Friday, 24 August 2018

ராமர் வழிபட்ட தீர்த்தாண்டதானம் திருக்கோவில்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ளது தீர்த்தாண்டதானம். இங்கு பழமையான சகல தீர்த்தமுடையவர் என்ற சிவன் கோயில் உள்ளது. மூலவராக பெரியநாயகி சமேத சிவபெருமான் உள்ளார். சர்வதீர்த்தேஸ்வரர் என்ற பெயரிலும் மூலவர் அழைக்கப்படுகிறார். நந்தீஸ்வரர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேதராக முருகன், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மகாவிஷ்ணு, திருஞானசம்பந்தர், சூரியபகவான், தட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகங்களுக்கு சன்னதி உள்ளது. தல மரமாக வில்வ மரம் உள்ளது.

தல வரலாறு

பண்டைய காலத்தில் ராவணனிடமிருந்து சீதாவை மீட்க இலங்கை செல்லும் வழியில் தீர்த்தாண்டதானத்திற்கு ராமர் வந்தார். அவர் அப்பகுதியில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து இளைப்பாறினார். ராமர் தாகத்தால் வருந்துவதையறிந்த வருணபகவான், அப்பகுதியில் ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தினார். ராமரும் மகிழ்ச்சியுடன் அந்த நீரை அருந்தினார். தீர்த்தாண்டதானத்தில் ராமர் இருப்பதையறிந்து அங்கு வந்த அகத்தியர், ‘எம்பெருமானே! ராவணன் சிறந்த சிவபக்தன். சிவபெருமானின் அருள் இல்லாமல் அவனை வீழ்த்துவது கடினம். சிவபெருமானை வணங்கிய பின்னர் இலங்கைக்கு செல்லுங்கள்’ என்று தெரிவித்தார். இதனையடுத்து அருகே உள்ள திருப்புனல்வாசலில் வீற்றிருக்கும் விருத்தபுரீஸ்வரரை நினைத்து ராமர் வழிபட்டார்.

இதனால் மகிழ்ந்த சிவபெருமான் ராமர் முன்பு தோன்றினார். பின்னர் ராமருக்கு அருள் புரிந்த சிவபெருமான், அருகிலுள்ள கடற்கரையில், தந்தை தசரதனுக்கு தர்ப்பணம் செய்து விட்டு இலங்கைக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது வருணபகவான், ‘ராமர் வழிபட்ட இடத்தில் சிவபெருமான் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்க வேண்டும், ராமருக்கு தீர்த்தம் கொடுத்ததால், அப்பகுதிக்கு தீர்த்தாண்டதானம் என்று பெயர் விளங்க வேண்டும். அங்குள்ள கடலில் நீராடி ஈசனை வழிபடுபவர்கள் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடியதற்கு ஒப்பான பலனை பெற வேண்டும்’ என்று வரமளிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமானும் அப்பகுதியில் சர்வதீர்த்தேஸ்வரராக கோயில் கொண்டார் என்பது புராணம்.

ராமர் தர்ப்பணம் செய்த கடற்கரையில் பக்தர்கள் இன்றும் தர்ப்பணம் செய்துவிட்டு, ஈரத்துணியுடன் சர்வதீர்த்தேஸ்வரரை வழிபடுவது சிறப்பாகும். பூர்வ ஜென்ம தோஷங்கள் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இது கருதப்படுகிறது. இங்கு தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தை மாத அமாவாசையில் இங்கு திதி கொடுப்பது கூடுதல் பலனைத் தரும். இங்கு திதி கொடுத்தால், பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம். அவர்களது ஆத்மா அமைதி பெறும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மூலவருக்கு திருமுழுக்காடு செய்தும், புத்தாடை அணிவித்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment