Tuesday, 27 November 2018

யானை நின்றது ஏன்? - பிள்ளையாரிடம் பெரியவாள் சொன்ன ரகசியம்.!!

ஈசன் அன்னை பார்வதியுடன், அவர்களது மடியில் குமரக் கடவுள் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்த வடிவத்தை நாம் பெரும்பாலான சிவாலயங்களில் பார்த்திருப்போம். ஆனால், காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள தேனம்பாக்கம் சிவாஸ்தான ஆலயத்தில் மட்டும், பார்வதி- பரமேஸ்வரன் மடியில் ஸ்கந்தனுக்குப் பதில் கணபதி அமர்ந்திருப்பார். இந்த வடிவத்தை சோமகணபதி என்பார்கள்.

ஒரு முறை காஞ்சிப் பெரியவா, சில காலம் அங்கு தங்கி இருந்தார். ஒரு நாள் இரவு... தர்ப்பையை பாய் போல் விரித்து, அதில் படுத்திருந்தார் பெரியவாள். அவருடன் பக்தர்கள் சிலரும் இருந்தனர். அப்போது வேட்டுச் சத்தம் கேட்டது.
''என்ன வேட்டுச் சத்தம்?'' என்று ஒன்றும் தெரியாதவர் போல் கேட்டார் பெரியவாள்.
அதற்கு அவர்கள், ''காமாட்சியம்மன் தேரில் பவனி வருகிறாள். அதுதான் வேட்டுச் சத்தம்'' என்றனர்.

உடனே, ''அம்பாள் தேரில் பவனி வருகிறாள். நாம் தரிசிக்க வேண்டாமா?'' என்றபடி சட்டென எழுந்து கிளம்புவதற்கு ஆயத்தமானார் பெரியவாள்.
உடன் இருந்தவர்கள், ''இப்போதே பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.
பெரியவாளுக்கும் உடம்புக்கு முடியாமல் உள்ளது. தவிர, இங்கிருந்து பெரிய காஞ்சிபுரம் போக நேரமாகி விடும். இந்நேரம் அம்பாள், கச்சபேஸ்வரர் கோயில் அருகே வந்திருப்பாள். அங்குதான் அதிக அளவில் வாணவேடிக்கையும் வேட்டுகளும் நடப்பது வழக்கம். இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாள் கோயிலுக்குள் சென்று விடுவாள்'' என்றனர்.
பெரியவாள், எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அங்கிருந்து கிளம்புமுன், அந்த சிவாஸ்தானம் என்ற தேனம்பாக்கத்தில் உள்ள குட்டி பிள்ளையாரிடம் சென்றார். ஒரு கையை தன் கண்களுக்கு மேலே வைத்தபடி குனிந்து, பிள்ளையாரிடம் ஏதோ ரகசியம் பேசினார். பிறகு கிளம்பிச் சென்றார்.

பெரியவாள் மௌனமாகவே நடந்து கொண்டிருந்தார். ஆனால், உடன் வந்தவர்களோ பேசிக் கொண்டே இருந்தனர். ஒருவர், ''இன்று நமக்கு நல்ல நடை பயிற்சி'' என்றார். மற்றொருவர், ''மூடிய கோயிலைத்தான் பார்த்து வரப் போகிறோம்'' என்றார் சிரித்தபடி!
பெரிய காஞ்சிபுரத்தை அடைந்ததும் பெரியவாளுடன் வந்தவர்களுக்கு ஆச்சரியம்! காமாட்சி அம்மனின் தேர், கச்சபேஸ்வரர் கோயில் அருகிலேயே பல மணி நேரமாக நின்று கொண்டிருக்கிறதாம்!
பெரியவாளைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் அனைவரும் ஓடிவந்து நமஸ்கரித்தனர். ''என்னவோ தெரியவில்லை. இவ்வளவு தூரம் ஒழுங்காக வந்த யானை, இங்கு வந்ததும் முரண்டு பிடிக்கிறது. தேரை இழுத்தால் மதம் பிடித்தாற் போல் அலறுகிறது. தேரை நகர்த்தாமல் இருந்தால் சமர்த்தாக இருக்கிறது!'' என்று தெரிவித்தனர்.
பெரியவாள், அம்பாளை தரிசித்து விட்டு யானைக்கு அருகே வந்தார். பிறகு, அதன் உடலில் கையை வைத்து, 'போகலாம்' என்றார். அவ்வளவுதான்! யானை தனக்கே உரிய கம்பீரத்துடன் காதுகளை அசைத்தபடி நகர ஆரம்பித்தது. இதைக் கண்ட எல்லோரும் வியந்தனர்.
சிவாஸ்தானம் சின்னப் பிள்ளையாரிடம் பெரியவாள் ரகசியம் பேசியது ஏன் என்பதை, உடன் வந்தவர்கள் இப்போதுதான் புரிந்து கொண்டனர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment