கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது, திருவித்துவக்கோடு திருத்தலம். இதனை திருமித்தக்கோடு என்றும் அழைக்கின்றனர்.
பஞ்சபாண்டவர்களால் நிறுவப்பட்ட நான்கு விஷ்ணு சிலைகளைக் கொண்ட நான்கு சன்னிதிகளுடன், சிவபெருமானுக்கும் ஒரு சன்னிதி சேர்ந்து அமைந்த ‘அஞ்சுமூர்த்திக் கோவில்’ இ்ங்கு இருக்கிறது.
தல வரலாறு
நபாகணன் என்ற மன்னனின் மகனான அம்பரீஷன் முக்தி பெறுவதற்காக, மகாவிஷ்ணுவை நோக்கிக் கடுந்தவம் செய்தான். அவனைச் சோதித்துப் பார்க்க விரும்பிய விஷ்ணு, அவன் முன்பாகத் தேவேந்திரன் வடிவில் தோன்றினார். அதனைக் கண்ட அம்பரீஷன், “நான் தேவேந்திரனைக் காண இத்தவத்தைச் செய்யவில்லை, மகாவிஷ்ணுவைக் காணும் என் முயற்சிக்கு இடையூறு செய்ய வேண்டாம்” என்று பணிவோடு சொன்னான்.
அவனுடைய உண்மையான பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவனுக்குத் தனது உண்மையான தோற்றத்தைக் காண்பித்தருளினார். அம்பரீஷன் அவரிடம், தனக்கு எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும், மகாவிஷ்ணுவே தெரிந்திட வேண்டுமென்று வேண்டினான். விஷ்ணுவும் அவன் விரும்பியபடி, வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் எனும் நான்கு தோற்றங்களில் தனது வியூகத் தோற்றத்தைக் காட்டியருளி, அவனுக்கு முக்தியும் அளித்தார்.
பிற்காலத்தில், பஞ்சபாண்டவர்கள் வனவாசத்திற்காக இப்பகுதிக்கு வந்தனர். அங்கே, அவர்களுக்கு மகாவிஷ்ணுவின் வியூகத் தோற்றம் தெரிந்தது. அதனைக் கண்டு மகிழ்ந்த பஞ்சபாண்டவர்கள் அவ்விடத்தில் ஒரு கோவிலைக் கட்ட முடிவு செய்தனர். அங்கு முதலில், அர்ச்சுனன் ஒரு மகாவிஷ்ணு சிலையினை நிறுவி வழிபட்டான். அவனைத் தொடர்ந்து, தருமர், பீமன் ஆகியோர் தனித்தனியே விஷ்ணு சிலைகளை நிறுவ, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் சேர்ந்து ஒரு விஷ்ணு சிலையை நிறுவி வழிபட்டனர்.
பஞ்சபாண்டவர்கள் நிறுவி வழிபட்ட நான்கு விஷ்ணு சிலைகளில், அர்ச்சுனன் நிறுவி வழிபட்ட விஷ்ணு சிலையே இக்கோவிலில் மூலவராக இருக்கிறது. மற்ற மூன்று விஷ்ணு சிலைகளும் தனித் தனிச் சன்னிதிகளில் இடம் பெற்றிருக்கின்றன என்று இக்கோவில் அமைந்த தல வரலாறு சொல்லப்படுகிறது.
விஷ்ணுவுக்கு அமைந்த சிறப்புமிக்க இக்கோவிலில், சிவபெருமான் சன்னிதி ஒன்றும் தனியாக அமைந்திருக்கிறது. அதுபற்றிச் சுவையான வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் வசித்து வந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்று, அங்கேயேத் தங்கிச் சிவபெருமானை வழிபட்டு வந்தார். இந்நிலையில், அவரது தாயின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது அவருக்குத் தெரிய வந்தது. உடனே அவர், தன் தாயைக் காண்பதற்காகக் காசியில் இருந்து திரும்பி வந்தார். அவர் பயணத்திற்காகக் கையில் எடுத்துக் கொண்டு வந்த தாழங்குடையில், அவர் வழிபட்டு வந்த காசி விசுவநாதரும் அவருக்குத் தெரியாமல் அமர்ந்து கொண்டு வந்தார்.
அந்த முனிவர், பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட விஷ்ணு சிலைகள் அமைந்த கோவில் பகுதிக்கு வந்த போது, தான் கொண்டு வந்த குடையைக் கீழே வைத்துவிட்டு, அருகிலிருந்த ஆற்றுக்குக் குளிக்கச் சென்றார். அவர் குளித்துவிட்டு வந்த போது, அங்கிருந்த குடை வெடித்துச் சிதறியது. பின்னர், அவ்விடத்தில் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அதன் பிறகு, அம்முனிவர், அங்கு சிவபெருமானுக்கு தனிச் சன்னிதி ஒன்றை அமைத்தார் என்று சொல்கின்றனர்.
கோவில் அமைப்பு
இக்கோவிலில் அர்ச்சுனன் நிறுவிய விஷ்ணு மூலவராக இருக்கிறார். தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கும் இந்த விஷ்ணுவை, சமஸ்கிருதத்தில் ‘அபயப்பிரதான்’ என்றும், தமிழில் ‘உய்ய வந்த பெருமாள்’ என்றும் அழைக்கின்றனர். இச்சன்னிதிக்கு வலதுபுறம், தருமர் நிறுவிய விஷ்ணு சிலையுடனான சன்னிதி, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரால் நிறுவப்பட்ட விஷ்ணு சிலையுடனான சன்னிதி என்று இரண்டு சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. இடதுபுறம் சிறிது பின்புறமாக, பீமன் நிறுவிய விஷ்ணு சிலையுடைய சன்னிதி இருக்கிறது.
பஞ்சபாண்டவர்கள் நிறுவிய நான்கு விஷ்ணு சிலைகளும் நின்ற கோலத்தில், சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரையைக் கொண்ட நான்கு கைகளுடன் அமைந்திருக்கின்றன. இங்கு தாயாருக்குத் தனிச் சன்னிதியோ, சிலையோ இல்லை. இங்குள்ள இறைவன் உய்யவந்த பெருமாள் மார்பில், தாயார் இருப்பதாக நம்பிக்கை இருக்கிறது. இந்தத் தாயார் நாச்சிவல்லி, பத்மபாணி நாச்சியார் என்று இரு பெயர்களால் அழைக்கப் பெறுகிறார்.
இக்கோவிலில் கணபதி, தட்சிணாமூர்த்தி, சாஸ்தா, நாகர், பகவதி ஆகியோருக்கும் தனியாகச் சன்னிதிகள் இருக்கின்றன.
வழிபாடுகள்
இக்கோவிலில் விஷ்ணுவுக்குரிய சிறப்பு நாட்களில் நான்கு விஷ்ணு சன்னிதிகளிலும், சிவபெருமானுக்குரிய சிறப்பு நாட்களில் சிவன் சன்னிதியிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் மலையாள நாட்காட்டியின்படி, மேடம் (சித்திரை) மாதம் ஆண்டுத் திருவிழா, இடவம் (வைகாசி) மாதம் மிருகசீருடம் நாள், கர்க்கடகம் (ஆடி) மாதம் குரு பூர்ணிமா நாள், சிங்கம் (ஆவணி) மாதம் கிருஷ்ணர் தோற்றம் (கோகுலாஷ்டமி) நாள், கன்னி (புரட்டாசி) மாதம் வரும் நவராத்திரி நாட்கள், விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் கார்த்திகை தீபத்திருநாள், தனு (மார்கழி) மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி நாள் மற்றும் கும்பம் (மாசி) மாதம் சிவராத்திரி நாளை ஒட்டி நான்கு நாட்கள் இக்கோவிலில் விழாநாட்களாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
வழிபாட்டுப் பலன்கள்
இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இங்குள்ள காசி விசுவநாதர் சன்னிதிக்குச் சென்று வழிபடுகின்றனர். அதன் பின்னர், மூலவரான உய்ய வந்த பெருமாள் மற்றும் பிற சன்னிதிகளில் உள்ள விஷ்ணுவையும் தீபம் ஏற்றித் துளசி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். இங்கு வழி படுபவர்களுக்கு மனதில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்கின்றனர்.
திருமணத்தடை, வேலைத்தடை உடையவர்கள் இக்கோவிலில் சிறப்புக் கட்டணம் செலுத்தி, அர்ச்சகர் மூலம் ரிக் வேத சுலோகங்களைச் சொல்லச் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும், வேலை கிடைக்கும் என்று இங்கு வந்து செல்லும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
பத்து நதிகள் இணைந்த பாரதப்புழா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இக்கோவிலில் காசி விசுவநாதர் சன்னிதி அமைந்திருப்பதால், இக்கோவிலில் முன்னோர்களுக்கான வழிபாடு (தர்ப்பணம்) செய்வது அதிக அளவில் நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் அதிக அளவில் முன்னோர்களுக்கான வழிபாடு (தர்ப்பணம்) நடைபெறுவது இங்குதான் என்று சொல்கின்றனர்.
பாரதப்புழா ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இக்கோவில் காலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் ஷோரனூர் கள்ளிக்கோட்டைக்கு இடையில் அமைந்திருக்கும் பட்டாம்பி என்னும் இடத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் திருவித்துவக்கோடு (திருமித்தக்கோடு) எனும் ஊரில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, ஷோரனூர் மற்றும் பட்டாம்பி ஆகிய இடங்களில் இருந்து நகரப்பேருந்து வசதிகள் இருக்கின்றன...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment