Sunday, 8 July 2018

பரசுராம் மஹாதேவ் திருக்கோவில்

ராஜஸ்தான் கும்பால்கர்

ஸ்ரீ மஹாவிஷ்ணு மேற்கொண்ட தசாவதாரங்களில், ஆறாவது அவதாரமான ஸ்ரீ பரசுராம அவதாரம் ராமாயண காலத்திலேயே நிகழ்ந்ததாகும். ஸ்ரீ ராமபிரான் ஸ்ரீ சீதா தேவியை மணம் முடித்து, அயோத்தி திரும்பும்போது பரசுராமர் அவரை எதிர்த்து பின்பு ராமபிரானின் வலிமையை உணர்ந்து, இறுதியில் தனது தவப் பலனை அவருக்குத் தந்து மீண்டும்  தவம் செய்யச் சென்றது பற்றி ராமாயணம் மற்றும் புராணங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. ஸ்ரீ ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் அவதரித்த ஸ்ரீ பரசுராமர், கொடுங்கோல் மன்னர்களை பூண்டோடு அழிப்பதாக சபதம் மேற்கொண்டு 21 தலைமுறை மன்னர்களை அழித்தவர். வருண பகவானிடம், தற்போதைய மேற்குக் கடற்கரைப் பகுதிகளான கோவா, வடக்கு கர்நாடகா மற்றும் கேரளம் போன்ற இடங்களைப் பெற்று ஏராளமான அந்தணர்களை அங்கு குடியமர்த்தி, எண்ணற்ற ஆலயங்களை எழுப்பியவர். சிரஞ்சீவிகளில் ஒருவராகப் போற்றப்படும் ஸ்ரீ பரசுராமர் தற்போதும் ஒடிஷா மாநிலம், கஜபதி மாவட்டத்தில் உள்ள மகேந்திர கிரி மலையில் தவம் செய்து கொண்டிருப்பதாக ஐதீகம் உள்ளது.

பரசுராம பூமியாக கருதப்படும், கோவா, வடக்கு கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய கடற்கரையையொட்டியுள்ள மாநிலங்களில் மட்டுமன்றி பிற மாநிலங்களிலும் பரசுராமருக்கு என்று ஆலயங்கள் உள்ளன. இவற்றுள், கர்நாடக மாநிலம் நஞ்சன் கூடு, கோலார், குஞ்சாருகிரி, ஆந்திர மாநிலம் அத்திராலா, கேரள மாநிலம் இரிஞ்ஞாலகுடா, திருவல்லம், குஜராத் சோம்நாத், உத்திரப் பிரதேசம் ஜலாலா பாத், ராஜஸ்தான் கும்பால்கார், கோவா கேனகோனா போன்ற இடங்களில் உள்ள ஸ்ரீ பரசுராமர் ஆலயங்கள் மிகப் பிரசித்தமானவை. ராஜஸ்தான் மாநிலம் மேவார் மேற்குப் பகுதியில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் உள்ளது கும்பால்கர் எனப்படும் கும்பால் கோட்டை, ராஜ சமந்த் மாவட்டத்தில் உதய்ப்பூரிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள  இந்தக் கோட்டை 15வது நூற்றாண்டில் ராஜஸ்தான் மன்னர் ராணா கும்பாவால் கட்டப்பட்டது. கோட்டையும் அவர் பெயரால் கும்பால்கர் என்று அழைக்கப்பட்டது.

சித்தூர் கோட்டைக்கு அடுத்த மிகப் பெரியதாகக் கருதப்படும் இந்தக் கோட்டையின் சுவர் மட்டும் 38 கி.மீ. நீளம் கொண்டது. இந்தக் கோட்டையிலிருந்து பத்து கி.மீ. தொலைவில் ஸ்ரீ பரசுராமர் அமைத்த மலைக்குகையும், அவர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ பரசுராம் மஹாதேவ் மந்திர் என்ற சிவாலயமும் உள்ளன. இப்பகுதி மக்கள் குகைக்குள் அமைந்துள்ள இந்த சிவாலயத்தை “ஸ்ரீ பரசுராம் குஃபா (குகை) மந்திர்” என்று அழைக்கின்றனர். தலைசிறந்த சிவ பக்தரான ஸ்ரீ பரசுராமர் சிவபெருமானைக் குறித்து தவம் இயற்ற வேண்டி, இங்குள்ள மலையின் மீது தன் பரசுவினால் ஒரு குகையை உருவாக்கி, அதில் சிவபெருமானைப் பிரதிஷ்டை செய்து, கடுந்தவம் இயற்றியதாக தலபுராணச் செய்திகள் தெரிவிக்கின்றன. காஷ்மீர் மாநிலத்தில், இயற்கையாக பனியால் உருவாகும் சிவலிங்கத்தைக் கொண்ட அமர்நாத் நமது நாட்டில் உள்ள தலைசிறந்த யாத்திரைத் தலங்களில் ஒன்று. இதே போன்று ராஜஸ்தான் மாநிலத்தில் மிகப் பிரசித்தமாக உள்ள கும்பால்கர் ஸ்ரீ பரசுராம் மஹாதேவ் மந்திரும் திகழ்வதால், இதை பக்தர்கள் ராஜஸ்தானின் அமர்நாத் (ராஜஸ்தான் கா அமர்நாத்) என்று போற்றி வழிபடுகின்றனர். 

கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில் இந்த பரசுராம் மஹாதேவ் மந்திர் அமைந்துள்ளது. மலையேறி மீண்டும் சற்றுக் கீழே காணப்படும் இயற்கை எழில் மிக்க பள்ளத் தாக்கில் இந்த குகாலயம் அமைந்துள்ளது. ஆலயத்தை அடைய பக்தர்கள் குறுகிய வழியில் சுமார் 500 படிகள் ஏறிச் செல்லவேண்டும். ஏறிச் செல்வது சற்று கடினமாக இருப்பினும், சுற்றிலும் பச்சைப் பசேல் என்ற மரஞ்செடி கொடிகளும், அமைதியான சூழலும், இதமான சீதோஷ்ணமும் காணப்படுவதை ரசித்து மகிழ்வதற்காகவும், ஸ்ரீ பரசுராம் மஹாதேவ் சிவபெருமானை வணங்கி வழிபடும் போது ஏற்படும் தெய்வீக உணர்வினை அனுபவிப்பதற்காகவும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தைத் தேடி வருகின்றனர். இரு பெரிய மலைப்பாறைகளுக்கிடையே  இடுக்கிற்குள் அமைந்துள்ள இந்த குகைக்குள் ஸ்ரீ பரசுராமர் பிரதிஷ்டை செய்த சிவபெருமான் லிங்கத் திருமேனியாக எழுந்தருளி அருட்பாலிக்கிறார். நாகாபரணம் மற்றும் மலர்கள் அலங்காரத்தில் அருட்பாலிக்கும் இந்த சிவலிங்கத்திற்கு உருட்டி விழிக்கும் இரண்டு பெரிய கண்கள் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

குகைக்கு அருகில் உள்ள பாறைகளில் இயற்கையாக அமைந்த சிவலிங்கம் மற்றும் விநாயகர் திரு உருவங்கள் காணப்படுகின்றன. மேலும், இப்பகுதியில் குண்டம் எனப்படும் ஒன்பது புனித தீர்த்தங்கள் உள்ளன. கடுமையான கோடையிலும் இவற்றிலுள்ள தெள்ளத் தெளிந்த நீர்  வற்றுவதில்லை என்று பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். கும்பால்கர் ஸ்ரீ பரசுராம் மந்திரில் ஒவ்வோர் ஆண்டும்
சிரவண (ஆவணி) மாத சுக்ல ஷஷ்டி மற்றும் சப்தமி ஆகிய தினங்களில் பெரிய ஜாத்ரா உற்சவம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சுமார் பத்து லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த உற்சவத்தில் அமர் கங்கா அறக்கட்டளையினர் அனைத்து மக்களுக்கும் அன்னதானம் செய்வதோடு, சங்கீத் சந்த்யா என்ற இசை நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்கின்றனர். இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமான உள்ளூர் சங்கீத வித்வான்கள் கலந்து கொண்டு ராஜஸ்தானிய இசையில் ஜனரஞ்சகமான பாடல்களைப் பாடி மக்களை மகிழ்விப்பது குறிப்பிடத் தக்கது. கும்பால்கர் கோட்டையிலிருந்து 10 கி.மீ. சாத்ரிராஜ்புரா பர்சுராம் குகை சாலையில், ராஜ்சமந்த் மாவட்டத்தில், ஸ்ரீ பரசுராம் மஹாதேவ் குகாலயம் அமைந்துள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment