Sunday, 30 September 2018

அங்காள பரமேஸ்வரி அம்மன்.!!

உலகில் உள்ள அங்காளபரமேஸ்வரி ஆலயங்களுக்கெல்லாம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் தான் தலைமையிடம் என்கிறது தலபுராணம்.

அங்காள பரமேஸ்வரி அம்மன் சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் செஞ்சியிலிருந்து வடப்புறம் 20 கிலோ மீட்டர் தொலைவில் மேல்மலையனூரில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறாள். அவள் இந்த தலத்துக்கு வந்தது எப்படி தெரியுமா?  சிவனை பார்க்க கைலாசமலைக்கு பிரம்மன் வந்தார். தூரத்தில் பிரம்மனை பார்த்த சக்திதேவி, பிரம்மனின் ஐந்து தலையை பார்த்து சிவன் என்று நினைத்து வணங்கி கொண்டே வந்தார். 

முகத்தை அருகில் பார்த்த பிறகுதான் தெரிந்தது பிரம்மன் என்று. “ஐந்து தலையை பார்த்த உடன் சிவன் என்று நினைத்துவிட்டீர்களா?. எனக்கும் ஐந்து தலை சிவனுக்கும் ஐந்து தலை.” என நகைத்தார் பிரம்மா. அம்பிகைக்கு கோபம் வந்தது. சிவபெருமானிடம் முறையிட்டாள் அன்னை. “ஓ ஐந்து தலை இருப்பதால்தான் அவருக்கு ஆணவமா?” என்ற பரமன் பிரம்மனின் ஒரு தலையை வெட்டி வீசினார். 

தன் தலைவனின் ஒரு தலை பறிபோக காரணம் அம்பிகைதான் என்று கருதிய கலையரசியான சரஸ்வதி, பராசக்தி மேல் கோபம் கொண்டு, “சக்தி நீ அரண்மனையில் வாழ்ந்தாய். இனி நீ இடம் இல்லாமல் அலைந்து புற்றையே வீடாக கொண்டு வாழ்வாய்.” என்று சபித்தாள். 

சரஸ்வதியின் சாபத்தால் பர்வத இராஜ புத்திரியாக திகழ்ந்த அன்னை பார்வதிதேவி பூலோகத்தில் தோன்றி, இருக்க இடம் இல்லாமல் எங்கு தங்குவது என்று தெரியாமல் அவதிப்பட்டாள். இப்படியே பல இடங்களுக்கு சென்று களைப்படைந்து நிற்கும் போது ஒர் இடத்தில் நறுமணம் வீசியது. அந்த திசையை நோக்கி நடந்தாள்.அந்த இடம் அழகான நந்தவனமாக இருந்தது. அவ்விடத்திலேயே அமர்ந்து தவம் செய்ய தொடங்கினாள். 

இந்த காட்சியை கண்ட அங்கு காவலுக்கு இருந்த மீனவ இனத்தை சார்ந்தவன், “ ஏய் பெண்ணே இது இந்த நாட்டின் மலையரசனுக்கு உரிமையான இடம். இங்கு நீ தவம் செய்வது உனக்கு நல்லதல்ல. எங்கள் அரசர் தெய்வ நம்பிக்கை அற்றவர். நீ தவம் செய்யும் தகவல் அரசருக்கு தெரிந்தால் உன் உயிருக்கு? ஆபத்து நேரலாம். ஆகவே இங்கிருந்து போய் விடு.” என்று எச்சரித்தான். 

“மகனே இந்த பூமியே என் சொந்த இடம் தானப்பா. இவ்விடத்தை உன் மலையரசனுடையது என்று நீ கூறுவது நகைப்புக்குரியதடா. நான் இங்குதான் தவம் செய்வேன்.” என்று சொன்னாள் பராசக்தி. அதற்கு அந்த காவலன், “ஏதோ உனக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். அதான் பாவம் இங்கு வந்து மாட்டிக் கொண்டாய்.” என்றான். உடனே அன்னை புன்னகைத்தப்படி தன் உடலை புற்று மண்ணால் மூடினாள். 

அந்த காட்சியை பார்த்தவன் பிரமித்து போனான். இந்த பெண், அன்னை பராசக்தி என்பதை உணர்ந்தான். அம்பிகை மீது பக்தி உண்டானது. மக்களிடம் சொன்னான். நந்தவனத்தில் திடீர் புற்று உருவானதை அறிந்த மக்கள் அதிசயித்தனர். புற்றை பலர் வந்து பார்த்தார்கள். இந்த தகவல் அரசருக்கு தெரிந்து, “எனக்கு சொந்தமான தோட்டத்தில் புற்று இருக்கிறதா? இதை உடனே இடித்து தள்ளுங்கள்.” என்று உத்தரவிட்டான். 

புற்றை இடிப்பது பெறும் பாவம், அதை செய்யாதீர்கள் என்று எத்தனையோ பேர் கூறியும் கேட்கவில்லை அரசர்.  இறைவன் மேல் நம்பிக்கை இல்லாமல் தன் பூந்தோட்டத்தில் இருந்த புற்றை உடைக்க உத்தரவிட்டான். பணியாளர்கள் புற்றை உடைத்தார்கள். அப்போது அருகில் இருந்த மீனவ இனத்தை சார்ந்த அந்த காவலன், அந்த புற்று மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து வைத்து கொண்டான். 

புற்றை உடைத்து விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து சென்று விட்டார்கள் அரசரின் பணியாளர்கள். அவர்கள் போன பிறகு தன் கையில் இருந்த புற்று மண்ணை அந்த இடத்தில் மறுபடியும் வைத்து பூஜை செய்தான் மீனவன். புற்று மறுபடியும் வேகமாக உருவானது. இந்த செய்தியை கேள்விப்பட்ட அரசன், மறுபடியும் பணியாளர்களை அனுப்பினான். புற்றை உடைக்க புற்றின் அருகில் சென்றவுடன் அன்னைக்கு காவலாக வந்து நின்ற சிவபூதங்கள் அந்த பணியாளர்களை கொன்றார்கள். இதுகெல்லாம் காரணம் அந்த மீனவன் தானே என்று கோபம் கொண்ட அரசன், அந்த மீனவனை கொன்று விடுங்கள் என்று கையை நீட்டி காவலர்களுக்கு உத்தரவிட்டான். 

உத்தரவிட்ட அந்த நொடி, அரசனின் கை உணர்ச்சி இன்றி அப்படியே தளர்ந்தது. கை வேலை செய்யவில்லை. இது தெய்வ மகிமைதான் என்று புரிந்துக் கொண்டான். தன் தவறுக்கு மனப்பூர்வமாக அன்னை ஆதிபராசக்தியிடம் மன்னிப்பு கேட்டான். தான் இங்கே இருப்பதை உலகிற்கு தெரியப்படுத்த மீனவனையும் அரசனையும் கருவியாக பயன்படுத்தினாள் அன்னை அங்காளபரமேஸ்வரி. அம்மன் அரசனை மன்னித்தாள். தன் தவறுக்கு பரிகாரமாக அந்த பூந்தோட்டத்தை அம்மனுக்கே காணிக்கையாக வழங்கினான் மன்னன். 

சாபத்தின் பலனாகத்தான் மேல்மலையனூரில் அகோர உருவத்தில் அங்காளபரமேஸ்வரி என்ற நாமத்தடன் அமர்ந்தாள். சிலகாலம் கழித்து திருவண்ணாமலைக்கு சென்று அங்கு பிரம்மதீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கி ஒரு மூதாட்டியின் வடிவம் பெற்று மீண்டும் மலையனூர் வந்து தங்கினார். அதன்பிறகு மலையனூரில் உள்ள மீனவர்கள் அங்காளம்மனுக்கு கோயில் கட்டினார்கள். 

அம்மனுக்கு உதவியாக இருந்த மீனவ சமுதாயம்தான் இன்றுவரை அந்த கோயிலில் சேவை செய்கிறார்கள். உலகில் உள்ள அங்காளபரமேஸ்வரி ஆலயங்களுக்கெல்லாம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் தான் தலைமையிடம் என்கிறது தலபுராணம். இந்த ஆலயத்திற்கு சென்று வணங்கினால் செய்வினை பாதிப்பு, விரோதிகளால் உண்டான பிரச்சனைகள் விலகும். 

இந்த அம்மனின் புற்று மண்ணை 48 நாள் நெற்றியில் இட்டு வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும். அன்னை அங்காள பரமேஸ்வரி துணை நிற்பாள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

Saturday, 29 September 2018

மேல்மலையனூரில் 3 வகை பிரசாதம்.!!

மேல்மலையனூர் தலத்தில் மூன்று வகை பிரசாதங்களை பக்தர்கள் பெற முடியும். அதன் பின்னணியில் வரலாறு உள்ளது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மேல்மலையனூர் தலத்தில் மூன்று வகை பிரசாதங்களை பக்தர்கள் பெற முடியும். அதன் பின்னணியில் வரலாறு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தட்சனின் யாகத்தை அழிக்க புறப்பட்ட தாட்சாயினி, அகோரமாக பெரிய உருவம் எடுத்து தீயில் விழுந்து யாகத்தை அழித்தாள். அவளது உருவமற்ற அவதாரமே அங்காளி என்று அழைக்கப்படுகிறது. அதுதான் மருவி அங்காள பரமேஸ்வரி என்றானது.

அங்காளம்மன் யாகக் குண்டத்தில் விழுந்து சாம்பலான இடமாக இத்தலம் கருதப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில் இங்கு பக்தர்களுக்கு சாம்பலை பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

தாட்சாயினி தன்னை அழித்துக் கொண்ட தகவல் அறிந்ததும் சிவன், அவளை தூக்கி ஆவேசமாக ஆடினார். அப்போது தாட்சாயினியின் கை துண்டாகி இத்தலத்தில் விழுந்தது. எனவே இத்தலம் தண்ட காருண்யம் என்ற சக்தி பீடமாக மாறியது. இதை பிரதிபலிக்கும் வகையில் இத்தலத்தில் குங்குமம் பிரசாதம் கொடுக்கிறார்கள்.

அன்னை பராசக்தி சிவ சுயம்புவாக புற்று வடிவில் அங்காள பரமேஸ்வரியாக மேல் மலையனூரில் அவதாரம் எடுத்தார். இதனால் அந்த புற்று மகத்துவம் மிகுந்ததாக மாறியது. அந்த புற்று மண்ணை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். நோய் தீர்க்கும் அற்புதங்களை செய்வதால் மேல்மலையனூர் தலத்துக்கு வரும் பக்தர்கள் மற்ற பிரசாதங்களை விட புற்றுமண் பிரசாதத்தை மிகவும் விரும்பி வேண்டி கேட்டு, வாங்கிச் செல்வதை காணலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

மூன்று அமாவாசை விரத வழிபாடு பயன்கள்.!!

அமாவாசை அன்று அங்காளம்மனிடம், மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியபடி அவர்களின் வேண்டுகோள்படி நிறைவுபெறுகிறது.

ஆற்றல் மிக்க அண்ட சக்திகள் மூன்று. அவை சூரியன், சந்திரன், பூமி ஆகும். மனித இயக்க ஆற்றல் சக்தியாக தெய்வ தேவதையாக ஏற்றுக் கொள்ளும்போது உருவக உருவங்களை உள்ளடக்கிய ஆண் பெண் என்ற இயக்க சக்தியே பிண்ட சக்தியாகும். 

அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை. பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை. 

இந்த நாட்களில் தான் அங்காளி என்ற சிற்சக்தி மயானங்கள் தோறும் ஆவி, ஆன்மா என்ற பிண்ட சக்திகளுக்கு மயானங்களில் சூரையிடும் நாள் அமாவாசை இரவு பன்னிரண்டு மணி நேரம். 

இந்த நேரங்களில் அங்காளம்மன் திருக்கோயிலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு அருளாசி வழங்கிடும் அருள்மிகு அங்காளம்மனிடம், மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியபடி அவர்களின் வேண்டுகோள்படி நிறைவுபெறுகிறது.

ஆற்றல்மிகு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற ஆற்றல்களான விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவு ஆற்றல், இவைகளின் உருவ சக்திகளான, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்களின் இயக்கமாக கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும் என்பதாக கருதியே தொடர்ந்து அமாவாசை தோறும் விரதம் இருந்து அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

கந்தாயப்பலன் என்பது, தொடர்ந்து வரும் மூன்று அமாவாசையைக் குறிப்பது. சித்த பிரமை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி நீங்கியது 4வது கந்தாயத்தின் கடைசி அமாவாசையான மாசி மாதத்தில் என்பதும், மும்மூர்த்திகளில் முதல் மூர்த்திக்கே பிரமஹத்தி பிடித்ததைப்போன்று மானிடர்களாகிய மனிதர்களை ஏன் பிரமஹத்தி பிடித்திருக்காது? என்பதாக கருதியே ஆன்ம பிணிகளாக பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம், துயரம் பிரம்மஹத்தி என்ற ஆன்ம பிணிநோய்கள் விலக தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருகை தந்தால் பிரமஹத்தி என்பது விலகும் என்பது உண்மை.

கந்தாயங்கள் மொத்தம் நான்கு. இதையே ஒரு எலுமிச்சை பழமாக கருதி நான்கு பிளப்பாக செய்து அதில் கற்பூரம் ஏற்றி, ஆன்ம பிணிகள் பீடிக்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி அடங்கிய தலையை சுற்றி கைகால் முதல் தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும், பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருட்டியை கழித்து செல்வது வாடிக்கை வழக்கம். 

இதுதொன்று தொட்டு வந்துள்ள பழமை பிரார்த்தனையாகும். அங்காளம்மன் என்ற இந்த தொண்மை தெய்வத்துக்கும் இதே போன்றே இன்றும் செய்வது மரபு. ஆதியில் அமாவாசை கருவா என்றும், பவுர்ணமியை விளக்கண்ணி என்றும் பழமை திருவிழாவாக கொண்டாடி உள்ளனர். அவ்வாறே பழமை திரு விழா வாக அங்காளம்மன் ஊஞ்சல் திரு விழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர். 

அமாவாசை தோறும் இந்த திருக்கோயிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாவதால் அமாவாசை தோறும் அன்பர்கள் இந்த திருக்கோயிலுக்கு வருகின்றனர் என்பது உண்மை...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

முக்தி அளிக்கும் வெங்கடாம்பேட்டை வேணுகோபாலசுவாமி கோவில்.!!

தன்னை வழிபட்டு தவமியற்றிய சடமர்ஷனர் என்ற முனிவருக்கு, திருமால் காட்சி அருளிய இடமே வெங்கடாம்பேட்டை. இந்த வரலாற்றை பின்னணியாகக் கொண்டு கட்டப்பட்டதே இங்குள்ள கிருஷ்ணன் கோவில்.

விஷ்ணு அலங்காரப்பிரியர். எனவே பக்தர்கள் அவரை விதவிதமாக அலங்கரித்துப் பார்ப்பது வழக்கம். அவரது அலங்காரத்தில் துளசி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும். மணம் மிகுந்த பொருட்களைக் கொண்டு தன்னை அபிஷேகித்து, துளசியால் தன்னை அலங்கரித்து வழிபடும் பக்தர்கள் கேட்கும் வரத்தை அருள்வது திருமாலின் வழக்கம். அப்படி தன்னை வழிபட்டு தவமியற்றிய சடமர்ஷனர் என்ற முனிவருக்கு, திருமால் காட்சி அருளிய இடமே வெங்கடாம்பேட்டை. இந்த வரலாற்றை பின்னணியாகக் கொண்டு கட்டப்பட்டதே இங்குள்ள கிருஷ்ணன் கோவில்.

கி.பி. 1464-ல் செஞ்சியை ஆட்சி செய்த வேங்கடபதி நாயக்கர் என்னும் பாளையக்காரர் தனது பாசத்துக்குரிய சகோதரி வேங்கடம்மாளின் பெயரில் நிர்மாணித்த ஊர் இதுவாகும். அவரது பெயரால் ‘வெங்கடம்மாள்பேட்டை’ என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் ‘வெங்கடாம்பேட்டை’ என மருவியது.

தல வரலாறு :

ராமபிரான், தன் தம்பி லட்சுமணனுடன் சீதா தேவியை தேடி இவ்வழியாக வந்தார். இயற்கை எழிலும், அழகான சூழலும், பல்வேறு சுகந்த மணங்களும் நிரம்பியிருந்த தீர்த்தவனம் என்னும் இந்தப் பகுதி ராமரைக் கவர்ந்தது. எனவே ஒரு நாள் இரவு அங்கேயே தங்கினார். மனைவியின் பிரிவால் பல நாட்கள் தூக்கம் இன்றி தவித்த ராமபிரான், தம்பி லட்சுமணனின் மடி மீது தலை வைத்து சுகமான நித்திரை செய்தார். பின்னர் தில்லைவனம் (சிதம்பரம்) நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

இலங்கைச் சென்று சீதையை மீட்ட ராமபிரான், திரும்பி வரும் வழியில் மீண்டும் இந்த இடத்திற்கு வந்தார். அப்போது சீதை பிராட்டி, அனுமன் ஆகியோருடன் ஆதிசேஷன் மீது துயில் கொண்டு அரங்கனைப் போல சேவை சாதித்து, இந்தப் பூமியின் மகத்துவத்தை உலகறியச் செய்தார்.

பிற்காலத்தில் சைவ - வைணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, தில்லைவனத்தில் அரங்கனாக காட்சி தந்து அருள்பாலித்த கோவிந்தராஜபெருமாளின் சிலை கடலில் ஆழ்த்தப்பட்டது. இதனால் தில்லை திருச்சித்ரக்கூடம் வெறிச்சோடிப் போனது. இதைக் காண மனம் ஒப்பாத வைணவர்கள் பராந்தகச் சோழனிடம் முறையிட்டனர். மன்னரின் முயற்சியால் தில்லைவாழ் அந்தணர்களின் ஒப்புதலோடு திருச்சி த்ரக்கூடத்தில் பிரதிஷ்டை செய்ய அரங்கனின் சிலை 18 அடி நீளத்தில் வடிவமைக்கப்பட்டது.

ஆனால் அவ்வளவு பெரிய திருமேனியை பிரதிஷ்டை செய்ய எதிர்ப்பு கிளம்பவே, தற்போதுள்ள சிறிய அளவிலான கோவிந்தராஜ பெருமாள் சிலை செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. பேரழகனாக, அரி துயில் அரங்கனாக உருவாக்கப்பட்ட 18 அடி சிலை, ராமபிரானுக்கு மிகவும் பிடித்த தீர்த்த வனத்தில் (வெங்கடாம்பேட்டை) அனந்த சயன ராமனாக மக்களால் நிலைநிறுத்தப்பட்டது.

திருமாலின் 18 அடி சிலையை, திருச்சித்ரக்கூடத்தில் பிரதிஷ்டை செய்ய இடம் கிடைக்காத ஆதங்கத்தில் இருந்த வைணவர்கள், தில்லைவனத்திற்கு போட்டியாக தீர்த்தவனத்தை உருவாக்க நிலைப்பாடு கொண்டனர். அதன்படி தில்லையில் காலைத்தூக்கி நின்றாடும் நடராஜபெருமானுக்கு ஒப்பாக, கால் மடித்து ஊன்றி நின்று வேய்குழல் ஊதும் வேணுகோபாலனை பாமா- ருக்மணி சமேதராக தனி சன்னிதி அமைத்து மூலவராக்கினர். திருமூலட்டானத்து இறைவனுக்கு நிகராக வைகுண்டவாச பெருமாளையும் தொடர்ந்து ஆண்டாள், ஆழ்வார்கள், உடையவர் ஆகிய மூர்த்தங்களையும் பிரதிஷ்டை செய்தனர். இப்படி சிதம்பரத்தைப் பார்த்து ஒவ்வொரு சன்னிதியாக உருவாக்கினர் என்கிறது வரலாறு.

மற்றொரு வரலாறு :

இந்த ஆலயத்திற்கு இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது. அது.. துவாபரயுகம் முடிந்து கலியுகம் தொடங்கிய காலகட்டத்தை பின்னணியாக கொண்டது. காலமாற்றத்திற்கு ஏற்ப அமைதி குலைந்து, போர் சூழலும், அதர்மமும் தலை தூக்கியிருந்தது. இந்த சமயத்தில், சடமர்ஷனர் என்ற மகரிஷி வடநாட்டில் இருந்து அமைதி வேண்டி தென்னாட்டுக்குப் பயணமானார். தென்னாட்டில் இன்றைய திருக்கோவிலூர் பகுதியில் பஞ்ச கிருஷ்ண ஆரண்யம் என்னும் வனப் பகுதிக்கு வந்தவர், அதை ஒட்டிய நீர் வற்றியிருந்த கருட நதி (தென்பெண்ணையாறு) வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வெப்பம் தாளாமல் அவரது கால்களில் கொப்பளங்கள் தோன்றின. அந்த நேரத்தில் தென்கரை ஓரமாக ஒரு நீரூற்று தோன்றி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அதில் தன் காலை நனைத்து வெப்பத்தைத் தணித்துக் கொண்ட மகரிஷி, அதன் பாதையிலேயே பயணத்தைத் தொடர்ந்தார். அந்தப் பாதை, தில்லைவனத்தின் வடகோடியில் உள்ள தீர்த்தவனம் என்ற இடத்தில் முடிவடைந்தது. அந்த இடம் இயற்கை எழில் சூழ அமைதியாகக் காட்சி தந்ததால், அங்கேயே அமர்ந்து மூவுலகும் போற்றும் பூமகள் நாயகனான திருமாலை வேண்டி கடுந்தவத்தில் ஈடுபட்டார். உலகில் மறுபடியும் அறம் தழைக்கவும், தர்ம நெறி நிலைக்கவும் இத் தவத்தை அவர் மேற்கொண்டார்.

பலகாலம் தவத்திலே திளைத்த மகரிஷியின் பக்தியில் மகிழ்ந்த திருமால், தென்றல் - வாடை ஆகிய காற்றுகளை சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மதேவரை சாரதியாகவும் கொண்ட தேரில் பிராட்டியாருடன் அமர்ந்தவாறு முனிவர் முன் காட்சி அளித்தார். பின்னர் வேண்டும் வரம் கேட்கும்படி மகரிஷிக்கு அருளினார்.

மகரிஷியோ, ‘இறைவா! தாங்கள் உலக நலனுக்காக எடுத்த அவதார வடிவங்களை காண ஆசைப்படுகிறேன்’ என்றார்.

அதற்கு இசைந்த திருமாலும், மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம என ஒவ்வொரு அவதார கோலத்தையும் வரிசையாக சடமர்ஷனுருக்கு காட்டினார்.

ராமவதாரம் வந்ததும் மகிழ்ந்த மகரிஷி, ‘ஐயனே! மானிட உயிர்களின் பொருட்டு - பூலோகத்தில் ராமனாகப்பிறந்து, எத்தனை துன்பங்களை அடைந்தீர். எத்தனை எத்தனை போர்களை நடத்தி அசுரர்களை வதைத்தீர். அந்த களைப்பெல்லாம் தீர தாங்கள் இவ்விடத்தில் இளைப்பாறுவதுடன், பக்தர்களுக்கும் அருள் பாலிக்க வேண்டும்’ என்றார்.

அதன்படியே லட்சுமணன் ஆதிசேஷனாக மாறி மெத்தை விரித்து குடை பிடித்து தொண்டுபுரிய, சீதை பிராட்டி ஸ்ரீதேவி வடிவிலேயே பெருமாள் திருவடிகளை வருடியவாறு வீற்றிருக்க, பெருமாளும் சயன கோலத்தை காட்டி அருளினார்.

பின்னர் அடுத்தடுத்த அவதார காட்சியை மகரிஷிக்கு அருளினார். கிருஷ்ணனாக கோவர்த்தனகிரியோடு தோன்றி காட்சி யளித்தார்.

அப்போது மகரிஷி, ‘பெருமாளே! இந்த மலை எதற்கு?’ என்றார்.

‘இது பக்தர்களை கடும் மழையில் இருந்து பாதுகாப்பதற்காக’ என்றார் பெருமாள்.

அதற்கு மகரிஷி, ‘இந்த மலை இங்கு தேவையற்றது. தங்கள் குழலோசையிலே பிரபஞ்சத்தை எல்லாம் மயக்கி பக்திபரவசத்தை ஊட்டிய ஜெகன்மோகன பால கோபாலகிருஷ்ணனாக காட்சி தர வேண்டும் ’ என்று வேண்டினார். பெருமாளும் அவ்விதமே ருக்மணி- சத்தியபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலனாக காட்சியளித்தார்.

இப்படியாக பத்து அவதார திருக்கோலங்களையும் கண்டு மகிழ்ந்த மகரிஷியைப் பார்த்து, ‘இப்பொழுது திருப்திதானே?’ என பெருமாள் கேட்க, ‘கிடந்த (சயன) திருக்கோலத்திலும், நின்ற திருக்கோலத்திலும் அருள்பாலித்த தாங்கள், இத்தலத்திலேயே அமர்ந்த திருக்கோலத்திலும் காட்சியளித்து கலியுக காலத்தில் மக்கள் தங்களது திருக்காட்சியைக் கண்டு பேரின்பத்தை அடைய அருள்புரிய வேண்டும்’ என்றார், மகரிஷி.

தனக்கென எதுவும் கேட்காமல், உலக மக்களுக்காக வேண்டியதால், அமர்ந்த கோலத்திலும் அவருக்கு காட்சி தந்தார் பெருமாள் என்கிறது மற்றொரு வரலாறு.

இத்திருத்தலத்தில் மகா விஷ்ணு, நின்ற திருக்கோலத்தில் பாமா- ருக்மணி சமேத வேணுகோபாலனாகவும், அமர்ந்த திருக்கோலத்தில் வைகுண்டவாசப் பெருமாளாகவும், சயனத் திருக் கோலத்தில் அனந்தன் மீது துயில் கொண்ட அனந்தசயன ராமனாகவும் காட்சி தருகின்றார். இம்மூன்று திருக்கோலங்களையும் ஒருங்கே வணங்கும் அடியவர்கள் அனைத்துச் செல்வங்களையும் பெறுவதோடு, முக்தியையும் பெறுவார்கள்.

ஆலய அமைப்பு :

இந்த ஆலயம் பெரிய மதிற்சுவர்களைக் கொண்டு, சுமார் 30 ஆயிரம் சதுர அடியில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு திசை பார்த்து அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் கீழ்ப் பகுதியில் இடம்பெற்றுள்ள கல்வெட்டு, கி.பி. 1884-ம் ஆண்டில் ஆட்சிசெய்த விஜயநகர மன்னர் காலத்தை உறுதி செய்கிறது. ஏழுநிலை கோபுர வாசலைக் கடந்ததும், பலிபீடம், அதனருகே அபூர்வ கோலத்தில் கருடாழ்வார் சன்னிதி இருக்கிறது. 

பெரும்பாலான ஆலயங்களில் நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக, இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் இத்தல கருடன் வீற்றிருக்கிறார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இந்த கருடாழ்வார் காட்சி தருகிறார்.

மகாமண்டபத்திற்குள் தெற்குநோக்கி இருக்கும் சன்னிதியில், அமர்ந்த நிலையில் வைகுந்தவாசன் சன்னிதி உள்ளது. இவருக்கு மேலே ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடை விரித்து காத்து நிற்கிறார். இது அமர்ந்த நிலைக் கோலமாகும். இதனையடுத்து, சடமர்ஷன மகரிஷியின் விருப்பத்திற்கு ஏற்ப பெருமாள் காட்சி கொடுத்த வேணுகோபால சுவாமி சன்னிதி இருக்கிறது. 

சுமார் 6 அடி உயரத்தில் சங்கு, சக்கரங்களை இரு கரங்களில் தாங்கி நின்ற கோலத்தில் இவர் அருள்பாலிக்கிறார். மற்ற இரு கரங்களும் வேய்குழலை பிடித்து ஊதியபடி இருக்கிறது. வேணுகோபாலரின் இருபுறமும் ருக்மணி, சத்யபாமா வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். மூலவரை தரிசித்து தெற்கே திரும்பினால் செங்கமலவல்லி தாயார் சன்னிதி உள்ளது. 

பத்மாசன கோலத்தில் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய முத்திரையுடனும் தாயார் காட்சி தருகின்றார். வடக்கே ஆண்டாள் சன்னிதி காணப்படுகிறது. இதன் அருகே, சுமார் 18 அடி நீள பாம்பணையில் துயில் கொண்ட (கிடந்த) கோலத்தில் சயனராமர் காட்சி தந்து பார்ப்பவர்களை பரவசப்படுத்துகின்றார். அவரது திருமார்பில் திருமகளும், திருவடியில் சீதாபிராட்டியும், வீர ஆஞ்சநேயரும் வீற்றிருக்கின்றனர்.

இவ்வாலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தைத் திருநாள், தெலுங்கு புத்தாண்டான யுகாதி பண்டிகை ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும் இந்த ஆலயத்தில், 150 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழா வருகிற 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.

சூரிய- சந்திரர் வழிபாடு :

கிருஷ்ணராகவும், ராமனாகவும், பெருமாளாகவும் இத் தலத்தில் திருக்காட்சித் தரும் திருமாலை, பக்தர்கள் மட்டுமின்றி சூரியனும் சந்திரனும் வழிபடுவது மிகச்சிறப்பான நிகழ்வாகக் கூறலாம். ஆண்டுதோறும் ஆவணி மாதம் 25-ம் நாளில் இருந்து ஆறு நாட்கள், காலை ஆறு மணிக்கு சூரியன் தன் ஒளிக்கதிர்களால் மூலவரை வணங்குகிறார். 

அதேபோல, புரட்டாசி மாதப் பவுர்ணமிக்கு முன்னும் பின்னும் தலா மூன்று நாட்கள் சந்திரன் தன் ஒளிக் கதிர்களால் செங்கமலவல்லித் தாயாரை வணங்குகிறார். இது ஓர் அதிசய வழிபாட்டு நிகழ்வாகும். இப்படி சூரியனும் சந்திரனும் ஒருசேர வழிபடும் திருத்தலங்கள் மிகச்சிலவே. அதிலும் வைணவ ஆலயங்களை காண்பது அரிது. அந்த குறையைப் போக்குகிறது இவ்வாலயம். 

அமைவிடம் :

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. வெங்கடாம்பேட்டை வேணுகோபாலசுவாமி கோவிலுக்குச் செல்ல குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, வடலூர் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡