Sunday, 28 April 2019

இழந்த பதவியை மீட்பார் சிஷ்டகுரு நாதேஸ்வரர்.!!

கடலூர் மாவட்டம் திருத்துறையூரில் அருட்பாலிக்கும் ஈஸ்வரன், சிஷ்டகுரு நாதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சிஷ்ட குருவாக சிவன் அழைக்கப்பட காரணம் அவர் நடத்திய திருவிளையாடலே ஆகும். சைவப் பெருநெறியை பரப்புவதற்காக சுந்தரரை ஆட்கொண்ட ஈசன், அவருக்கு (ஞான) தவநெறி அருள்வதற்காக திருத்துறையூருக்கு வரவழைத்தார். அவ்வாறு சுந்தரர் வரும்போது ஈசன் அங்கு இல்லை. ஈஸ்வரன் இல்லை என்றவுடன் சுந்தரர் திரும்பிச்செல்ல முயன்றார். அப்போது ஈசன் வயோதிகர் வடிவில் வந்து சுந்தரரை தடுத்து நிறுத்தி யாரைத் தேடுகிறீர்கள் என்று வினவ, அதற்கு சுந்தரர், இங்கு சிவபெருமான் காட்சி கிடைக்கும் என ஏங்கினேன். ஆனால் கிடைக்கவில்லை என்று கூறினார். அவ்வாறு சுந்தரர் பேசிக் கொண்டிருக்கும் போதே வயோதிகர் அவ்விடம் விட்டு அகன்றார். வந்த வயோதிகரை காணவில்லையே என்று சுந்தரர் சுற்றும் முற்றும் தேடினார். அந்த நேரம் வான்வெளியில் அசரீரி ஒலி வந்தது. ‘எதிர் இருக்கும் கோபுரத்தைப் பார்!’ என ஒலிக்க, உடனே சுந்தரர், கோபுரத்தை பார்த்தார். அங்கே ஈஸ்வரர், ஈஸ்வரியுடன் இடப வாகனத்தில் அருள்காட்சி அளித்தார்.


‘‘மலையார் அருவித்திரள் மாமணி உந்தி’’
 என்று தொடங்கும் தவநெறிப் பதிகத்தை பாடினார்.
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேவன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி

என்று சிவபுராணம் கூறுவதைப் போன்று சுந்தரருக்கு விழிகளெல்லாம் பனிக்க கரமலர்களால் வணங்கி தலை தாழ்த்த, மனத்துள் சிவம் கம்பீரமாக எழுந்தருள, விநாயகப் பெருமானை சாட்சியாக வைத்து, சுந்தரருக்கு இறைவனே சற்குருவாக அமைந்து குருஉபதேசம் செய்தருளினார். இறைவனே உபதேசம் செய்ய குருநாதராக அமர்ந்த காரணத்தால் அதுவரை இத்தல இறைவன் பூங்கோதை நாயகி உடனுறை பசுபதீஸ்வரர் என்ற திருப்பெயரோடு அழைக்கப்பட்டவர்,  இந்த நிகழ்விற்கு பின் சிவலோக நாயகி உடனுறை சிஷ்ட குருநாதர் என சிறப்பு பெயர் பெற்றார். இத்தகைய பெருமை மிக்க இத்திருக்கோயிலில் முகப்பில் பெரிய அழகிய தாமரை வடிவில் பலிபீடம். நெடிதுயர்ந்து திகழும் செப்பிலான மகா கொடிமரம், சிறிய வடிவிலான நந்தியம் பெருமான் ஆழ்ந்த சிவச்சிந்தனையோடு அமைதியாக காட்சி தரும் பேரழகு. அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் தனி சந்நதியில் அருட்பாலிப்பது மிகவும் விசேஷம்.

வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான், பாலமுருகன், கஜலட்சுமி, நவகிரக மூர்த்திகள், சூரியன் வழிபட்ட லிங்கத்திருமேனி. நால்வர் சந்நதி என அமைந்துள்ள விதம் அழகும் அற்புதமும் வாய்ந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக திருக்கோயில் முகப்பு வாயிலில் வடக்கு நோக்கிய பெரிய சந்நதியில் சிறிய திருமேனியுடன் வடக்கு நோக்கி அம்பிகை அருள்மழை பொழிகின்றமை மிகவும்  சிறப்புக்குரிய அம்சமாகும். விநாயகப் பெருமானை சாட்சியாக வைத்து சுந்தரர், இறைவனிடம் உபதேசம் பெரும் அருள்கால்சியை இத்தல கோஷ்டத்தில தென்திசை நோக்கி சாட்சி விநாயகர், சிவபெருமான், சிவபார்வதி சுந்தரர் அழகிய திருக்காட்சியுடன் நமக்கு அருட்பாலிக்கின்றார்கள்.ராமபிரான் சிவபூஜை செய்த திருக்கோலத்தை உணர்த்தும் விதமாக தனி சந்நதி உள்ளது. அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் என்று பக்தியுடன் அழைக்கப்பெறுகின்றது. இச்சந்நதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அதிக பலம் மிக்க, பீமன் வழிபட்ட லிங்கம் கிழக்கு நோக்கி தனி சந்நதியும் அமைந்துள்ளது. அழகிய பெரிய சிவலிங்க திருமேனியைக் கண்டு தரிசிக்கலாம். இத்தலத்தில் சிஷ்ட குருநாதர் சந்நதியை எதிர்நோக்கியவாறு சிவஞான சித்தியார் எனும் நூலை இயற்றியவரும், சைவ சமய சந்தான குரவர்களுள் ஒருவரும், இத்தலத்திலேயே பிறந்து வளர்ந்து சகலாகம பண்டிதர் என சிறப்பு பெற்ற மெய்ஞானியாக அருள் வாழ்க்கை வாழ்ந்தவருமான அருணந்தி சிவாச்சாரியார் சிவமுக்தி அடைந்த சந்நதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி பூரத்தன்று குருபூஜை இங்கு சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. அருணந்தி சிவாச்சாரியார் சுவாமிகள் நடுநாட்டில் உள்ள திருமுனைப்பாடி நாடு என்ற பகுதியில் திருத்துறையூரில் பிறந்தவர். ஆதிசைவம் மரபிலே வந்தவர். இவர் சகல ஆகமங்களையும் சிறப்புடன் பயின்று ‘பாண்டித்யம்’ பெற்றிருந்த காரணத்தால் சகலாகம பண்டிதர் எனப்பெயர் பெற்றறு பெருஞ்சிறப்புடன் திகழ்ந்தார். 

இவர் இயற்பெயர் சதாசிவ சிவாச்சாரியார் என்பதாகும். மெய் கண்டாரின் குலகுருவாக விளங்கியவர் மெய்கண்டாரின் அருளாற்றலை கண்டு வியந்து அவருக்கே முதன்மை சீடராகி சிவஞான போதத்தை பயின்றார். இவர், இத்தலத்திலேயே சிவப்பேறும் சிவமுக்தியும் பெற்று தனி ஜீவ நிலை கொண்டுள்ளார். இத்தல அம்பிகையின் திருநாமம் அருள்மிகு சிவலோக நாயகி. சுந்தரருக்காக ஈசனே வயோதிக வடிவில் வந்ததால் ஸ்ரீவிருத்தாரீஸ்வரர் சந்நதியும், ஸ்ரீதடுத்தாட்   கொண்டேஸ்வரர்  சந்நதியும் இத்தலத்தில் அமைந்துள்ளது. இவ்விரு சிறப்புகளும் சுந்தரருக்காக அருட்பாலித்தது பெருஞ்சிறப்புகளாகும். விருத்த  வயோதிகர், தாரீ  தரித்தவர் என்பது விளக்கமாகும். ஈசனே தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தியாக ஞான குருவாக அமர்ந்துள்ளார். மேற்கு நோக்கி அனுக்கிரக மூர்த்தியாக அருட்பாலிக்கின்றார் இத்தல ஈசன். இழந்த பதவி, செல்வாக்கு, செல்வம் மீண்டும் பெற்று ராஜ யோகம் மற்றும் ஞானயோகம் பெற இத்தலத்தை மனதாற தரிசித்தாலே போதுமானது. பண்ருட்டி  அக்கடவல்லி பேருந்தில் பயணம் செய்து திருத்துறையூர் கோயில் வாசலிலேயே இறங்கிக் கொள்ளலாம். பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து திருத்துறையூருக்கு பேருந்து வசதி உண்டு...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        _என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment