இன்றைய காலகட்டத்தில் ஆன்மிகத்தில் அரசியல் அதிகம் கலந்துவிட்டது. திருக்கோயில்களில் தெய்வ சிலைகளை திருடுவதும் , திருக்கோயில் சொத்துக்களை அபகரிப்பதும் அதிகரித்துவரும் காலம் இது. ஆன்மிகம் என்பது தெய்வக் கருணை என்பது மறந்து போய் வெறும் பக்தி வேஷம் அதிகமாகிவிட்டது.
நம்முடைய தர்மசாஸ்திரங்களுக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இந்த காலகட்டத்தில் காஞ்சி கருணாமூர்த்தி மகாப்பெரியவாவின் வார்த்தைகளே நமக்கு அமிர்தம். மனக்கசடுகள் நீக்கும் மாமருந்து. ஒரு நடிகர் கழுத்தில் உருத்திராட்சம் கட்டிக் கொண்டால் அது ஏதோ ஃபேஷன் போல எல்லாருக்கும் தொற்றி விடுகிறது . யார் உருத்திராட்சம் அணிவது சரி என மகாப்பெரியவா வழிகாட்டிய சம்பவம் இதோ:
பெரியவாளுடைய ஒரு பக்தர், ஒரு முறை நேபாளம் சென்றார். அங்கு ஸ்ரீ பசுபதிநாதர் கோவிலுக்கு சென்று அருமையான தரிசனம் பெற்றார். அந்த உன்னதமான சிவ க்ஷேத்ரத்தில், உயர்ந்த ருத்ராக்ஷ மாலை ஒன்றையும் வாங்கிக் கொண்டார். பிறகு காஞ்சிபுரம் வந்து பெரியவாளுக்கு பசுபதிநாத பிரஸாதத்தையும், தான் வாங்கிய ருத்ராக்ஷ மாலையையும் ஸமர்ப்பித்தார்.
“பசுபதீஸ்வரரை நன்னா தரிசனம் பண்ணினியா?…”
“பெரியவா அனுக்ரஹத்ல… நன்னா தரிசனம் பண்ணினேன்…”
கையில் அந்த ருத்ராக்ஷ மாலையை எடுத்துக் கொண்டார்…
“ஸெரி… இத.. என்ன பண்ணப் போற?…”
“பெரியவா அனுக்ரஹம் பண்ணிக் குடுத்தேள்..ன்னா, கழுத்துல போட்டுக்கலான்னு…” இழுத்தார்.
பெரியவா மெளனமாக சில நிமிஷங்கள் இருந்தார்.
“அப்போ… நீ… இனிமே பொய் சொல்லாம இருப்பியா?”
ஒரே தடாலடியாக கேட்டார். பக்தருக்கு தூக்கிவாரிப் போட்டது!
“ஆஹா! பெரியவா… இனிமே பொய்யே சொல்லமாட்டேன்!” என அப்படியொரு துணிச்சலான பொய்யை, ஸத்ய ஸந்நிதியில் சொல்ல நாக்கு எழுமா?
அதனால், “இல்ல.. பெரியவா…! ஸத்யமா… என்னால பொய் சொல்லாம இருக்க முடியாது..!.”
“ஏனோ..?”
“ஏன்னா, நா… ஒரு பேங்க் ஆஃபீசர். அதுனால, பொய் சொல்லாம சில ரெக்கார்டுகளை தயாரிக்க முடியாது. “இப்படி எழுது”…ன்னு எனக்கு மேல இருக்கற அதிகாரி உத்தரவு போட்டா… என்னால மறுக்க முடியாது பெரியவா….”
பரிதாபமாக தன் இயலாமையை ஒத்துக்கொண்டார்.
பெரியவா அந்த ருத்ராக்ஷ மாலையை இன்னும் கையில் வைத்து உருட்டிக் கொண்டிருந்தார்.
“இந்தா பிடி! பொய் சொல்லாதவா யாருக்காவுது… இந்த மாலையைக் குடு!”
பக்தருக்கோ பரம ஸந்தோஷம்! ஏனென்றால், இப்போது இதை யாருக்கு போடுவது என்பது, ஏற்கனவே முடிவு செய்திருந்த ஒன்றுதான்!
நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவாளிடமிருந்து அந்த ருத்ராக்ஷ மாலையை வாங்கி கொண்டார்.
“ஆஹா! என் மனைவி சொன்னா மாதிரியே ஆச்சு! இந்த ருத்ராக்ஷ மாலையை பேசாம ஆத்துல பெரியவாளுக்கு [படத்துக்கு] போட்டுடுங்கோ!..ன்னு சொன்னா! அதுப்படியேதான் இப்போ பெரியவாளும் உத்தரவு போட்டுட்டா…!”
ப்ரஸாதம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியதும், முதலில் அந்த ருத்ராக்ஷ மாலையை, பூஜையிலிருந்த பெரியவா படத்துக்கு அணிவித்தார்.
“பொய்யே சொல்லாத ஒர்த்தர்…. நம்மாத்து பூஜை ரூம்லேயே இருக்கார்ங்கறதே, இன்னிக்கித்தான் எனக்கு புரிஞ்சுது” மனைவியிடம் கூறி சந்தோஷப்பட்டார்.
கணவனும் மனைவியும், ருத்ராக்ஷ மாலாதரனாக காக்ஷியளித்த தங்களுடைய பெரியவாளை நமஸ்கரித்தனர். கொஞ்ச நாள் கழித்து, அந்த பக்தரின் சொந்தக்காரர் ஒருவர், பெரியவாளை தரிசனம் பண்ண வந்தார்.
“ஒன்னோட ஸொந்தக்காரன், அதான்! அந்த பேங்க்ல ஆஃபீஸரா இருக்கானே! அவன்ட்ட ஹரிச்சந்த்ரனோட அம்ஸம் இருக்கு! தெரியுமோ? ஏன்னா… தன்னால பொய் சொல்லாம இருக்க முடியாதுன்னு பொய் சொல்லாம எங்கிட்டயே ஒத்துண்டான்…”
இந்த அருமையான அனுக்ரஹ லீலையில், பெரியவா நம் எல்லாருக்கும் ஒரு உபதேஸத்தையும் அளித்திருக்கிறார்.
ருத்ராக்ஷம் என்பது, ஸ்படிகம், துளஸி போல், மிகவும் பவித்ரமானது. ருத்ராக்ஷத்தை அணிபவர்களுக்கு முக்யமாக இருக்கவேண்டியது….. ஸத்யம் ! இதுதான் பெரியவா திருவாக்கு!
உருத்திராட்சம் அணியக்கூடிய தகுதியை வளர்த்துக் கொள்வோம். சங்கரரிடம் சரணடைவோம்.
சத்யமே சங்கரம் ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment