கட்டாரி மங்கலம், பஞ்ச நடராஜ தலங்களுள் இதுவும் ஒன்று. கோயிலின் முன்புறத்தில் பலிபீடத்தை அடுத்து நந்தியம் பெருமான் ஒரு கல் மண்டபத்தில் காட்சி தருகிறார். அடுத்து கோயிலுக்குள் நுழையும் கிழக்கு வாசல். வாசலையொட்டி வலப்புறம் சங்கிலி பூதத்தார் சாஸ்தா அமர்ந்திருக்கிறார். கோயிலின் அருகாமையில் ஒரு பெரிய வேப்பமரம். இங்கிருந்து வெளிப்புறத்தில் உள்ள கிணற்றிற்கு பாதாள பாதை உண்டு என்று கூறுகிறார்கள். மழைக்காலத்தில் இந்த பாதை வழியாக கிணற்றுக்குத் தண்ணீர் சென்றிருக்கிறது என்கிறார்கள். அதாவது அந்த காலத்திலேயே நிலத்தடி நீர் சேமிப்பு! கோயிலுக்குக் கிழக்கு வாசல்போல தெற்கு வாசலும் உண்டு. ஆனால் திருவிழா காலங்களில் மட்டும் தெற்குவாசல் திறந்திருக்கும். கருவறையினுள் வீரபாண்டீஸ்வரர் லிங்கவடிவில் உள்ளார் கருவறைக்கு எதிரே சிறு நந்தி, பெருமானை நோக்கி உள்ளார். கருவறைக்கு இருபுறமும் விநாயகரும், சுப்பிரமணியரும் காட்சி தருகிறார்கள். இடதுபுறம் உற்சவர் சோமாஸ்கந்தர், அம்பாள் பிரியாவிடையாள். இருவருக்கும் நடுவே மாணிக்கவாசகர். இம்மூவரின் சிலைகளும் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டவை.
திருவிழா காலங்களில், இச்சிலைகளுக்கு அலங்காரம் செய்து உள்ளேயே வைத்திருப்பார்கள். சுவாமி திருவீதி உலா வருவதற்கு தெற்கு நோக்கி உள்ள நடராஜரைத்தான் கொண்டு செல்வார்கள். கோயிலை வலம் வந்தால், கம்பீரமான தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். கன்னி மூலையில் கன்னி விநாயகர்; மறுமூலையில் வள்ளிதெய்வானை சமேதராக சுப்பிரமணியர். சண்டிகேஸ்வரர் அருகில் துர்க்காதேவி. சனிபகவானும், பைரவரும் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கிறார்கள். வெளியே உள்ள குளத்தில் இருந்து சனி பகவான் அருகில் உள்ள கிணற்றுக்கு தண்ணீர் வந்து செல்ல சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நடராஜர் அழகிய கூத்தர் என்றழைக்கப்படுகிறார். அம்பாள் சிவகாமி அம்பாள். மிகவும் பழமையான இந்தக் கோயிலில் வன்னி மரமும், மகாவில்வ மரமும் இருந்தாலும், மாதுளைதான் தல விருட்சம்! இந்த கோயிலில் நவகிரகங்கள் தம்பதி சமேதராய் எழுந்தருளியுள்ளார்கள். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளையும் பெற்ற இந்த கோயிலை மூன்று மூறை வலம் வந்து வணங்கினால் சிதம்பரம் கோயில் நடராஜரை தரிசித்த பலன் கிடைக்கிறது என்பார்கள்.
மன்னன் கோயிலை கட்டி முடித்துவிட்டு கொடி மரம் நடுவதற்காக யாகம் ஒன்றை செய்தார். அப்போது ஐந்து தேவதைகளை அழைத்து கொடிமரத்தில் அமரவைக்க வேதவிற்பனர்கள் முயன்றனர். ஊர்மக்கள் கூடி கொடிமரத்தை கோயிலுக்குக் கொண்டு சென்றபோது, தங்கள் ஊருக்குக் காவல் தெய்வங்களாக இந்த தேவதைகள் விளங்க வேண்டும் என்று பக்கத்து ஊர்களைச் சேர்ந்த மக்கள் கேட்டுகொண்டனர். அதோடு, அந்த தேவதைகளை அழைத்துப் போய் தங்கள் ஊர்களில் காவல் தெய்வங்களாக அமர்த்தியும் விட்டார்களாம். கட்டாரி மங்கலம், அம்பலசேரி, புளியங்குளம், கருங்கடல், பேய்குளம் ஆகியவையே அந்த ஐந்து ஊர்கள். இந்த ஊர்களுக்கு சென்ற தேவதைகளை அழைத்து வர வேத விற்பன்னர்கள் மீண்டும் முயற்சி செய்தார்கள். ஆனால் தேவதைகளே மறுத்து விட்டனர்; தங்களை விரும்பி அழைத்து சென்ற மக்களின் ஊர்களில் காவல் தெய்வங்களாக அமர்ந்து கொண்டனர். இதற்கிடையில் கொடிமரத்தை கோயிலில் நாட்டுவது நல்லதா இல்லையா என கேள்வி எழுந்தது. தேவதை இல்லாத கொடிமரத்தினை நாட்டுவதும் ஒன்றுதான், கிடப்பில் போடுவதும் ஒன்றுதான் என்று முடிவு செய்தனர். எனவே இறுதியில் கொடிமரம் நாட்டப்பட வில்லை.
தற்போது பக்தர்கள் முயற்சியால் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கொடிமரம் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோயில் புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. அந்த காலத்தில் கோயில் கைங்கர்யம் செய்ய ஏராளமான நிலபுலன்களை அரசர்கள் எழுதி வைத்திருந்தனர். அவற்றில் 67 ஏக்கர் நிலத்தை ஒருசாரார் பராமரித்து வந்தனர். ஆனால் கோயிலுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை. இது வழக்காகி நீதிமன்றத்தை சந்தித்தது. உடனே எதிர்தரப்பினர் இந்த கோயில் இருந்தால்தானே கைங்கர்யம் செய்வார்கள்; இக்கோயிலுக்கு நடராஜரால்தான் பெருமை, அவர் இல்லாவிட்டால் கோயில் பக்கம் யாரும் செல்லவும் மாட்டார்கள்; எதுவும் கேட்கவும் மாட்டார்கள் என்று எண்ணிய அவர்கள், நடராஜர் சிலையைக் கடத்திச் சென்று, வெகு தொலைவில் மண்ணில் புதைத்துவிட்டார்கள் என்றும் கூறுவர். மறுநாள் நடராஜர் சிலையை காணாததால் ஊரே பரபரப்பானது. காவல் துறையினர் முடுக்கி விடப்பட்டனர். சிலையை கடத்தியவர்களோ, தாம் புதைத்து வைத்த நடராஜர் சிலையை உடைத்துவிட்டுப் போய்விட்டார்களாம்.
அதைக்கண்டு வெகுண்டெழுந்த ஊரார் ஒன்று சேர்ந்து, மீண்டும் அதேபோல நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி கருவேலங்குளத்தில் வாழ்ந்த பழைய சிற்பியின் வாரிசான ஸ்தபதி வள்ளிநாயகம் கைவண்ணத்தில் புதிய நடராஜர் சிலை உருவானது. இதை கோயிலில் கொண்டு வந்து வைத்து 1971ம் வருடம் ஜுலை மாதம் 5ம் நாள் கும்பாபிஷேகம் நடத்தினார்கள். இந்த கோயிலை மூன்று முறை வலம் வந்து வணங்கினால் திருமாங்கல்ய பாக்கியம் கிட்டும்; மனக்கவலை, தீராத நோய், திருமணத்தடை, பிதுர் தோஷம், நவகிரக தோஷம் எல்லாம் நீங்கும். இந்த கோயிலில் சங்கடகர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, மாதந்தோறும் சிவராத்திரி அபிஷேகம் நடைபெறுகின்றன. கார்த்திகை நட்சத்திரத்தில் சுப்பிரமணியருக்கு அபிஷேகமும், மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகமும், திருவாசக முற்றோதலும், அன்னதானமும் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.
மார்கழி மாதம் திருவாதிரை விழாவும், ஐப்பசி மாதம் திருக்கல்யாணமும் தவறாமல் நடத்தப்படுகின்றன. இந்த கோயில் காலை 7முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும். நெல்லையிலிருந்து பேருந்தில் பயணித்து பேய்குளம் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நகரப் பேருந்தில் சென்றால் கட்டாரிமங்கலத்தை அடையலாம். பேய்குளத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் நெல்லையிலிருந்து பாளை வழியாக, பருத்திப்பாடு என்ற ஊருக்கு அடுத்துள்ள பெருமாள் நகரை அடைய வேண்டும். அங்கிருந்து சிந்தாமணி, மீரான்குளம் பழனியப்பபுரம் வழியாகச் சென்று கட்டாரிமங்கலத்தை அடையலாம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment