Sunday, 26 August 2018

மெய்பொருள் அருளும் ஞானமூர்த்தி

மகாபாரதத்தை எழுதிய வியாச முனிவர் பாரதத்தின் பல தலங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டு வந்தார். தன்னுடைய திருத்தல யாத்திரையின் போது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் இருக்கும் ‘முதல் கட்டளை’ என்ற இயற்கை அழகு கொஞ்சும் ஊருக்கு ஒரு முறை வருகை புரிந்தார். விவசாய பூமியான இவ்வூரின் இயற்கை அழகு வேதவியாசருடைய உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தது. இந்த ஊரிலேயே சில காலம் தங்கியிருக்க தீர்மானித்தார். இத்தலத்திலேயே சிவலிங்கத் திருமேனி ஒன்றை பிரதிஷ்டை செய்து நாள் தோறும் வழிபட்டு வந்தார். ஈசன் அருளிய வேதங்களை ஓதினார். ஆனாலும் அந்த வேதங்களின் உண்மைப் பொருளை உணர முடியாமல் தவித்தார். மனமுருக ஈசனிடம் வேண்டிக்கொள்ள “யாம் உணர வைப்போம்” என்று அசரீரி ஒலித்தது. அதனால் மன நிம்மதி அடைந்தார்.

ஒரு நாள் வியாசர் முன் சிவனடியார் ஒருவர் தோன்றினார். அவரை வரவேற்று உபசரித்தார் வியாசர். வேதங்களின் மெய்ப்பொருள் பற்றிய ஐயத்தை நீக்கவே யாம் வந்தோம் என்று சிவனடியார் கூறியதும் வேத வியாசர் மகிழ்ச்சியும், ஆர்வமும் பொங்க அடியவரை பணிந்து வணங்கினார். சிவனடியார் ‘முனிவரே எம்மை உற்று நோக்குங்கள், வேதத்தின் மெய்ப் பொருளை அறியலாம்’ என்றார். வியாசர். அடியாரை உற்று நோக்க அங்கே ஈசன் காட்சியருள, வேதத்தின் மெய்ப்பொருள் சிவபெருமானே என்று உணர்ந்தார் வியாசர். இச்சம்பவம் நிகழ்ந்த திருத்தலம்தான் முதல் கட்டளை கிராமம். கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. மன்னர் அச்சுதப்பர் சிறந்த சிவபக்தர். 

இவர்தான் திருவிடைமருதூர் பெருநல முலையம்மன் உடனுறை மகாலிங்க ஸ்வாமி கோயிலின் ஆடிப்பூர திருவிழாவிற்காக முதல் கட்டளை கிராமத்தை நன்கொடையாக கி.பி.1571ம் ஆண்டு கொடுத்திருக்கிறார் என்று இலந்துறை கல்வெட்டு கூறுகிறது. வியாசருக்கு மெய்ஞானம் அளித்ததால் இவ்வூர் இறைவன் மெய்ஞான மூர்த்தி என்றும், அம்பாள் ஞானாம்பிகை என்றும் திருநாமம் கொண்டுள்ளார்.நாயக்கர்களுக்குப் பிறகு மராட்டிய மன்னர் துளஜா ஆட்சிக் காலத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டு தஞ்சாவூர் மண்ணில் நிச்சயமற்ற சூழல் நிலவியது. இது மன்னர் துளஜா மனதிலும் பெரும் மனக் குழப்பத்தை ஏற்படுத்தியது. 

அவர் முதல் கட்டளைக்கு வந்து மெய்ஞான மூர்த்தியை வழிபட்டு தனது மனக்குழப்பம் நீங்கப் பெற்றார். இதனால், தன் காணிக்கையாக முதல் கட்டளை மெய்ஞான மூர்த்தி திருக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்து அக்கிராமத்திற்கு துளசேந்திரபுரம் என்று பெயரிட்டு பல தர்மங்கள் செய்தார். வியாசருக்கு மெய்ஞானம் அருளி, மன்னன் துளஜாவின் மனக்குழப்பம் நீக்கிய (இந்த இறைவன்) மெய்ஞானமூர்த்தி கல்வியில் பின் தங்கியோரை முன்னேற்றியும் மனக்குழப்பம் நீக்கியும் பக்தர்களுக்கு அருள் புரிந்தார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment