Thursday, 5 July 2018

பாலஞானிக்கு முத்துப் பந்தல் வேய்ந்த பெருமான்

கல்வெட்டு சொல்லும் கோவில் கதைகள் - பட்டிசரம்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ நாட்டின் தலைநகரங்களாக கோழி எனப்பெறும் உறையூரும், பூம்புகார் எனப்பெறும் காவிரிப் பூம்பட்டினமும்  திகழ்ந்தன.  சங்க கால சோழராட்சிக்குப் பின்பு (கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல்) சோழ நாட்டிலுள்ள பழையாறை எனும் நகரமே அவர்தம்  கோநகரமாக விளங்கலாயிற்று.  விஜயாலயன் காலம் தொட்டு தஞ்சையும், கங்கை கொண்ட ராஜேந்திர சோழன் காலந்தொட்டு கங்கை கொண்ட  சோழபுரமும் தலைநகரங்களாகத் திகழ்ந்த  போதும் அப்பேரரசர்களின் குடும்பத்தவர் வாழ்ந்த கோநகரம் பழையாறையேயாகும்.

திருநறையூர் நாட்டு முடிகொண்ட சோழபுரம் எனும் பழையாறையில் சோழர் அரண்மனை திகழ்ந்த இடம் தற்போது ‘சோழன் மாளிகை’ என்ற பெயரில்  சிறிய  கிராமமாகத் திகழ்கின்றது. பழையாறை நகரில் கீழப்பழையார் சோமநாதர் ஆலயம், பழையாறை வடதளி, பழையாறை தென்தளி முழையூர்  பரசுநாதர் கோயில்,  திருச்சத்திமுற்றம், பஞ்சவன் மாதேவீச்சரம், நந்திகேச்சரம், நந்திபுரவிண்ணகரம், கோபிநாதபெருமாள் கோயில் திருமேற்றளி,  பட்டிசரம் போன்ற கோயில்கள்  வழிபாட்டில் உள்ளன.

தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுக்களில் அரைஎருமான்தளி, முள்ளூர் நக்கன்தளி, சங்கீச்சரம், அருண்மொழி தேவீச்சரம், அரிச்சந்திரம், பாற்குளம்  போன்ற  கோயில்கள் அங்கு திகழ்ந்ததாகக் குறிப்புகள் உள்ளன. தாராசுரத்து ஐராவதீஸ்வரம் எனப்பெறும் ராஜராஜபுரத்து ராஜராஜேச்சரமும்  பழையாறையான முடிகொண்ட  சோழபுரத்து கோயில்களில் ஒன்றே. பண்டு ‘கோயில் நகரம்’ என்ற சிறப்புக்குரிய ஒரு பெருநகரமாக பழையாறை  திகழ்ந்திருந்தது. பட்டிசரம் எனும்  பெருங்கோயில் பழையாறைநகரின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த மழபாடி எனும் பகுதியில் திகழ்ந்தது என்பதனை  அத்தலத்தில் தேவாரப் பதிகம் பாடிய  திருஞானசம்பந்தர்,

‘‘பொழில் சூழ் பழசையுள்
மாட மழபாடி உறை பட்டிசரம்’’
- என்றும்,
‘‘மந்தமலி சோலை மழபாடி நகர்
    நீடு பழையாறை அதனுள்
பந்தம் உயர் வீடுநல பட்டிசரம்’’
- என்றும் போற்றியுள்ளமையால் அறியலாம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் எனும் நகரத்திற்கு அணித்தே பழையாறையும், பட்டிசரமும் உள்ளன. காவிரியின் (கொள்ளிடத்தின்) வடகரையில்  அமைந்த  மழபாடி எனும் திருமழபாடி தலத்திலிருந்தும், கொங்கு நாட்டு கோயம்புத்தூரின் பேரூரில் உள்ள பட்டீச்சரர் கோயிலிலிருந்தும்  பழையாறையின் பட்டிசரம்  வேறுபட்ட கோயிலாகும். காவிரியின் தென்கரையிலமைந்த 140 தேவாரத்தலங்களின் வரிசையில் 23வது தலமாகப்  பட்டிசரம் தேனுபுரீஸ்வரர் கோயில்  திகழ்கின்றது. ‘‘பட்டீச்சர மாகாத்மியம்’’ எனும் வடமொழி புராண நூல் இத்தலத்தின் புராணச் சிறப்புக்களை  எடுத்துரைக்கின்றது. இந்நூல் ஏட்டுச் சுவடியாகத்  தஞ்சை அரண்மனை நூலகமான சரஸ்வதி மகாலில் இடம் பெற்றுத் திகழ்கின்றது.

சிவபெருமானின் திருவருளைப் பெறுவதற்காக உமாதேவி காவிரியின் தென்கரைச் சோலையான இவ்வூரில் தவம் புரிந்ததாகவும், அதனால்  ‘‘சக்திவனம்’’  என இப்பகுதி அழைக்கப்பெற்றதாகவும் விவரிக்கின்றது. காமதேனுவின் புத்ரிகளான பட்டி, சபலா, விமலா, நந்தினி என்ற தெய்வப்  பசுக்களில் பட்டி இங்கு வந்து  சக்திவனத்து சிவலிங்கத்தின் மேல் நாளும் பால் சொரிந்து வழிபாடு செய்து சிவப்பணி புரிந்ததால் ஈசனின் அருள்  பெற்றுய்ந்தது என்றும், அது முதல் இத்தலம்  பட்டிசரம் என்ற திருநாமம் பெற்றது என்றும் கூறுகின்றது. பட்டிசரம் சிவாலயத்தின் வடக்கு ராஜ வீதியை  ஒட்டி தழுவக் குழைந்தானான ஈசன் கோயில்  கொண்டுள்ள ‘‘திருச்சத்தி முற்றம்’’ திகழ்வதால் இவ்விரு தலங்களும் உமாதேவியோடு  தொடர்புடையவை.

திருஞானசம்பந்தப் பெருமானுக்கு பட்டிசரத்துப் பெருமான் கோடை வெயிலில் முத்துப்பந்தலை சிவகணங்கள் வாயிலாக அனுப்பி அருளிய திறத்தை  சேக்கிழார்  பெருமான் பெரியபுராணத்தில் விரிவுற எடுத்துரைத்துள்ளார். திருவலஞ்சுழி வழிபட்ட திருஞானப்பிள்ளையார் அடியார் குழாத்தோடு ஆறை  மேற்றளி வணங்கி  திருச்சத்திமுற்றம் வந்தடைந்தார் என்றும், அப்போது கடுங்கோடைகாலம் என்பதால் வெய்யிலின் வெப்பம் ஞானக்குழந்தையைத்  தாக்காவண்ணம் சிவபூதங்கள்  மூலம் குளிர்ந்த முத்துப்பந்தலை அவர் செல்லு மாடங்களுக்கு மேலாக எடுத்து வரச் செய்தாராம். இதனைச் சேச்கிழார்  பெருமான்,

‘‘வெம்மை தரு வேனிலிடை வெயில் வெப்பம் தணிப்பதற்கு
மும்மை நிலைத் தமிழ்விரகர் முடிமீதே சிவபூதம்
தம்மை அறியாதபடி தண் தரளப்பந்தர் எடுத்து
எம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர் என்றியம்ப
அவ்வுரையும் மணிமுத்தின் பந்தரும் ஆகாயம்எழச்
செவ்விய மெய்ஞானமுணர் சிரபுரத்துப் பிள்ளையார்
இவ்வினைதான் ஈசன் திருவருளாகில் இசைவதென
மெய்வரவு புளகமுடன் மேதினியின் மிசைத் தாழ்ந்தார்’’
- என்று தன் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பூதகணங்கள் முத்துப்பந்தலை மேலே பிடித்துவர அதன் குளிர் நிழலில் நடந்து பட்டிசரத்து கிழக்குக் கோபுரவாயில் வழி கோயிலுக்குச் சென்ற  திருஞானசம்பந்தர்  பட்டீச்சரத்துப் பெருமானை வணங்கி பதிகம் பாடினார் என்பது வரலாறு. அவ்வாறு ஞானக்குழந்தையார் முத்துப்பந்தல் நிழலில்  வருவதைக் காணவிரும்பிய  இத்தலத்து ஈசனார் கருவறையிலிருந்து நெடுங்கோபுரம்வரை வழியில் பார்வையை மறைத்துக் கிடந்த இடபங்களை  விலகச் செய்தாராம். தற்போது  இவ்வாலயத்துக் கிழக்குக் கோபுரவாயிலிலிருந்து கருவறை லிங்கப்பெருமான் இருக்குமிடத்தை நோக்குவோமாயின்  முன்றிலில் கிடக்கும் எல்லா இடபங்களும்  விலகியே இருப்பதைக் காணலாம். திருப்புன்கூரில் நந்தனாரைப் பார்க்க ஈசன் இடபங்களை விலக்கியது  போன்றே இத்தலத்தில் ஞானக்குழந்தையின் வரவைப்  பார்க்க ஈசன் இடபங்களை விலக்கியுள்ளார்.

நெடுமதில்கள் நாற்றிசையும் சூழ்ந்து நிற்க நான்கு திருவாயிற் கோபுரங்களோடு இப்பெருங்கோயில் திகழ்கின்றது. ராஜகோபுரம் கடந்து இரண்டாம்  கோபுரம்  செல்லும் வழியில், கருவறைக்கு நேர்கோட்டில் அமையாமல் சற்று விலகிய நிலையில் கணபதியார் ஆலயமும், ஸ்ரீபலிபீடமும்,  இடபக்கொட்டிலும் திகழ,  இரண்டாம் கோபுரவாயிலுக்கு முன்பாக தென்புறம் இவ்வாலயத்துத் திருக்குளம் உள்ளது. பட்டீச்சர மான்மியம் பட்டி என்ற பசு  தனி பூஜைக்காக  ‘‘ஞானபுஷ்கரிணி’’ என்ற இத்தீர்த்தக் குளத்தைத் தோற்றுவித்ததாகக் கூறுகின்றது. இரண்டாம் கோபுரத்தைக் கடந்தால் பெரிய  முகமண்டபம் திகழ்கின்றது.  இம்மண்டபம் விஜயநகரப் பேரரசர் வீரப்பிரதாப தேவராயரால் திருமலை தேவராயர் துணையுடன் எடுக்கப் பெற்றதாக  சிலாசாசனங்கள் வாயிலாக அறிய  முடிகிறது.

அவர்கள் தம் திருவுருவ சிலைகள் அம்மண்டபத்துத் தூண்களில் உள்ளன. அத்திருப்பணியின் போது எடுக்கப்பெற்றவையே மதவாரணப் பிள்ளையார்,  பைரவர்,  முருகப்பெருமான், துர்க்கை போன்ற பிரமாண்டமான இத்தலத்துத் தெய்வத் திருமேனிகளாகும். மூலவர் திகழும் கருவறையின்  கோஷ்டங்களில் கணபதிப்  பெருமான், ஆலமர்ச்செல்வர், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகிய திருமேனிகள் உள்ளன. திருச்சுற்றில் சப்த மாதர்கள்,  ரேணுகாதேவி, ஸ்வர்ண விநாயகர்,  மகாலிங்கர், பாலமுருகன், ஷண்முகர், ராமலிங்கர், மகாலட்சுமி, சண்டீசர் ஆலயங்கள் இடம் பெற்றுள்ளன.  பல்லவர் காலத்தில் இவ்வாலயத்தில் இடம்  பெற்றிருந்த புராதனமான சண்டீசர் சிற்பம் திருச்சுற்று மண்டபத்தின் ஒருபுறம் வைக்கப் பெற்று காட்சி  நல்குகின்றது. ஆலயத்துள் வடபுறம் கிழக்கு நோக்கியவாறு  அம்பிகையின் தனித்த ஆலயம் திகழ்கின்றது.

அங்கு தஞ்சை நாயக்க அரசர்களுக்கும் பிரதானியாகத் திகழ்ந்த கோவிந்த தீட்சிதர் அவர்தம் துணைவியார் நாகமாம்பிகை அம்மை ஆகியோர் தம்  திருவுருவச்  சிலைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாலயம் தீட்சிதரால் திருப்பணி  பெற்றதாகும். இவ்வாலயத்துக்குரிய பழமையான சோழர்கால  கல்வெட்டுகள் இடப  மண்டபத்துத் தூண்கள், அதிட்டானம் ஆகிய பகுதிகளில் மட்டுமே காணப்பெறுகின்றன. அவை சோழ மன்னர்கள் கால  நிவந்தங்கள் பற்றி குறிப்பிடுகின்றன.  திருஞானசம்பந்தன் மடம், திருநாவுக் கரையன்மடம், திருமூலதேவன் மடம் என்ற மடங்கள் பற்றியும்  குறிப்பிடுகின்றன. இறைவன் பட்டிசுரர் என்றும், தேனுபுரீசர்  என்றும் அழைக்கப் பெறுகின்றார்.

அம்பிகையின் திருநாமங்களாக ஞானாம்பிகை பல்வளை நாயகி என்ற திருப்பெயர்கள்  விளங்குகின்றன. தற்காலத்தில் வடக்குக் கோபுர வாயிலின்  எதிரே  கோயிலினுள் அமைந்துள்ள தனித்த துர்க்கை சந்நதி மகத்துவம் பெற்ற வழிபாட்டு ஆலயமாக விளங்கி வருகின்றது. வெள்ளிக்கிழமை தோறும்   பல்லாயிரக்கணக்கானோர் இத்துர்க்கையை வழிபட்டுச் செல்கின்றனர். இவ்வாலயத்தின் மண்டப சுவர்களிலும், மண்டப விதானங்களிலும், விஜயநகர  அரசு  காலத்திலும், தஞ்சை நாயக்க அரசர்கள் காலத்திலும் தீட்டப் பெற்ற எழிலார் ஓவியங்கள் மிகுதியாக இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு  கும்பாபிஷேக  திருப்பணியின்போதும் அவற்றின் பெருமை அறியாதார், பகுதி பகுதியாக சிதைத்து விட்டனர். இரண்டாம் கோபுரப் பகுதியில் இருந்த  திருஞானசம்பந்தருக்கு  முத்துப்பந்தல் அருளிய காட்சி ஓவியம் நாம் இழந்த அரிய ஓவியமாகும்.

முதற் திருச்சுற்றின் தென்புற மண்டப விதானத்தில் காவிரி நதியும், அதன் கரைகளில் இருந்த சிவாலயங்களும், தீர்த்தக் குளங்களும் வண்ணமிகு  ஓவியக்  காட்சிகளாக இடம் பெற்றிருந்தன. நதியில் எவ்வாறெல்லாம் மீன் வேட்டையாடுவர் என்பதை பல காட்சிகள் வாயிலாக சித்தரித்திருந்தனர்.  அதில் ஒரு  காட்சியாக மீனவன் ஒருவன் படகில் அமர்ந்து துடுப்பால் வலிக்க, மற்றொரு மீனவன் நீண்ட கழியில் சொருகப் பெற்று கயிறால்  பிணைக்கப் பெற்ற சுளுக்கில்   ஒரு மீன் சிக்கிக்கொண்டு, தன் உடலில் செருகப் பெற்ற சுளுக்கியோடு நீரில் நீந்துகின்றது. அம்மீனவன் மீண்டும் ஒரு  மீனை வேட்டையாட மற்றொரு  சுளுக்கியை கையில் எடுத்துக் கொண்டு தயார் நிலையில் திகழ்கின்றான்.

பட்டீசரத்தில் திகழும் இம்மீன்பிடி காட்சி கொண்டு இக்கட்டுரை ஆசிரியர் சங்கத்தமிழ் நூலான அகநானூற்றின் நித்திலக்கோவை நெய்தல் திணையில்   அமைந்துள்ள பாடலொன்றில் (பா.எண். 340) காணப் பெற்ற மீன்பிடி காட்சி பற்றிய பாடபேதம் ஒன்றுக்கு ஏற்புடைய விளக்கத்தினையும், சரியான  பாடத்தையும்  சுட்டிக்காட்ட இயன்றதோடு அம்மீனவனின் கரத்தில் உள்ள மீன்பிடி கருவியான சுளுக்கி என்பதற்கு சங்க காலப் பெயர் ‘‘கூர் வாய்  ஏறியுளி’’ என்பதையும்  சான்றுகளுடன் நிறுவ இயன்றது. ஒரு சங்கப் பாடலுக்கு தெளிவு காட்டிய சிறப்பு பட்டிசரத்து ஓவியக்காட்சிக்கு உண்டு. அங்கு  திகழும் ஓவியக்காட்சிகளை  திருப்பணி என்ற பெயரால் நாளும் நாளும் அழித்து வருவது வேதனை தருவதாகும்.

கி.பி. 1634ம் ஆண்டுக்குரிய நாயக்கர்கால கல்வெட்டொன்று திருக்கோபுரச் சுவரில் உள்ளது. பட்டிசரத்திலிருந்த பட்டு நூல்காரர்களுக்கும்,  செட்டிமார்களுக்கும்  தங்கள் குடும்பத் திருமண விழாக்களின்போது யாருக்கு அடைக்காய் அமுது (வெற்றிலைப் பாக்கு) அளிப்பதில் முன்னுரிமை  என்பது பற்றி ஒரு வழக்கு முறி  ஏற்பட்டு, அதன்படி 5 பணம் மதிப்புடைய புடவையும், 30 பாக்குகளும், 100 வெற்றிலையும் திருக்கோயிலுக்கு  அளிப்பதுதான் முதற் கடமை என தீட்டிதர் அய்யன்  அளித்த தீர்ப்பு கூறப் பெற்றுள்ளது. சமூகத்தில் ஏற்படும் வழக்குகளுக்கு திருக்கோயில்கள்  மூலமாக ஆட்சியாளர்கள் தீர்வு கண்டனர் என்பதை இதனால்  அறியலாம். பழையாறை எனும் பழம்பதியில் திகழும் பட்டிசரம் சென்று பட்டீசரை  வழிபட்டு சிவனருள் பெற்றுய்வோம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment