Sunday, 7 October 2018

சிவன் கோயிலில் சடாரி.!!

ராமேஸ்வரத்தில் ராமநாதரை தரிசிப்பதற்கு முன்பே ராமர் தரிசித்த ஈசன் ராமநாதர் எனும் பெயருடன் அருளும் தலம் சென்னை போரூரில் உள்ளது. ராமபிரான் இங்கிருந்து போருக்குப் புறப்பட்டதால் இத்தலம் போரூர் என வழங்கப்படுகிறது. ராவணனால் கடத்தப்பட்ட சீதையைத் தேடி காடு மேடுகளில் எல்லாம் அலைந்தார் ராமபிரான். நெல்லி மரங்களும், இலுப்பை மரங்களும் அடர்ந்து வளர்ந்து பகலை இரவாக்கிய வனப்பகுதியான, தற்போது போரூர் என அழைக்கப்படும் இடத்திற்கு வந்தார். அந்த சமயத்தில் ஒரு நெல்லி மரத்தின் வேர் ராமபிரானின் காலை இடறியது. ராமபிரானின் உள்ளுணர்வு அந்த மரத்தின் கீழ் ஒரு சிவலிங்கத் திருமேனி உள்ளது என உணர்த்தியது. ஈசனின் திருமுடிமேல் தன் பாதங்கள் பட்டதால் மனம் வருந்திய ராமபிரான் அந்த இடத்திலேயே ஈசனை நோக்கித் தவம் இருந்தார். தினமும் ஒரு நெல்லிக் கனியை மட்டுமே உண்டு 48 நாட்கள் கடுந்தவம் இருந்தார். ராமபிரானின் தவத்தை மெச்சிய ஈசன் அவருக்கு அருள திருவுளம் கொண்டார். பூமியைப் பிளந்து 6 அடி உயர லிங்கமூர்த்தியாய் தோன்றினார்.


ஈசனின் தரிசனம் கிட்டிய ராமபிரான், சீதையை மீட்கும் யோசனை கேட்டார். உடனே ஈசன், ‘நீ ராமேஸ்வரம் சென்று ராமநாதரை வணங்கினால் உனக்கு அதற்கான வழி கிட்டும்,’ என்று அருளினார். அதன்படி ராமபிரான் ராமேஸ்வரம் சென்று ராமநாதரை தரிசித்து, அவர் அருளால்  கந்தமானதபர்வதத்தில் அனுமனை சந்தித்து, சீதையை மீட்டார். ராமபிரானுக்கு குருவாக இத்தல ஈசன் விளங்கியதால் இத்தலம் குரு தலமாக போற்றப்படுகிறது. குரு பகவானுக்கு உரிய பூஜைமுறைகள் யாவும் இந்த ராமநாதருக்கு செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் தலத்தைப் போலவே இத்தலத்திலும் விபூதி பிரசாதத்துடன், பச்சைக்கற்பூரமும் ஏலக்காயும் மணக்கும் தீர்த்தமும் பிரசாதமாகக் கிடைக்கிறது. அதோடு, பக்தர்களின் தலையில் சிவனின் திருவடியை சடாரியாக சாத்தும் சம்பிரதாயமும் உள்ளது. இத்தலம் உத்தர ராமேஸ்வரம் என போற்றப்படுகிறது. ராமேஸ்வரத்திற்கு பிரார்த்தனை செய்து அங்கு சென்று அதனை நிறைவேற்ற இயலாதவர்கள், இத்தலம் வந்து அப்பிரார்த்தனையை செலுத்துகின்றனர்.

ஆலயத்துள் நுழைந்ததும் அம்பிகை, சிவகாமசுந்தரி எனும் பெயரில் தனிக்கோயில் கொண்டுள்ளாள். ஈசன் கருவறை முன் உள்ள மகாமண்டபத்தை நான்கு புறமும் யாளிகள் தாங்கும் அமைப்பில் 20 தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணின் நான்கு பக்கங்களிலும் பல்வேறு தேவதேவியர், யக்ஷிணிகள், முனிவர்கள் போன்றோரின் சிற்பங்கள் பொலிகின்றன. மேல் விதானத்தில் வண்ண வேலைப்பாடுகளோடு ராசிச்சக்கரம், மற்றும் 12 ஜோதிர்லிங்க மூர்த்தங்கள், பஞ்சபூத தலங்கள், தசாவதார மூர்த்திகள், மோகினி, நான்கு வேத தேவதைகள், நால்வர் போன்ற வண்ணச் சிற்பங்கள் கொண்ட கலைக்கூடமாகத் திகழ்கின்றது. பிராகாரத்தில் சந்தான விஜயகணபதி, வள்ளிதேவசேனா சமேத சுப்ரமண்யர், பைரவர், சண்டிகேசுவரர், சனிபகவான், தத்தமது மனைவியர் மற்றும் வாகனங்களில் வீற்றிருந்து அருளும் நவகிரக நாயகர்கள் என்று அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, விஷ்ணுதுர்க்கை ஆகியோர் உறைகின்றனர். தலவிருட்சமான நெல்லி மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் மனம் ஒருமைப் படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். வேப்ப மரமும் அரசமரமும் இணைந்த கோலத்தில் உள்ள மரத்தினடியில் உள்ள நாகர்களை வெள்ளிக்கிழமையன்று வலம் வர சர்ப்ப தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம். 

இத்தல திருக்கல்யாண சேவையை தரிசிக்கும் மணமாகாத கன்னியர்க்கும், காளையர்க்கும் ஈசன் அருளால் திருமண பாக்யம் கிட்டுகிறது. பிரிந்திருந்த தம்பதியர்கள் இத்தல ஈசனை தரிசிக்க அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். குருபகவான் தலமாக இத்தலம் விளங்குவதால் குருதசை, குருபுக்தி, ஜாதகத்தில் லக்னத்தில் குரு, குரு தோஷம் போன்றவற்றால் பாதிக்கப் பட்டவர்கள் தொடர்ந்து 11 வாரங்கள் இத்தல ஈசனுக்கு நெய்விளக்கேற்றி 11ம் வாரம் கடலை சுண்டல், தயிர் சாதம் நிவேதித்தால் பிரச்னைகள் காணாமல் போய்விடுகிறது என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இத்திருத்தலத்தில் ராஜகோபுரம் கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது கிடைத்த கல்வெட்டு மூலம் இத்தலம் ராஜேந்திரசோழர் காலத்தில் திருப்பெருங்கோயில் என வழங்கப்பட்டதாகவும், சோழமன்னர்கள் இத்தலத்திற்கு திருப்பணிகள் செய்துள்ளதும் தெரியவந்தது. சென்னையில், போரூர் சந்திப்பிற்கு அருகில் குன்றத்தூர் மின்வாரிய அலுவலகத்தைக் கடந்து இடது புறம் சென்றால் இத்தலத்தை அடையலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment