Sunday, 21 October 2018

வலிதாயநாதர் திருக்கோவில், திருவலிதாயம் ( சென்னை ).!!

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 20-வது தலமாக இருப்பது திருவலிதாயம். தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் திருவலிதாயம் என்ற பெயருடன் விளங்கிய இத்தலம் இன்றைய நாளில் சென்னை நகரின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இறைவன் பெயர்: வலிதாயநாதர், வல்லீஸ்வரர்
இறைவி பெயர்: ஜகதாம்பாள், தாயம்மை
இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.
எப்படிப் போவது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவில், சென்னை நகரின் மேற்குப் பகுதியில் பாடி என்னும் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. பாடிக்குச் செல்ல நகரப் பேருந்து வசதிகள் அதிகம் உள்ளன. பாடியிலுள்ள லூகாஸ் டிவிஎஸ் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்
ஆலய முகவரி
அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில்
பாடி,
சென்னை 600 050.
இவ்வாலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம், தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. சென்னை = ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம். பரத்வாஜ முனிவர், கருங்குருவியாக (வலியன்) வந்து இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலம் திருவலிதாயம் என்றும், இறைவன் வலிதாயநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

மூன்று நிலைகளை உடைய கிழக்கு வாசல் கோபுரமே பிரதான கோபுரம். கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிராகாரம் உள்ளது. அதில் கொடிமரம், நந்தி சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வலது புறத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. குரு பரிகாரத் தலங்களாகச் சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றியிருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவம் இருந்து சிவனருள் பெற்றார் என்பதால், இத்தலத்தில் குரு பகவானுக்கு தனிச் சிறப்பு உண்டு.

வெளிப் பிராகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன் மூலவர் திருவலிதாயநாதர் சந்நிதி கிழக்குப் நோக்கி அமைந்திருக்கிறது. சுவாமி சந்நிதி கருவறை கஜப்பிரஷ்ட விமான அமைப்புடையது. உள் பிராகாரத்தின் வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் தாயம்மை சந்நிதி இருக்கிறது. அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிராகாரத்தில், சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு உள்ளது. ஈசன் கருவறையின் உள்ளேயும் ஒரு அம்பாள் திருவுருவம் உள்ளது. அம்பாள் திருவுருவம் ஒரு காலத்தில் பின்னம் அடைய, புதிய மூர்த்தம் செய்து அதை வெளியே தெற்கு நோக்கி இருக்குமாறு பிரதிஷ்டை செய்து, பின்னம் ஆன மூர்த்தத்தை ஈசன் கருவறைக்கு உள்ளே வைத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

உள் பிராகாரத்தில் சூரியன், நான்கு கரங்களுடன் உள்ள பாலசுப்ரமணியர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரின் உருவச்சிலைகள் இருக்கின்றன. ஈசன் கருவறை பின்புற கோஷ்டத்தில் அநேக தலங்களில் லிங்கோத்பவர்தான் இருப்பார். ஆனால் இங்கு மகாவிஷ்ணு காணப்படுகிறார். மகாவிஷ்ணு, அவரின் அம்சமான பரசுராமர், ராமர் ஆகியோர் சிவபெருமானை வழிபட்ட தலங்களில் எல்லாம் லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு இருப்பார். அவ்வகையில் இத்தல இறைவனை ராமர் வழிபட்டுள்ளார். மேலும் சோமஸ்கந்தர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், அனுமன் பூஜித்த அனுமலிங்கம், இந்திரன் சாபம் நீக்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. பரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிராகாரத்தில் உள்ளது. கோவிலில் உள்ள தூண்களில் நடராஜர், முருகர், கோதண்டராமர், மச்சாவதாரமூர்த்தி, கூர்மாவதாரமூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இத்தலத்தில் முருகப்பெருமான் சுப்பிரமணியராக ஒரு திருமுகத்துடனும் 4 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.
பாரத்வாஜ தீர்த்தம்
ஒரு சமயம் பரத்வாஜ மஹரிஷி சாபம் காரணமாக கருங்குருவி ஆனார். அவர் திருவலிதாயம் வந்து ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார். நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறு, அவரால் உருவாக்கப்பட்ட பரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பரத்வாஜ மஹரிஷியால் இத்தல இறைவன் வழிபடப்பட்டுள்ளதால், இத்தலம் பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாக விளங்குகிறது.

பிரம்மாவின் இரண்டு பெண்கள் கமலி, வல்லி என்பவர்கள் இத்தலத்து இறைவனை பூஜித்து, விநாயகரை இறைவன் ஆணைப்படி திருமணம் புரிந்துகொண்டனர் என்று தல புராணம் கூறுகிறது. விநாயகர் மணக்கோலத்தில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்துகொண்டு கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்கள். இதனால், நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. ஜோதிட ரீதியாக, குருவின் பார்வை வரும் வேளையில்தான் திருமணம் நிச்சயமாகும். நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
சம்பந்தர் வலிதாய இறைவன் மேல் பாடிய தனது இப்பத்துப் பாடலையும் மனத்துள் கொண்டு சிந்தித்துத் தெளிந்து இசையோடு பாடவும் வல்லவர்கள் சுவர்க்க போகத்தினும் பெரிய போகம் எய்துவர் என்று குறிப்பிடுகிறார்.

மேலும் இத்தல இறைவனை வழிபடுவதால் துன்பங்களோ நோய்களோ வந்தடையாது என்றும் வினை அல்லல் துயர் ஆகியன வந்தடையாது என்றும, வினைகள் தீரும், நலங்கள் உண்டாகும் என்றும், இத்தல இறைவன் திருவடிகளை வணங்கினால் வீடு பேறு அடையலாம் என்றும், திருவலிதாயத் தலத்தை நினைக்க மனத்துயர் கெடும் என்றும் பலவாறு இத்தல இறைவனின் பெருமைகளை பாடியுள்ளார்.
1. பத்தரொடு பலரும் பொலியம் மலர் அங்கைப்புனல் தூவி
ஒத்தசொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர்சென்னி
மத்தம்வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலிதாயம்
சித்தம்வைத்த அடியார் அவர்மேல் அடை யாமற்று இடர்நோயே.
 
2. படை இலங்கு கரம் எட்டு உடையான் படிறு ஆகக் கனலேந்திக்
கடை இலங்கு மனையில் பலிகொண்டு உணும் கள்வன் உறை கோயில்
மடை இலங்கு பொழிலின் நிழல்வாய் மது வீசும் வலி தாயம்
அடையநின்ற அடியார்க்கு அடையாவினை அல்லல் துயர்தானே.
 
3. ஐயன் நொய்யன் அணியன் பிணிஇல்லவர் என்றும் தொழுது ஏத்தச்
செய்யன் வெய்ய படையேந்த வல்லான் திருமாதோடு உறைகோயில்
வையம் வந்து பணியப் பிணிதீர்த்து உயர்கின்ற வலிதாயம்
உய்யும் வண்ணம் நினைமின் நினைந்தால் வினை தீரும் நலமாமே.
 
4. ஒற்றை ஏறு அது உடையான் நடமாடி ஓர் பூதப்படை சூழப்
புற்றின் நாகம் அரை ஆர்த்து உழல்கின்ற எம்பெம்மான் மடவாளோடு
உற்ற கோயில் உலகத்து ஒளி மல்கிட உள்கும் வலி தாயம்
பற்றி வாழும் அதுவே சரணாவது பாடும் அடியார்க்கே.
 
5. புந்தி ஒன்றி நினைவார் வினையாயின தீரப் பொருளாய
அந்தி அன்னது ஒரு பேரொளியான் அமர் கோயில் அயல் எங்கும்
மந்தி வந்து கடுவன்னொடும் கூடி வணங்கும் வலிதாயம்
சிந்தியாத அவர் தம் அடும் வெந்துயர் தீர்தல் எளிது அன்றே.
 
6. ஊன் இயன்ற தலையில் பலிகொண்டு உலகத்து உள்ளவரெ ஏத்தக்
கான் இயன்ற கரியின் உரிபோர்த்து உழல் கள்வன் சடை தன்மேல்
வான் இயன்ற பிறை வைத்த எம் ஆதி மகிழும் வலிதாயம்
தேன் இயன்ற நறுமாமலர் கொண்டு நின்று ஏத்தத் தெளிவாமே.
 
7. கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டிப்
பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறைகோயில்
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலிதாயத்து
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மைக் கதியாமே.
 
8. கடலின் நஞ்சம் அமுது உண்டு இமையோர் தொழுது ஏத்த நடம் ஆடி
அடல் இலங்கை அரையன் வலிசெற்று அருள் அம்மான் அமர் கோயில்
மடல் இலங்கு கமுகின் பலவின் மது விம்மும் வலிதாயம்
உடல் இலங்கும் உயிர் உள்ளளவும் தொழ உள்ளத்துயர் போமே.
 
9. பெரியமேரு வரையே சிலையா மலைவுற்றார் எயில் மூன்றும்
எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறி வொண்ணா வடிவு ஆகும்
எரியதாகி உற ஓங்கியவன் வலிதாயம் தொழுது ஏத்த
உரியராக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே.
 
10. ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி
ஏசி ஈம் இலராய் மொழிசெய்தவர் சொல்லைப் பொருள் என்னேல்
வாசி தீர அடியார்க்கு அருள்செய்து வளர்ந்தான் வலிதாயம்
பேசும் ஆர்வம் உடையார் அடியார் எனப் பேணும் பெரியோரே.
 
11. வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து
அண்டவாணன் அடி உள்குதலால் அருள்மாலைத் தமிழாகக்
கண்டல் வைகுகடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்துங்
கொண்டு வைகி இசை பாடவல்லார் குளிர் வானத்து உயர்வாரே...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment