Wednesday, 22 August 2018

ஏழுமலையின் மீது நின்ற வேங்கடவன்

திருப்பதி சென்று திரும்பி வந்தால் வாழ்க்கையில் திருப்பம் வரும் என்பது நம்மிடையே வலம் வரும் வழக்குச் சொல். இந்த வார்த்தை சங்கிலி ஒன்றும் சும்மா உருவானதல்ல என்பது அங்கு வேங்கடவனை சரணடைந்து திரும்பியவர்களின் அனுபவங்கள் கூறும். பொதுவாக இந்து இதிகாசங்கள், புராணங்கள் ஒன்றும் வேடிக்கையாக கட்டப்பட்ட கதைகள் அல்ல. ஒவ்வொன்றுக்கும் தத்துவார்த்தமான விளக்கம் இருக்கும். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாறும் பக்தர்களுக்காக இறைவன் எந்த நிலைக்கும் இறங்கி வந்து அருள்வான் என்பதை உணர்த்தும். ஒரு சமயம் ரிஷிகளும், முனிவர்களும் யாகம் ஒன்றை வளர்க்க, அதன் பலனை யாருக்கு உரித்தாக்குவது என்ற யோசனையில் ஆழ்ந்தனர். அப்போது அங்கு வந்த சேர்ந்த பிருகு முனிவரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தனர். 

இதை ஏற்ற பிருகு முனிவர் முதலில் படைக்கும் பிரம்மாவின் சத்தியலோகம் செல்ல, சரஸ்வதியுடன் மகிழ்ச்சியுடன் இருந்த பிரம்மா, அனுமதியின்றி நுழைந்த பிருகுவை கண்டிக்கிறார். கோபமுடன் பிரம்மாவுக்கு பூமியில் கோயில் இல்லை என்ற சாபமிட்டு கைலாயம் நோக்கி சென்றார் பிருகு.  அங்கும் ஏகாந்த நிலையில் சிவமும், சக்தியும் கலந்திருக்க, தன்னை கவனியாமல் இருந்ததை கண்டு சினந்த பிருகு சிவத்துக்கு, பூமியில் சிலா ரூபம் இல்லை. லிங்கம் மட்டுமே வழிபாட்டுக்கு இருக்கும் என்ற சாபத்துடன் வைகுண்டம் நோக்கி நடக்கிறார். அங்கும் பாற்கடலில் பரந்தாமன் மகாலஷ்மியுடன் மகிழ்ந்திருக்க, பிருகு வந்ததை கவனித்தும் கவனியாமல் இருந்தார். எல்லாமே காரணத்துக்காகத்தான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அல்லவா? இங்கும் தன்னை சீண்டுவாரில்லையே என்ற கோபத்தில் வேகமாக சென்ற பிருகு, பரந்தாமனின் மார்பில் எட்டி உதைக்க, துயிலில் இருந்து எழுவது போல் எழுந்த பரந்தாமன், ‘மன்னிக்க வேண்டும் பிருகுவே. தங்களை கவனியாமல் இருந்ததற்காக வருந்துகிறேன். 

ஆயினும் தங்கள் பூப்போன்ற பாதம் என்னை எட்டி உதைத்ததால் வலிக்குமே’ என்று கூறி பாதங்களை பிடித்து விட்டதுடன், பிருகுவே அறியாமல் அவரது ஆணவத்துக்கு காரணமான பாதத்தில் அமைந்திருந்த ஞானக்கண்ணை கிள்ளி எறிந்தார். ஆணவம் மறைந்த நிலையில் தெளிவுற்ற பிருகு மன்னிப்பு கோரி விடைப்பெற்றார். ஆனால், தான் ஆசையுடன் உறையும் பரந்தாமனின் மார்பில் மனிதன் ஒருவன் எட்டி உதைப்பதா? அதை பரந்தாமனும் கண்டுகொள்ளாமல் அவனது கால்களை பிடித்து விடுவதா? என்ற கோபத்தில் மகாலஷ்மி வைகுண்டத்தை விட்டு பிரிந்து பூவுலகில் இறங்கி தவமியற்றுகிறாள். மகாலஷ்மி பிரிந்ததால் வேதனையடைந்த பரந்தாமன் பூவுலகம் வந்து அவளை தேடி அலைகிறார்.

திருப்பதி திருமலையில் வராகமூர்த்தியின் ஆசிரமம் கண்டடைந்து அவரது அனுமதியுடன் திருமலையில் தவமியற்றுகிறார். அவரை சுற்றி புற்று உருவாகிறது. பரந்தாமனின் பசி போக்க சிவனும், பிரம்மாவும் பசுக்களாக மாறி மன்னனின் ஆவினங்களுடன் கலக்கின்றனர். ஒரு நாள் தேவ பசு பாலின்றி வற்றிய மடியுடன் திரும்ப, ஆவினங்களை மேய்ப்பவன் அந்த பசுவை பின்தொடர அந்த பசு நேராக பரந்தாமன் தவமியற்றும் புற்றின் வழியாக பாலை சுரந்து அவனின் பசியாற்றியது. கோபமடைந்த ஆவின மேய்ப்பாளன் கோடாரியை புற்றில் வீச அங்கு பரந்தாமனின் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிகிறது. அந்த காயத்துடன் லஷ்மியை தேடியலையும் நேரத்தில் வகுளமாதாவின் ஆசிரமத்தை அடைகிறார். அங்கு வகுளாதேவியை பார்த்த மாத்திரத்தில் பாசம் பொங்கியது. 

அவருக்கு கிருஷ்ணாவதாரத்தில் யசோதை தாயாக இருந்த நினைவு வருகிறது. மேலும் அப்போது அவருக்கு கொடுத்த வாக்கின்படி, பரந்தாமனின் வளர்க்கும் வாய்ப்புக்காகவே யசோதை வகுளாதேவியாக இங்கு பரந்தாமனின் வருகைக்காக காத்திருந்தாள். அதற்கேற்ப அவளுக்கும் ரத்தம் வழிய நின்று கொண்டிருந்த பரந்தாமனின் மீது பாசம் பொங்க, சீனிவாசன் என்ற பெயருடன் வகுளாதேவியின் மகனாக வளர்கிறார் பரந்தாமன்அதேபோல் ராமனை அடைய தவமியற்றிய வேதவதி, சந்திரகிரியை ஆண்டு வந்த ஆகாசராஜனின் மகளாக பத்மாவதியாக வளர, அவருக்கும் சீனிவாசனுக்கும் குபேரன் வழங்கிய கடனை கொண்டு திருமணம் நடக்கிறது. தொடர்ந்து சீனிவாசன், வேங்கடவனாக, ஏழுமலையானாக அங்கேயே பக்தர்களை கலியின் கொடுமையில் இருந்து காக்க நெடுமாலாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

இவருக்கு தொண்டைமான் ஆனந்த நிலையம் என்ற கருவறையுடன் கி.மு. முதல் நூற்றாண்டில் ஆலயம் அமைத்து வழிபட, தொடர்ந்து சோழர், பாண்டியர், விஜயநகர பேரரசர்கள் கோயிலை விரிவாக்கம் செய்துள்ளனர். ஆனந்த நிலைய விமானத்துக்கு பாண்டிய அரசன் தங்கம் வேய்ந்துள்ளான். அதோடு பல அரசர்கள், தனவந்தர்கள் ஏராளமான பொன்னையும், பொருளையும் ஏழுமலையானுக்கு வாரி வழங்கியுள்ளனர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment