Monday, 3 December 2018

புராண கதாபாத்திரப் படைப்புகள்.!!

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்த வாரமும் உங்களுக்காக...

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக...

கந்தர்வர்கள்

மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் தொடர்பாக இருப்பவர்கள் கந்தர்வர்கள். கந்தர்வ லோகத்தில் வசிக்கும் இவர்கள், தேவ பாடல்கள் பாடுவது மட்டுமல்லாமல், மதிமயக்கும் சுவையான சோமபானம் தயாரிப்பதிலும் வல்லவர்கள். மேலும் மருத்துவத்திலும், காதலிலும் கை தேர்ந்தவர்கள். ஆடல் கலையில் வல்லவர்களாகவும், யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்கும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். சித்திரம், நடனம், இசை போன்ற கலைகள் ‘கந்தர்வ வேதம்’ என்று அழைக்கப்பெற இவர்களே காரணமாகும்.

ஜனகர்

மிதுலாபுரி என்ற நாட்டின் அரசனாக திகழ்ந்தவர் ஜனகர். இவர் ராமாயண காவியத்தின் நாயகியான சீதையின் தந்தை ஆவார். ராமனின் தம்பியான லட்சுமணனின் மனைவி ஊர்மிளாவுக்கும் ஜனகரே தந்தையாவார். இவர் ஆற்றலிலும், அறிவிலும் முனிவருக்கு சமமானவராக இருந்தார். ஜனகருக்கு வெகு நாட்களாக குழந்தை இல்லை. ஒரு நாள் நிலத்தை உழும் போது, மண்ணுக்குள் இருந்து பெண் குழந்தை ஒன்றை கண்டெடுத்தார். அவரே சீதாதேவி. சீதையை தன் மகளாகவே வளர்த்தார். சீதையின் வருகைக்குப் பிறகே ஜனகருக்கு ஊர்மிளா பிறந்தாள். சீதையை மணமுடிக்க வேண்டுமானால், தன்னிடம் உள்ள சிவ தனுசில் (வில்) நாண் பூட்ட வேண்டும் என்று சுயம்வரத்திற்கு வந்த இளவரசர்களுக்கு போட்டி வைத்தார் ஜனகர். அந்த வில்லை உடைத்து சீதையை மணந்தார் ராமபிரான்.

ஜடாயு

கழுகு இனத்தில் ராஜாவாகவும், மிகப்பெரிய பறவையாகவும் ராமாயணத்தில் அறியப்படுவது தான் ஜடாயு பறவை. இது ராமரின் தந்தையான தசரத மன்னனின் நண்பனாகவும் விளங்கியது. கைகேயி பெற்ற வரத்தின் காரணமாக ராமபிரான் வனவாசம் சென்றார். அவரோடு சீதையும், லட்சுமணரும் சென்றனர். சீதை ஆசைப்பட்டு கேட்ட மாயமானை பிடிக்க ராமன் செல்ல, அவரைத் தேடி லட்சுமணன் செல்ல, சீதை தனியாக இருந்தாள். அப்போது முனிவர் வேடத்தில் வந்த ராவணன், சீதையை புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றான். 

அதைக் கண்ட ஜடாயு, ராவணனை எதிர்த்து போரிட்டது. அந்த சண்டையில் தன்னிடம் இருந்த சந்திரஹாசம் என்ற வாளைக் கொண்டு ஜடாயுவின் இறக்கையை வெட்டினான் ராவணன். இதனால் படுகாயம் அடைந்து மண்ணில் வீழ்ந்த ஜடாயு, ராமர் வரும்வரை தன் உயிரை பிடித்து நிறுத்தி வைத்திருந்தது. அவர் வந்ததும், சீதையை ராவணன் கடத்திச் சென்ற திசையை கூறிவிட்டு உயிர் துறந்தது. ஜடாயுவுக்கு ராமரே மகனாக இருந்து இறுதிச் சடங்கை செய்ததாக ராமாயணம் சொல்கிறது.

சாம்பவான்

ராமாயணத்தில் கரடிகளின் ராஜாவாக பார்க்கப்படுபவர். மல்யுத்தத்தில் எவராலும் வெல்ல முடியாத பலம் கொண்டவர். ராமாயணத்தில் தன் வலிமை அறியாமல் இருந்த அனுமனை, அதை அறியச் செய்தவர் சாம்பவான். அவரது வலிமையான படைகள், ராமனுடன் இணைந்து ராவணனுக்கு எதிராக போரிட்டது.

சாம்பவான் மகாபாரத காலத்திலும் இருந்ததாக அறியப்படுகிறார். திருப்பாற்கடலில் இருந்து கிடைத்த சியாமந்தக மணி என்ற கல், மகாபாரத காலத்தில் மன்னன் ஒருவனிடம் இருந்தது. அந்தக் கல்லை அணிந்து வேட்டைக்குச் சென்ற மன்னனின் மகன், சிங்கத்தால் கொல்லப்பட்டான். அவன் அணிந்த சியாமந்தக மணியும் சிங்கத்திடம் இருந்தது. இதற்கிடையில் கிருஷ்ணன் தன்னுடைய மகனைக் கொன்று மணியை திருடியதாக நினைத்த மன்னன், கிருஷ்ணரை குற்றவாளியாக்கினான்.

தன் குற்றத்தை களைய நினைத்த கிருஷ்ணர் காட்டிற்குச் சென்றார். காட்டில் சிங்கத்தை கொன்று கரடிகளின் ராஜாவான சாம்பவான், அந்த மணியை எடுத்துச் சென்றதை அறிந்தார் கிருஷ்ணர். மணியைப் பெற கிருஷ்ணர் சாம்பவானுடன் மல்யுத்தம் புரிய வேண்டியிருந்தது.

பல நாட்களாக நடந்த அந்த யுத்தத்தில் இருவருமே களைப்படைந்தனர். தனக்கு நிகரான பலம் கொண்ட கிருஷ்ணருக்கு தன் மகள் சாம்பவியை மணம் முடித்துக் கொடுத்ததுடன், சியாமந்தக மணியையும் சாம்பவான் அளித்தார்.

கார்கேயன்

விஸ்வாமித்திரரின் மகன் கார்கேயன். இவரும் ஒரு தவசி ஆவார். கார்கேயன் முனிவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வனத்தில் வாழ்ந்து வந்தார். அவர் குடும்பம் வறுமையில் இருந்தது. ஒரு முறை ராமர் தன் தம்பிகளுடன் வனத்திற்கு வேட்டைக்குச் சென்றார். இதையறிந்த கார்கேயன் ராமரைக் காண வந்தார். யமுனை நதிக்கரையில் எண்ணிலடங்காத பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. கார்கேயன் வந்த நோக்கத்தை அறிந்த ராமர், பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி ஒரு குச்சியை எறியச் சொன்னார். ராமரின் வார்த்தைப்படியே செய்தார் கார்கேயன். அந்த குச்சி விழுந்த இடம் வரையுள்ள பசுக்களை கார்கேயனுக்கு பரிசாக வழங்கினார், ராமர். அதை பெற்றுக் கொண்ட முனிவர் கார்கேயன் வளமாக வாழ்ந்தார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment