Wednesday, 4 July 2018

கஜாரண்யேஸ்வரர் திருக்கோவில்

தஞ்சை  - அரங்கநாதபுரம்

புகழ்பெற்ற கோச்செங்கட்சோழன் கட்டியது தஞ்சை ரங்கநாதபுரத்தில் உள்ள கஜாரண்யேஸ்வரர் ஆலயம். அரங்கநாதபுரம் என்ற இந்த ஊர் சோழர்காலத்தில் வடக்கிலிருந்து வந்த வடராயா என்ற அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டதால் வடராயமங்கலம் என்ற பெயரைப் பெற்றது. எனவே வடராய மங்கலத்தில் உள்ள ஆனைக்கார பெருமானார் கோவில் என்பது, இவ்வூரில் உள்ள கஜாரண்யேஸ்வரர் என்ற இந்த கோயிலையே குறிக்கும். இங்கு அருட்பாலிக்கும் இறைவன், கஜாரண்யேஸ்வரர். இறைவனின் வேறு பெயர்கள்: ஆனேசர்,  கரிவனநாதர்,  ஆனைக்காரப் பெருமானார், கஜ ஆரோகணேஸ்வரர், திருவானேஸ்வரர். இறைவியின் பெயர், காமாட்சி. ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருந்தாலும் மேற்கு புற வாயிலையே பயன்படுத்துகின்றனர். அழகிய சுற்று மதிலைக் கொண்ட இக்கோவிலுக்கு வடபால் சிறிய ராஜகோபுரம் உள்ளது. அதன் எதிரே தீர்த்தக் குளம் உள்ளது.

ஒரு சமயம் இந்திரனின் யானையான ஐராவதம், மெய்மறந்து நியமம் என்ற ஊரில் சிவபெருமானை வழிபாடு செய்தது. அதைத் தேடிவந்த இந்திரன் கோபம் கொண்டு அந்த யானையின் மீது தனது வஜ்ராயுதத்தை வீசினான். அப்போது சிவபெருமான் செய்த ஊங்காரத்தால் அந்த வஜ்ராயுதம் கஜாரண்யத்தலத்தில் வந்து விழுந்தது. அது குத்திய இடத்தில் நீரூற்று பீறிட்டது. அதுவே வஜ்ஜிரத் தீர்த்தமாயிற்று. இந்திர சாபம் என்ற தீர்த்த கிணறும், ஆலயத்தின் கிழக்கு திருச்சுற்றில் உள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடி தனது செயலுக்கு வருந்தி, இறைவனை வணங்கி பேறு பெற்றானாம் இந்திரன். இந்த மாடக்கோயிலின் முன்பகுதியில் முன்னங்கால்களை ஊன்றி நிற்கும் யானையின் முகம் சிற்பமாய் அமைந்துள்ளது. இத்தல இறைவன் அந்த யானை மீது அமர்ந்துள்ளது போலவே தோன்றும். இதனாலேயே இறைவன் கஜஆரோகணேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். காளையை வாகனமாகக் கொண்ட சிவபெருமானுக்கு இவ்வூரில் யானையும் வாகனமாக அமைந்துள்ளது சிறப்புதானே!

ஆலயத்தின் தென்திசை படிக்கட்டுகளில் ஏறினால் மகாமண்டபத்தை அடையலாம். வலதுபுறம் அன்னை காமாட்சி நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இன்முகம் காட்டி, மேல் இரு கரங்களில் தாமரை மலரை ஏந்தி, கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருட்பாலிக்கிறாள். மகா மண்டபத்தின் மத்தியில் நந்தி. அர்த்த  மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில்  இறைவன் கஜாரண்யேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருட்பாலிக்கிறார். இறைவனின் மேனியில் நடுவே பிரம்ம ரேகை எனப்படும்  ஒரு கோடு உள்ளது. தீ ஜ்வாலையின் அடிபாகம் சற்றே அகன்றும் மேலே  செல்லச் செல்ல, குறுகியும் செல்வதுபோல் அந்தக் கோடு அமைந்துள்ளதால், இறைவன் ஜோதி சொரூபமானவர் என்கின்றனர் பக்தர்கள். மாடக்கோயிலின் தென்புறம் தென்முகக் கடவுளும் வடபுறம் விஷ்ணு துர்க்கையும் எழுந்தருளியுள்ளனர். தட்சிணாமூர்த்திக்கு எதிரே தல விருட்சமான வில்வமரம் தழைத்தோங்கி நிற்கிறது.

ஆலயத்தின் தென்மேற்கு திசையில் பல்லவர் கால கட்டிட அமைப்பைக் கொண்ட வலம்புரி விநாயகர் ஆலயம் உள்ளது. அடுத்து முருகன்வள்ளிதெய்வானனை சந்நதியும், மகாலட்சுமி ஆலயமும் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில் சண்டீஸ்வரர் சந்நதியும், வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் சந்நதியும் உள்ளன.  பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கான ஆலயம் இது. தினசரி இரண்டுகால பூஜை, பிரதோஷம், மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், கந்த சஷ்டி, கார்த்திகை யாவும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி பௌர்ணமியில் இறைவனுக்குப் பலநூறு பக்தர்கள் முன்னிலையில் அன்னாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரியின் போது அன்னையை ஒன்பது நாட்களும் விதம் விதமாக அலங்காரம் செய்வதும் அதைக் காண பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வருவதும் வழக்கமான ஒன்று.

குழந்தைப் பேறு கிடைக்கவும், கடன்களிலிருந்து நிவாரணம் பெறவும், உடல் பிணிகள் தீரவும், பித்ரு தோஷம், கிரக தோஷம் நீங்கவும், ஏழு மாதங்கள்,  பூரட்டாதி நட்சத்திரத்தன்று இறைவனுக்கும் இறைவிக்கும் அர்ச்சனை செய்து ஏழாவது மாதம் அபிஷேக ஆராதனைகள் செய்து, அன்னதானம் செய்தால்  பூரணமாக விடுபடலாம் என்கின்றனர். சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் ஆலய கும்பாபிஷேக நாள் அன்று நடைபெறும் சிறப்பு ஹோமங்களில் ஏராளமான பேர் கலந்துகொண்டு பயன்பெறுகின்றனர். அன்று அன்னதானமும் நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். பிரதான சாலையில் இறங்கி 2 கி.மீ. நடக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மினி பஸ் வசதி உண்டு. திருக்காட்டுப்பள்ளியிலிருந்து ஆட்டோவில் செல்வது நல்லது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment