நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே ராஜபதி கிராமத்தில் உள்ளது, காலாங்கரையான் கோயில். இவரை வழிபட்டுவிட்டு பயணித்தால் பயணம் இனிதாகிறது. ‘காவலாய் வருகிறான் காலாங்கரையான்’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் அவரை வழிபடும் பக்தர்கள். கங்கை கொண்டானை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்து வந்தார் சீவல மகாராஜா. இவருக்கு ஒருமுறை கண்பார்வை குன்றிப்போனது. அரண்மனை ஜோதிடர் கூறியதன்பேரில் கைலாசநாதரை வணங்கி வந்தார். மீண்டும் பார்வை பெற்ற மகாராஜா, கங்கைகொண்டானில் கைலாசநாதருக்கும், ஆனந்தவல்லிக்கும் கோயில் எழுப்பினார். பின்னர் கோயிலுக்கு தேரோட்டம் நடத்த திட்டமிட்டார் மகாராஜா. கோயிலுக்குக் கொடிமரம் வேண்டும் என்பதற்காக, பணியாளர்களை அனுப்பி மரம் வெட்டிவருமாறு கூறினார்.
மகாராஜாவின் உத்தரவை ஏற்று ஒன்பது பேர் மூன்று மாட்டு வண்டிகளில் காரையாருக்கு மேல் பகுதியிலுள்ள காக்காச்சி மலைக்கு சென்று, அங்கிருந்த மரம் ஒன்றை வெட்டி கொண்டுவந்தனர். தெம்பூற்று மலையிலிருந்து கங்கைகொண்டான் பெரிய குளத்திற்கு, காலாங்கு ஓடை வழியாக தண்ணீர் வந்து சேரும். கங்கை கொண்டான் ஊருக்கு மேற்கு பக்கமுள்ள ராஜபதி கிராமத்து வழியாக ஓடும் இந்த காலாங்கு ஓடை அருகே கொடிமரம் ஏற்றி வந்த மாட்டு வண்டிகள் வரும்போது வண்டிகளின் சக்கரங்கள் மண்ணில் பதிந்துவிட்டன. நகரவில்லை.
இதையறிந்த மகாராஜா, ஆட்களை இவர்களுக்கு உதவ அனுப்பிவைத்தார்.
ஆட்கள் வந்து முயன்றும் வண்டியை மீட்க முடியவில்லை. வேடர் குலத்து பெண் ஒருத்தியை அழைத்து குறிகேட்க, அவள், ‘சுடலைமாடன் காவலில் இருக்கும் காக்காச்சி மலையிலிருந்து மரம் வெட்டி வந்ததால் கொடி மரத்தோடு சுடலைமாடனும், அவரோடு சேர்ந்து 21 தேவாதி தேவதைகளும் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த இடத்திலேயே நிலையம் கொடுத்து உரிய பலியுடன் பூஜை செய்து, அதன் பின்னர் வண்டியை எடுங்கள். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்,’ என்று கூற, அதன்படியே பூஜைக்கு ஏற்பாடு செய்தார் மகாராஜா. பின்னர் தனது அரண்மனைக்கு பால் ஊற்றும் வையாளி கோனாரிடம் 50 ஏக்கர் நிலத்தை பட்டயம் போட்டு கொடுத்து, அந்த நிலத்திலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு கோயிலுக்கு பூஜை முதலான காரியங்களை செய்து கொள்ளுமாறு எடுத்துரைத்தார்.
கோனாரும், மகாராஜாவின் உத்தரவுப்படி செய்து வந்தார். இந்நிலையில் காலாங்கரை ஓடை அருகே வந்தமர்ந்த மாரியம்மன், தான் வந்ததை இப்பகுதி மக்கள் அறிய வேண்டும் என எண்ணினாள். அதனால் ஊரில் இளையோர், முதியோர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் அம்மை நோய் தாக்கியது; பலர் வாந்தி, பேதியால் அவதிப்பட்டனர். ஊர்ப் பிரமுகர்கள் குறி கேட்க சென்றனர். அப்போது, ‘வந்திருப்பது மாரியம்மன். அவளுக்கு காலாங்கரையான் ஓடை அருகே சுடலை
மாடன் கோயிலில் நிலையம் கொடுத்து பூஜித்து வாருங்கள். நோய்கள் நீங்கும்,’ என்றாள்.
அதன்படி சுடலைமாடன் கோயிலில் மாரியம்மனுக்கு நிலையம் கொடுத்து பூஜை செய்தனர். அப்போது மாரியம்மன் அருள் வந்து ஆடியவர், ‘எனக்கு இந்த பூஜைகள் போதாது. செஞ்சேவல், ஆடு ஆகியவற்றை பலியிட்டு, எனது சந்நதி முன்பு 4 அடி ஆழமும், 4 அடி அகலமும் கொண்டு வட்ட வடிவில் குழி தோண்டி அதில் பலியிடப்
படும் ஆடு, சேவலின் ரத்தத்தை விட்டு நிரப்பி, அந்த ரத்தத்தில் மைந்தன் மாயாண்டி குளியல் போட்டு ஆடி வரவேண்டும். அதை கண்டு நான் ஆனந்தம் கொள்ள வேண்டும். அப்போது நான் சாந்தம் கொள்வேன்,’ என்று கூற, ஊர் பிரமுகர் ஒருவர், ‘அம்மா அந்தளவுக்கு பலி கொடுக்க வருஷா வருஷம் சேவலுக்கும், ஆட்டுக்கும் எங்க போவோம்?’ என்று கேட்டார்.
‘நீ ஏன் கலங்கிற? என்னைத் தேடி வருவங்களுக்கு நான் வேண்டியத கொடுப்பேன். அவங்ககிட்ட எனக்கு வேண்டியத கேட்பேன். ம்...ம்... நடக்கட்டும்,’ என்று சொல்லிவிட்டு அருள் வந்தவர் மயங்கி விழுந்தார்.
அதன்படியே பலியிட்டு ரத்தக்குளியலுடன் பூஜை நடைபெற்றது. அம்மன் சாந்தம் கொண்டாள். ஊரில் உள்ளவர்களுக்கு பிணி நீங்கியது.
இந்தக் கோயிலில் இன்றும் இந்த வழக்கம் தொடர்கிறது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை அலங்கார தீபாராதனை, அதனைத் தொடர்ந்து நள்ளிரவு சாமக்கொடை. புதன்கிழமை அதிகாலை நேரம் ரத்தக்குளியலும் நடக்கிறது.
அப்போது காலாங்கரையான் சாமி அருள் வந்து ஆடுபவர் ரத்தத்தை குடித்து விட்டு அந்த குழியில் இறங்கி ரத்தக்குளியல் இடுகிறார். பின்னர் மனித மண்டை ஓட்டில் மாவு உருண்டை வைத்து சாப்பிடுகிறார். இது குறித்த கதை ஒன்று கூறப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஒரு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஆங்கிலேய அதிகாரி ஒருவர் கோவில்பட்டியிலிருந்து பாளையங்கோட்டைக்கு குதிரையில் வந்து கொண்டிருந்தார். அப்போது காலாங்கரையான் கோயில் அருகே வந்தபோது யாரோ கச்சை கட்டி ஆடும் மணி ஓசை கேட்டது. அதைக்கேட்டு அஞ்சிய அதிகாரி மணி ஓசை வந்த திசை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். அது கோயிலிலுள்ள சப்பாணி மாடன் சிலையில் தோள் பகுதியில் பட்டது. (இன்றும் அந்த தடம் சிலையில் உள்ளது).
உடனே சப்பாணி மாடன், ‘அய்யா காலாங்கரையான் என்னை இப்படி பண்ணிட்டானே!’ என்று கதற, உடனே காலாங்கரையான் அந்த அதிகாரியைத் தனது குதிரையில் விரட்டிச்சென்றார். கங்கை கொண்டான் பெரிய குளத்து மதகு அருகே வைத்து அதிகாரியின் குதிரையை மாளச்செய்து மண்ணில் புதைத்தார். அந்த இடம் தற்போது குதிரை மதகு என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அதிகாரியைக் கொன்று அவனது மண்டை ஓட்டைத் தின்றார். அதை நினைவுபடுத்தும் வகையில்தான் காலாங்கரையானுக்கு சாமியாடுபவர் கொடை விழாவின் போது மண்டை ஓட்டில் வெல்லம் கலந்து மாவு உருண்டையை சாப்பிடுகிறார். கொடைவிழாதோறும் குறைந்தது நூறு முதல் இருநூறு ஆடுகள் பலியிடப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
இந்தக் கோயில் நெல்லையிலிருந்து 20 கி.மீ தொலைவில் மதுரை பைபாஸ் சாலையில் கங்கை கொண்டான் பஸ் நிறுத்தம் அருகே உள்ளது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment