Monday, 28 May 2018

உலகம்மன் & அரியநாச்சியம்மன் வரலாறு

நாக கன்னியின் வயிற்றில் பிறந்த சக்தியின் அம்சமான அஷ்ட காளியர்கள் சிவனின் உத்தரவை ஏற்று மகிஷாசுரனை வதம் செய்து, பின் கயிலாயம் சென்றனர்.  அங்கு சிவபெருமானிடம் முத்துவரம் உள்ளிட்ட வரங்களை பெற்ற அவர்கள் பூலோகம் வந்தனர். பூலோகத்தின் சொர்க்கபுரியாக திகழ்ந்த பொதிகை மலையில்  வந்திறங்கிய அவர்கள், அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து, நிலையம் கொண்டு அருளாட்சி புரிந்து வருகின்றனர். அஷ்ட காளியரில்  நான்காவதான உலகம்மன் குற்றால மலையில் வாசம் செய்தாள். அந்த சமயத்தில் நெல்லை நகரத்தில் வசித்துவந்த சண்முகம் பிள்ளை, பாளையத்து  அரண்மனையில் கணக்கு பிள்ளையாக இருந்தார். இவரும், அப்பகுதியில் பெரும் வணிகராக திகழ்ந்த ஆறுமுகச் செட்டியாரும் நல்ல நண்பர்கள். இவர்கள் எங்கு  செல்வதென்றாலும் சேர்ந்து பயணம் மேற்கொள்வதுண்டு. ஒருமுறை வைத்தியர் கூறியதற்காக மூலிகை தண்ணீர் குளியல் போட வேண்டும். அதற்கு குற்றாலம்  போக வேண்டும். என்று ஆறுமுகம் செட்டியார், சண்முகம் பிள்ளையிடம் கூறியுள்ளார்.

‘‘அதற்கென்ன போனாபோச்சு, ஆனி, ஆடி மாசம்தானே அதற்குரிய பருவகாலம்? அப்ப போயிருவோம்’’ என்று பதிலுரைத்தார் சண்முகம்பிள்ளை. அதன்படி  இருவரும் தங்கள் மனைவி மக்களோடு இரண்டு வில்லு வண்டியில் குற்றாலத்திற்கு பயணம் செய்தார்கள். குற்றாலம் வந்து சேர்ந்தபோது பொழுது புலர்ந்தது.  ஆடியும் பிறந்தது. இரண்டு குடும்பத்தாரும் ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் மறுபுறமுமாக அணையில் நீராடினர். சண்முகம் பிள்ளையின் மனைவி மீனாட்சி,  தான் கொண்டு வந்து மஞ்சள் கட்டியை எடுத்து அவ்விடம் உள்ள பாறையில் உரசினார். உரச, உரச விழுதாக உருவாகும் மஞ்சள் மறுநிமிடமே மாயமானது. உற்று  நோக்கினால் பாறையில் ஒரு பெண்ணின் கைத்தடம் தெரிந்தது. திடுக்கிட்ட மீனாட்சி, ஆறுமுகம் செட்டியார் மனைவி சுந்தரியை அழைத்து மஞ்சள் மாயமாவதை  விவரித்தாள். சுந்தரி மீனாட்சியின் கையிலிருந்த மஞ்சள் கட்டியை வாங்கி உரசினாள். அப்போதும் முன்னர் நிகழ்ந்தது போலவே நடந்தது. வியப்புற்ற இருவரும்  தங்களது கணவன்மார்களை அழைக்க, ஆறுமுகச்செட்டியார், ‘‘சரி, எதை நினைச்சும் பயப்படாம முதல்ல கரையேறுங்க.

குளிச்சது போதும்,’’ என்றார். அச்சத்துடன் அவ்விடம் விட்டு வெளியேறியவர்கள் ஆடைகளை மாற்றினர். பின்னர் குற்றால நாதர் கோயிலுக்கு சென்று சாமி  தரிசனம் செய்தனர். கோயில் வளாகம் முன்பு மரத்தடியில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த கட்டுசோறை உண்டனர். பின்னர் மஞ்சள் குறித்து பேச முற்பட்டனர்.  அப்போது, ‘‘என்ன மாயமோ புரியவில்லை. உரசிய மஞ்சள் போன இடம் தெரியவில்லை,’’ என்றனர், பெண்கள் இருவரும். சண்முகம்பிள்ளை,  ‘‘எனத்துக்கெனவாம் பேசிட்டு இருக்காதீங்க, ஏலே, பண்டாரம், நீ வண்டிய கட்டு, ராமையனையும் கூப்பிட்டு வண்டிய கட்டச்சொல்லு. வந்தாச்சு, குளிச்சாச்சு,  அப்பன் சிவனை பார்த்தாச்சு, இனி கிளம்புவோம்,’’ என்றார் சண்முகம்பிள்ளை. அதை ஆமோதித்தார் ஆறுமுகசெட்டியார். இரு வீட்டாரும் தங்களது வண்டிகளில்  தத்தமது வீடுகளுக்குத் திரும்பினார்கள். மறுநாளிலிருந்து வீட்டுப் பெண்களுக்கு உடல் நலம் குன்றியது. வேர்க்காத உடல் நிலையும், நிற்காத உதிரப்போக்கும்  அவர்களை வாட்டி வதைத்தன. மருத்துவச்சி வைத்துப் பார்த்தும் குணமாகவில்லை.   குறி சொல்லும் வேடர்குல பெண் ஒருவர் சண்முகம்பிள்ளை வீட்டுமுன் நின்று குறி சொன்னாள்: ‘‘அம்மா, வூட்ல யாரு? ஜக்கம்மா அருளால நான் சொல்றேன்.  உங்க வூடு தேடி, அந்த அஷ்ட காளியரில் ரண்டு பேரு வந்திருக்காக. குற்றால மலையில் குடியிருப்பவள். குளிக்கையில் மஞ்சள் மணம் கண்டு, மவராசிங்க  பின்னே வந்துள்ளாள், அவள் குடியிருக்கு இடம் ஒதுக்கி, குறித்த நேரத்தில் பூஜைகள் செய்து குடும்பத்தோடு சேர்ந்து வழிபட்டு வந்தால் குறைகள் விலகும்,  நிறைகள் பெருகும். குறத்தி நான் சொல்லறது உண்மையாகும்,’’ என்று கூறினாள். அந்தப் பெண்ணை அழைத்து பேசிய சண்முகம் பிள்ளை, அவளுக்கு ஆடை  தானம் செய்து விட்டு, உடனே வண்டி கட்டி பயணித்தார். அம்பாசமுத்திரத்தில் இருந்த நம்பூதிரி ஒருவரை சந்தித்து இது குறித்து கேட்க, அவர் வரும்  வெள்ளியன்று வீடு வந்து சோளிபோட்டு பார்ப்பதாக கூறினார். அதன்படி வந்த நம்பூதிரி சண்முகம்பிள்ளை வீட்டு பூஜையறையில் சோளி போட்டு பார்த்தார்.  பின்னர், ‘‘வந்திருப்பது துர்க்கையின் அம்சமான இரண்டு பெண் தெய்வங்கள் அவர்களுக்கு பீடம் அமைத்து நிலையம் கொடுத்து வழிபடுங்கள்.

பிரச்னைகள் விலகும்,’’ என்றார். உடனே ஆறுமுகமும், சண்முகமும் சேர்ந்து நெல்லை மீனாட்சிபுரம் பகுதியில் மண் பீடம் அமைத்து பூஜை செய்து  வழிபட்டனர். பூஜையின்போது அம்மன் அருள் வந்து ஆடியவர் தான் உலகம்மை என்றும் தன்னோடு தனது தங்கையும் வந்திருப்பதாகவும், இன்றிலிருந்து  நோய்வாய்ப்பட்ட பெண்கள் உடல்நலம் தேறுவர். இல்லத்தில் எல்லா வளமும் உண்டாகும் என்றுரைத்தார். உலகம்மனோடு அவளது தங்கையான அரியநாச்சி  அம்மன் வந்திருப்பதாக கூறுகின்றனர். ஆனால், அம்மன் அருள் வந்து ஆடியவர் பெயர் கூறாததால் புது அம்மன் என்றே இவர்கள் அழைத்து வந்தனர். கோயில்  நாளடைவில் பெரிதாக கட்டப்பட்டது. கல் சிலைகள் அமைக்கப்பட்டன. கோயிலில் உலகம்மன் ஒரு சந்நதியிலும், புது அம்மன் அடுத்த சந்நதியிலும் அமர்ந்த  கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள். கோயிலில் பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன், பைரவர், மந்திரமூர்த்தி, சுடலைமாடன் ஆகிய தெய்வங்கள்  அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் ஆடி மாதம் திருவிழா நடைபெறுகிறது. நவராத்திரியையொட்டி 10 நாள் விழாவும் நடைபெறுகிறது.

நெல்லை ஜங்ஷன் அருகேயுள்ள மீனாட் சிபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment