குஜராத் மாநிலம் பல திருத்தலங்களை தன்னகத்தே கொண்டது. பரந்தாமன் பாராண்ட பூமியல்லவா? மகேசனுக்கும் மதுசூதனனுக்கும் நிறைய கோயில்கள் இருந்தாலும் அம்பிகைக்கும் ஒரு பெரிய கோயில் உண்டு. அதுதான் சக்தி பீடமான அம்பாஜி. சதி தேவி அக்னியில் விழுந்து உயிர் விட்டு, பின் தட்ச வதம் நடை பெற்று சிவன் அன்னையின் உடலை தோளில் சுமந்தபடி அலைந்து , ஊழித் தாண்டவம் ஆடிய போது திருமால் சக்ராயுதத்தால் அந்த உடலை பல துண்டுகளாக வெட்டினார். அவை 51 இடங்களில் விழுந்து சக்தி பீடங்களாக போற்றப்படுகின்றன. இதில் இதயம் விழுந்த இடம் அம்பாஜி என்றுஅழைக்கப்படுகிறது. குஜ்ஜி பக்தர்களின் ஆன்மாவாக திகழும் இந்த சிறிய தலம் (சுமார் 9 சதுர கி.மீ ) தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களை தன் வசம் இழுக்கிறது. குஜராத் ராஜஸ்தான் எல்லை பகுதியில் அபு ரோடிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்கு வழிபடப்படும் அம்மன் தாயின் வடிவமாக போற்றப்படுவதால் அரசுர் என்று பெயர் பெற்றிருந்த ஊர் அம்பாஜியாக மாறியது. அன்னையின் இதயம் விழுந்த சரியான இடம் அருகிலுள்ள கப்பர் மலை (Gabbar Hills ) என்று நம்பப்படுகிறது. ஸ்ரீ ராமரும் இளவலும் சீதாதேவியைத்தேடி அலைந்தபோது ஒரு முனிவரின் ஆலோசனைப்படி அம்பாஜியை வணங்கினாராம். அம்மையும் ராவணனை கொல்வதற்காக அஜய் என்ற பாணத்தை கொடுத்தருளினார். நந்தகோபரும் யசோதையும் கண்ணனுக்கு முதல் மொட்டை போடுவதற்காக கப்பர் மலைக்கு வந்தார்கள் என்றும் நம்பப்படுகிறது. அம்பாஜி பீடம் ராமாயண, மகாபாரதக் காலங்களுக்கு முந்தையதாகத் தெரிகிறது. பிற்காலத்தில் விமல் ஷா என்ற அமைச்சர் பதினோராவது (தில்வாரா கோயில்களை கட்டியவர்) தன் திட்டத்தை துவங்கும் முன்அம்பாஜியை வணங்கினார்.
இப்போது நாம் பார்க்கும் கோவில் 1970களில் ஆகம சாஸ்திரங்களின்படி கட்டப்பட்டது. பிரபலமான தில்வாரா (மவுண்ட் அபு ) கோயில்களுக்கும் இதற்கும் கட்டிடக் கலையில் ஒற்றுமை இருப்பதைக் காண முடிகிறது. 30 அடி உள்ள பிரதான கோபுரம் சிறிய கோபுரங்களால் சூழப்பட்டுள்ளது. சோலங்கி பாணியில் தூய வெண்மை நிற சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. உயரமான கோபுரம் தங்கக் காப்பில் மிளிர்கின்றது. இதன் உச்சியில் பறக்கும் கொடி இந்த பிராந்தியமெங்கும் அம்மனின் சாந்நித்தியம் நிறைந்திருப்பதை குறிப்பால் உணர்த்துகிறது. அற்புதமாகச் செதுக்கப்பட்ட கோபுரங்கள், தூண்கள், உட்கூரைகள் கோயிலுக்கே ஒரு கம்பீரத்தை அளிக்கின்றன. கருவறை நடுநாயகமாக அமைந்துள்ளது. கோபுரத்தில் கலசமும் பொருத்தப்பட்டுள்ளது. பளிங்குக்கு பெயர் பெற்றதால் இந்த ஊர் அரசுரி (அரஸ் என்றால் பளிங்கு) என்றும் அழைக்கப்படுகின்றது.
அதனால் இந்தக் கடவுளின் அதிகாரபூர்வமான பெயர் ‘அரசுரி அம்பாஜி’. இந்தக் கோயிலின் பெரிய அதிசயம் அம்மனுக்கு சிலை கிடையாது. யநதிர வடிவில் வழிபடப்படுகிறது. சக்தி யந்திரமாக குறிப்பிடப்படும் இது தங்க கவசம் கொண்ட 51 தெய்வீக எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தட்டாக காட்சி தருகின்றது. யந்திரம் குகை போலுள்ள இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது பூசாரிகளால் அம்மனை போன்று தோற்றமளிக்கும்படி அலங்கரிக்கப்படுகிறது. இந்த ஒப்பனை தினமும் நவ துர்க்கைகளின் தோற்றத்தில் மாறிமாறி செய்யப்படும். இந்த யந்திரம் அதிக சக்தி வாய்ந்ததினால் மக்களின் பார்வைக்கு நேரடியாக வைக்கப்படுவதில்லை. பூசாரிகள் கூட கண்களை கட்டிக் கொண்டுதான் யந்திரத்திற்கு பூஜை செய்கிறார்கள். முன்னால் இருக்கும் மண்டபத்தில் கருவறையை நோக்கி உள்ள அம்மனின் வாகனமான சிம்மம் சிவப்பு நிறத்தில் நம் கவனத்தை ஈர்க்கிறது.
சுமங்கலிப் பெண்கள் சாத்தும் குங்குமத்தினால் இந்த நிறம் ஏற்படுகிறது. மக்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்காக மண்டபங்கள் உள்ளன. குறைந்தது 45 நிமிடங்களாவது காத்திருக்க வேண்டி வரும் என்று பலகைகள் அறிவிக்கின்றன. சாதாரண நாட்களில் லட்சத்தைத் தொடும் கூட்டம் விழாக் காலங்களில் இருபது லட்சத்தை தாண்டுமாம். வரும் வழியிலேயே பக்தர்கள் சாரை சாரையாக சிவப்பு உடை அணிந்து சைக்கிளிலும், நடந்தும் தொலை தூரத்திலிருந்தும் வருகிறார்கள். மும்பையிலிருந்தும் கால்நடையாக வருகிறார்கள். இவர்கள் கொண்டு வரும் சிவப்பு நிறக் கொடிகள் காற்றில் அசைந்து வழியெங்கும் பாரத தேசத்தின் ஆன்மிகச் செழுமையை பரப்புகின்றது. இங்குள்ள சுற்றியிருக்கும் மலைகளில் கோயிலுக்கு 3 கி.மீ. தொலைவிலுள்ள கப்பார் மலை உச்சிதான் அம்பாஜியின் மூலமுதலான சக்தி பீடமாகக்கருதப்படுகின்றது. இங்கும் தெய்வீக மணம் கமழ்கிறது. வேதங்களில் சொல்லப்படும் சரஸ்வதி நதி இந்த மலையடிவாரத்தில்தான் ஓடிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
அம்பாஜி கோயிலுக்கு வருவோர் இங்கு வந்தால்தான் அந்த யாத்திரை முழுமை பெறும் என்பது ஐதீகம். சுமார் 1500 அடி உயரமுள்ள இந்த மலையை கேபிள் கார் மூலமாகவோ 900 படிகளை ஏறியோ அடையலாம். மிகச் சிறிய கோயிலாக இருப்பினும் பிரதான கோயிலின் அதிர்வுகளை உணர முடிகின்றது. இங்கு எப்போதும் ஜோதி எரிந்து கொண்டே உள்ளது. இதுதான் சரியாக இதயம் விழுந்த புள்ளி என்று நம்பப்படுகிறது. இரு பைரவர்கள் சந்நதிக்கு காவலாக நிற்கிறார்கள். உள்ளே ஜோதி ஸ்வரூபிணியாக அம்பாஜி அருள்கிறாள். அம்பாஜியின் கால் தடங்களும், ரதத்தின் சக்கரங்களும் மிகவும் புனிதமாக கருதப்பட்டு இங்கே வழிபடப்படுகின்றன. சென்னையிலிருந்து புறப்படும் ஆஜ்மீர் மற்றும் ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றால் அபுரோட் ரயில் நிலையத்தில் இறங்கி விடலாம். அங்கிருந்து 20 அல்லது 30 நிமிடங்களுக்குள் அம்பாஜியை அடைந்து விடலாம்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment