Friday, 5 July 2019

திருவாசகத்தேன் தந்த திருவாதவூர் தேனீ.!!

மாணிக்கவாசகர் - குருபூஜை (06.07.2019)


சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவராகிய மாணிக்கவாசகர் திருவாதவூரில் அமாத்திய அந்தணர் மரபில் தோன்றியவர்.   மாணிக்கவாசகர் தன்  இளமைக் காலத்தே கற்கவேண்டிய நூல்களை  எல்லாம் கற்றுத் தேர்ந்து அறிவுடைச் சான்றோராய் விளங்கியதுடன் பாண்டிய மன்னனிடம் அமைச்சராகவும் பணியாற்றினார். பாண்டிய மன்னனிடம் அமைச்சராய் விளங்கிய மாணிக்கவாசகர் ஒருமுறை மன்னின் ஏவலால் பெரும்பொருள் கொண்டு, குதிரை வாங்கும்பொருட்டுக் கீழைக்கடற்கரைக்குச் சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் திருப்பெருந்துறையின் கண் மாணிக்கவாசகரின் முன் சிவபெருமான் குருவடிவாய்த் தோன்றி  குருந்த மர நிழலில்  ‘நமசிவாய’ என்னும் அஞ்செழுத்தை அறிவித்து ஆட்கொண்டுஅருளினார். இறைவன் மாணிக்கவாசகரை  ஆட்கொண்ட பின்பு  ‘நீ தில்லைக்கு வருக’ என்று சொல்லி மறைந்தருளினார். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட மாணிக்கவாசகர் தன் தலைவனாகிய சிவபெருமானையே நினைந்தேத்தும் தன்மையினரானார். இறைத்திருவருளால் தான் புரவி வாங்குவதற்கென்று கொண்டுவந்த பொருள் எல்லாவற்றையும் இறைத் திருப்பணிக்கும்,  அடியார் பணிக்குமே அர்ப்பணித்தார்.

அதனை உணர்ந்த மன்னன் சினந்து மாணிக்கவாசகரை அழைத்துவர  திருமுகம் அனுப்பினான். அவரும் தம்செயல் உணர்ந்தவராய்த் தம்மை ஆட்கொண்ட பெருமானிடம் சென்று முறையிட்டார். பரிகள் ஆலவாய் வந்து  சேரும், அஞ்சாது போய் வருக!  என ஆட்கொண்ட நாயகன் அருள, மணிக்கவாசகர் ஆலவாய் சென்று அரசனிடம்  செய்தியினைத் தெரிவித்தார். ஆயினும் மாணிக்கவாசகர் குறித்த நாளில் குதிரைகள் வாராது போகவே, பாண்டியன் தண்டலாளரை ஏவி, அவரைச் சிறைப்படுத்தித் துன்புறுத்தச் செய்தான். ஆண்டவனும் மாணிக்கவாசகருக்கு அருள்புரிய வேண்டிக்காட்டில் திரியும் நரிகளைப் பரிகளாக்கி தேவகணங்களைப் பாகர்களாகவும், தானே குதிரைச் சேவகனாகவும் குதிரைச் சாத்தோடு ஆலவாய் அணிநகர் வந்தருளினார். மன்னனும் பரிகள்  வருகின்ற செய்தி அறிந்து மகிழ்ச்சியுற்று, மாணிக்கவாசகருடன் சென்று குதிரைச் சேவகனை வரவேற்று, மரியாதை பலவும் செய்தான். 

மாணிக்கவாசகரின் இடரைத் தீர்க்கும் பொருட்டுக் கொண்டுவந்த பரிகள் அன்று இரவே மீண்டும் நரிகளாகிக் குதிரைக் கொட்டத்தில் ஏற்கெனவே இருந்த குதிரைகளுக்கும் ஊறு செய்து, மதுரை மக்களுக்கும் தீமை புரிந்து, காட்டுக்கு ஏகின. இதனைக் கேள்வியுற்ற பாண்டியன் வெகுண்டு, தண்டலாளரை ஏவி மாணிக்கவாசகரைத் தண்டிக்கச் செய்தான். அதனால் மாணிக்கவாசகர் ஆற்றாது அழுத துயரினை நீக்கும் வகையான் வைகை ஆற்றில் பெருவள்ளம் புரண்டு வருமாறு பெருமான் அருட் புரிந்தார். வெள்ளம் இருகரைகளையும் தகர்த்து, ஆலவாய்  நகருக்கு அளவிலாச் சேதம் ஏற்படுத்திற்று. பாண்டியன் மாணிக்கவாசகருக்குத் தான் இழைத்த துன்பமே வைகை பெருகிவரக்  காரணம் என அறிந்து அவரை விடுவித்தான். வைகையில் வெள்ளம் குறைந்தது. ஆலவாய் மக்கள் அனைவருக்கும் கரையினை அடைப்பதற்குப் பங்கு பிரித்துக் கொடுக்கச் செய்தான் மன்னன். மன்னன் ஆணையால் வந்தி என்னும் முதியாளுக்கு ஒதுக்கப்பட்ட பங்கினை அடைக்கப் பெருமானே கூலியாளாய் வந்தார். 

அவள் விற்கும் பிட்டை உண்டு வேலை செய்தார் எளிவந்த தன்மையினான எம்பிரான். மாணிக்கவாசகருக்காகப் பெருமான் நரியைக் குதிரையாக்கியதும், வைகையில் நீரைப் பெருகச் செய்ததும், மண் சுமந்து பிரம்படி பட்டதும் உணர்ந்த பாண்டியன், மனம் மிக வருந்தினான். அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, அவர் விருப்பம் போல நடந்துகொள்ள வேண்டி நின்றான். மாணிக்கவாசகர் திருப்பெருந்துறை வந்து பெருமானைப் பிரிந்த பின்னர் தாம் படும் துயர் கூறி அழுது நின்றார். அவ்வாறு அழுது பாடிய பாடற்பகுதியே ‘திருச்சதகம்’ என்பதாகும். பின் மாணிக்கவாசகர், பெருமான் திருஅருளால் உத்தரகோசமங்கை வந்து சேர்ந்தார். அத்தலத்து இறைவனை எண்ணிப் பாடிய பாடல்களே ‘நீத்தல் விண்ணப்பம்’ என்பதாகும். அங்கு அவருக்கு மீண்டும் ஆண்டவனின்  அருட்காட்சி கிடைத்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் திருக்கழுக்குன்றத்தை அடைந்தார். மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் இறைவனைக் குரு வடிவில் கண்ட காட்சியை மீண்டும் இங்கு கண்டார். 

இறுதியாக மாணிக்கவாசகர் தில்லைக்கு வந்தார். அங்கே தங்கியிருக்கும் நாளில், புத்தரை வாதில் வென்று, இலங்கை மன்னனது ஊமைப் பெண்ணைப் பேசும்படி செய்து, புத்தரையும் அம்மன்னனையும் சைவராக்கினார். திருவாசகமும் திருக்கோவையாரும் மாணிக்கவாசகர் சொல்ல, ஆடல்வல்லானால் எழுதப்பெற்று,  தில்லைப் பொன்னம்பலத்தில் வைக்கப்பெற்றன. அவற்றைக் கண்ணுற்ற அர்ச்சகர் வியப்புற்று ஊர் மக்களுக்குத் தெரிவித்தார். எல்லோரும் மாணிக்கவாசகரிடம் அவற்றின் பொருளைக் கேட்க, அவர் மக்களை அழைத்துக் கொண்டு பொன்னம்பலத்துக்கு வந்து, ‘திருவாசகத்துக்குப் பொருள் கூத்தப் பெருமானே’ என்று கூறிச் அருட்சோதியில் மறைந்தருளினார். திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின்கீழ்  குருவாய் வந்து, மாணிக்கவாசகரை ஆட்கொண்ட இறைவன் மறையவே, இறைவனின் அத்திருக்காட்சியை அனுபவத்தை மீண்டும் பெறல் வேண்டி அழுதழுது பாடியவையே திருவாசகம் எனப்பட்டது.  பிற நூல்கள் எல்லாவற்றினும் திருவாசகத்துக்கு ஒரு தனித்ததொரு சிறப்பு உண்டு. அது கற்போர் மனத்தினை கசிவித்து கண்ணீர் மல்கச் செய்யும் பெற்றியதாகும். அதன் அருமை கருதியே  ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்றனர் ஆன்றோர். முடிவை அடையாத வீட்டு நெறியை, அளிக்கும்   திருவாதவூரின்கண் அவதரித்த எம் தலைவராகிய மாணிக்கவாசக சுவாமிகளது திருவாய் மலரில் தோன்றிய, திருவாசகம் என்கின்ற தேனானது பழமையாகிய, பெரிய உயிரைச் சூழ்ந்துள்ள, பிறவித்தளையினை  நீக்கி துன்பத்தை, ஒழித்து, ஆனந்தத்தை அருளும் ஆற்றல் பெற்றது ஆகும்.  இதனை,

“தொல்லை யிரும்பிறவிச் சூழுந் தளைநீக்கி
அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவா சகமென்னுந் தேன்”.

என்ற பாடல் விளக்கி நிற்கும். தேன், உடல் நோயை நீக்கி, உலகின்பத்தைக் கொடுக்கும் தன்மையது. திருவாசகம் உயிர் நோயாகிய பிறவியை நீக்கி, வீட்டின்பத்தைத் தரும் அருளாற்றல் அமைந்தது. திருவாசகம் ‘நமசிவாய வாழ்க!’ எனத் தொடங்கி ‘அம்மை எனக்கு அருளியவாறு யார் பெறுவார் அச்சோவே’ என நிறைவு பெறும். 

“நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க 
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க”

என்பதாய்த் திருவாசகம் தொடக்கம் பெறுகிறது.பதினாறாம் நூற்றாண்டில் கலிலியோ என்ற அறிஞர் உலகம் உருண்டையானது என்று கூறியதுடன் ஏன் உருண்டையானது என்பதற்கான காரணங்களையும் எடுத்துக் கூறினார். ஆனால் மேனாட்டு உலகம் நம்ப மறுத்தது. மேலும் அவர் தண்டிக்கப்பட்டார். உலகம் பதினாறாம் நூற்றாண்டு வரை அறியாத ஒன்றினை, நம்ப மறுத்த ஒன்றினை மாணிக்கவாசகர் தனது திருவாசகத்தில் தெளிவுற எடுத்துரைக்கின்றார். அண்டம் என்னும் பேருலகின் பகுதியாகிய உருண்டை வடிவின் விளக்கமும் அளத்தற்கரிதாகிய தன்மையும் வளமான காட்சியும் ஒன்றுக்கொன்று தொடர்ந்து நின்ற தன்மையுமாய் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தனஆகும். அவையெல்லாம் வீட்டினுள் நுழைகின்ற சூரியனின் கிரகணத்தில் நெருங்கிய  அணுக்களை நிகர்க்கச் சிறியனவாகச் செய்கின்ற பெரியவன் இறைவன் என்று திருவாசகம் குறிப்பிடுகிறது.  இதன்வழித் தமிழர்கள் பேரண்டம் குறித்த செய்தியையும் அதன் தோற்றம் குறித்த அறிவினையும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்து வைத்திருந்தனர் என்பதும் அதனைத் தம் இலக்கியங்களில் பதிந்து வைத்திருந்தனர் என்பதும் தெரியவருகிறது. இதனைச் சொல்லும் திருவாசகப் பகுதி, 

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்,
அளப்புஅரும் தன்மை, வளப் பெரும் காட்சி,
ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன;
இல் நுழை கதிரின் துன் அணுப் புரையச்,
சிறிய ஆகப் பெரியோன். தெரியின்,          
வேதியன் தொகையொடு மால் அவன் மிகுதியும்,
தோற்றமும், சிறப்பும், ஈற்றொடு புணரிய,
மாப் பேர் ஊழியும், நீக்கமும், நிலையும்,
சூக்கமொடு, தூலத்து, 
சூறை மாருதத்து எறியது வளியின்
கொட்கப் பெயர்க்கும் குழகன்”;     

என்பதாகும். இவ்வாறு திருப்பெருந்துறையில் இறைவனால் ஆட்கொள்ளப்பெற்ற மாணிக்கவாசகரின் குருபூஜை வருகின்ற ஆனி மாதம்  மக நட்சத்திரத்தில் ( 06 - 07 - 2019 )  கொண்டாடப்படுகின்றது. அன்றைய நன்னாளில் அருட் பெருஞ்சோதியாம் ஆண்டவன் உறையும் ஆலயம் சென்று மாணிக்கவாசகரை 
வழிபட்டு திருவருளும் குருவருளும் பெற்று உய்வோமாக!

-முனைவர் 
மா. சிதம்பரம்

திருநீறு பூசுகையில் திசை பார்க்கணும்

திருநீறு பூசும்போது பொழுதுக்கேற்ற திசை பார்க்கணும் காலையில் கிழக்கு நோக்கியும், மதியம் வடக்கு நோக்கியும், மாலை மேற்கு நோக்கியும் நின்று திருநீறு பூசிக்கொள்ள வேண்டும். இது அனுஷ்டானத்திற்கும், வீட்டில் இட்டுக் கொள்வதற்கும் பொதுவானது. கோயிலில் பிரசாதமாகப் பெறும் பொழுது சுவாமியைப் பார்த்துப் பூசிக்கொள்ள வேண்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment