ஆடி மாதம் முழுவதுமே அம்மன் திருக்கோயில்களில் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறும். அதிலும் குறிப்பிட்ட சில திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள் உலக பிரசித்திப் பெற்றவை. மதுரையில் இருந்து 120 கி.மீ., தூரத்திலுள்ள சங்கர நாராயணர் கோயிலில் ஆடித் தபசு, பெரிய விழாவாக 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில்தான் அன்னை பார்வதி ஒற்றைக் காலில் நின்று தவம் செய்து ஐயனை மீண்டும் அடைந்தாள். இதனை ஆடித் தபசு என சிறப்பாகக் கொண்டாடுகிறோம்.
ஹரியும் ஹரனும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் இந்த தலத்தில், எதை வேண்டிக் கொண்டாலும் அது தவறாமல் நிறைவேறும் என்பதால், பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள்.
அம்பாளுக்கான இந்த பிரதான விழாவில்,அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். திருவிழாவின் கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தந்து, அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார். அப்போது, விவசாயிகள் விளைபொருட்களை அம்பாளுக்கு காணிக்கையாக அளிப்பர்.
ஆடி தபசு வரலாறு:
நாக அரசர்களான சங்கன் சிவன் மீதும், பதுமன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா என்ற அடிக்கடி வாதம் எழுந்தது. இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு உணர்த்த, ஹரியும் ஹரனும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், சிவன்,சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடி விட்டது. நாகராஜாக்கள் அதனுள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். அதிலிருந்து ரத்தம் வெளிப்பட, அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். பாண்டிய மன்னனுக்கு தகவல்,செல்ல லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோயில் எழுப்பினான்.
கோமதி அம்மன்
அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோக மாதர்கள் அன்னைக்கு உதவ பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே இவளுக்கு ஆவுடையாம்பிகை என்ற பெயரும் உண்டு. திங்கள்கிழமைகளில் இவளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக் கிழமையில் தங்கப்பாவாடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். இங்கு அம்பாள் சந்நிதி முன்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆக்ஞா சக்கரத்தில், மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் அமர்ந்தால், நோய் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சங்கரநாராயணர்
சிவன், அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர் சந்நிதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை,பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி சகிதமாய்,காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை அணிந்தவராய் ஈசன் காட்சி தர, திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான். திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் அணிந்தவராய் திருமால் காட்சி தர, இவர் பக்கமுள்ள திருவாசியில் நாகவடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.
இந்த சந்நிதியில் காலை பூஜையில் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தரப்படுகிறது. பூஜையின் போது வில்வம்,துளசி என இரு மாலைகளையுமே அணிவிக்கிறார்கள். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் சங்கரநாராயணர் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். சிவன் அபிஷேகப்பிரியர் என்பதால் இச்சந்நிதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடக்கும்.
பாம்புகள் வழிபட்ட கோயில் இது என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் இக்கோவிலின் பிரதான பிரசாதமாக வழங்கப்படுகிறது. உடலில் தீராத நோயுடன் அவதிப்படுபவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிட வியாதிகள் குணமாகும் என்று நம்பப்படுகிறது. மேலும் வீடுகளில் விஷ பூச்சிகள், பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
தீராத பல்வலியை தீர்த்து வைக்கும் யோக நரசிம்மர்
பொதுவாக சிவன் சன்னதி கோஷ்டத்தின் பின்புறத்தில் லிங்கோத்பவர் அல்லது சில தலங்களில் திருமால் காட்சி தருவார். ஆனால் இந்தத் திருத்தலத்தில் யோக நரசிம்மர் இருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. தீராத பல் வலி உள்ளவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
சங்கரன்கோவிலில் சித்திரை மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பன்று என இரண்டு முறை அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment