Monday, 22 July 2019

சக்தி பீடங்களும் அதன் சிறப்புகளும்.!!

ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு சிறப்பு வாய்ந்த மாதமாகவே கருதப்படுகிறது. ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளியன்று, கோவில்கள், வீடுகளில் சிறப்பு வழிபாடு நடத்தும் பெண்கள், தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், குழந்தைப் பேறு வேண்டியும், குழந்தைகள், பெரியவர்கள் உட்பட குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம், தன லாபம் வேண்டியும் அம்மனை வழிபடுவது தொன்று தொட்டு கடைபிடிக்கப்படும் வழிபாட்டு முறையாகும்.
ஏற்கனவே, ஆடி மாத சிறப்பு பூஜைகள் மற்றும் அதன் வழிபாட்டு முறைகள் குறித்து, நாம் நம் வாசகர்களுக்காக தொடர்ந்து சிறப்பு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம். இந்நிலையில், நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சக்தி பீடங்கள் பற்றியும் அதன் சிறப்பு குறித்தும் மேலும் ஓர் தொடர் வெளியிடுகிறோம்.
ஆன்மீக அன்பர்கள் மற்றும் வாசகர்கள் இந்த தொடரை இடைவிடாமல் படித்து, சக்தி பீடங்கள் பற்றி அறிவதுடன், அம்மன் அருளையும் பெற வேண்டுகிறோம்.

சக்தி பீடம் - 1 கொல்லுார் மூகாம்பிகை
சக்தி பீடங்களில், அம்பாளின் காதுகள் விழுந்த இடம், கொல்லூர் மூகாம்பிகை திருத்தலம். இது, கர்நாடக மாநிலம்,  மங்களுரிலிருந்து, 140 கி.மீ. தூரத்தில் செளபர்ணிகை ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது. கலைகளுக்கு அதி தேவதையாக விளங்குகிறாள் மூகாம்பிகை.
தலவரலாறு:
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்,  இந்த பகுதி அடர்த்தி நிறைந்த  காடுகளாக காட்சி அளித்தது. கோல மகரிஷி என்பவர் இந்த காட்டில் தவம் புரிந்தார். அவரது தவத்தைக் கலைப்பதற்காக, மூகாசுரன் என்னும் அசுரன் முயன்றான். மகரிஷியைக் காப்பாற்ற ஈஸ்வரன், கணபதி, வீரபத்திரன் துணையோடு மூகாசுரனை வதம் செய்தாள் அம்பிகை. அதனால்தான் இங்கிருக்கும் அம்பிகை, மூகாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.
தல சிறப்பு:
ஆதிசங்கரர், இத்தலத்துக்கு வந்த போது, கோல மகரிஷி வழிபட்ட சுயம்பு லிங்கம் மட்டுமே இருந்தது. அம்பாள் அரூப நிலையில் அருள்பாலிப்பதை உணர்ந்த ஆதிசங்கரின் மனக்கண்ணில்  அம்பாள் பத்மாசன நிலையில் காட்சி கொடுத்தாள்.  தன்னை கோயிலில் பிரதிஷ்டை செய்யும் படி கூறினாள்.

அதன்படி அம்மன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயங்களில் மூல விக்கிரகம் கல்லால் இருக்கும். ஆனால் இங்கு பஞ்சலோகத்தில் அமைந்திருப்பது விசேஷம். மூகாம்பிகைக்கு, புஷ்பாஞ்சலி, ஆராதனை மட்டுமே நடக்கும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தேவிக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.

தூய பட்டினால் செய்யப்பட்ட புடவைகள் மட்டுமே அம்மனுக்கு சாத்தப்படுகிறது. அபிஷேகம் நடப்பதில்லை. லிங்கத்துக்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும்.  இத்தலத்தில் அபிஷேகம் நடக்கும் போது, லிங்கத்தின் நடுவில் இருக்கும் தங்க கோடு கண்ணுக்கு தெரியும்.  ஆனால் எல்லா நேரங்களிலும் தங்க கோடுகளை தரிசிக்க முடியாது. முப்பத்து முக்கோடி தேவர்களை வழிபட்ட பலனைத் தருகிறார் லிங்கபெருமான். சூரிய, சந்திர கிரகணம் நடைபெறும்  நேரங்களில், ஆலயத்தைச் சாற்றாமல் பூஜைகள் நடத்தப்படுவது விசேஷம். பிரம்மச்சாரிகள் பூஜிக்க அனுமதி கிடையாது.
தல பெருமை:
கோயிலின் உள்ளே இருக்கும் கொடிக் கம்பத்தை ஒட்டி விளக்குத்தூண்  அமைத்திருக்கிறார்கள். ஒரே கல்லினால் ஆன தூண் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தூணில் ஆயிரம் விளக்குகள் ஏற்றலாம். கருவறையில் அம்பிகை பத்மாசனத்தில் அமர்ந்து, இரு கைகளில் சங்கு சக்கரங்கள் ஏந்தியபடி மகாலட்சுமி, சரஸ்வதி, காளி என்று மூன்று தேவியரின் வடிவில் அருள் பாலிக்கிறாள்.

அம்பிகையின் இரு புறங்களிலும் காளி, சரஸ்வதி அருள்பாலிக்கிறார்கள். ஆதிசங்கரர் சரஸ்வதியாக பாவித்து மூகாம்பிகையை வணங்கியதால் குழந்தைகளுக்கு கல்வியில்அருள்பாலிக்கும் சிறப்பு தலமாக இது விளங்குகிறது.
செளந்தர்ய லஹரியை ஆதிசங்கரர் இத்தலத்தில் இருந்த போது இயற்றினார்.

ஆதிசங்கரர் அம்பாளை நினைத்து வழிபட்ட போது, அவரால் எழ முடியவில்லை. அம்பிகையே நேரில் தோன்றி அவருக்கு கஷாயம் வைத்துக்கொடுத்ததால், இரவு நேர பூஜைக்கு பிறகு, பக்தர்களுக்கு கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. நோய் தீர்க்கும் அருமருந்தாக பக்தர்கள் இதை உணர்கின்றனர்.
அன்னை மூகாம்பிகையை வழிபடுவதற்கு முன், ஆலயத்தின் உள் பிரகாரங்களில் உள்ள பஞ்சமுக கணபதி, சந்திர மௌலீஸ்வர், நஞ்சுண்டேஸ்வரன் சன்னிதி, பெருமாள் சன்னிதி, ஆஞ்சநேயர், வீரபத்திரர், முருகன், சரஸ்வதி, மஹா விஷ்ணு, துளசி, கிருஷ்ணன் சன்னிதிகளில் வழிபட வேண்டும்.

தல பிரார்த்தனை:
குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்க, இத்தலத்திற்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்கிறார்கள்.
கோயில் பிரகாரத்தில் சுற்றி வரும் போது, சுவரில் பதித்திருக்கும் வெள்ளியால் செய்யப்பட்ட  பெரிய பாம்பு உருவத்தை தொட்டு வணங்கினால், ராகு, கேது தோஷத்தை நீக்கும் என்று நம்புகிறார்கள்.
மூகாம்பிகையின் பாதத்தில் பட்ட குங்குமத்தை நெற்றியில் இட்டால், பிரம்மனின் தலையெழுத்தும் நன்மையாக மாறிவிடும் என்கிறார்கள். ஏவல், பில்லி, சூனியம், துஷ்ட தேவதைகள் தரும் துன்பங்கள் அனைத்தையும் நீக்கிவிடும் வல்லமை பெற்றவள் மூகாம்பிகை. கொல்லுார் மூகாம்பிகையை மனக்கண்களில் நிறுத்தி, அவளை மனமாற வழிபட்டால், விரைவில் கொல்லுார் செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

சக்தி பீடம் - 2 : காஞ்சீபுரம்

சக்தி பீடங்களில் முதலாவதாக கொல்லுார் மூகாம்பிகையை பார்த்தோம். அது, கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்திலேயே உள்ள முக்கியமான சக்தி பீடம், காஞ்சீபுரம்.  பார்வதி தேவியின் சக்தி பீடங்களில்  காஞ்சி காமாட்சியும் ஒன்று. அம்மனின் மகிமை பெற்ற தலம் என்று காஞ்சியை சொல்லலாம். அதனால் தான் காமாட்சி என்றாலே காஞ்சி காமாட்சி என்றே சொல்கிறோம்.
ஒவ்வொரு யுகத்திலும், மகான்கள் அம்பிகையை நினைத்து ஸ்லோகங்களை இயற்றியிருக்கிறார்கள். துர்வாசர் கிருதயுகத்தில், 2000 ஸ்லோகங்களையும், பரசுராமர் திரேதாயுகத்தில், 1500 ஸ்லோகங்களையும், தெளமியாசர் துவாபரயுகத்தில், 1000 ஸ்லோகங்களையும், ஆதிசங்கரர் கலிகாலத்தில் 500 ஸ்லோகங்களையும் காமாட்சி அம்பிகையை நினைத்து இயற்றியிருக்கிறார்கள்.
தலவரலாறு:
காமாட்சி, ஒன்பது வயது சிறுமியாக தோன்றி பண்டாசுரன் என்னும் அசுரனை வதம் செய்து, விண்ணில் மறைந்தாள். அசுரனை வதம் செய்தது யார் என்று தெரியாமல் தேவர்கள் திகைத்தார்கள். அப்போது காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை உணர்த்தும் விதமாக, 24 தூண்களையும், நான்கு வேதங்களைக் குறிக்கும் வண்ணம்  நான்கு சுவர்களையும் எழுப்பி,  மண்டபம் கட்டுங்கள்.

அந்த மண்டபத்தில் கன்றுடன் கூடிய பசு, சுமங்கலிப் பெண், தீபம், கண்ணாடி போன்றவை வைத்திருங்கள். அசுரனை அழித்தஎன்னை காட்டுகிறேன் என்ற அசரீரி கேட்டது. தேவர்கள் அப்படி செய்ய, காமாட்சி தேவி, ஒன்பது வயது சிறுமியாக காட்சியளித்து அருள் புரிந்தாள். தேவர்கள், தேவியின் விருப்பப்படி அந்த இடத்தை மறைத்து ஸ்லோகங்களால் வழிபட, மறுநாள் காமாட்சி அம்மனாக காட்சி தந்தாள்.
தல சிறப்பு:
காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். லலிதாஸ்தவரத்னம் என்ற நூலை இயற்றியவர் இவரே. அம்மன், இவருக்குத்தான் காட்சி தந்ததாக கூறுகிறது வரலாறு. அம்மன், தங்க விமானத்தின் கீழ் அமர்ந்த நிலையில் அருள்புரிகிறாள். பத்மாசன கோலத்தில் அருள்தருவது மிகவும் விசேஷமானது என்பது குறிப்பிடத்தக்கது. கருவறையில் காமாட்சியின் அருகில் வலப்புறத்தில் ஒற்றைக்காலில் பஞ்சாக்னி நடுவில் நின்றபடி காட்சி தரும் அம்மனும் உண்டு.
அசுரனை வதம் செய்து உக்கிரத்தோடு இருந்த காமாட்சி அம்மனை சாந்தப்படுத்த, அம்மனின் திருவுருவத்தின் முன்பு ஆதிசங்கரர் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து,  சாந்தப்படுத்தி அருள் சக்தியாக மாற்றினார்.
ஆதிசங்கரர், இத்தலத்தில் தான் ஆனந்த லஹரி பாடினார். மேலும் இவர், அம்பிகையை நினைத்து வழிபட்ட மூககவியின் மூக பஞ்சசதீ, துர்வாசரின் ஆர்ய த்விசதி போன்ற ஸ்தோத்திரங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆதிசங்கரருக்கு இத்தலத்தில் தனி சன்னிதி அமைந்திருக்கிறது.

காமாட்சி  ஸ்தூலம், சூட்சமம், காரணம் என்று மூன்று வடிவங்களில் அருள் பாலிக்கிறாள். சக்தி பீடத்தில் முக்கிய தலமான இங்கு, அம்மன் தென் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருக்கிறாள். பிரம்மா, ருத்ரன், சதாசிவன், ஈஸ்வரன், மகாவிஷ்ணு என பஞ்ச பிரம்மாக்களை ஆசனமாக கொண்டு, நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள். கைகளில் பாசம்,  அங்குசம், புஷ்ப வானம், கரும்புவில் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

தல பெருமை:
இந்நகரை ஆட்சி செய்த மன்னனுக்கு குழந்தைப்பேறு இல்லை. அதனால் அம்மனை நினைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்தான். மன்னனின் வேண்டுதலில் மனம் இறங்கிய அம்மன், தனது புதல்வன் கணபதியையே மன்னனுக்கு மகனாக பிறக்க அருள்புரிந்தார். கணபதி துண்டீரர் என்னும் பெயருடன் வளர்ந்து, ஆகாசராஜ மன்னனுக்கு பிறகு ஆட்சி செய்தார்.
கா என்றால் சரஸ்வதி, மா என்றால்  மகேஸ்வரி, க்ஷி என்றால் லட்சுமி என மூன்று தேவிகளும் இணைந்தவள் இவள்.
காஞ்சி மகா பெரியவர், காமாட்சிதேவியைப் பற்றி சொல்லும் போது, மனிதர்களுக்கு மாயை ஏற்படுத்தி அந்த மாயையிலிருந்து விடுவிக்கும் கருணையும் கொண்டவள் காமாட்சி என்கிறார்.

தல பிரார்த்தனை:
அம்மனுக்கு முன்பு இருக்கும் ஸ்ரீ சக்கரத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ என்பது லட்சுமியின் அம்சம் ஆகும், இதை  வழிபட்டால் அனைத்து ஐஸ்வர்யங்களும் பெறலாம்.
குழந்தை வரம், திருமண வரம், நவக்கிரக தோஷம் இருப்பவர்கள் இவையெல்லாம் நீங்க காமாட்சி அம்மன் அருள் பாலிக்கிறாள்.
எனக்கு எதுவும் வேண்டாம். இந்த உலக மாயையிலிருந்து விடுபட்டால் போதும் என்றால் அருள் தரக் காத்திருக்கிறாள் காஞ்சி காமாட்சி...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment