் தண்ணீர் இல்லாவிட்டால் அருகு வாடுமே அன்றி அழியாது. சிறுப் புல் என்று நாம் நினைக்கும் அருகம்புல் எப்படி விநாயகரை அலங்கரிக்கிறது என்பதை தெரிந்துக் கொள்வதற்கு முன் அதைப் பற்றிய ஒரு புராணக் கதையை நாம் பார்ப்போம்.

அனலாசுரன்

ஒரு முறை எம தர்மராஜனின் உடலில் இருந்து வெளிப்பட்ட வெப்பமானது ஒரு அசுரனாக உருமாறியது. அக்னி தேவனே அவனை நெருங்க முடியாத அளவுக்குத் தகித்துக் கொண்டிருந்த காரணத்தினால் ‘அனலாசுரன்’ என்று அழைக்க்கப்பட்டான். தேவர்கள் அவனின் கொடுமைகளை தாங்க முடியாமல் அலறினார்கள். அப்போது ஒரு அந்தணர் வடிவில் தோன்றிய விநாயகர், அவர்களை காக்கும் பொருட்டு  அனலாசுரனைத் தேடிப் போனார். விஸ்வரூபம் எடுத்த அவர், தன் துதிக்கையால் அனலாசுரனை அப்படியே எடுத்து விழுங்கினார். விக்னேஸ்வரரின் பெரும்பானை வயிற்றுக்குள் அண்ட சராசரமும் ஐக்கியம் என்பதால், அனைவரும் வெப்பம் தாங்க முடியாமல் தவித்தனர்.
21 அருகம்புல்
விநாயகரின் வெப்பத்தைத் தணிவிக்க ஒவ்வொருவரும் ஒரு உபாயங்களை கையாண்டார்கள். ஆனாலும் வெப்பம் குறைந்தபாடில்லை. அப்போது அங்கே வந்த சப்த ரிஷிகள் எனப்படும் அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகிய எழுவரும் சேர்ந்து ஒரு சாண் அளவுள்ள 21 அருகம்புற்களைக் கொண்டு வந்து கணபதியின் தலையில் வைத்தனர். இதனால் கணபதியின் உடல் சட்டென்று குளிர்ந்து, வயிற்றில் இருந்த அனல் தணிந்தது.
மனம் மகிழ்ந்த  விநாயகர் அன்று முதல், ‘இனி தன்னை பூஜித்து,வரத்தைப் பெற விரும்புபவர்கள், அருகம்புல் கொண்டு வணங்கினால் மகிழ்ந்து அவர்கள் கேட்ட வரத்தை அருள்வேன்  என்று வரமளித்தார்.

அருகம் புல்லின் மகத்துவம் சொல்லும் இன்னொரு கதை. ஒரு சமயம் கெளண்டின்ய முனிவர் தன் மனைவியான ஆசிரியையுடன் தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். விநாயகர் மேல் அளவற்ற பக்தி கொண்ட கெளண்டின்யர் தினமும் விநாயகருக்கு அருகம் புல்லால் அர்ச்சனைகள் செய்து வந்தார்.
ஆசிரியைக்குக் தன் கணவன் மன்னர்களையும், சக்கரவர்த்திகளையும் சந்தித்து பெரும் பொருள் ஈட்டி வரவில்லையே என்ற குறை இருந்தது. மனைவியின் மாயையை அகற்றவும், அவளுக்கு அருகின் மகிமையையும், இறைவனின் மேன்மையையும் உணர்த்த எண்ணம் கொண்டவராய் கெளண்டின்யர் அவளிடம், அருகு ஒன்றை விநாயகருக்குச் அர்ச்சித்து, அதை அவளிடம் கொடுத்து, “இந்த அருகைத் தேவேந்திரனிடம் கொடுத்து இதன் எடைக்கு ஈடாகப் பொன் பெற்றுக் கொள்வாயாக!” என  அனுப்பினார்.

தங்கமும் அருகம்புல்லும்...

ஒரு சிறிய அருகம்புல்லின் எடைக்கு ஒரு குந்துமணிப் பொன் கூட வராதே? என அலட்சியமாக எண்ணினாலும் கணவனின் சொற்படி தேவேந்திரனிடம்  நடந்ததைச் சொல்லி இந்த அருகின் எடைக்குப் பொன் வேண்டுமாம் எனக் கேட்டாள். தேவேந்திரன் திகைத்து அருகின் எடைக்குப் பொன்னா? என்னால் இயலாத ஒன்றே எனத் தவித்துத் தன் செல்வம் பூராவையும் தராசில் ஒரு பக்கமும், அருகை மறுபக்கமும் வைத்தான்.
அருகின் எடைக்கு அந்தச் செல்வம் ஈடாகாததால் தேவேந்திரன் தானே ஏறி உட்கார தட்டு  சமனாயிற்று. திகைத்த இருவரும், முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தனர். கெளண்டின்ய முனிவரிடம் நடந்ததைச் சொன்ன ஆசிரியை வெட்கித் தலை குனிந்தாள்.
சிறு புல்லாக இருந்தாலும் ஆதி மூலமான விநாயகபெருமானின் பூஜைக்கு உகந்த அருகம் புல்லைப் போல் நாமும் இறைவன் முன் நமது அகங்காரம் ஆணவம் அடக்கி எளிமையாக இருந்து அவர் அருள் பெறுவோம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment