வாராதிருந்தால் இனி நான் உன்
வடிவேல் விழிக்கு மை எழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகம் இடேன்
மணியால் இழைத்த பணி புனையேன்
பேராதரத்தினோடு பழக்கம் பேசேன்
சிறிதும் முகம் பாரேன்,
பிறங்கு முலைப் பால் இனிதூட்டேன்
பிரியமுடன் ஒக்கலையில் வைத்துத்
தேரார் வீதி வளங் காட்டேன்,
செய்ய கனிவாய் முத்தமிடேன்,
திகழும் மணித் தொட்டிலில் ஏற்றித்
திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தாய் வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக வருகவே
இது காந்திமதி அம்மனை குழந்தையாக பாவித்து ஸ்ரீ அழகிய சொக்கநாத பிள்ளையவர்கள் எழுதிய காந்திமதி பிள்ளைத்தமிழ்.
சென்னை மயிலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அன்னை கற்பகாம்பாள் சன்னதியில் அன்னையை கண் குளிர தரிசனம் செய்து கர்பகிரகத்தை சுற்றிவரும் போது மேற்கண்ட காந்திமதி அம்மைப் பிள்ளைத் தமிழ் மனதை ஈர்த்தது. செந்தமிழில் அன்னை காந்திமதிக்கு அழைப்பு விடுத்த அந்த அழகு நம் நினைவை நெல்லையில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் அன்னை காந்திமதியிடம் அழைத்து சென்றது. நீங்களும் அடுத்த முறை மயிலை கற்பகாம்பாளை தரிசனம் செய்து உள்பிரகாரம் வலம் வரும்போது கல்வெட்டில் பதிந்திருக்கும் காந்திமதிப் பிள்ளைத் தமிழை படிக்க தவறாதீர்கள். இனி நெல்லைக்குள் செல்வோம்.
மூங்கில் மரங்கள் நிறைந்த காட்டின் வழியாக அந்நாட்டினை ஆண்டு வந்த மன்னருக்கு தினந்தோறும் பால் நிரம்பிய குடங்களை எடுத்துச் செல்வார் இராமக்கோன். இப்படி தினந்தோறும் பால் எடுத்துச் சென்ற வேளையில் ஒருநாள், அங்குள்ள மூங்கில் கன்றில் மோதி கால் தடுக்கி பால் மட்டும் சிந்தும், ஆனால் குடம் உடைவதில்லை. இது போன்ற நிகழ்வு நாள்தோறும் நிகழ்ந்தது. அதிசயித்த இராமக்கோன் தினமும் மூங்கில் கன்றில் கால் இடருவதால் அதனைக் கோடரியால் வெட்டினார். வெட்டிய வேகத்தில் அதில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதனைக் கண்டு பயந்த ஆயன் மன்னரிடம் சென்று முறையிட அவர் தன் பரிவாரங்களுடன் அங்கு வந்தார். மரத்தில் குருதி வடிவத்தைக் கண்டார். அந்நிலையில் ஆயன் இறைவனை எண்ணி பெருமானின் திருவிளையாடல் தான் இது என்பதை உணர்ந்து, இறைவனது முழு திருமேனியையும் காட்டியருள்க என வேண்டி இரத்தம் வரும் பகுதியைத் தொட்டவுடன் குருதி வருவது நின்றது. நிலவினைச் சூடிய தலையில் ஆயனால் வெட்டுபட்ட காயத்துடன் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க முழு, வானுயர வடிவத்தினையும், பின் அரசனின் வேண்டுகோளுக்கிணங்க குறுகிய தோற்றத்துடனும் காட்சியளித்தார்.இப்படி இந்த பகுதியில் சுயம்புவாகத் தோன்றியவர் வேணுவனநாதர்.
வேணுவனநாதர் நெல்லையப்பர் ஆனார்.
இந்த திருத்தலத்தில் இறைவனுக்கு நிவேதனம் செய்வதற்காக, நெல்மணிகளை தர்மம் பெற்று வந்தார் வேதபட்டர் . தான் தர்மம் பெற்று வந்த நெல்மணிகளை ஓரிடத்தில் வைத்து விட்டு, தாமிரபரணி ஆற்றில் நீராடச் சென்றார். அப்போது திடீரென பெரும் மழை பெய்யத் தொடங்கியது. நெல்மணி நினைவுக்கு வந்த வேதபட்டர், ‘ஐயகோ! இறைவனுக்காக நான் தர்மம் பெற்று சேகரித்து வைத்திருந்த நெல்மணிகள், மழை வெள்ளத்தில் அடித்துச் சென்று விட்டால், எப்படி இறைவனுக்கு நிவேதனம் செய்வது?’ என்று நினைத்து மனமுருகி இறைவனிடம் வேண்டினார். பின்னர் அங்கிருந்து அவசரம் அவசரமாக நெல்மணிகள் இருந்த இடத்திற்கு வந்தார். அங்கு நெல்மணிகள் இருந்த இடத்தில் மட்டும் வெயில் அடித்தது. அதனை சுற்றியப் பகுதிகளில் மழை நீர் வேலி போல தேங்கி நின்றது. ஈசனின் இந்த திருவிளையாடலால் வேணுவனாதர் நெல்லையப்பர் ஆனார். இத்திருத்தலம் அமைந்த பகுதி நெல்வேலி ஆகி பின்னர் திருநெல்வேலியானது.
வேணுவ நாதரை வழிபடுவதற்காக இந்த மண்ணில் ஒளி மிகுந்த ஜோதி பிரகாசமான திருவடிவம் கொண்டு தோன்றினார் அன்னை காந்திமதி . காந்திமதி அம்மன் அருளாட்சி புரியும் திருத்தலம்தான் திருநெல்வேலி. நெல்லையப்பரின் மனம் கவர்ந்த நெல்லையை ஆளும் காந்திமதியம்மன் பக்தர்கள் வேண்டுவதை வழங்கும் அருட்பிரசாதி.
திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும், பஞ்ச நாட்டிய சபைகளில் தாமிர சபையாகவும் விளங்கும் நெல்லையப்பர் ஆலயத்தில் காந்திமதியம்மை அழகே உருவாக அலங்கார சொரூபிணியாக விளங்குகிறாள். திருநெல்வேலி மக்கள் காந்திமதி அம்மனை தங்கள் வீட்டு பெண் போலவே எண்ணி உறவுக் கொண்டாடி வருகிறார்கள். காந்திமதி அம்மனின் அலங்காரப்பொருட்கள் பெரும்பாலும் நெல்லை மக்களால் அளிக்கப்பட்டதே.
இத்திருத்தலத்தில் காந்திமதியம்மனுக்கு நடக்கும் ஆடிப்பூரவளைகாப்பு முக்கியமான திருவிழா. அம்மன் சந்நிதியில் கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கும். விழா தொடங்கிய நாள் முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
ஆடி மாதங்களில் புதிய பட்டு உடுத்தி, சந்தனம், ஜவ்வாது பூசி, தலையலங்காரம் செய்து, மாலை அணிந்து, தங்கநகைகள் ஜொலிக்க விளங்கும் அன்னை அலங்கரிக்கப்பட்ட தேவியாக காட்சி தருகிறாள். ஆடி மாத வெள்ளி, செவ்வாய்களில் திருக்கொயிலில் அளிக்கப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால், பிள்ளைவரம் வேண்டுபவர்களுக்குக் பிள்ளை வரம் கிடைக்கும்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் 2000 ஆண்டுகால பழைமையைக் கொண்ட இந்த ஆலயத்தில் அம்மனுக்கென ஆடிப்பூர விழா, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, ஆனி மாதப் பெருவிழா போன்றவை விசேஷமானது.
காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது.அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.
கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். சைவ வைணவ ஓற்றுமைக்கு இந்த திருக்கோயில் சிறந்த எடுத்துக்காட்டு.
மனமுருகி வேண்டி நிற்பவருக்கு வேண்டிய வரம் தரும் அன்னை காந்திமதியை தரிசித்து வாழ்வில் மங்காத செல்வமும் , மன நிறைவும் பெறுவோம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment