Sunday, 28 April 2019

சோகம் களைவார் சோமநாதேஸ்வரர்.!!

தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும் வாசுகி எனும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலை கடைந்தார்கள். வலி பொறுக்க முடியாத வாசுகி ஆலம் எனும் கடும் விஷத்தைக் கக்கியது. அதே நேரத்தில் பாற்கடலில் இருந்து ஆலம் எனும் விஷம் வெளிப்பட்டது. இரண்டு விஷங்களும் சேர்ந்து ஆலாலம் எனும் கொடிய நஞ்சாகியது. உலகத்தைக் காக்கும் பொருட்டு ஈசன் அந்தக் கொடிய விஷத்தை விழுங்க, கணவனைக் காக்க பார்வதி விஷத்தை ஈசனின் கண்டத்தில் (தொண்டையில்) நிறுத்தினாள். ஈசன் நீலகண்டன் ஆனார். பாற்கடலிலிருந்து காமதேனு முதலானவையோடு அமிர்தமும் வெளிப்பட்டது. 

அமிர்தத்தைப் பெற தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. திருமால் பேரழகு மோகினியாய்  உருமாறி, தானே அனைவர்க்கும் அமிர்தம் வழங்க முன்வந்தார். 

அசுரர்களை முற்றிலும் புறக்கணித்து தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தை வழங்கவேண்டுமென்பதுதான் அவருடைய நோக்கம். தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் மறுபுறமும் அமர, அமிர்தப் பங்கீடு ஆரம்பமானது. அப்போது ஸ்வர்பானு என்ற அசுரன் தேவர்போல் உருமாறி, சூரியசந்திரருக்கு நடுவே அமர்ந்து அமிர்தத்தை வாங்கி உண்டு விட்டான். இதைப் பார்த்துவிட்ட சூரிய, சந்திரர், மோகினியிடம் சைகையால் தெரிவித்தார்கள். சினம் கொண்ட மோகினி தன் கைக் கரண்டியால் ஸ்வர்பானுவின் தலையில் ஓங்கி அடித்தாள். அவன் இரண்டு துண்டானான். ஒரு துண்டு அசுரத் தலை, பாம்பு உடல் கொண்டதாகவும்; இன்னொரு துண்டு, நாகத் தலை, அசுர உடல் கொண்டதாகவும் மாறின. முதலாவது ராகுவாயிற்று; இரண்டாவது கேதுவாயிற்று. பின்னர் ராகுவும், கேதுவும் தவம் செய்து கிரக பதவி பெற்றார்கள். ஸ்வர்பானுவைக் காட்டிக் கொடுத்த பாவம் சூரிய, சந்திரரைச் சூழ்ந்தது. 

அவர்கள் பரமேஸ்வரனிடம் முறையிட, ‘பூவுலகில் எம்மை நோக்கித் தவம் செய்யுங்கள்; சாப விமோசனம் தருவோம்’ என திருவாய் மலர்ந்தருளினார்.  அதே சமயம் அமுதம் கிடைக்காத கோபத்தில் அசுரர்கள் வாசுகியை சுருட்டி எறிய, அது பூவுலகில் விழுந்தது. ஈசன் தன் விஷத்தை விழுங்குமாறு ஆயிற்றே என உளம் நொந்த வாசுகி அவரிடம் மன்னிப்புப் பெற, தான் விழுந்த இடத்திலேயே தவம் செய்யத் தொடங்கியது. சூரிய, சந்திரரும் அதே இடத்தில் தவம் மேற்கொண்டார்கள். மூவரின் தவத்தால் மனம் மகிழ்ந்த முக்கண்ணன் அவர்களுக்கு தரிசனம் தந்தார். வாசுகி, ‘என் விஷத்தை தாங்கள் விழுங்க நேர்ந்த பாவத்தைப் பொறுத்தருளுங்கள். நான் தவம் செய்த இத்தலத்தில் கோயில் கொண்டு தங்களை வழிபடுவோரின் நாக தோஷங்களை நீக்கி அருளுங்கள்’ என்று கேட்டுக் கொண்டது. சூரியன், ‘யாருடைய ஜாதகத்திலாவது சூரிய அமைப்பு நீசமாக இருந்தால், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தாங்கள் விலக்க வேண்டும்’ என்றும் வேண்டிக் கொண்டான். 

சந்திரனும், தான் தவமிருந்த தலத்தில் தோன்றியதால், ஈசன் சோமநாதேஸ்வரர் என்று தன் பெயராலேயே வழிபடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். மூவருக்கும் அவர்கள் கேட்ட வரங்களைத் தந்து அருள் புரிந்தார் அரன். விஜயநகரப் பேரரசின் நாயக்கர் காலத்தில் உருவாகிய கோயில் இது. மகாகணபதியின் சந்நதியை அடுத்து, சூரியனும், சந்திரனும் தனிச் சந்நதிகளில் அருள்கிறார்கள். இவர்களை முறையாக வழிபட சூரிய, சந்திர தோஷங்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். வாசுகி பாம்பை நினைவுறுத்தும் வகையில் பிராகார வலம் வருகையில் லிங்கோத்பவருக்கு அருகில் சுயம்புவான புற்று உள்ளது. இந்த புற்றுக்குப் பால் வைத்து வணங்கினால் நாக தோஷங்களால் ஏற்பட்ட தடைகள் நீங்கி, மனம் மகிழ சுப விசேஷங்கள் நடைபெறுவதாகக் கூறுகிறார்கள். ஈசன் அழகே உருவாய், அருளே குணமாய் திகழ, அன்னை சோமசுந்தரி பாசம், அங்குசம் தரித்து அபய வரதத்துடன் அடைக்கலம் தருகிறாள். இத்தலத்தில் கால பைரவரும், தம்பதி சமேதராய் நவகிரகங்களும் தனித்தனி சந்நதிகளில் அருள்கிறார்கள். தர்மபுரி, கடத்தூர்  பாப்பிரெட்டிபட்டி வழியில் கடத்தூரிலிருந்து 5 கி.மீ தொலைவில் புட்டிரெட்டிபட்டி உள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        _என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment