Sunday, 8 July 2018

ஆனந்த வாழ்வருள்வார் ஆடுதுறை அண்ணல்!

கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்

திருத்தொண்டத் தொகை பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அப்பனுவலில், ‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’ என்று திருமூலரைத் துதித்துப் போற்றியுள்ளார். திருத்தொண்டத் தொகையை விரிநூலாகப் பாடிய சேக்கிழார் பெருமான், திருமூலரின் வரலாற்றை அந்நூலில் விரிவுற எடுத்துரைத்துள்ளார்.

திருக்கயிலையில் திகழ்ந்த திருநந்தி தேவரின் திருவருள் பெற்ற மாணவர்களுள் ஒருவராய் அணிமா முதலிய எட்டு வகை சித்துகளும் கைவரப் பெற்ற சிவயோகியார் ஒருவர், அகத்திய முனிவர்பால் கொண்ட ஈர்ப்பினால் அவரைத் தரிசிக்க பொதிய மலையை நோக்கிச் சென்றார். வழியில் பல்வேறு தலங்களைத் தரிசித்த அத்தவசீலர் தில்லை சென்று திருநடனங்கண்டு மகிழ்ந்தார். பின்பு காவிரியில் நீராடி அதன் தென்கரை வந்தடைந்தார். உமையம்மை பசுவிற்குக் கன்றாகப் பிறந்து இறைவனை வழிபாடு செய்து, பின் தேவியாக சிவனுடன் அருள்புரியும் திருவாவடுதுறை வந்து, அத்தலத்தை விட்டுப் பிரிய மனமின்றி அங்கேயே தங்கியிருந்தார். ஒருநாள் அப்பதி அருகே பசுக்கள் கூட்டம் கதறி அழுவதைக் கண்டார்.

அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆயர்குடியில் பிறந்த மூலன் என்பான் அப்பசுக்களை மேய்க்க வந்த இடத்தில் இறந்தது கண்டு அப்பசுக்கள் கதறுகின்றன என்பதைக் கண்டார். பசுக்களின் துயரம் தீர்க்க விரும்பிய அத்தவசீலர் தம்முடைய உடலை ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு கூடுவிட்டு கூடு பாயும் பரகாயப் பிரவேச சித்துப்படி இறந்துபட்ட மூலனின் உடலிற் புகுந்தார். பசுக்களோடு சாத்தனூர் சென்றார். மூலனின் மனைவி அவர்தம் தன் கணவர் என நினைத்து நெருங்கியபோது விலகியே இருந்து கடைசியில் அங்குள்ள மடமொன்றில் புகுந்து சிவயோகத்தில் அமர்ந்தார். பின்பு தம் உடலை மறைத்த இடத்தில் சென்று தேடியபோது அங்கு அது காணாதது கண்டு ஈசனின் கருணைத் திறத்தை உணர்ந்தார். திருமூலர் என்ற திருநாமத்தோடு திருவாவடுதுறை கோயிலின் மேற்பால் உள்ள அரச மரத்தடியில் அமர்ந்து பலகாலம் முயன்று திருமந்திரத்தை அருளினார் - இது சேக்கிழார் பெருமான் கூறியுள்ள திருமூலரின் வரலாறு.

பன்னிரு திருமுறைகள் வரிசையில் பத்தாம் திருமுறையாகப் போற்றப்பெறும் திருமூலரின் திருமந்திரம் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பெற்று மூவாயிரத்து நாற்பத்தேழு பாடல்களைக் கொண்டு திகழ்கிறது. இப்புனித நூல் மலர்ந்த திருப்பதி திருவாவடுதுறையாகும். கும்பகோணம்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில், நரசிங்கம்பேட்டையை அடுத்து பிரியும் சாலையில் சென்றால் திருவாவடுதுறை திருக்கோயிலையும், அருகமைந்த திருவாவடுதுறை திருமடத்தையும் அடையலாம். அதே சாலையில் உள்ள தென் திருவாலங்காடு எனும் ஊரின் வழியும் ஆவடுதண்துறை எனப்பெறும் சிவாலயத்திற்கும் செல்லலாம். மூவர் முதலிகளான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய சைவ சமய குரவர்தம் பாடல் பெற்ற பதி இது.

திருஞானசம்பந்தர் தன் தந்தையின் வேள்விக்காக ஆவடுதண்துறை அரனை வேண்ட, பெருமான் அருளால் சிவகணங்கள் உலவாக்கிழி எனும் பொற்காசுகள் அடங்கிய சிறுபையை இத்தலத்து பலிபீடத்தின் மீது வைக்க காழிப்பிள்ளையார் எடுத்து தந்தைக்கு உதவிய பெருமையுடையதும் இப்பதியாகும். சுந்தரர் தம் உடற்பிணி நீங்க பிரார்த்தித்துப் பாடிய சிறப்புடைய தலமும் இதுவே. தேவர்கள் படர் அரசு என்ற விரிந்த அரசமரமாகத் திகழ, அதன்கீழ் பெருமான் எழுந்தருளிய சிறப்புடைய பதியும் ஆகும்.

திருமாளிகைத் தேவர் பல அற்புதங்களை நிகழ்த்திய தலமும் இதுவாகும். தேமான் பெருமாள் விக்கிரமபாண்டியன் போன்றோர் அருள்பெற்றதும் ஆவடுதண் துறையே. முசுகுந்த சக்கரவர்த்திக்கு ஈசன் மகப்பேறு அருளி இத்தலத்தில் திருவாரூர் காட்சியைக் காட்டியதாகத் தலபுராணம் உரைக்கின்றது. தரும தேவதை இடபமாக ஈசனைத்தாங்கும் பேறு பெற்ற தலம் இதுவாகும். திருமூலர், திருமாளிகைத் தேவர் ஆகியோரின் அதிட்டானங்கள் இங்குதான் திகழ்கின்றன.

கோமுக்தி நகர், அரசவனம், கோகழி, சிவபுரம், முக்தி க்ஷேத்திரம், பிரம்மபுரம், அகத்தியபுரம், தரும நகர், கஜாரண்யம், நந்தி நகர், நவகோடி சித்திபுரம் என்பவை இத்தலத்தின் பெயர்களாகும். இறைவனுக்கு கோமுத்தீஸ்வரர் மற்றும் மாசிலாமணீஸ்வரர் என்றும், இறைவிக்கு ஒப்பிலா முலையம்மை மற்றும் அதுல்ய குஜாம்பிகை என்றும் திருநாமங்கள். இத்தலத்து இடபதேவர் திருவுருவம் மிகப்பெரியது என்பதோடு தரும நந்தி எனவும் அவர் அழைக்கப்பெறுகின்றார். தலமரமாக படர் அரசு (அரச மரம்) திகழ்கின்றது.

மிகத்தொன்மையான இத்தலத்து திருக்கோயிலைப் பராந்தக சோழன் காலத்தில் கற்றளிப் பிச்சன் என்பாருடன் பலர் இணைந்து கற்கோயிலாக எடுப்பித்தனர் என்பதை ஸ்ரீ விமான சுவரில் உள்ள கல்வெட்டுகள் எடுத்துக்கூறுவதோடு அருகிலேயே அவர்களுடைய உருவச்சிற்பங்கள் காணப்பெறுகின்றன. இது ஒரு அரியகாட்சியாகும். கற்றளிப் பிச்சன், இளைய திருநாவுக்கரையர், அம்பலவன் திருவிசலூரான், எழுவன் சந்திராதித்தன் - அவனுடைய பணிமகள், நக்கன் வண்ணாத்தடிகள், திருநறையூர் நாட்டு சிற்றாடி எனும் ஊரினன், தாமன் அம்பலவன் என்பவர்களின் திருவுருவச் சிற்பங்களோடு பராந்தக சோழனின் சிற்பத்தையும் இங்கு நாம் காண முடிகிறது.

நூறுக்கும் மேற்பட்ட கல்வெட்டுச் சாசனங்கள் இவ்வாலயத்தில் இடம் பெற்றுள்ளன. முதற்பராந்தக சோழன் காலந்தொடங்கி சோழ நாட்டை ஆட்சிபுரிந்த பல மன்னர்களுடைய காலத்து நிகழ்வுகள் இவ்வாலயம் முழுதும் பொறிக்கப்பெற்று காட்சி நல்குகின்றன. அதுபோன்றே முற்காலச் சோழர்காலப் பாணியில் தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் வடிக்கப்பெற்ற கற்சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும் இவ்வாலயத்து பொக்கிஷங்களாகும்.
சோழ மண்டலத்து திரைமூர் நாட்டு சாத்தனூருக்கு உரியதாக திருவாவடுதுறை ஆலயம் திகழ்ந்தது என்பதை கல்வெட்டுகள் கூறி நிற்கின்றன. திருவாடுதுறை தேவர், திருவாவடுதுறை ஆழ்வார், திருவாடுதுறை மகாதேவர் என இறைவனின் பெயரும், திருக்காட்டு கோட்டமுடைய பெரிய நாச்சியார் என அம்பிகையின் பெயரும் கல்லெழுத்துகளில் குறிக்கப்பெற்றுள்ளன. ஆலயம் திகழும் ஊரான சாத்தனூர், அபயாஸ்ரய சதுர்வேதி மங்கலம் என்ற அழைக்கப்பெற்றிருந்திருக்கிறது.

ராஜராஜசோழனின் தமக்கையான ஆழ்வார் ஸ்ரீபராந்தகன் குந்தவையார் இன்னம்பர் நாட்டு பழைய வானவன் மாதவி, சதுர்வேதி மங்கலத்து சபையோரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட நிலத்தையும், வீடு ஒன்றினையும் விலை கொடுத்து வாங்கி ஸ்வர்ணன் அரையன் சந்திரசேகரன் எனும் உத்தம சோழ அசலன் என்பானுக்கும் அவன் தலைமுறையினருக்கும் அக்கிராமத்து வைத்திய பணிக்காக அளித்தது பற்றி இவ்வாலயத்து கல்வெட்டொன்று விரிவுற எடுத்துரைக்கின்றது. ஒரு ஊரின் மருத்துவப் பணிக்காக ஒரு பேரரசி கொடுத்த கொடையையும் இங்கு நாம் காண்கிறோம்.

ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்களாக மட்டும் திகழாமல் கவின் கலைகளை வளர்த்த இடங்களாகவும் திகழ்ந்தமையை திருவாவடுதுறை ஆலயத்துக் கல்வெட்டுகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இவ்வாலயத்தை கற்கோயிலாக எடுத்த சிற்றானைச்சூர் எனும் ஊரினனான கற்றளிப் பிச்சன் இவ்வாலயத்து இசைக் கலைஞர்களின் ஜீவிதத்திற்கு நிலம் அளித்தான் என்பதை ஒரு சாசனம் கூறுகின்றது.

வீரமாங்குடியைச் சார்ந்த தாயன்கண்டன் என்பான் சிறுபுலியூரிலும், சிற்றானைச்சூரிலும் நிலங்கள் வாங்கி இவ்வாலயத்தில் நாளும் தேவாரம் பாடும் இருவர்க்கும், தோட்டத்தில் பணிபுரியும் இரண்டு ஆட்களுக்கும், பூக்கள் பறித்து பூமாலைகள் தொடுக்கும் இரண்டு பெண்களுக்கும், கோயிலில் நிகழும் சிறப்பு வழிபாடுகளுக்கும் அளித்தான் என்பதை ஒரு சாசனம் சுட்டுகின்றது. ஆலய ஊழியர்களை அறவுள்ளம் கொண்டோர் காப்பாற்றிய மரபு நம் திருக்கோயில்களில் திகழ்ந்தமையை  இச்சாசனங்கள் மூலம் அறிகிறோம்.

திருவாவடுதுறை ஆலயத்தில் சோழப் பேரரசர்கள் காலத்தில் நானாவித நட்ட சாலை (பலவகையான ஆடல்கள் நிகழும் இடம்), நாடக சாலை, சதிர்சாலை என்ற மண்டபங்கள் திகழ்ந்து அங்கு பலவகையான நாட்டியங்களும், நாடகங்களும் நிகழ்ந்துள்ளன. கூத்துகள் நிகழ சாக்கை காணி அளிக்கப்பெற்றமையை சாசனங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவ்வாலயத்தில் அறச்சாலை ஒன்று திகழ்ந்து ஆலயத்திற்கு வருவோர்க்கு அன்னமிட்டதை சோழர்கால கல்வெட்டொன்று எடுத்துக்கூறுகின்றது.

ராஜராஜ சோழன் காலத்தும் ராஜேந்திர சோழன் காலத்தும் அனைத்து ஊர்களின் நிலங்களும் துல்லியமாக அளிக்கப்பெற்று ஆவணப்படுத்தப் பெற்றன. அதன் நினைவாக இவ்வாலயத்து மண்டபம் ஒன்றினுக்கு ‘உலகளந்தான்’ என்ற பெயர் இடப்பெற்றிருந்தது என்பதையும், நில அளவு கோல் ஒன்றுக்கு ‘மாளிகைக்கோல்’ என்ற பெயர் திகழ்ந்தது என்பதையும் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனின் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

ஒவ்வொரு நாளும் மூன்றுவேளை பூசைகளின்போது ஒவ்வொரு குடம் காவிரி நீர் கொண்டுவந்து இறைவனுக்கு அபிடேகம் செய்ய வேண்டும் என்பதற்கும், உத்தராயண சங்கராந்தி அன்று (தைப்பொங்கல் நாளன்று) திருவா
வடுதுறை மகாதேவரை நூற்று எட்டு குடங்களில் எடுத்து வரப்பெற்ற காவிரி நீரால் திருமஞ்சனம் செய்ய வேண்டும் என்பதற்கும் பலர் கொடைகள் நல்கியுள்ளனர். கங்கை கொண்ட சோழபுரத்தில் திகழ்ந்த கைக்கோளப்படை சார்ந்தவர்களின் குடும்பங்களுக்கு வீரபோகமாக (போரில் வென்றமைக்கு நிரந்தர ஊதியமாக) குலோத்துங்க சோழநல்லூர் என்ற கிராமத்தையே அளித்த வரலாறு ஒரு கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. திருவாவடுதுறை சிவாலயம் ஒரு வரலாற்றுப்பெட்டகம் என்பதில் ஐயமேதும் இல்லை.

மஞ்சனே மணியும் ஆனாய் மரகதத் திரளும் ஆனாய்
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வின் ஆனே
துஞ்சும் போது ஆக வந்து துணை எனக்குஆகி நின்று
அஞ்சல் என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே.’’

- என்ற அப்பர் பெருமான் பாடலாலேயே நாமும் போற்றி ஆவடுதுறை அண்ணலின் அருள் பெற்று உய்வோமாக...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment