ஆயிரம் என்பது எண்ணும் எண்ணிக்கையுள் அளவுபடாததும், அளவிட்டுச் சொல்ல முடியாததுமான எண்ணிக்கையைக் குறிக்கும் குறியீடாகக் கொள்ளப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் என்பதை ஆயிரம் என்ற எண்ணிக்கையைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளாமல் எண்ணற்ற எண்ணிக்கையைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகக் கொள்ள வேண்டும். ஆயிரமானாலும் மாயூரம் ஆகாது. ஆயிரம் பொய் சொல்லியேனும் கல்யாணத்தை முடி போன்ற பழமொழிகளில் இடம் பெற்றுள்ள ஆயிரம் என்பது எண்ணிக்கையில் அடங்காத, வரையறுத்துச் சொல்லமுடியாத எண்ணிக்கையைக் குறிக்கும் சொல்லாக இருப்பதைக் காணலாம்.
எண்ணிக்கையில் அடங்காத அளவு சிவலிங்கங்களை ஓரிடத்தில் எழுந்தருளச் செய்து வழிபடும் குறியீடே ஆயிரம் லிங்க வழிபாடாக மலர்ந்துள்ளது. தொடக்கத்தில் ஆயிரம் லிங்கங்களைத் தனித்தனியே வைத்து வழிபட்டு வந்தனர். பின்னாளில் இடவசதி, பொருட்செலவு, பூஜை செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலம், பூஜைப் பொருட்களின் எண்ணிக்கை எனப் பலவகைகளிலும் தேவைகளும் செயல்பாடுகளும் அதிகமாக இருந்ததால் அந்த வழிபாடு சாத்தியமற்றதாக ஆகி விட்டது.
எளிய வழியாக ஆயிரம் லிங்கங்களின் சிவபாகமாகிய ஆயிரம் பாணங்களையும் ஒரு பெரிய லிங்கத்தின் பாணப்பகுதியில் செதுக்கி அமைத்து அதையே ஆயிரம் லிங்கமாகப் போற்றி வழிபடும் வழக்கம் வந்து விட்டது. இந்த லிங்கத்திற்குச் ஸஹஸ்ரலிங்கம் என்பது பெயராகும். அகன்ற பெரிய ஆவுடையாரின் மீது பெரிய நெடிய பாணப்பகுதி, அமைக்கப்படுகிறது. இந்த பாணப் பகுதியின் வளைவான மேற்பகுதியை விட்டுவிட்டு உருளை வடிவில் அமைந்த பகுதியின் மேற்புறத்தில் சீரான இடைவெளியில் ஆயிரத்தெட்டுச் சிறிய பாணப் பகுதிகள் செதுக்கிப் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் இந்தப் பேரண்டத்தில் உள்ள 1008 புவனங்களில் இருக்கும் முதன்மை பெற்ற லிங்கங்களை நினைவு கூர்வதாகக் கூறுகின்றனர்.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, காளையார் கோயில் முதலிய தலங்களில் 1008 லிங்கங்களுக்கென பெரிய சந்நதிகள் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள 1008 லிங்க சந்நதி தனிச் சிறப்பு மிக்கதாகும். இங்குள்ள லிங்கம் அளவால் பெரியதாகும். ஆயிரம் லிங்கத்தை வழிபடுவதால் ஆயிரம் சிவாலயங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். பிரபஞ்சத்திலுள்ள 1008 அண்டங்களில் இருக்கும் மகாலிங்கங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்றும்
பெரியோர் கூறுகின்றனர்.
சிவ லிங்கங்களைப் பல்வேறு எண்ணிக்கையில் ஒரே இடத்தில் வைத்து வழிபடும் வழக்கம் அன்பர்களிடம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இரட்டைலிங்க வழிபாடு, மூன்று லிங்க வழிபாடு, சதுர்லிங்க வழிபாடு, பஞ்சலிங்க வழிபாடு, சப்தலிங்க வழிபாடு, நவலிங்க வழிபாடு, ஏகாதசலிங்க வழிபாடு, துவாதச லிங்க வழிபாடு, சதலிங்க வழிபாடு, ஸஹஸ்ர லிங்க வழிபாடு என்று பல்வேறு எண்ணிக்கையில் லிங்கங்களை வைத்து அன்பர்கள் வழிபடுகின்றனர்.
ஒன்றை லிங்கத்தை வழிபடுவது ஏக லிங்க வழிபாடாகும். இந்த லிங்கத்தை உடையவர் எனவும், மகாதேவர், ஆவுடையார் எனவும் அழைக்கின்றனர். இரட்டை லிங்க வழிபாட்டில் நீரையும், நெருப்பையும் குறிக்கும் இரட்டைலிங்கங்கள் வைத்து வழிபடப்படுகின்றன. இவை பசுவையும், பதியையும் குறிக்கும் லிங்கம் என்பாரும் உண்டு. மூன்று லிங்க வழிபாட்டை மும் மண்டலம் கொண்டருளிய லிங்கமாக பூமிலிங்கம், ஆகாசலிங்கம், பாதாள லிங்கம் என்றும், மும்முடிச் சோழர்கள் போற்றிப் பணிந்ததாகச் சோழலிங்கம், சேரலிங்கம், பாண்டியலிங்கம் என்றும்; முக்காலங்கள் வடிவாகப் பெருமான் இருப்பதைக் காட்டும் வகையில் பூதலிங்கம் (கடந்த கால லிங்கம்) பௌஷ்ய லிங்கம் (நிகழ்கால லிங்கம்) வர்த்தமான லிங்கம் (எதிர்கால லிங்கம்) என்று பலவிதங்களில் வைத்துப் போற்றுகின்றனர்.
நான்கு லிங்கங்களாகச் சிவபெருமான் தர்ம, அர்த்த, காம, மோட்சம் ஆகிய நாற் பொருட்களின் பெயரால் , தர்மேசுவரர், அர்த்தேசுவரர், காமேசுவரர், மோட்சேசுவரர் என்னும் பெயரில் வீற்றிருக்கின்றார். இது தமிழில் முறையே அறம் வளர்க்கும் ஈசுவரர், பொருள் வழங்கு லிங்கம், இன்பம் நல்கும் லிங்கம், முத்தி தரும் லிங்கம் என்று போற்றப்படுகின்றன. ஐந்து லிங்கங்களை ஒன்றாக வைத்து பூமீசுவரர், அக்னீசுவரர், ஆகாச லிங்கம், அப்பு லிங்கம், வாயுலிங்கம் என்று போற்றுகின்றனர். ஆகமவழியில் நிற்போர் இந்தப் பஞ்ச லிங்கங்களை ஈசான லிங்கம், தத் புருஷ லிங்கம், அகோரலிங்கம், சத்யோஜாத லிங்கம், வாமதேவ லிங்கம் என அழைக்கின்றனர்.
முதலில் குறித்த லிங்கங்களைப் பஞ்சபூத லிங்கங்கள் என்றும், பின்னால் சொல்லப்பட்ட பஞ்ச லிங்கங்களைப் பஞ்சப் பிரம்ம லிங்கங்கள் எனவும் அழைப்பர். இப்படியே ஏழுலிங்கங்களை எழுந்தருளி வைத்து, ச,ரி,க,ம,ப,த,நி என்னும் ஏழு ஸ்வர லிங்கங்கள் என்றும், விடங்கத் தலங்களைக் குறிக்கும் சப்த விடங்க லிங்கங்கள் என்றும் அழைக்கின்றனர். எட்டு லிங்கங்களை அமைத்து அஷ்ட பைரவ லிங்கங்கள் என்றும், அஷ்ட மூர்த்தி லிங்கங்கள் என்றும், அஷ்டவசுக்கள் போற்றும் வசுலிங்கங்கள் என்றும் திக்பாலக லிங்கங்கள் என்றும் அழைத்து மகிழ்கின்றனர். ஒன்பது லிங்கங்களை ஒரே அளவில் வைத்து நவரத்ன லிங்கங்கள் என்றும் நவகிரகங்கள் வழிபடும் நவகிரக லிங்கங்கள் என்றும் தொகையடியார்களைக் குறிக்கும் தொகையடியார்கள் லிங்கம் என்றும் அழைக்கின்றனர்.
பதினோரு லிங்கங்களை வைத்து ஏகாதசருத்திர லிங்கங்கள் என்றும், பன்னிரண்டு லிங்கத் தொகுதியை துவாதச ஆதித்ய லிங்கங்கள் (அ) ஜோதிர் லிங்கங்கள் என்றும், பதினெட்டு லிங்கங்கள் உள்ள தொகுதியைப் பதினென் புராண லிங்கங்கள் என்றும், இருபத்தேழு லிங்கங்களின் தொகுதியை நட்சத்திர லிங்கங்கள் என்றும், இருபத்தெட்டு லிங்கங்கள் தொகுதியை ஆகம லிங்கங்கள் என்றும், 32 லிங்கங்கள் கொண்ட தொகுதியை தர்மேசுவரலிங்கங்கள் என்றும், என்பத்தோரு லிங்கங்கள் பதங்கேசுவர லிங்கங்கள் என்றும், நூறு லிங்கங்களை வைத்து சதருத்திர லிங்கங்கள் என்றும், நூற்றெட்டு லிங்கங்களை வைத்து அஷ்ட மகாசதருத்திர லிங்கங்கள் என்றும், இருநூற்று எழுபத்து நான்கு லிங்கங்களை அமைத்து புவனேஸ்வர லிங்கங்கள் என்றும், 1008 லிங்கங்களை அமைத்து ஸஹஸ்ரலிங்கம் என்றும் அண்டாபரண லிங்கம் என்றும் அழைக்கின்றனர்.
ஆயிரம் லிங்க வழிபாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லிங்கங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த லிங்கங்களைச் சிவ வழிபாட்டால் மேன்மை பெற்ற தேவர்கள், முனிவர்கள், ராட்சசர்கள், தேவதைகள், நவகிரகங்கள், வசுக்கள் முதலியோர் பெயரால் போற்றி வழிபடுகின்றனர். ஆயிரம் லிங்க வழிபாடு ஸஹஸ்ர லிங்க மண்டலம், ஸஹஸ்ரகூட லிங்கம் பல நிலைகளைக் கடந்து, இப்போது ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கங்களைச் செதுக்கி வைத்து வழிபடும் ஸஹஸ்ரலிங்க வழிபாடாக நிலை பெற்றுள்ளது என்றாலும் பல தலங்களில் 1008 தனித்தனி லிங்கங்களையும் , 1008 லிங்கங்களைக் கொண்ட ஸஹஸ்ர லிங்கத்தையும் நிலைப்படுத்தி வணங்கி வருகின்றனர். ஸஹஸ்ரலிங்க வழிபாடு சகல பாவங்களையும் போக்க வல்லது என்பதால் மக்கள் இல்லங்களில் பிரார்த்தனையாகவும் பிராயச் சித்த வழிபாடாகவும் ஸஹஸ்ரலிங்க வழிபாட்டைச் செய்து பயன் பெறுகின்றனர்.
கம்போடியாவில் ஸஹஸ்ரலிங்கம்
கடல் கடந்த நாடுகளில் சைவ சமயம் பரவியிருந்ததை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் நாடு கம்போடியா. இங்கு அங்கோர் வாட் என்னும் ஊர் உள்ளது. இங்கு ஏராளமான இந்து சமயக் கோயில்கள் உள்ளன. இவையாவும் கால ஓட்டத்தில் கவனிப்பாரற்று அழிந்துள்ளன. இப்போது அரசாங்கம் புதுப்பித்துப் பாதுகாத்து வருகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகச் சிறிய நாடாக இருக்கும் கம்போடியா. தாய்லாந்திற்குக் கிழக்கிலும், வியட்நாமிற்கு மேற்கிலுமாக அமைந்துள்ளது. இங்கு முற்காலத்தில் இந்து மதம் செழிப்புடன் இருந்தது. அதைக் குறிக்கும் வகையில் பெரிய சிவாலயங்கள் உள்ளன. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இந்நாட்டை ஆண்ட முதல் அரசனான இரண்டாம் ஜெயவர்மன் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இவர் மிகச் சிறந்த சிவபக்தராக விளங்கினார்.
கம்போடியாவின் தலைநகரான சியாம்ரீப் நகரிலிருந்து 35 கிலோ மீட்டரில் ஃபெனாம்கூலேன் என்னும் மலை உள்ளது. இதை இமயமலைபோல் புனித மலையாக அன்பர்கள் போற்றுகின்றனர். இந்த மலையில் உற்பத்தியாகும் சியாம்ரீப் என்னும் நதியைப் புனித நதியாகப் போற்றுகின்றனர். மலையின் நடுவேயுள்ள சமவெளியில் பெரும்பாறைகளின் மீது இந்த நதி தவழ்ந்து செல்கிறது. இந்த இடத்தை அடைவது சுலபமாக இல்லை.
பாறைகளில் ஏறியே செல்ல வேண்டியுள்ளது. வழி கடினமாக இருந்தாலும், இந்த இடத்தை அடையும் போது எல்லையற்ற இன்பம் உண்டாகிறது. இயற்கையின் பேரழகையும் அமைதியையும் இங்கே காண முடிகிறது. ஆறு தவழ்ந்தோடும் பாறைப்படுகையில் கூட்டம் கூட்டமாக லிங்கங்கள் அமைக்கப்படுள்ளன. அவற்றிலுள்ள 1008 லிங்கத் தொகுதி மனதைக் கவர்வதாக உள்ளது. நடுவில் உள்ள லிங்கம் 8 அடிக்கு 8 அடி சதுரமான ஆவுடையாருடன் உள்ளது. கோமுகி வடக்கு நோக்கியுள்ளது. பெரிய வட்டமான ருத்திரபாகம் உயரம் குறைந்ததாகும். இதைச் சுற்றி 1008 லிங்கங்கள் உள்ளன.
இங்குள்ள லிங்கங்கள் அனைத்திற்கும் சதுரமான ஆவுடையார் உள்ளது. கண்ணாடி போன்ற நீர் லிங்கங்களைத் தழுவி ஓடுகிறது. வெள்ளம் வரும்போது லிங்கங்கள் தண்ணீருக்குள் மூழ்கி விடுகின்றன என்றாலும், தெளிவான நீரோட்டத்தில் காணும் போது அவை கற்பனைக்கெட்டாத அழகுடன் உள்ளன. லிங்கங்களோடு தேவர்கள், பிரம்மன், நந்தி முதலிய உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாம்பணையில் துயிலும் அனந்தசயன ரங்கநாதரின் வடிவம் அற்புதமானதாக உள்ளது.
ஏராளமான அன்பர்கள் இங்கு வந்து சிவலிங்கங்களை வழிபடுகின்றனர். இந்த லிங்கங்கள், ஆந்திர கன்னட மாநிலங்களில் ஆற்றுப் படுகைகளில் அமைக்கப்பட்டுள்ள லிங்கங்களைப் போல் இருப்பதால் இந்திய சிற்பிகளே இவற்றை அமைத்திருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அகத்தியர் இவற்றை அமைத்து வழிபட்டதாக அன்பர்கள் நம்புகின்றனர்.
கன்னடத்து ஸஹஸ்ரலிங்கம்
வடகன்னட மாவட்டத்தில் சிர்சி என்னும் நகரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் ஸஹஸ்ரலிங்கம் அமைந்துள்ளது. சிர்சியில் இருந்து எலாப்பூர் செல்லும் வழியில் பயணித்து ஹல்கோல் என்னும் இடத்தில் இறங்கி 2 கி.மீ. பின்னோக்கி நடந்தால் ஸஹஸ்ரலிங்காவை அடையலாம். காட்டுப்பகுதியில் ஓடும் ஷால்மலா ஆற்றின் படுகையில் ஸஹஸ்ர லிங்கம் அமைந்துள்ளது. இங்கு பரவிக் கிடக்கும் பாறைகளின் நடுவே ஆறு தவழ்ந்தோடுகிறது. பாறைகளில் வட்டமான ஆவுடையாருடன் லிங்கங்கள் செதுக்கி அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான லிங்கங்களின் முன்புறம் அதே பாறையில் நந்தியின் வடிவமும் செதுக்கி அமைக்கப்பட்டுள்ளன.
ஆற்றில் மிதமான நீர் ஓடும் (நவம்பர் முதல் மார்ச் இடைப்பட்ட) காலங்களில் அனைத்துச் சிவலிங்கங்களோடு தரிசிக்க முடியும். சிவலிங்கங்களோடு வீரபத்திரர், வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. ஸஹஸ்ர லிங்கம் என்று இந்த ஆற்றுப்படுகை அழைக்கப்பட்டாலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லிங்கங்களை இயற்கையாக அமைந்த பாறைகளில் கண்டு மகிழ்கிறோம்.
பக்தர்கள் சிவலிங்கங்களுக்குத் தற்காலிக பந்தல் அமைத்து வழிபடுகின்றனர். சிறந்த சுற்றுலாத் தலமாக இது திகழ்கிறது. சிவலிங்கங்களின் கீழ் கன்னடத்தில் கல்வெட்டுக்கள் உள்ளன. ஷால்மலா ஆற்றின் ஸ்படிகம் போன்ற நீர் லிங்கங்களைத் தழுவிக் கொண்டு சுழித்துச் செல்வது மனம் கவரும் காட்சியாக உள்ளது. ஏராளமான அன்பர்களும் சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து லிங்கங்களைக் கண்டுகளிக்கின்றனர்.
ஹம்பி ஸஹஸ்ரலிங்கம்
பாரத தேசத்தின் வரலாற்றுப் புகழ் பெற்ற நகரங்களில் ஹம்பி ஒன்றாகும். கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் தனிச்சிறப்புப் பெற்று மூன்று நூற்றாண்டுகள் செங்கோலோச்சிய விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகராகத் திகழ்ந்த நகரம். இது இந்நாளில் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டாலும் கலையரசியின் எழிற்பீடமாகவே திகழ்கிறது. இந்தியத் தொல்லியல் துறை இதனைப் பாதுகாத்துப் போற்றி வருகிறது.
ஹம்பி நகரமானது புராணச் சிறப்புகளைப் பெற்ற புனிதநதியான இதன் கரையில் அமைந்துள்ளது. துங்கபத்திரை புனித நதியாகும். இதன் கரையில் ஏராளமான சிவாலயங்கள் உள்ளன. ஹம்பியில் துங்கபத்திரை ஆற்றின் நடுவே பெரும்பாறையில் ஆயிரம் லிங்கங்கள் செதுக்கி அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் குறைந்த காலங்களில் பாறையைச் சுற்றி வந்து லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். சிவராத்திரியில் அன்பர்கள் திரளாக வந்து வழிபடுகின்றனர். இன்று ஆளரவமற்ற சூழலில் தனித்து விடப்பட்ட நிலையில் இருந்தாலும், விஜயநகரப் பேரரசு காலத்தில் தனிச் சிறப்புடன் கொண்டாடப்பட்ட இடமாக ஸஹஸ்ரலிங்கம் இருந்து வந்துள்ளது. சிவராத்திரி நாளில் ஏராளமான மக்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
_என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment