Wednesday, 3 July 2019

நம்மாழ்வார் உவக்கும் வரதன்.!!

ஆழ்வார் திருநகரி.அங்கு ஆதிநாதன் கோவில் புளிய மர பொந்தில் ஒரு பதினாறு வயது பாலகன் அமர்ந்திருந்தார். முகத்தில் அசாத்திய தேஜஸ். இருக்காதா பின்னே. பிறந்தது முதல் காற்றைக்கூட சுவாசிக்காமல் அருந்தவம் செய்த பாகவத சிரோமணி அல்லவா அந்தக் குழந்தை. இந்தக் குழந்தை, பூமியில் பிறந்தவுடன் பூமியின் காற்று, மாயை முதலியவை அதை பீடிக்க வந்தது. 


ஆனால், அந்தக் குழந்தையோ சிறிது கூட கலங்காமல் ஒரு ஹுங்காரம் செய்தது. அவ்வளவுதான் இந்த குழந்தையைப் பீடிக்க உலக மாயை பயந்து ஓடியது. இப்படி சடம் என்று சொல்லப்படக் கூடிய கற்றை தோல்வியுறச் செய்ததால் சடஜித் என்று அந்த குழந்தைக்கு நாமம் வந்தது. சடகோபர் என்றும் சொல்வதுண்டு. 

பிறந்ததிலிருந்து மற்ற குழந்தைகளைப் போல் அழாமல், பால் உண்ணாமல், சுவாஸிக்காமல் இந்த புளிய மர பொந்திலேயே தவம் செய்து வருந்தது அந்தக் குழந்தை. அவர் வேறு யாருமில்லை நாம் அனைவரும் நம்முடைய ஆழ்வார் என்று சொந்தம் கொண்டாடும் நம்மாழ்வார் தான். 

இவர் இப்போது பல தலங்களில் உள்ள பகவானைப் பாடப் போவதாக அறிவித்தார். உடன் அனைத்து திவ்ய தேசத்து பெருமான்களும் அந்த புளிய மரத்து கிளையில் வந்து அமர்ந்துக் கொண்டார்கள். நம்மாழ்வார் பாசுரம் என்றால் சும்மாவா?மாகாபெரும் யோகியாயிற்றே அவர். அனைத்து பெருமான்களும் வந்தாயிற்று. இப்போது நம்மாழ்வார் யாரை முதலில் பாடுவார் என்பது தான் கேள்வி. 

சடகோபனே நான்தான் பூலோக வைகுண்ட அதிபதி ரங்கன். கோயில் என்றாலே அது என் கோயிலைத்தான் குறிக்கும். ஆகவே அனைத்து திவ்ய தேசத்தையும் விட என் திவ்ய தேசமே சிறந்தது. அனைவரைக் காட்டிலும் நானே சிறந்தவன். எனவே, என்னை முதலில் பாடும்” என்றார் வலது கிளையில் அமர்ந்திருந்த ரங்கநாதன். 

‘‘இல்லை இல்லை, விண்ணவர்களும் அரம்பையர்களும் மன்னவர்களும் வணங்கும் திருவேங்கடவன் நானே சிறந்தவன். என்னைப் பாடும்’’ என்றார், இடது கிளையில் இருந்த திருவேங்கடவன். ‘‘மலயத்வஜ பாண்டியனுக்காக ஆகாச கங்கையை பூமிக்குக் கொண்டுவந்த நானே சிறந்தவன்’’ என்றார், உச்சிக் கிளையில் இருந்த திருமாலிருஞ்சோலை கள்ளழகர்.

இப்படி பெரிய வாக்குவாதமே அங்கு நடந்தபடி இருக்க, ஓரமாக ஒரு கிளையில் ஒன்றும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் காஞ்சி பேரருளாளன் வரதன். அவரைக் கண்டார் நம்மாழ்வார். கைகளிரண்டும் அவரையும் அறியாமல் குவிந்தது. கண்களில் பக்தியின் பெருக்கால் நீர் கசிந்தது. 

 ‘‘அப்பனே வரதராஜா என் முதல் பாசுரம் உணக்குத் தானடா’’ என்றது, அவரது இதழ்கள். அதைக் கேட்ட வரதனின் முகம் மகிழ்ச்சியால் ஒளிர ஆரம்பித்தது. நம்மாழ்வாரின் இந்த முடிவைக் கேட்டதும் மற்ற பெருமாள்களுக்குக் கோபம் தலைக்கேறியது. 

‘‘வரதனை விட எந்த விதத்தில் நான் குறைந்து விட்டேன். எனக்கு அது தெரிந்தாக வேண்டும்’’ என்றான், ரங்கநாதன். புன்முறுவல் பூத்தார் நம்மாழ்வார். ‘‘ரங்கநாதரே. உங்களுடைய பக்தர் விபீஷணன் தங்களை, தன்னோடு அழைத்துச் சென்ற போது, அவனை நீங்கள் ஏமாற்றினீர்கள் அல்லவா? ஆகவே, நீங்கள் இந்த கேள்வியைக் கேட்கக் கூடாது’’ என்றார். 

ரங்கன் வாயடைத்துப் போனார். அடுத்து வேங்கடவன் இதே கேள்வியை கேட்டான், ‘‘என்னை ஏன் முதலில் பாடவில்லை’’ என்று. ‘‘தாங்கள் தங்களுக்கு இடம் கொடுத்த வராகரையே ஓரம் கட்டியவர் ஆயிற்றே’’ ஆகவே நீங்களும் இந்த கேள்வியைக் கேட்கக் கூடாது’’ என்று சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னார் நம்மாழ்வார். 

இப்படியே அனைத்து திவ்ய தேச பெருமாளிடத்திலும் நம்மாழ்வார் ஏதோ ஒரு குறை கூறினார். அதை யாராலும் மறுக்கவும் முடியவில்லை. இறுதியில் அனைத்து பெருமாளும் ‘‘வரதனிடம் மட்டும் ஒரு குறையும் இல்லையா?’’ என்று ஒரே குரலில் கேட்டார்கள்.“அவனிடம் ஒரு குறையும் கூற முடியாது. ஆம் பிரம்மனுக்கு ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்தால் தான் மீண்டும் பிரம்ம பதவி என்ற நிலை உருவானது. அப்போது “ காஞ்சியில் ஒரு புண்ணியம் செய்தாலும் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். 

ஆகவே நீ அங்கு போய் ஒரே ஒரு அஸ்வமேத யாகம் செய் போதும்” என்று அசரீரியாய் பேசி பிரம்மனுக்கு வழி காட்டினான், இந்தத்தூயவன். அது மட்டுமில்லை, அவன் அஸ்வமேத யாகம் செய்தபோது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லைகளும் பிரச்னைகளும் தடங்கல்களும் வந்தது. அவை அனைத்திலும் பிரம்மனுக்கு உறுதுணையாக இருந்து, அவனை யாகத்தை முடிக்க வைத்து, யாகத்தின் முடிவில் அவனுக்கு காட்சி கொடுத்து, அவனுக்கு பிரம்ம பதவியை மீண்டும் தந்த இந்த வரதனை யாராலும் ஒரு குறையும் கூற முடியாது. உண்மையில் இவன் தான் குறை ஒன்றுமில்லாத கோவிந்தன்’’ என்று ஒரே மூச்சாக சாதித்தார் நம்மாழ்வார். 

அவர் பேசியது அனைத்தும் பூரண சத்தியம் என்பதால் மற்ற திவ்ய தேச பெருமாள்களால் மறுப்பேதும் கூறமுடியவில்லை.நம்மாழ்வார் தனது கணீர் 
குரலில் பாட ஆரம்பித்தார். ‘‘பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா... எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா”  இப்படி அவர் பாட ஆரம்பித்ததுதான் திருவிருத்தம் என்ற அற்புதமான பிரபந்தம். 

இதில் மூன்றே மூன்று பெருமாளுக்கு மட்டுமே மங்களாசாசனம் செய்துள்ளார் ஆழ்வார். இப்படி ஆழ்வாரின் முதல் பிரபந்தத்தில் இடம் பெறும் பேறு பெற்றவர்கள் யார் என்று அறிய ஆசை எழுகிறது அல்லவா?காஞ்சி வரதன், ஸ்ரீ ரங்கன் மற்றும் திருவேங்கடவன். இவர்கள் மூவர் மட்டுமே நம்மாழ்வாரின் முதல் பிரபந்தத்தில் இடம் பெறும் உத்தமர்கள். இந்த மூவரிலும் முதல் மரியாதையும் அதிகப்படியான பாசுரங்களை முதல் பிரபந்தத்திலேயே பெற்றவனும் காஞ்சி வரதன்தான். ( 1 - 26 பாசுரம்). 

ஆழ்வாரின் முதல் பிரபந்தத்தில் கொண்டாடப்படும் இந்த மூன்று பெருமான்களையும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அழைக்கும் விதமே ஒரு தனி அழகு தான். ரங்கநாத பெருமாள் கோயிலை ‘கோயில்’ என்றும். வேங்கடவன் ஆலயத்தை ‘திருமலை’ என்றும் வரதனின் திவ்ய தேசத்தை ‘பெருமாள் கோயில்’ என்றும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் அழைத்து மகிழ்வார்கள். 

இதில் மற்றொரு சூட்சுமமும் அடங்கி இருக்கிறது. ஆம், காஞ்சிபுரத்தில் வசிக்கும் பேறு பெற்றவர்கள் வரதனை தரிசனம் செய்ய செல்லும் பொது, கோயிலுக்குச் செல்கிறேன் என்பார்கள். வெளியூரில் இருந்து காஞ்சிக்கு வரதனை காண வருபவர்கள் பெருமாள் கோயிலுக்குச் செல்கிறேன் என்பார்கள். ஆனால், இந்த உள்ளூர் வாசிகளும் வெளியூர் வாசிகளும் வரதனின் கோவிலுக்குள் நுழைந்ததும் திருமலைக்குச் செல்கிறேன் என்பார்கள். வரதன் ஒரு சிறு குன்றின் மீதுதான் நிற்கிறான். 

அதைக் கோயிலில் திருமலை என்றே அழைக்கிறார்கள். இந்திரனின் ஐராவதமே இப்படி மலையாக மாறிவிட்டது என்று புராணங்கள் கூறுகிறது. இப்படிக் கோயிலான ஸ்ரீ ரங்க தரிசனமும் திருமலையான வேங்கடவன் தரிசனமும் வரதனைதரிசனம் செய்யப் போனால் கிடைத்து விடுகிறது. என்னே வரதனின் கருணை. அடுத்து நம்மாழ்வார் அருளிச்செய்த பாசுரம் திருவாய்மொழி. வேதமே திருவாய்மொழி. திருவாய்மொழியே வேதம் என்றால் அது மிகையல்ல. இதன் பெருமையை இரண்டு கதைகளைச் சொல்லி விளக்கலாம். 

ஒருமுறை மதுராந்தகம் ஏரி வழியாக சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருப்பதிக்கு யாத்திரையாக சென்று கொண்டிருந்தார்கள். மதுராந்தகம் ஏரியை அடைந்ததும் அவர்களுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. உடன் அந்த ஏரியின் கரையில் புளி சாதம் தயார் செய்தனர். பிறகு, திருவாய்மொழியின் பாசுரங்களைப் பாடி அதை பகவானுக்கு நிவேதனம் செய்தார்கள். 

பிறகு அதை வயிறார உண்டார்கள். பின்பு தங்களது கைகளை ஏரியில் அலம்பினார்கள். அப்போது அங்கிருந்த உடும்பு ஒன்று அவர்கள் உண்ட மிகுதியை தான் உண்டது. அதன் பலனாக வேதம் அறிந்த அந்தணனாக அடுத்த பிறவியில் அது பிறந்தது. அது மட்டுமில்ல. பகவத் ராமானுஜருக்கு இளவயது குருவாக “யாதவ பிரகாசராக” இருக்கும் பேறு பெற்றது. மிருகமாக இருந்த ஒரு ஜீவனுக்கு இப்படி ஒரு நல்ல கதியை திருவாய்மொழியைத் தவிர வேறொன்றால் தர முடியாது. 

இதே போல் ஸ்ரீரங்கத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் மேற்கோள் காட்டலாம். ஸ்ரீ ரங்கத்தில் இருந்தவிஷ்ணு பக்தர் ஒருவர் தினமும் சாளக்கிராம பூஜை செய்வார். பிறகு அந்த சாளக்கிராமத்தை தனது வெற்றிலைப் பெட்டியில் போட்டுக் கொள்வார். பிறகென்ன திருவாய்மொழியை பாராயணம் செய்ய ஆரம்பித்து விடுவார். 

அப்படிச் செய்யும்போது இடை இடையில் வெற்றிலையும் போடுவார். அப்போது பல நேரங்களில் அறியாமல் சாளக்கிராமத்தை பாக்கு என்று நினைத்து வெற்றிலையோடு சேர்த்து வாயில் போட்டுக் கொள்வார். அதை கடிக்கும்போதுதான் அவருக்கு வாயில் போட்டது சாளக்கிராமம் என்பதே தெரியவரும். உடனே அதை உமிழ்வார். சுத்தம் செய்து மீண்டும் வெற்றிலை பெட்டியில் இடுவார். இப்படியே பல நாட்கள் நடந்து வந்தது. ஒரு முறை வேறொரு ஸ்ரீ வைஷ்ணவர் அதைப் பார்த்து விட்டார். 

உடன் அவரிடமிருந்து அந்த சாளக்கிராமத்தை பிடுங்கிக் கொண்டார். இப்படியா எம்பெருமானை போட்டு மெல்வது என்று நொந்து கொண்டார். மறுநாள் அந்த சாளக்கிராமத்தை வெகு நேர்த்தியாக பூஜித்தார். அன்று இரவு ஸ்ரீமன் நாராயணன் சாளக்கிராமத்தை பிடுங்கிக் கொண்ட அடியாரின் கனவில் வந்தார். வந்தவர்  ‘‘திருவாய்மொழி சொல்லி வாயில் ஊரும் எச்சிலில் குளிக்கும் சுகம் நீ செய்யும் பால் அபிஷேகத்தில் எனக்கு ஏற்படவில்லை. ஆகவே, அவரிடமே என்னைக் கொண்டுபோய் விட்டுவிடு’’ என்று ஆணையிட்டார். திருவாய்மொழி சொல்பவரின் எச்சிலுக்கே இவ்வளவு ஏற்றம் என்றால் அந்த திருவாய்மொழிக்கு எவ்வளவு ஏற்றமிருக்கும்?

இப்படிபட்ட திருவாய்மொழியை 
நம்மாழ்வார் இயற்றும் போதும் முதல் 
மரியாதையை வரதனுக்கே தந்துள்ளார். 
“அயர்வுரும் அமரர்கள் அதிபதி எவனவன்
துயரரு சுடரடி தொழுதெழு என் மனனே.”

 என்பது நம்மாழ்வாரின் திருவாக்கு. இங்கு அவர் அமரர்கள் அதிபதி என்று சொல்வது தேவாதி ராஜன் என்று நம்மால் அழைக்கப் படும் காஞ்சி வரதராஜனையே என்பது ஆச்சார்யர்களின் சித்தம். இதில் “துயரரு சுடரடி” என்ற அவரது வாக்கை கூர்ந்து நோக்க வேண்டும்.பிரம்மன் இழந்த பிரம்ம பதவியை மீண்டும் பெற காஞ்சியில் அஸ்வமேத யாகம் செய்கிறான். யாகத்தின் முடிவில் யாகத் தீயில் இருந்து வரதன் வெளிப்பட்டான். அவனது அற்புத திருக்கோலத்தைக் கண்டு பிரம்மன் அஞ்சலி செய்தான்.

“க” என்ற அட்சரத்தால் அழைக்கப்படும் பிரம்மன், அஞ்சலி செய்ததால் அந்த தலத்திற்கு காஞ்சி என்றபெயர் வந்தது என்று பிரம்மாண்ட புராணம் கூறும். பகவான் யாகத் தீயில் இருந்து வெளிப்பட்டான். தீயிலிருந்து வெளிப்பட்ட அவன் பாதம், சுடர் ( தீ ) அடி (பாதம்). பார்த்தீர்களா எவ்வளவு அழகாக நம்மாழ்வார் வரதனின் சரிதத்தையே சூசகமாக சொல்லிவிட்டார். நம்மாழ்வாரின் எல்லாப் பாசுரங்களிலும் முதல் மரியாதை பெரும் வரதனை, ‘‘நம்மாழ்வார் உவக்கும் வரதன்’’ என்று சொல்வதில் ஒரு தவறுமில்லையே.?

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment