நாகை மாவட்டம் திருவெண்காட்டுப் பகுதியில் பல வனங்கள் இருந்தன. இதில் திருவெண்காடு சுவேத வனம் எனவும், பூம்புகார் சாயாவனம் எனவும், காவிரிப்பூம்பட்டினம் பல்லவ வனம் எனவும், பெரும்பள்ளம் தால வனம் எனவும், யோகீஸ்வரம் யோகவனம் எனவும், பெருந்தோட்டம் உத்யான வனம் எனவும் அழைக்கப்பட்டது. பெருந்தோட்டத்தில் திருவெண்காட்டினைப் போல் மூன்று குளங்கள் இருந்தன. பெருவெள்ளம் ஒன்று வந்தபோது இந்த மூன்று குளங்களும் மண்ணில் புதைந்து விட்டன. அருகே இருந்த ஆலயமும் சிதிலமடைந்தது. ஊர் மக்களால் அந்த ஆலயம் புனரமைக்கப்பட்டது. அந்த ஆலயமே பெருந்தோட்டத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் ஆலயம். மகாலட்சுமி தந்த மலர் மாலையை துர்வாச முனிவர் இந்திரனுக்கு அணிவித்தார்.
இந்திரன் அதை தன்னருகே இருந்த வெள்ளை யானையான ஐராவதத்திடம் தந்தான். அந்த மாலையை ஐராவதம் அறுத்து தரையில் வீசி, காலால் மிதித்து துவம்சம் செய்தது. இதைக் கண்ட முனிவருக்கு கோபம் தலைக்கு ஏறியது. ஐராவதத்தை கோபத்தோடு பார்த்தார். “காட்டுத் தனமாக நான் கொடுத்த மாலையை சின்னா பின்னமாக்கிய உனக்கு இனி தேவலோகத்தில் இருக்க அருகதை இல்லை. காட்டு யானையாக பூலோகத்தில் திரிவாயாக” என சாபமிட யானை பூலோகம் வந்தது. ஒவ்வொரு சிவாலயமாக சென்று இறைவனை வழிபட்டது. இந்த தலம் வந்த போது இறைவனை வழிபடக்கூடாது என இங்கிருந்த கணபதி வாதாடினார். அவரே ஆலய வடகிழக்கு தினசயில் தனிக்கோயில் கொண்டிருக்கும் வாதாடும் கணபதி தாமதமாகும் வழக்குகள் சாதகமாக விரைந்து முடிவதற்கும் அலுவலக ரீதியான தண்டனையிலிருந்து முழுவதும் விடுபடவும் இந்த விநாயகருக்கு கொழுக்கட்டையால் அர்ச்சனை செய்ய பலன் உடனடியாக கிடைக்குமாம்.
யானை இங்குள்ள இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றது. ஐராவத யானை வழிபட்டதால் இத்தல இறைவன் ஐராவதேஸ்வரர் என அழைக்கப்படலானார். திருக்காரத்திகை, சோமவாரங்கள், தைப்பூசம், சஷ்டி, பொங்கல், ஆண்டுப்பிறப்பு, மார்கழி 30 நாட்கள் சிவராத்திரி போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலய இறைவனை அத்தி (யானை) வழிப்பட்டதால் இந்த ஊருக்கு அத்தீஸ்வரம் என்ற பெயரும் உண்டு சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சோழர் கால ஆலயத்தில் அருள் புரியும் இறைவன் ஐராவதேஸ்வரர். இறைவி அதிதுல்ய குஜாம்பிகை என்பதாகும். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் பீடம், நந்தியும் இருக்க, இடது புறம் தனிக்கோயிலில் வாதாடும் கணபதி அருட்பாலிக்கிறார்.
அடுத்துள்ள மகாமண்டபத்தின் தென் திசையில் நால்வர் திருமேனிகள் உள்ளன. வலது புறம் அன்னை அதிதுல்ய குஜாம்பிகையின் சந்நதி உள்ளது. நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருட்பாலிக்கிறாள் அன்னை. மகாமண்டபத்தைத் தாண்டி, அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் ஐராவதேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருட்பாலிக்கிறார். இவ்வாலய துர்க்கைக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில், நான்கு வாரங்களுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட கன்னியர் திருமணம் விரைந்து நடந்தேறுமாம். இங்கு அருட்பாலிக்கும் இறைவனை வழிபடுவதால் கோப குணம் குறைந்து, மனதில் நிதானமும் பொறுமையும் நிலவும் என்கின்றனர் பக்தர்கள். காலை 8 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரை ஆலயம் திறந்திருக்கும். நாகை மாவட்டம் புதன் தலமான திருவெண்காட்டிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள பெருந்தோட்டம் என்ற கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். சீர்காழி, மயிலாடுதுறையிலிருந்து ஆலயம் செல்ல பேருந்து வசதி உள்ளன...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment