Wednesday, 15 August 2018

மடப்புரம் காளியம்மன் திருக்கோவில்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து பூவந்தி செல்லும் சாலையில் 2 கிமீ தொலைவில் உள்ளது மடப்புரம். வைகையாற்றின் வடக்கு கரையில் உள்ள இந்த கிராமத்தில் பழமையான காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு பிரமாண்டமான குதிரை சிலையின் கால்களுக்கிடையே காளியம்மன் வீற்றிருக்கிறார். அம்மனின் இருபுறமும் பூத கணங்கள் உள்ளன. இங்கு விநாயகர், அடைக்கலம் காத்த அய்யனார் ஆகியோருக்கு சிலைகள் உள்ளன. கோயிலில் கொடிமரம் உள்ளது. தல விருட்சமாக வேப்ப மரம் உள்ளது. பிரம்மகுண்டம், மணிகர்ணி தீர்த்தங்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கோயில் உள்ளது.

தல வரலாறு

பண்டைய காலத்தில் மதுரையை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. மதுரையின் எல்லையை குறித்து தருமாறு சிவபெருமானிடம் மீனாட்சியம்மன் தெரிவித்தார். எல்லையை குறிக்கும் வகையில் மதுரையை சுற்றிலும் சிவபெருமான் பாம்பு வடிவில் வளைந்து நின்றார். தற்போது மடப்புரம் அமைந்துள்ள பகுதியில் பாம்பின் தலையும், வாலும் சந்தித்தது. இதனால் இந்த இடம் ‘படப்புரம்’ என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் மருவி ‘மடப்புரம்’ என்று ஆனது. இங்கு பார்வதியுடன் மடப்புரம் பகுதிக்கு சிவபெருமான் வேட்டைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது, பார்வதியை ஓரிடத்தில் அமர வைத்து விட்டு, சிவபெருமான் வேட்டைக்கு கிளம்பினார். அய்யனாரை, பார்வதிக்கு பாதுகாப்பாக இருக்க செய்தார்.

வேட்டைக்கு சென்று திரும்பிய சிவபெருமானிடம், தான் காத்திருந்த இடத்துக்கு சிறப்பு அளிக்க வேண்டும் என்று பார்வதி கேட்டார். அருகில் உள்ள வைகையாற்றில் நீராடுபவர்களுக்கு, காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதல் புண்ணியம் கிடைக்கும் என்று சிவபெருமானும் வரம் அளித்தார். இந்த நிகழ்வுக்கு பின்னர் பார்வதி அப்பகுதியிலேயே காளி அவதாரம் எடுத்து தங்கினார். அவருக்கு பாதுகாப்பாக இருந்த, அய்யனார் அடைக்கலம் காத்த அய்யனாராக வீற்றிருக்கிறார். சிவபெருமான் பார்வதிக்கு அருளிய வரத்தின்படி தற்போதும் அருகில் உள்ள வைகையாற்றில், இறந்தவர்களுக்கு திதி கொடுத்து பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

கொடுக்கல், வாங்கல் தொடர்பான பிரச்னைகள் தீர்வு காண மடப்புரம் மற்றும் சுற்றுப்புற கிராமமக்கள் ஏராளமானோர் கோயிலுக்கு வருகின்றனர். பகைவர் பயம் நீங்க வேண்டியும் அம்மனை பக்தர்கள் வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சம்பழ மாலையணிவித்து, பொங்கல் வைத்து, நெய்விளக்கேற்றி வழிபடுகின்றனர். தங்களுக்கு அநீதி செய்தவர்களை தட்டி கேட்க வேண்டி பக்தர்கள் சிலர் கோயிலில் காசை வெட்டி அம்மனை வணங்குகின்றனர். இதன் மூலம் அநீதி செய்தவர்களை அம்மன் தட்டி கேட்பார் என்பது நம்பிக்கை.

இளம்பெண்கள் திருமணம் நடக்க வேண்டி இங்குள்ள வேப்ப மரத்திற்கு மஞ்சள் தாலியை கட்டி வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மரக்கிளையில் தொட்டில் கட்டி வணங்குகின்றனர். இதன் மூலம் திருமண தடை நீங்குவதாகவும், குழந்தைபேறு கிடைப்பதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஆடி வெள்ளி, நவராத்திரி ஆகியவை விசேஷ தினங்களாகும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்கின்றனர். கோயில் நடை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கிறது....

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment