Friday, 20 July 2018

ஆண்களே பெண்களாகி பகவதியை வழிபடும் கோயில்

கேரள மாநிலத்தில் பார்வதி தேவி பகவதி என்ற பெயரில் துர்க்கையின் அம்சமாக வழிபடப்படும் தேவியின் ஆலயங்கள் ஏராளமாக உள்ளன. பார்வதி தேவி மஹாவிஷ்ணுவின் சகோதரி என்ற புராண ஐதீகத்தின் அடிப்படையில் பெரும்பாலான பகவதி ஆலயங்களில் பின்னிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி விஷ்ணு துர்க்கையாக வழிபடப்படுகிறாள். இதில் கொடுங்கல்லூர், சோட்டாணிக்கரா, பாரமேற்காவு, செட்டிக் குளங்கரா, மீன்குளத்தி போன்ற ஆலயங்கள் மிகப் பிரபலமானவை. கேரள பக்தர்கள் பகவதி ஆலயங்களுக்குள் நுழையும்போது தேவியை “அம்மே நாராயணா, தேவீ நாராயணா” என்று பக்தியோடு துதிப்பதை காணலாம். ஸ்ரீ பகவதி ஆலயங்களின் வரிசையில் கொல்லம் மாவட்டத் தலைநகரிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில், சவரா என்ற கிராமத்தில் அமைந்துள்ள கொட்டங்குளங்கரா பகவதி தேவி ஆலயம் இன்னொரு பிரபலமான ஆலயமாகத் திகழ்கிறது. இந்த ஆலயம் அமைந்ததன் பின்னணியில் கூறப்படும் வரலாற்று நிகழ்ச்சி சுவாரசியமானது. 

ஆலயம் அமைந்த காலகட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சடங்குகளில் ஒன்றான ஆண்கள் பெண் வேடம் தரித்து, சமய விளக்கு என்ற விளக்குகளை கையிலேந்தி தேவியை வழிபடும் நிகழ்ச்சி தற்போதும் நடைபெற்று வருகிறது. ஒரு காலத்தில் மரங்கள் செறிந்த இப்பகுதி, ஒரு அடர்ந்த காடாக இருந்தது. இந்த காட்டுப் பகுதியின் வடகிழக்கு மூலையில் பூதக் குளம் எனப்பட்ட ஆழமான குளம் இருந்தது. இப்பகுதியில் வசித்த மக்கள் இந்தக் குளத்தில் ஏராளமான விஷப் பாம்புகள் இருந்தன என்றனர்.  கிழக்குப் பகுதியிலிருந்த மற்றொரு பெரிய குளத்திலிருந்து மழைக் காலங்களில் கால்வாய்கள் வழியாக அருகிலிருந்த நெல் வயல்களுக்கு தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. இந்தத் தண்ணீரினால் காட்டைச் சுற்றிலும் செழிப்பாக இருந்த மேய்ச்சல் நிலங்களில் மாடு மேய்ப்பவர்கள் ஏராளமான மாடுகளை மேய்ச்சலுக்காகக் கூட்டி வருவர். 

இவ்வாறிருக்கையில் ஒருநாள் மாடு மேய்ப்பவர்கள் அங்கு ஒரு மட்டைத் தேங்காயைக் கண்டெடுத்து அதை பூதக் குளத்தின் கரையில் இருந்த ஒரு சிறிய பாறையின் மீது உடைக்க முயற்சித்தபோது அந்தப் பாறையிலிருந்து ரத்தம் வருவதைக் கண்டு பயந்தனர். ஊருக்குள் சென்று அனைவரிடமும் இதைக் கூறினர். ஊர்மக்கள் ஜோசியரை அழைத்துச் சென்று இந்த அதிசயத்தைக் காட்ட அவரும் பிரச்னம் வைத்துப் பார்த்து அங்கு தேவி எழுந்தருளியிருப்பதாகத் தெரிவித்து, உடனடியாக சிறிய ஆலயம் எழுப்பி வழிபாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தினார். அவரது அறிவுரைப்படி ஊர்ப் பெரியவர்கள் மாடு மேய்க்கும் சிறுவர்களின் துணையோடு காட்டு மரக் கொம்புகளை நட்டு, அதன்மேல் தென்னை மர குருத்தோலைகளை அழகாகப் பரப்பி ஆலயத்தை அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.

அக்காலத்தில், குறிப்பாக குடும்ப க்ஷேத்திரங்கள் எனப்படும் சிறிய ஆலயங்களில் சிறுமிகளே பூஜைக்குரிய மலர்களைச் சேகரித்து மலர் மாலைகள் தொடுத்து, காலை மாலை வேளைகளில் விளக்குகளை ஏற்றி வழிபடும் வழக்கம் இருந்தது. எனவே, சிறுமிகள் வர அச்சப்படும் காட்டுப் பகுதியில் அமைந்த, தென்னை ஓலைகள் வேயப்பட்ட இந்த சிறிய தேவி ஆலயத்தில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் சிறுமியர் போன்று வேஷமிட்டுக் கொண்டு பூஜை கைங்கர்யங்களில் ஈடுபட்டதோடு, தேங்காய்ப் பால் எடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் கொட்டன் என்ற நிவேதனத்தை தேவிக்கு சமர்ப்பித்தனர். பூதக்குளம் அருகில் எழுந்தருளி, கொட்டன் எனப்படும் தேங்காய் நைவேத்தியத்தை ஏற்றுக் கொண்ட தேவியை மக்கள் கொட்டங்குளங்கரா பகவதி என்று அழைத்தனர். மிகச் சிறிய அளவில் துவங்கப்பட்ட இந்த ஆலயம் தற்போது கேரள மாநிலத்தில் உள்ள மிகப் பிரபலமான பகவதி ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 

கேரள ஆலயங்களைப் போன்றே வெளியே பெரிய குளம், விசாலமான வெளி பிராகாரம், கொடிமரம், பலிக்கல்புரா எனப்படும் பலிபீடம், மஹா மண்டபம், நமஸ்கார மண்டபம், கருவறை என்று அமைந்துள்ள ஆலயக் கருவறையில் சுயம்புவான ஸ்ரீ பகவதி தேவியின்  பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம், முன்னிரு கரங்களில் அபய வரத முத்திரையுடன் கூடிய கவசம் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்படுகிறது. ஆலய வளாகத்தில் விநாயகர், யட்சி, நாகதேவதா போன்ற சந்நதிகள் உள்ளன. கொட்டங்குளங்கரா பகவதி ஆலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் பரணி நட்சத்திர நாளையொட்டி 19 நாட்களுக்கு கொட்டங்குளங்கரா உற்சவம் என்ற பெயரில்  கொண்டாடப்படுகிறது. இந்த உற்சவ நிகழ்ச்சிகளின்போது நடைபெறும் சமய விளக்கு, குருத்தோலைப் பந்தல், ஜீவாத எழுந்நள்ளத்து போன்ற சடங்குகளும் வழிபாடுகளும் மிக முக்கியமானவை. 

முதன் முதலில் சுயம்புவான தேவி, மாடு மேய்ப்பவர்களால் கண்டறியப்பட்டபோது, தேவிக்கு தென்னங் குருத்தோலைகளினால் அமைக்கப்பட்ட எளிமையான கோயில் போன்ற பந்தலை அமைத்து வழிபட்டதை நினைவு கூரும் வகையில் தென்னங்குருத்தோலைகளான பந்தல்கள் அமைக்கப்படுகின்றன. கலை நயமும், கற்பனையும் கலந்து பக்தர்கள் அமைக்கும் அழகிய குருத்தோலைப் பந்தல் கண்டுகளிக்கத்தக்கது. பரை எனப்படும் மரக்கால்களில் தானியங்களை நிரப்புதல் அதாவது ஜீவாத எழுந்நள்ளத்தும் என்கிற பெயரில் இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கியமான சடங்குகளாகும். ஜீவாத என்பது தேவியின் சைதன்யம் (சாந்நித்தியம்) நிறைந்திருப்பதை குறிக்கிறது. கேரள ஆலய உற்சவங்களில் பிரதானமான சடங்கான சீவேலி (ஸ்ரீ பலி) என்பதே ஜீவாத என்றும் கூறப்படுகிறது. தேவி எழுந்தருள்வதை (தமிழக ஆலயங்களில் புறப்பாடு என்கிறோம்) கேரள மக்கள் எழுந்நள்ளத்து என்கின்றனர். 

ஒரு சிறிய கோயில் போன்று அமைக்கப்பட்டு, அதன் முன்பாக திடம்பு (உற்சவ மூர்த்தி) வைத்து பல்லக்கு போன்று சுமந்து வருவதையே ஜீவாத எழுந்நள்ளத்து என்கின்றனர். இவ்வாறு தேவியை எழுந்தருளச் செய்கின்றவர்கள் இந்தச் சடங்கிற்குரிய தட்டுடுக்கல் என்ற பாரம்பரிய ஆடைகளை அணிந்து ஒரு குறிப்பிட்ட தாளகதிக்கு ஏற்ப ஆடியபடியே வருகின்றனர். இந்த ஜீவாத எழுந்நள்ளத்து கொல்லம், ஆலப்புழை பகுதிகளில் உள்ள தேவி ஆலயங்களில் மிக 
முக்கியமாக நடத்தப்படுகிறது. சமய விளக்கு என்று 19 நாட்கள் நடைபெறும் வருடாந்திர திருவிழாவின் கடைசி நாளான பரணி நாளன்று இத்திருவிழா நடைபெறுகிறது. கேரள மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான இளைஞர்களும், நடுத்தர வயதினரும் சிறுவர்களும் சிறப்பு பிரார்த்தனையாக பெண் வேட மணிந்து இந்த ஆலயத்தில் கூடும் காட்சி இந்தியாவில் வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாத ஒன்றாகும். 

இவ்வாறு பெண் வேடமிட்டு வழிபடுவோரின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருப்பது இந்தப் பிரார்த்தனையின் சிறப்பையும் தேவியின் சக்தியையும் பறை சாற்றுவதாக உள்ளது. கடந்த ஆண்டு சாதி மத பேதமின்றி ஆறாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். சிறுவர்கள், இளைஞர்கள் என்ற பல வயதினரும், பெண் வேடமிட்டிருப்பதும், பெண் வேடத்தில் இருப்பவர் ஒரு ஆண் என்று யாரும் கண்டு பிடிக்கமுடியாதபடி இவர்களுக்கு ஒப்பனை செய்யப்படுவதும் அதிசயிக்கத்தக்கது. இதற்கென்றே நிறைய ஒப்பனைக் கலைஞர்கள் ஒப்பனைப் பொருட்களோடு ஆலய வளாகத்தில் காத்திருப்பதைக் காணலாம். அதிகாலை இரண்டு மணி அளவிலேயே பெண் வேடமிட்டவர்கள் ஆலயத்தில் கூட ஆரம்பிக்கின்றனர். 

கேரள பாரம்பரிய பெண்களின் உடையான “முண்டும் நேரியதும்”, பாவாடை தாவணி, புடவை, சுடிதார் போன்ற ஆடைகளில் ஆண்கள் உலா வருகின்றனர்.  இவ்வாறு பெண் வேடமிட்ட  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் கைகளில் ஐந்துமுக விளக்கினை (விளக்கின் மேற்பகுதி மட்டும் ஐந்து முகங்களில் தீபம் ஏற்றப்பட்டு சுமார் நான்கு அடி  உயரமான ஒரு கழியில் செருகப்பட்டு இருக்கும்) தங்கள் கைகளில் ஏந்தி, தேவி குஞ்சாலமூடு என்ற இடத்திலிருந்து ஆராட்டுக் கடவுக்குச் செல்கின்ற பாதையின் இரு மருங்கிலும், நின்று கொண்டு பக்தி பரவசத்துடன் அம்மே நாராயணா, தேவீ நாராயணா என்று கோஷமிட்டு வழிபடுகிறார்கள். இந்த அரிய பிரார்த்தனையினால் தங்களைப் பீடித்துள்ள துன்பங்கள் விலகி வாழ்வில் மகிழ்ச்சி நிலவும் என்று இவர்கள் நம்புகின்றனர். 

சமய விளக்கு எனப்படும் இந்த விளக்குகள் ஆலய வளாகத்தில் வாடகைக்குக் கொடுக்கப்படுகின்றன. பெண் வேடமிட விரும்பும் ஆண்கள் ஆடைகளைத் தாங்களே எடுத்து வரவேண்டும். சமய விளக்கு தவிர, பிற நாட்களில் ஐம்பொலிப்பரா, கொட்டன் நைவேத்தியம், பாயசம், அரவணா, இரட்டி மதுரம், பந்திரு நாழி, பட்டு வஸ்த்ரம், அகண்ட நாமம், போன்றவை சிறப்புப் பிரார்த்தனைகளாகும். இந்த ஆலயம் காலை 5 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்து வைக்கப்படுகிறது. கொல்லம் திருவனந்தபுரம் சாலையில் (என்.எச்  4) திருவனந்தபுரத்திலிருந்து 78 கி.மீ. தொலைவிலும், கொல்லத்திலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் சவரா கிராமத்திலிருந்து தட்டசேரி தொட்டினவடக்கு சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்திலும் கொட்டங்குளங்கரா அமைந்துள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment