Monday, 26 August 2019

மும்மூர்த்திகளின் அம்சமாய் விளங்கும் திருச்செந்தூர் முருகன்.!!

பச்சை சாத்தில் முருகன்


சிவன், பிரம்மன், திருமால் ஆகிய மும்மூர்த்திகளும் நானே என்று உலகறியச் செய்யும் விதமாய் திருமுருகன் வீற்றிருக்கும் அதி அற்புத தலம் திருச்செந்தூர். முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். அந்த அவதார நோக்கம் பூர்த்தியான திருச்செந்தூரே முருகனின் தலங்களில் தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும். தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் பாடல் பெற்ற தலம் திருச்செந்தூர். முருகன் தீம்புனல் அலைவாய் என்று தொல்காப்பியத்திலும் (களவு சூத் 23), வெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில் நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை (பாடல். 55) என்று புறநானூறிலும், திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய் (பாடல்.266) என்று அகநானூறிலும். உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய் என்று திருமுருகாற்றுப்படையிலும், சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் என்று சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெளிந்த நீர்க்குளங்களும் சோலைகளும் நிறைந்த ஊரும் சங்குகள் விளங்கும் நகரும் ஆகிய திருச்செந்தூர் பதியில் வாழ்பவனே எமை ஆளும் வேலவனே என்று அருணகிரிநாதர் புகழ்ந்து பாடிய திருச்செந்தூர் பதி எண்ணற்ற சிறப்புகள் வாய்ந்தது. திருச்செந்தூர் கடலைத் தாண்டி அமைந்திருந்த வீர மகேந்திரபுரியைத் தலைநகராகக் கொண்டு, சூரபதுமன் என்னும் அசுரன் ஆட்சி செய்து வந்தான். சிவனை நோக்கி பல தவம் புரிந்து ஏராளமான வரங்கள் பெற்றான். ஒரு வரம் பெற்றாலே தலைகால் புரியாதவர்கள் வாழும் உலகில் பல வரம் பெற்றவன் சும்மா இருப்பானா? அசுர பலங்கொண்டு மூவுலகையும் வென்று தேவாதி தேவர்களை துன்புறுத்த துவங்கினான். ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவர்களை மண்ணிற்குள் அனுப்பிய அந்த ஈசனுக்கு தெரியாதா இதற்கு எதிர்வினை என்ன செய்ய வேண்டுமென்று? தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். 

அதிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீபபொறிகளை கங்கை ஏற்று சரவணப் பொய்கையில் இட, அவை ஆறு குழந்தைகளாக மாறின. பார்வதியின் திருக்கரங்களால் குழந்தைகள் ஒன்றிணைந்து ஆறுமுகத்துடனும், பன்னிரு திருக்கரத்துடனும் பகலவனை மிஞ்சும் ஞான ஒளியுடன் வளர்ந்தது. உரிய காலம் வந்ததும் சிவன் தன் ஞான சக்தியை வேலாயுதமாக வழங்க, லட்சத்து ஒன்பது படை வீரர்களுடன் தென்திசை வந்தார் திருமுருகன்.
செந்தூர் வேலன் இப்பதிக்கு வருவான் என்பதை ஞானத்தால் அறிந்த தேவர்களின் குருவான வியாழ பகவான் திருச்சீரலைவாய் கடலோரம் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகன் அவர் மூலம் அசுரர்களின் வரலாற்றை கேட்டறிந்தார். பின்னர் தனது படைத்தளபதி வீரபாகுவை தூது அனுப்பினார். ஆனால் தூதனை சூரன் எள்ளி நகையாட வினைப்பயனாய் போர் மூண்டது. 

இறை சக்தியின் முன்னால் வேறு எந்த சக்தியாலும் வெல்ல முடியாது என்பதை நிரூபித்த சுந்தரவடிவேலன் தன் வேலாயுதத்தால் சூரனையும் அவனது தம்பி, பிள்ளைகளையும் வீழ்த்தினார். செயலற்ற மாமரமாய் நின்ற சூரனை ஞானவேல் பிளக்க ஒரு புறம் சேவலாகவும், மறுபுறம் மயிலாகவும் மாறின. சேவலைத் தனது வெற்றிக் கொடியாகவும், மயிலைத் தனது வாகனமாகவும் ஏற்றுக் கொண்டார். சம்காரம் முடிந்ததும், முருகப் பெருமான் தனது தந்தையாகிய சிவனை பூஜை செய்ய விரும்பிய போது, வியாழ பகவான் தேவதச்சனான மயனை அழைத்து உருவாக்கியதே திருச்செந்தூர் 
தலமாகும் சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இத்தலத்து இறைவன் ‘ஜெயந்தி நாதர்’ என அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இப்பெயரே ‘செயந்தி நாதர்’ ‘செந்தில்நாதர்’ என மருவியது. 

தலமும் ‘திருசெயந்திபுரம்’ என அழைக்கப்பெற்று ‘திருச்செந்தூர்’ என மருவியது. முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாகவும் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவர் பாலசுப்பிரமணியர் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்யும் கோலத்திலேயே காட்சி தருகிறார். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார். தலையில் ஜடாமுடியுடன், வலக்கை மேற்கையில் சக்தி ஹஸ்தமும், கீழ் கையில் பூஜைக்குரிய மலருடனும், இடது மேற்கையில் ஜெப மாலையும், கீழ் கையை இடுப்பில் வைத்தும் காட்சி தருகிறார்.
தெய்வானையை மணப்பதற்கு முன்னுள்ள பிரம்மச்சரிய கோலமாகும். இதனால் இருபுறமும் வள்ளி, தெய்வானை கிடையாது. இவரது பாதத்தின் அருகில் வலப்புறம் வெள்ளியால் ஆன ஸ்ரீபெலியும், இடப்புறம் தங்கத்தாலான ஸ்ரீபெலியும் உள்ளன. கருங்கல்லிலான இவருடைய அற்புதக் காட்சியை வேறு எங்கும் காண முடியாது.

மூலவரின் இச்சிலை மன்னர் திருமலை நாயக்கரின் பிரதிநிதியான வடமலையப்பபிள்ளை என்பவரால் திருநெல்வேலி குறுக்குத்துறையிலிருந்து கல் எடுத்துச் செய்யப்பட்டதாகும். மூலவருக்கு நேர் எதிரில் சிவனின் வாகனம் நந்தியும், முருகனின் வாகனமாக இந்திரனும், சூரபத்மனும், 
இருமயில்களாக உள்ளனர். மூலவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை நடக்கும். சண்முகர் சந்நதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். மூலவர் மற்றும் பஞ்சலிங்கங்களைத் தரிசித்து விட்டு, இடது பக்கமாக வந்தால் முதலில் ஜெயந்தி நாதரை தரிசிக்க முடியும். இவரே மூலவரான பாலசுப்ரமணியரின் உற்சவ மூர்த்தியாவார். இருபக்கமும் வள்ளி தெய்வானை உள்ளனர். வீதி உலா வருதல், யாக சாலைக்கு எழுந்தருளல், சூரபத்மனை வதம் செய்வது, தங்கத் தேரில் பவனி வருவது அனைத்தும் இவர்தான். இவரது சந்நதியில் இடது பக்கத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது. அது சந்திரலிங்கம் எனப்படுகிறது.

அடுத்ததாக சண்முகர் சந்நதி அமைந்துள்ளது. இவர் ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளில் பத்து கைகளில் பத்து விதமான ஆயுதங்களுடனும், வலக்கைகளில் ஒன்றை ஆசிர்வதித்தும், இடக்கைகளில் ஒன்றை தன்னுடைய பாதத்தைக் காட்டியும் அருள்புரிகிறார். இவருடைய இடது பக்கமுள்ள தெய்வானை குமுத மலரையும், வலது பக்கமுள்ள வள்ளி தாமரை மலரையும் கைகளில் ஏந்தியுள்ளார். இவரது முகத்தில் தழும்புகள் போன்று புள்ளிகள் உள்ளன. டச்சு நாட்டைச் சேர்ந்த கொள்ளைக்காரர்கள் இவரைக் கவர்ந்து சென்று தப்பி ஓடிய காலத்தில் எழும்பிய பெரும் புயலால் கடலில் இவரை வீச, மீன்களால் கொத்தப்பட்ட புள்ளிகள் என்பர் சிலர். இவரது வலது புறமுள்ள மாடக்குழியில் ஒரு லிங்கம் உள்ளது. அது ஆத்ம லிங்கம் எனப்படும். இரண்டாம் பிரகாரம் மேற்குப் பக்கத்தில் வள்ளி - தெய்வானை சந்நதிகளுக்கிடையே யாகசாலை கூடம் அமைந்துள்ளது. இங்கு தான் கந்த சஷ்டி திருவிழா 6 நாட்களும் யாகங்கள் நடைபெறும்.

மகா மண்டபத்திற்குள் இடது புறம் பார்வதி அம்மனையும் கரிய மாணிக்க விநாயகரையும் தரிசிக்க வேண்டும். மூலவர் சந்நதியின் இருபக்கமும் வீரபாகுதேவரும், மகேந்திர தேவரும் உள்ளனர். இவர்களுடைய அனுமதி பெற்று மூலவரைத் தரிசிக்க வேண்டும். இயற்கை ஒளியிலும் திருவிளக்கின் ஜோதியிலும் மூலவரை காண கண் கோடி வேண்டும். ஞானம் எனும் வேல்தாங்கி நிற்கும் அந்த அற்புத தெய்வத்தின் முன் நின்றாலே போதும். நம் மனக்கண் நினைப்பதை அவனது ஞானக்கண் அறிந்து விடும். பற்றற்று நிற்கும் மலர் மரத்தின் பாதம் பணிவது போல் நம் மணம் முருகனின் திருப்பாதங்களை சரணடைந்து விடும். உன்னைப் பற்றிய எல்லாம் எனக்கு தெரியும். நீ சென்று வா... வென்று வா... என திருச்சீரலை மன்னன் வாழ்த்துவதை உணர முடியும். அவனது திருத்தரிசனம் ஒருமுறை கிட்டினாலே நமக்கு என்றும் ஜெயம்தான். தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும். மார்கழி மாத நாட்களில் காலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கந்த சஷ்டி 6 நாட்கள் , ஜனவரி 1 ஆம் தேதி , தைப் பொங்கல் , வைகாசி விசாக நாட்களில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

சிவப்பு சாத்தி

7ம் திருநாள் காலையில் வெட்டிவேர் சப்பரத்திலும், மாலையில் சிவப்பு பட்டாடை, சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகர் வீதிவுலா வருவார். இதற்கு சிகப்பு சாத்தி என்று பெயர். அப்போது முன்புறம் முருகப் பெருமானாகவும், பின்புறம் நடராஜர் கோலத்திலும் காட்சி தருவார். சிவனின் அம்சமே தான் என்று இத்திருக்கோலம் உணர்த்தும்.

வெள்ளை சாத்தி - பச்சை சாத்தி

8ம் திருநாள் அதிகாலையில் அனைத்தும் வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு சண்முகர் எழுந்தருளுவார். இதற்கு வெள்ளை சாத்தி என்று பெயர். பிரம்மாவும் நானே என உணர்த்தும் வகையில் இது அமைந்திருக்கும். 8ம் நாள் மாலையில் சண்முகர் பச்சைப் பட்டுகளாலும், பச்சை மரிக்கொழுந்து மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு பச்சை கடைசல் சப்பரத்தில், பச்சை வண்ணன் ஆன திருமாலும் நானே எனக் குறிக்கும் வகையில் எழுந்தருளுவார். 10ம் நாள் அன்று தேரோட்டம் நடைபெறும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment