முதன் முறையாக வடநாட்டு யாத்திரை சென்றிருந்த பொழுது, மதுரா நகரில் உள்ள அருங்காட்சியகத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு சர்வதோபாத்ர சிவலிங்கம் ஒன்றினைப் பார்த்து வியந்தேன். அந்த சிவலிங்கம் ஒன்பதாம் நூற்றாண்டினைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதோடு மட்டுமல்ல, குப்தர் கால சர்வதோபாத்ர சிவலிங்கம் ஒன்றும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அந்த சிவலிங்கங்களைக் கண்டபின், வழிபாட்டில் உள்ள சர்வதோபாத்ர சிவலிங்க தரிசனம் கிட்டுமா என்ற ஏக்கம் அடியேனின் உள்ளத்தில் எழுந்தது.
இந்த முறை வடநாட்டு யாத்திரை சென்றபொழுது, சிவப்பரம்பொருளின் அருளால் வழிபாட்டில் உள்ள சர்வதோபாத்ர சிவலிங்க தரிசனம் அடியேனுக்குக் கிட்டியது. அந்த அற்புதமான இடம் ராஜஸ்தான் மாநிலம் கைலாசபுரி, ஏக்லிங்க்ஜி திருக்கோயில்.
சரி , சர்வதோபாத்ர சிவலிங்கம் என்றால் என்ன ?
முதற்கண் சர்வதோபாத்ர என்பது நான்கு பக்கமும் என்று பொருள். இதனைச் சதுர்திக் என்பர். திருக்கோயில் சர்வதோபாத்ர முறையில் அமைந்திருக்கும் நான்கு புறமும் ராஜகோபுரங்கள் உடையவை; (சிதம்பரம், மதுரை ,திருவண்ணாமலை போன்றவை) இறைவன் உறையும் கருவறை சர்வதோபாத்ர முறையில் அமைந்திருக்கும். கருவறைக்கு நான்கு புறங்களிலும் வழிகள் இருக்கும், (நேபாள நாட்டில் உள்ள காத்மண்டு பசுபதிநாதர், காசி விஸ்வநாதர் போன்றவை) அதேபோல் சிவலிங்கத்தின் பாணத்தில் நான்கு பக்கங்களிலும் முகங்கள் கொண்ட சிவலிங்கங்களை, சதுர் முகலிங்கம் அல்லது சர்வதோபாத்ர லிங்கம் என்று அழைப்பர்.
இந்த இடத்தில் முக லிங்கங்கள் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது. பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், வடிவத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது. லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு.
லிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதாரமும் விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன. இதன் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம். இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது. இந்த லிங்கங்களுக்கு உருவமும் உண்டு, அருவலிங்கம் என வெறும் பாணம் மட்டுமே உள்ள லிங்கங்களும் உண்டு. முகலிங்கங்கள் உருவம், அருவம் இரண்டும் அமையப் பெற்றிருக்கும். அடிப்பகுதியான பிரம்ம பாகமும், ஆவுடையும் இருக்கும், நடுவில் உள்ள பாணப் பகுதியில் முகம் இருக்கும். இப்படிப் பட்ட லிங்கங்கள் நம் நாட்டை விட நேபாளத்திலேயே அதிகம் காணப்படுகின்றது.
முக லிங்கம் என்பது ஒரு முக லிங்கத்தில் இருந்து ஐந்து முக லிங்கங்கள் வரை உடையவை ஆகும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கும். ஆறாவது முகம் அதோ முகம் என்று சொல்லப்படும். அது அநேகமாய் மறைந்தே இருக்கும். அது பாதாளத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும், எனவும், சக்திகள் அதில் இருந்தே ஆரம்பம் எனவும் சொல்லப் படுகிறது.
இந்த ஆறாவது முகத்தில் இருந்து தான் சிவஸ்வரூபம் ஆன சுப்ரமண்யர், நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது. பரம்பொருளான அந்த ஈசனுக்கு ஆறுமுகங்கள் என்பது சிவனடியார்களின் வழக்கு என்றாலும் நம்மால் அறியும் வகையில் இருப்பவை ஐந்து முகங்களே ஆகும். அதனால் தான் சுப்ரமணியருக்கு, அவர் சிவப்பரம்பொருளின் வடிவம் என உணர்த்தும் வகையில் ஆறுமுகங்கள் அமைந்தது எனவும் புராணங்கள் கூறுகின்றன.
இப்போது ஒவ்வொரு முகமும் நோக்கும் திசையையும், அதன் முகங்களின் நிறங்களையும் பார்க்கலாம். கிழக்கே பார்த்து இருக்கும் முகம் “தத் புருஷம்” என அழைக்கப்படுகிறது. இது பள பளவென்ற பொன் நிறத்தில் காணப்படும். தென் திசையை நோக்கிக் கொண்டிருக்கும் முகம் ஆனது “அகோரம்” என்று அழைக்கப் படும், இது கரு நிறத்தில் காணப்படுகிறது. மேற்கே பார்த்துக் கொண்டிருக்கும் முகம் “சத்யோஜாதம்” என அழைக்கப்படும்.
இது தூய வெண்மை நிறத்தில் காணப்படும். வடக்கே பார்க்கும் முகம் “வாமதேவம்” எனப்படும், இது சிவந்த நிறத்தில் காணப்படும். ஈசான்ய திசை என்று அழைக்கப்படும் வட கிழக்குத் திசையில் காணப்படுவதோ, “ஈசான்ய முகம்” என்றே அழைக்கப்படும். இது பளிங்கு நிறத்தில் ஒளிர்கிறது. இந்த முக லிங்கங்களை வழிபட்டால் உலகில் வாழும் காலத்தில் - இம்மையில் எல்லாவித சுக போகங்களும் மறுமையில் சிவலோகப்பதவியும் கிட்டும் என்கின்றன புராணங்கள்.
சரி ,சதுர்முக லிங்கத்திற்கும் சர்வதோபாத்ர லிங்கத்திற்கும் என்ன வேறுபாடு ?
சதுர்முகலிங்கம் என்பது, சிவப்பரம்பொருளின் ஆறு முகங்களில் நான்கு முகங்களைப் பாணத்தில் கொண்டுள்ளதாகும் . (கிழக்கே பார்த்து இருக்கும் முகம் ‘தத் புருஷம்’, மேற்கே பார்த்துக் கொண்டிருக்கும் முகம் ‘சத்யோஜாதம்’ ,தென் திசையை நோக்கிக் கொண்டிருக்கும் முகம் ஆனது ‘அகோரம்’ வடக்கே பார்க்கும் முகம் ‘வாமதேவம்’ ஈசான்ய திசை என்று அழைக்கப்படும் வடகிழக்குத் திசையில் காணப்படுவது, ‘ஈசான்ய முகம்’ ஆறாவது முகம் அதோ முகம் என்று சொல்லப்படும்.
பாதாளத்தை நோக்கிய முகம். இவற்றில் தத் புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம் என்னும் நான்கு முகங்கள் சிவலிங்க பாணத்தில் இருந்தால் அந்த சிவலிங்கம் சதுர்முகலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. நேபாள காத்மண்டு பசுபதிநாதர் சதுர்முக லிங்கம் மார்பு வரையிலும், இரு கரங்களுடனும் காட்சி தருகிறது. நான்கு முகங்கள் இருப்பதால் அங்கே நான்கு வாசல்களும் உண்டு.
ஒவ்வொரு வாசலிலும் போய்த் தனித்தனியாகத் தரிசனம் செய்யும் வசதியும் உண்டு. இதுதவிர, காஞ்சியில் கச்சபேஸ்வரர் கோயிலிலும், திருவதிகை, திருவண்ணாமலை, திருவானைக்கா ஆகிய தலங்களிலும் காளஹஸ்திக்கு அருகே உள்ள மலை மண்டபத்திலும் சதுர்முக லிங்கங்கள் உள்ளன . சர்வதோபாத்ர லிங்கம் பாணத்தில் நான்கு முகங்கள் கொண்டிருப்பினும் அந்த முகங்கள் நான்கும் பின்வருமாறு அமைக்கப்பட்டிருக்கும் மூல வாசலை நோக்கி உள்ள திருமுகம் சிவப்பரம் பொருளின் திருமுகம் சிவப்பரம்பொருளுக்கு இடப்பாகத்தே உள்ள திருமுகம் திருமாலின் திருமுகம் .
சிவப்பரம்பொருளுக்கு வலப்பாகத்தே உள்ள திருமுகம் பிரம்மாவின் திருமுகம் .சிவப்பரம்பொருளுக்குப் பின்புறம் உள்ள திருமுகம் சூரியனின் திருமுகம் . இவ்வாறு சிவப்பரம்பொருள், திருமால், பிரம்மா, சூரியன் ஆகிய நால்வர் முகங்கள் சிவலிங்க பாணத்தில் இருந்தால் அந்த சிவலிங்கம் சர்வதோபாத்ர லிங்கம் என்று அழைக்கப்படும். சில இடங்களில் அவ்வத் தலத்தினின் வரலாற்றின் படி இவ்வரிசை மாறுபடும்.
அடியேனுக்குச் சர்வதோபாத்ர சிவலிங்க தரிசனம் உதய்பூர் கைலாசபுரி, ஏக்லிங்க்ஜி ஆலயத்தில் கிடைத்தது. ஏக்லிங்க்ஜி பிரபு என அழைக்கப்படும் சிவபெருமானின் கோயில் அமைந்திருக்கும் ஊரின் பெயர் கைலாஷ்புரி என்றாலும், பெரும்பாலும் ஊரும் ஏக்லிங்க்ஜி என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது. கர்ஸ்குண்ட், துளசிகுண்ட் என்னும் தீர்த்தங்கள் உள்ளன.(குளங்கள்) இவற்றிலிருந்துதான் திருக்கோயிலுக்குத் தீர்த்தம் எடுக்கப்பட்டு வருகிறது.
ஏக்லிங்க்ஜி - மேவார் மன்னர்களின் பிரதான தெய்வம். பொது யுகம் 734-ஆம் ஆண்டு பாப்பாராவல் எனும் மன்னரால் அமைக்கப்பட்ட கோயில் இது. பின்னர் வந்த பல மேவார் மன்னர்களும் தொடர்ந்து ஆதரித்த, பராமரித்த கோயில். இன்றைக்கு வரை மேவார் ராஜ வம்சத்தினர் இந்த கோயிலைத் தங்களது பிரதான கோயிலாக வைத்திருக்கிறார்கள்.
மேவார் மன்னர்கள், தங்களை மகாராஜாக்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை. ‘‘மகாராணா’’ என்று அழைத்துக் கொள்வார்கள். ‘‘ஏக்லிங்க்ஜி’’ என்னும் சிவப் பரம்பொருளையே தங்கள் நாட்டின் மன்னராக அவர்கள் வைத்திருந்தார்கள். ‘’ மகாராணா ‘’ என்றால், ஏக்லிங்க்ஜியின் பிரதம அமைச்சர் என்று பொருள். இப்படி ‘’ ஏக்லிங்க்ஜி ‘’ என்னும் சிவப் பரம்பொருளையே தங்கள் நாட்டின் மன்னராகக் கொண்டு அவர்கள் ஆட்சி புரிந்து வந்தார்கள்.
இந்தக் கோயிலின் வரலாறு வெகு சுவாரசியமானது. பாப்பாராவல் என்னும் மேவார் ராஜ வம்சத்து மன்னன் தாயாதிகளினால் பாதிக்கப்பட்டு, தன தாயுடன் அஞ்ஞாதவாசம் இருந்தான். காட்டில் ஒரு மகிரிஷியிடம் தனது துயரக்கதையைத் தெரிவிக்க, அவர், ‘‘மகனே இங்கிருக்கும் ஏக்லிங்க்ஜியான சிவப்பரம்பொருள் கட்டளையினால் நான் நாளை, சிவலோகம் செல்லவிருக்கிறேன். அதனால், நாளை காலை, நீ நீராடி, ஏக்லிங்ஜி நினைவாக விடியற்காலையிலேயே வந்துவிடு. அவரருள் உனக்குப் பூரணமாகக் கிடைக்கும் நேரம் வந்துவிட்டது’’ என்று கூறி ஆசிர்வதித்தார்.
மறுநாள், பாப்பாராவல், சிறிது காலதாமதமாக ஆசிரமத்திற்குச் செல்ல, முனிவர் ஆகாயத்தில் செல்லக் கண்டு, ‘‘குருதேவா’’ என அழைக்க, ‘‘காலதாமதமாக வருகிறாயே பாப்பாராவல்; பரவாயில்லை; ஏக்லிங்க்ஜியான சிவப் பரம்பொருள் கட்டளையினால் உன்னை ஆசிர்வதிக்கிறேன் வாயைத் திற’’ என தாம்பூலத்தை உமிழ, எச்சில் என பாப்பாராவல் தலைகுனிய, அது அவனின் காலில்பட, ஏக்லிங்க்ஜி கூறியபடி நீ தாம்பூலச் சாற்றை வாயில் வாங்கவில்லை; அதனால் மேவாருக்கு மட்டும் அரசனாவாய்; இவ்வுலகை ஆளும் வாய்ப்பு பறிபோய்விட்டது என்றார்.
இவ்வாறாக மேவாரின் மணிமுடி பாப்பாராவலுக்கு வந்து சேர்ந்தது. பாப்பாராவால், மேவார் ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். தன் தலைநகரான நாகதாவில் ஏக்லிங்க்ஜி நாதருக்கு ஆலயம் அமைத்தார். நாகதா இன்று ஏக்லிங்க்ஜி (கைலாசபுரி) என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. உதய்பூர் நகரிலிருந்து ஆஜ்மீர் செல்லும் பாதையில் இருக்கிறது இந்தக் கோயில் அமைந்துள்ளது. பிரமாண்டமான கோயில். சிற்பங்கள் பல இருக்கும் இந்தக் கோயில் மிகவும் பிரபலமான கோயிலும் கூட.
இரண்டு அடுக்குகளில், பிரமிட் வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும். வாயிலில் வெள்ளியிலன நந்தி தேவர் அருள, உள்ளே கருப்பு மார்பிள் கல்லில் ஒரு நந்தியும், வெண்கலத்தில் ஒரு நந்தியும் உண்டு. இங்கே இருக்கும் நான்கு முகங்கள் கொண்ட ஏக்லிங்க்ஜி என அழைக்கப்படும் சிவபெருமான், கருப்பு நிற மார்பிள் கல்லில் அமைக்கப்பட்டிருக்கிறார். சிவபெருமானின் நான்கு முகங்களும் அவரது நான்கு வடிவங்களைக் குறிக்கின்றன. கிழக்கு நோக்கிய முகம் சூரியனையும், மேற்கு நோக்கிய முகம் பிரம்மாவையும், வடக்கு நோக்கிய முகம் விஷ்ணுவையும், தெற்கு நோக்கிய முகம் சிவபெருமானையும் குறிக்கிறது. என்னுள் அனைத்தும் அடக்கம் என்பதைச் சொல்லும் வடிவம்.
ஷிவ் பரிவார் என வடக்கே அழைக்கப்படும் சிவ குடும்பத்தின் அங்கத்தினரான சிவன், பார்வதி, பிள்ளையார் மற்றும் கார்த்திகேய் என அழைக்கப்படும் முருகனுக்கும் இங்கே இடம் உண்டு. கூடவே சரஸ்வதி தேவிக்கும் யமுனா தேவிக்கும்! இந்தக் கோயில் ஏற்கனவே சொன்னதுபோல மேவார் ராஜாக்களின் பிரதான கோயில் என்பதால் நிறைய பொருட்கள் வெள்ளி அல்லது தங்கத்தில் இருக்கின்றன. ஏக்லிங்க்ஜி மஹராஜ் கழுத்தில் இருக்கும் நீண்ட பாம்பு - வெள்ளியில்.
கோயில் வாயிலில் இருக்கும் மிகப்பெரிய கதவு கூட வெள்ளிதான் - அதில் ஒரு கதவில் பிள்ளையார் உருவமும், மறு கதவில் கார்த்திகேய் என்னும் முருகப்பெருமானின் உருவமும் இருக்கிறது. காளிமாதாவிற்குத் தனிஆலயம் உண்டு.. அம்பாமாதா, கல்காமாதா என்னும் தேவியர்களுக்குச் தனிச் சந்நதிகள் உள்ளன. வெண்பளிங்கினால் ஆன, இரண்டு அடுக்குகளில், பிரமிட் வடிவத்தில் அமைக்கப்பட்ட இந்த, ஏக்லிங்க்ஜி பிரபு என அழைக்கப்படும் சிவபெருமானின் கோயிலாகும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment