சரஸ்வதி நதி இந்து மரபின் பிரதான நதிகளில் ஒன்று. ரிக் வேதம் முதல் உபநிஷதங்கள், பிரமாணங்கள், மஹாபாரதம் வரையான அத்தனை ஞான நூல்களிலும் சரஸ்வதியைப் பற்றிய புகழ் குறிப்புகள் விரவியிருக்கின்றன. ரிக் வேதத்தில் சரஸ்வதி மிகச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் சரஸ்வதியின் அளவுக்கு வியந்து போற்றப்பட்ட நதி வேறு ஒன்று இல்லை என்றே சொல்லிவிடலாம். ரிக் வேதத்தின் நாற்பத்தைந்து ஸ்லோகங்களில் எழுபத்தைந்து முறை சரஸ்வதி நதி குறிக்கப்படுகிறது. தனக்கென தனியாகப் பாடல்கள் அர்ப்பணிக்கப்பட்ட நதியாகவும் சரஸ்வதியே இருக்கிறது.
மூன்று ஸ்லோகங்கள் சரஸ்வதி நதிக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. ரிக் வேதத்தின் 2.41.16ம் பாடல் ‘அம்பிதமே நாதிதமே தேவிதமே சரஸ்வதி’ என்று சரஸ்வதியை இருகரம் கூப்பித் தொழுதழைக்கிறது. அதாவது, அன்னையே, நதியே, பெண் தெய்வமே சரஸ்வதி என்று போற்றியிருக்கிறார்கள். இந்தத் தனித் தனிச் சொற்களில் இயங்கும் பொருளை கவனித்தால் சரஸ்வதியை நம் முன்னோர்கள் எவ்வளவு மகிமைபடுத்தியிருக்கிறார்கள் என்ற உன்னதத்தை உணரலாம். பெற்றெடுத்து உடல் கொடுக்கும் அன்னையாகவும், தாகம் தணித்து உயிர் வளர்க்கும் நதியாகவும், ஞானத்தையும் மோட்சத்தையும் கொடுத்து அரவணைக்கும் தெய்வமாகவும் சரஸ்வதியைப் பார்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
கங்கை, யமுனை, சரஸ்வதி என முந்நதிகள் இணையும் திரிவேணி சங்கமம் இந்துக்களின் புனித நிகழ்வுகளில் முக்கியமானது. உலகம் முழுதும் உள்ள சாதுக்களும், யோகிகளும் எல்லா ஞானமரபைச் சேர்ந்த பெரியவர்களும் கலந்து கொள்ளும் இந்தத் திருவிழா நடக்கும் இடத்தில் கங்கையும் யமுனையும் நிலமடந்தையின் மேற்புறம் இணைந்து பிரவகிக்கும்போது அதே இடத்தில்தான் பூமிக்கு அடியிலிருந்து பாய்ந்து வந்து சரஸ்வதி எனும் ஞானத்தாய் கலக்கிறாள் என்பது இந்துக்கள் நம்பிக்கை. மறுபுறம் சரஸ்வதி நதி எது என்பது குறித்தும் அது எங்கே எப்போது ஓடிக் கொண்டிருந்தது என்பது குறித்தும் காலங்காலமாய் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டேயிருக்கின்றன.
ஒருபுறம் ஆய்வாளர்கள் சரஸ்வதி நதி ஓடிய இடம் இதுதானென்று ஆய்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்து மரபின் வேதாந்திகளிலேயே ஞான மார்கிகளான சில பெரியவர்கள் சரஸ்வதி என்பது மனிதனின் உள்ளார்ந்து ஓடும் ஞானத்தின் குறியீடு என்றும் அது வாக்கினில் வெளிப்படும் அந்தராத்மாவின் சூட்சுமம் என்றும் சொல்கிறார்கள். சரஸ்வதி என்பது நிஜமாகவே இத்திரு நிலத்தில் ஓடிக் கொண்டிருந்த நதிதான் என்று நம்புவதற்கான ஆதாரங்களை சில தொல்லியல் ஆய்வுகள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. இந்த பூமிப்பந்து உருவான நாள்தொட்டு அல்லது பெரும் பனிக்காலம் என்ற முற்காலம் தொட்டு இமயமலையின் பனிச் சிகரங்களில் இருந்து இறங்கி வந்து கடல் கலந்த நதி அது என்றும் வெறும் கற்பனையோ புனைவோ அல்ல என்றும் அந்த ஆய்வுகள் ஆணித்தரமாகச் சொல்கின்றன.
ரிக் வேதத்தின் 6.61ம் பாடல் சரஸ்வதி மலைகளில் உருவாகி வருகிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ‘மலைகளின் தலையாய் நிற்கும் முகடுகளில் அவள் தன் வலுவான வெள்ளி அலைகளை வெடித்துச் சிதற வைக்கிறாள்’ என்று வர்ணிக்கிறது அப்பாடல். இவ்விளக்கத்தின்படி சர்சுதி என்ற பெயரில் தற்போது விளங்கும் நதியைத்தான் சரஸ்வதி என்று குறிப்பிட்டார்களா என்றும் ஆய்வுகள் தொடர்கின்றன. சர்சுதி ஒப்பீட்டளவில் சற்றே சிறிய நதி. முன்னொரு காலத்தில் பெரிதாக ஓடியிருந்தாலும்கூட வேதங்கள் வியந்து போற்றும் அளவுக்குப் பெரிய நதியாய் இருந்திருக்குமா தெரியவில்லை.
மேலும், இடங்களுக்கும் மலைகளுக்கும் நதிகளுக்கும் பெயர் வைப்பதில் மனிதர்க்கு சில சுபாவங்கள் உள்ளன. ஒரு சமூகம் தான் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் நிலத்தையோ நதியையோ மலையையோ சூழ்நிலை காரணமாகப் பிரிய நேரிட்டால் பிறகு வசிக்க நேர்ந்த பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கும் மலைக்கும் நதிக்கும் அந்த பழைய பெயர் வைப்பது இயல்பே. அப்படி வேண்டுமானால் அந்த நதிக்கு சர்சுதி என்ற பெயர் வழங்கியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ரிக் வேதத்தின் நாசதீய ஸ்துதி சூக்தம் நம் இந்தியப் பெருநிலத்தில் ஓடிய, ஓடிக்கொண்டிருக்கும் பத்தொன்பது பெருநதிகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது.
கிழக்கு திசையிலிருந்து மேற்காக நகரும் இந்த வரிசைப்படுத்தலில் சரஸ்வதியின் இடம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது, யமுனைக்கும் ஷுதுத்ரி என்று சமஸ்கிருதத்தில் புகழ் வழங்கிய இன்றைய சட்லெஜ் நதிக்கும் இடையில் பாய்ந்துகொண்டிருந்தது சரஸ்வதி என்று நாசதீய ஸ்துதி சூக்தம் குறிப்பிடுகிறது. இந்த சூக்தத்தின் ஐந்து மற்றும் ஆறாம் பிரிவுகள் இதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இந்தக் குறிப்பைக் கொண்டு இன்றைய கக்கார் நதிதான் அது என்று சொல்கிறார்கள் சில தொல்லியல் அறிஞர்கள். கக்கார் நதிதான் துண்டாடப்பட்ட சரஸ்வதி நதி என்று பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கில சர்வேயராகப் பணியாற்றிய ஜென்ரல் மேசஸ் ரென்னல் குறிப்பிடுகிறார்.
ரென்னலைத் தவிரவும் கர்னல் ஜேம்ஸ் டாட், மேஜர் எஃப்.மெக்கீசன், ஃப்ரெஞ்ச் ஆய்வாளர் லூயி விவியன் தெஸான், ஆர்.டி.ஓல்டாம், ஜார்ஜ் ராவர்டி, மார்க் ஆரல் ஸ்யீன் போன்ற வெளிநாட்டு ஆய்வாளர்கள் அதிகாரிகளும் சரஸ்வதி நதியின் வரலாற்றுப் பரிணாமம் பற்றி பல்வேறு கட்டுரைகள் மற்றும் நூல்களில் வேறு வேறு தருணங்களில் சொல்லியுள்ளார்கள். 1788 முதல் சரஸ்வதி நதி தொடர்பான உரையாடல்கள் வரலாற்று அறிஞர்களிடையே நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் நிகழ்ந்துவரும் ஆய்வுகள் சரஸ்வதி என்ற நதி எப்படி வரலாற்றுச் சூழலில் இயற்கையின் புவியியல் மாற்றங்கள் காரணமாக சிதைந்தும் பல்வேறு நதிகளாகப் பிரிந்தும் உருக்குலைந்தது என்பதை ஆய்வுப்பூர்வமாக முன்வைக்கின்றன.
மிஷைல் தானினோ என்ற ஃப்ரெஞ்ச் ஆய்வாளர் ஒருவர் ‘சரஸ்வதி ஒரு நதியின் மறைவு’ என்ற முக்கியமான நூலை எழுதியுள்ளார். அதில், சரஸ்வதி நதியைப் பற்றி மட்டும் அல்லாது உலகமே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட சிந்து-சரஸ்வதி என்ற மாபெரும் நாகரிகம் பற்றியும் விரிவாகப் பதிவு செய்துள்ளார். உலகின் பழம்பெரும் நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரித்துடன் எப்படி சரஸ்வதி நதி தொடர்புடையது என்றும் சிந்து சமவெளி நாகரிகம் உண்மையில் சிந்து-சரஸ்வதி நாகரிகமே என்றும் இன்றைய இந்தியாவின் பரப்பளவில் சுமார் கால் பங்குக்கு மேல் விஸ்தீரணம் உடைய மாபெரும் நிலப்பகுதியில் இந்த சிந்து-சரஸ்வதி நாகரிகம் இயங்கியது என்றும் மிஷைல் தானினே விளக்குகிறார்.
பிரமாணங்களிலும் மஹாபாரதத்திலும் சரஸ்வதி நதி விநாஸனம் என்ற இடத்துக்குக் கீழே மறைந்தது என்ற குறிப்பு உள்ளது. இந்த இடம் தற்போது இந்திய- பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ளது. மஹாபாரதத்தில் வரும் உதத்ய மகரிஷியின் கதை சரஸ்வதியின் மறைவை விளக்குவதாக உள்ளது. மேலும், பலராமரால் யமுனையின் வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்ட புராணத்தையும் ஷுதுத்ரி என்ற சட்லெஜ் பல நூறாகப் பிரிந்ததைக் குறிப்பிடும் முனிசிரோண்மணிகளான வசிஷ்டர்-விஸ்வாமித்திர ரிஷிகளின் புராணத்தையும் இதனோடு இணைத்து யோசித்தால் சரஸ்வதி சில சூழ்நிலைகளால் சிதைந்திருக்கக்கூடும் என்ற வரலாற்று உண்மை துலங்கும்.
இலக்கியங்கள், புராணங்களை வரலாற்று ஆதாரமாகக் கொள்வதில் சில ஆய்வாளர்களுக்கு மனத்தடை உள்ளது. ஆனால், இலக்கியங்கள் மானுட உணர்ச்சிகளின் மீது இயங்கினாலும் அவற்றின் அடிப்படைக் கட்டுமானம் வாழ்க்கையிலிருந்தே உருவாவதால் அதில் சொல்லப்படும் தரவுகளை நாம் முழுமையாக மறுக்கவும் முடியாது. அந்த வகையில் இப்படியான குறிப்புகளை நாம் பொருட்படுத்தவே வேண்டும். வரலாற்றின் ஒரு தருணத்தில் வட இந்தியாவில் இமயமலையின் அடிவாரங்களில் ஒரு பூகம்பம் ஏற்பட்டதில் அங்கு பாயும் முக்கியமான நதிகளின் வழித் தடங்களில் பெரிய மாற்றம் நிகழ்ந்ததென்ற குறிப்பு ஒன்று டம வரலாற்றாசிரியர்களால் சொல்லப்படுகிறது.
ஒருவேளை இதனால்தான் சிந்து, சட்லெஜ், சரஸ்வதி நதிகள் உடைந்தனவா என்று ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கிரிகரி பொஸ்ஸால் என்ற ஆய்வறிஞர் மூன்று கட்டங்களாக நிகழ்ந்த சிந்து-சரஸ்வதி நாகரித்தின் அகழ்வாய்வுகளின் அடிப்படையில் சில அவதானங்களை முன்வைக்கிறார். கி.மு. 3000 வரை அதாவது கிருஸ்து பிறப்பதற்கு மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை சரஸ்வதிதான் மிகப் பெரிய நதியாக ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. சிந்துவும் சட்லெஜும் அதன் கிளைநதிகளாக பாய்துகொண்டிருந்திருக்கின்றன. சிந்து-சரஸ்வதி நாகரிகத்தின் முழு வளர்ச்சி காலகட்டத்தின் ஏதாவது ஒரு தருணத்தில் மாறுபட்ட புவியியல் சூழல்களாலோ எதனாலோ யமுனை நதி கங்கை நதித் தொடரால் இழுக்கப்பட்டு விடுகிறது.
அதாவது யமுனை கங்கையை நோக்கி நகர்ந்து வந்துவிடுகிறது. இதன் விளைவால் த்ருஸ்வதியும் சரஸ்வதியின் மத்திய பாகமும் வறண்டு போயின. சட்லஜ் மேற்கு நோக்கி ரூபாருக்கு அருகில் விலகிச் சென்றது. சட்லெஜின் கிளைகள் ஹனுமான்காட் ஃபோர்ட் அப்பாஸுக்கும் இடையில் கக்கார்-ஹக்ராவின் பல இடங்களில் சந்தித்தன. பிற்பாடு, கி.மு 2000 -1500 ஆண்டுகளில் சட்லெஜ் மேலும் வழிமாறி ஃபோர்ட் அப்பாஸுக்குக் கீழ்பகுதியில் ஹக்கராவைச் சந்திக்கிறது என்பதாக விலகியது. இதனால், சரஸ்வதிக்கும் அதன் உபநதிகளுக்கும் மழை வந்தால் மட்டுமே பெரும் நீரோட்டம் என்ற நிலை ஏற்பட்டது என்கிறார் கிரிகரி
பொஸ்ஸல்.
சமீப காலம் வரை சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் கங்கை நதிக்கரை நாகரிகத்துக்கும் தொடர்பில்லை என்றே பல வரலாற்றாசிரியர்கள் தொடர்ந்து சொல்லிவந்தனர். கிரிகரி பொஸ்ஸல்கூட சிந்து சரஸ்வதி நாகரிகம் என்பது முடிவடையவில்லை அது உருமாற்றம் பெற்றது என்றே சொல்கிறார். ஆனால், மிஷைல் தானினோ தன் நூலில் சிந்து சமவெளி அகழாய்வுகள் மற்றும் கங்கை நதிக் கரை அகழாய்வுகளில் வெளிப்பட்ட சில தரவுகளின் அடிப்படையில் இவ்விரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைப் பட்டியலிடுகிறார். நகரங்கள் மற்றும் கட்டிடங்களின் அமைப்பு, எடைகள் அளவுகளின் சமச்சீர்தன்மை, சின்னங்கள், சிலைகள், எழுத்துகளிடையே உள்ள ஒற்றுமை, மதம் மற்றும் கலாசாரத் தொடர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் தானினோ அது சிந்து-சரஸ்வதி நாகரிகம்தான் என்று குறிப்பிடுகிறார்.
வேத இருண்ட காலம் என்ற கருத்தாக்கம் ஒன்று சில ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. சிந்து சமவெளி மற்றும் கங்கைச் சமவெளி நாகரிகங்களுக்கு இடையே உள்ள எழுநூறு ஆண்டுகால இடைவெளியை இப்படிக் குறிக்கிறார்கள். உண்மையில் இது வேத இருண்ட காலம் அல்ல. மாறாக, வேதங்களில் இருந்து தத்துவார்த்தமான, தர்க்கமான எடுகோள்கள் உருவாகி கவித்துவமான ஆன்மிக உரையாடல்களை கறாரான கோட்பாடுகளாக சித்தாந்தங்களாக மலர்ச்சியடையச் செய்த பரிணாம வளர்ச்சியின் காலம் என்பதே சரியாக இருக்கும்.
இந்தியாவில் ஓடும் எல்லா நதிகளும் கங்கையே என்று ஒரு சிந்தனை நம் மரபில் உண்டு. நதி என்பது வெறும் தீர்த்தமல்ல. அது மானுடர்களின் பாவங்களையும் அழுக்குகளையும் களைந்து செல்லும் நீராகவும், ஆன்ம சுத்திக்கு உதவும் ஞான தீட்சையாகவும் உள்ளது என்பதை உணர்த்தவே எல்லா நதியும் கங்கை என்றனர். ஆகாய கங்கை வானிலிருந்து இறங்கி வந்து நம் நிலமோடு நம்மை வாழச் செய்வது போலவே இமயம் எனும் வெண் மலையிலிருந்து இறங்கி வந்து பாதாளத்துக்குள் பாய்ந்து மறைந்த சரஸ்வதியும் உள்ளோட்டமாய் பிரவஹித்து நம்மை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறாள். இந்துக்களின் மனமெங்கும் ஞானமாய் நிறைந்திருப்பவள் அவளே என்பதால் அவளுக்கு அழிவே இல்லை...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment