உயர்ந்த மதிப்பு மிக்க பலவகையான பொருட்களைத் தொகுத்து வகைப்படுத்தி வைக்கும் வேளையில் அவற்றுள் உயர்ந்ததை அவற்றின் நடுவே வைப்பது வழக்கம். வானில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களுக்கு நடுவே நிலவு பிரகாசிக்கிறது. மக்கள், மந்திரி, சுற்றத்தினருக்கு நடுவே அரசன் கொலு வீற்றிருக்கின்றான். தேவர்களுக்கு நடுவே தேவாதி தேவனாக மகாதேவன் வீற்றிருந்து அவர்களது பூஜையை ஏற்றுக்கொள்கிறார். மணி மாலையின் நடுவே மரகதப் பதக்கம் விளங்குகிறது. ருத்திராட்ச மாலையின் நடுவே நாயக மணி இருக்கிறது. அதுபோல் மந்திர நாயகமான ‘நமசிவாய’ என்னும் பதம் மந்திரங்களுக்கு நடுவே ஒளிர்கின்றது.
இதயமானது உடலின் நடுவே மார்பின் மையத்தில் இருந்து உடலை இயக்குகிறது. அதுபோல் நமசிவாய என்னும் அஞ்செழுத்து மகாமந்திரங்களின் நடுவே அவற்றின் இதயமாக இருந்து அவற்றை இயக்குகிறது. நமசிவாய மந்திரம் வடமொழி வேதத்தின் நடுவிலும், தென்மொழி வேதமான தேவாரத்தின் நடுவிலும் இருந்து செயல்படுகிறது. இங்கு தமிழ், வடமொழி வேதங்களின் நடுவில் அவற்றின் இதயமாக இருந்து செயல்படும் ஐந்தெழுத்து பற்றிய செய்திகளைக் காணலாம்.
பஞ்சாட்சரம் வேத இதயம்:
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என வேதங்கள் நான்கு. இவற்றுள் முதல் மூன்றும் சிறந்ததாய் வேதத் த்ரயீ என வழங்கும். இந்த மூன்றில் நடுவிலுள்ளது யஜுர். அது ஏழு காண்டங்களை உடையது. அவற்றுள் நான்காவதாகிய நடுக்காண்டம் ஏழு சம்ஹிதைகளை உடையது. அந்த ஏழினுள் நான்காவதாகிய நடு சம்ஹிதையின் நடுவேயுள்ள ஸ்ரீ ருத்ராத்யாயம் என்னும் சதருத்ரீயத்தின் நடுவே நம: சிவாய என்னும் பஞ்சாட்சரம் மிளிர்கிறது. இவ்வாறு வேதத்தின் நடுவில் விளங்குவதால் பஞ்சாட்சரம் வேத இதயம் எனப்படும்.இதனைத் திரிபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் திருநாகைக் காரோணப் புராணத்தில் மிக அழகாகக் கூறுகிறார்.
மும்மறையுள் நடுமறையின்
முனிவிலெழு காண்டத்திற்
செம்மைதரு நடுக்காண்டஞ்
சேர்ந்தவெழு சங்கிதையில்
அம்மநடுச் சங்கிதையில்
ஆதியீ றொழித்துநடுப்
பொம்மல்உற அமர் மனுவின்
பொருளாவான் எவன் மைந்த
புண்டரீக முனிவர் முதற்காட்சிப் படலம்: 24
என்பதாகும். இதன் பொருள் - மூன்று வேதங்களுக்குள் நடுவதாக விளங்கும் யஜுர் வேதத்தின் ஏழு காண்டங்களில் செம்மை மிக்க நடு காண்டத்தில் உள்ள ஏழு சம்ஹிதைகளில் நடுச்சங்கிதையில் முதலையும் முடிவையும் ஒழித்து நடுவில் மூல மனு வீற்றிருக்கிறது என்பதாகும். (முதலையும் முடிவையும் ஒழித்த மூல மனு என்பது சிவாய என்பதாகும்.) இதை ஒட்டியே ஞானசம்பந்தர் வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நமச்சிவாயவே என்றும், அப்பர் சுவாமிகள் ‘‘அரு மறையின் அகத்தானை’’ என்றும், திருமூலர் ‘‘பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே’’ என்றும் அருளிச் செய்துள்ளார். தமாகிய மரத்தின் உச்சியில் பழுத்துள்ள பழம் பஞ்சாட்சரமே ஆகும். சமயாதீதப் பழம் இதுவேயாகும்.
பஞ்சாட்சரம் தமிழ் வேத இதயம்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய மூவர் தேவாரமும் தமிழ் வேதம், திராவிட வேதம் என அழைக்கப்பெறும். தமிழ் வேதமாகிய இந்தத் தேவாரம் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு உள்ளது. தேவார ஆசிரியர்களான அருளாளர்கள் மூவரில் நடுவராக இருப்பவர் அப்பர் சுவாமிகள். அவர் அருளிய பதிகங்கள் நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அந்த மூன்றில் நடுவில் உள்ளது ஐந்தாம் திருமுறை. அது நூறு பதிகங்களை உடையது. அவற்றுள் நடுப்பதிகம்-51 ஆவது திருப்பதிகம்-திருப்பாலைத்துறை திருக்குறுந்தொகை. விண்ணினார் பணிந்தேத்தும் என்று தொடங்கும் அப்பதிகம் பதினோரு திருப்பாக்களை உடையது. அவற்றுள் நடுவில் இருப்பதான ஆறாவது திருப்பாசுரம்.
‘‘விண்ணி னார்பணிந் தேத்த வியப்புறும்
மண்ணி னார் மற வாது‘சிவாய’ வென்று
எண்ணி னார்க்கிட மாஎழில் வானகம்
பண்ணி னார் அவர் பாலைத் துறையரே.’’
என்பதாகும். இந்தத் திருப்பாவின் நடுவில் ‘சிவாய’ என்னும் முத்தி பஞ்சாட்சரம் ஒளிர்கிறது. இவ்விதம் தமிழ் வேதம், வடமொழி வேதம் ஆகிய இரண்டின் நடுவிலும் இதயமாக இருப்பது பஞ்சாட்சரமேயாகும். அதை ஒட்டியே இரண்டும் ஒன்றே என்று கூறுகின்றனர். இரண்டும் ஒரே சக்தி படைத்தவை என்பதனாலேயே திருமறைக்காட்டில் வடமொழி வேதம் மூடிய கதவைத் தமிழ் வேதம் திறந்தது என்கின்றனர்.
விநாயகர் அகவலில் பஞ்சாட்சரம்
ஔவையார் அருளிய விநாயகர் அகவல் சிவயோக சாரம் என்று சொல்லத்தக்க சிறந்த தத்துவ நூலாகும். இதில், விநாயகப் பெருமான் அருளும் திறங்கள், குண்டலினி சக்தி, அதை எழுப்பும் விஷயம் போன்றவை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. இதில் ஒளவையார் தன்னை விநாயகர் ஆட்கொள்ள வேண்டி தாய்போல் தயவுடன் எழுந்தருளி வந்து பிறவி மயக்கம் அறுத்து முதல் ஐந்தெழுத்தான பஞ்சாட்சரத்தை உபதேசித்தார் என்று கூறுகிறார்.
மேலும், அவர் நமக்கு ஜபம் செய்வதற்குரிய உபதேசம் செய்தது பற்றிய செய்தியையும் குறிப்பிடுகிறார். இதனை அவர், சண்முகஸ்தூலமும் சதுர்முக சூட்சுமமும் எண்முகமாக இனிதெனக்கு அருளி என்னும் தொடரால் குறித்துள்ளனர். இங்கே சண்முக ஸ்தூலம் என்பது ஆறு எழுத்துக்களை உடையதான ஸ்தூல பஞ்சாட்சரம் ஆகும். ஓம் நமசிவாய என்பதே ஆறெழுத்து ஸ்தூல பஞ்சாட்சரமாகும். நகரம், மகரம், முதலான எழுத்துக்கள் முன்னிற்க சிகர, வகர, யகர அருள் எழுத்துக்கள் கீழே நிற்பதால், இது ஸ்தூல பஞ்சாட்சரம் எனப்பட்டது. இது காணும் வகையில் உள்ள கர்ம யோகங்கள அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்காக ஓதுவதாகும்.
இங்கு, சதுர்முகம், ஷண்முகம் என்பதிலுள்ள முகம் என்பது பொருட்களின் குறியீடாக நின்று அறிவிக்கும் எழுத்துக்களை குறித்தது. ஒருவரை இன்னார் என்பதை அறிவிப்பது முகமே என்பதால் சிவம், அருள், உயிர், மாயை, கன்மம் ஆகிய ஐம்பொருளையும் அறிவிக்கும் முகமாக இருப்பதால் பஞ்சாட்சரம் சதுர்முகம், ஷண்முகம் எனப்பட்டது. சதுர்முக சூட்சுமம் என்பது ஓம்சிவய என்னும் அதி சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இதுவே முக்தி பஞ்சாட்சரம் ஆகும்.
இது முக்தியை வேண்டி ஜெயிக்கும் மந்திரமாகும். எண்முகம் என்பது தியானித்தலின் மூலமாக (எண்ணுதல் முகமாக) இனிது அருளினார் என்பதாகும். விதி என்னும் அஞ்செழுத்தே என்று சிவஞானபோதம் கூறுவதும் காண்க.இனிதெனக்கு அருளி என்பதற்கு நான் இன்பம் பெறும்படியாக அருளப்பட்டது எனக்கொள்ள வேண்டும். இதன் பயனால் தன்னுள்ளே அவருக்கு சதாசிவலிங்க தரிசனம் கிட்டியதைக் குறிப்பிட்டுள்ளார்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment