ஆரல்வாய்மொழி தாணுமாலயன்புதூரில் உள்ளது சங்கிலி பூதத்தார் கோவில். இந்த கோவிலில் தளவாய் மாடன், பிரம்ம சக்தி, இசக்கியம்மன், நாகலிங்கம், அகஸ்தியர் ஆகிய தெய்வங்கள் இருக்கின்றன. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள், பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் இருந்து மண் பிடி எடுத்து இந்த ஆலயத்தை நிறுவி உள்ளனர். ஆலயத்தில் இசக்கி அம்மனுக்கு தனி ஆலயம் அமைக்காததால் ஒரு வேப்ப மரத்தில் அம்மன் குடியிருந்ததாக கூறப்படுகிறது. கோவிலில் உள்ள தெய்வங்கள் மண் பீடமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெய்வங்களுக்கு பயன்படுத்துகின்ற வாசனை திரவியங்களில் மீதமுள்ளதை கோவில் வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தில் ஊற்றுவது வழக்கமாம். இந்த வேப்ப மரத்தில் இசக்கியம்மன் குடியிருப்பது பக்தர்களுக்கு தெரியாதாம். இந்த நிலையில் கோவிலினை புதுப்பிக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்காக பரிகார பூஜை நடந்தது. பூஜையின் போது கோவிலில் ஒரு நாகம் வந்து செல்வதாகவும், பக்தர்கள் கண்களில் அது தென்படாது என்றும் கூறப்பட்டதாம்.
நாகம் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவதாகவும், ஆகவே கோவில் வளாகத்தில் சிலை வைத்து வணங்க வேண்டும் எனவும், சிலை எங்கு வைக்க வேண்டும் என்பது சில அறிகுறி மூலம் தெரியும் எனவும் கூறப்பட்டது. கோவில் கட்டும் பணி தொடங்கிய நிலையில் கல்போடுகின்ற நிகழ்ச்சிக்காக நிர்வாகிகள் கூடி நின்றனர். அப்போது முந்தைய நாள் பரிகார பூஜைக்காக போடப்பட்ட ஹோமகுண்டத்தில் இருந்து ஒரு நாகம் வந்து நிர்வாகிகளின் அருகே வந்து கோவிலின் ஈசான மூலையில் வந்து சுருண்டு கிடந்துள்ளது. மீண்டும் நிர்வாகிகள் நிற்கும் இடத்திற்கு வருவதுமாக இருந்ததாகவும் ஒரு கட்டத்தில் அருகே கிடந்த கல் இடுக்கில் சென்ற நாகம் திடீர் என்று மறைந்துவிட்டது எனவும் கூறப்படுகிறது. பின்னர் கோவில் நிர்வாகத்தினர் நாகம் வந்து நின்ற ஈசான மூலையில் நாகருக்கு கோவில் அமைத்துள்ளனர். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் நின்ற வேப்பமரமும் வெட்டபட்ட நிலையில், கோவில் வளாகத்தில் சங்கிலிபூதத்தார், தளவாய் மாடன், பிரம்ம சக்தி, நாகலிங்கம், அகஸ்தியர் ஆகிய தெய்வங்கள் நிறுவப்பட்டு கும்பாபிஷேகமும் நடந்தது.
கும்பாபிஷேகம் நடந்து சில வாரங்களில் நிர்வாகிகளின் கனவில் ஒரு சிறு குழந்தை வந்து தான் வெளியில் நிற்பதாகவும் என்னை உடனே உள்ளே அழைத்து வாருங்கள் என கூறியது நிர்வாகிகளுக்கு ஒன்று போல் தோன்றியுள்ளது. இதனால் நிர்வாகிகள் ஒன்று கூடி மீண்டும் பூஜை செய்து பார்த்த போது, இசக்கியம்மன் இருந்ததாகவும் அம்மன் குழந்தை உருவத்தில் வந்ததாகவும் கூறப்பட்டது. எனவே கோவில் நிர்வாகத்தினர் ஒரு வேம்ப மரம் புதிதாக நட்டு அதில் இசக்கியமனை குடியமர்த்தி பூஜை செய்தனர். ஆனால் அந்த மரம் பல மாதம் ஆன பின்னரும் வளராமல் அப்படியே இருந்தது. இதனால் மீண்டும் பூஜை செய்து பார்த்த போது இசக்கியம்மனுக்கு புதிதாக தனி இருப்பிடம் அமைக்க வேண்டும் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து நிர்வாகத்தினர் இசக்கியம்மனுக்கு தனியாக மண்டபம் அமைத்தனர். அடுத்த நாளே வேப்பமரம் முற்றிலும் காய்ந்து விட்டது.
இதனை அந்த பகுதி பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். எனவே இசக்கியம்மன் தன் இருப்பிடத்தை கேட்டு வாங்கி பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார். இது போன்று இங்கு அமைந்துள்ள சங்கிலி பூதத்தார் சுவாமி இரவு நேரங்களில் இவ்வூர் மக்களை காவல் காப்பதாக கூறப்படுகிறது. அதாவது இரவு நேரங்களில் தெருக்களில் சங்கிலி சத்தம் கேட்பதாகவும், இந்த பகுதியில் சங்கிலி பூதத்தார் சுற்றி வருவதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும் இந்த கோவில் அம்மன் வாசலில் இரவு நேரத்தில் தலைமுடியினை விரித்து காயப்போடுவது போன்று இருந்துள்ளது. இதனை பார்த்த ஒரு மாற்று மதத்தை சேர்ந்த பெண் தனக்கு தெரிந்த பெண் தான் இருப்பதாக நினைத்து கூப்பிடுள்ளார். திரும்பியதும் அதிர்ச்சி அடைந்த அந்த மாற்று மதத்தை சேர்ந்த பெண் அந்த பகுதி பொது மக்களிடம் தெரிவித்துள்ளார். இதன் பிறகு வெள்ளி மற்றும் செவ்வாய்கிழமைகளில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு வெள்ளிகிழமைகளில் வெளியூர்களில் இருந்து அதிகமான பக்தர்கள் வந்து தங்களின் குறைகளை தெரிவித்து செல்கின்றனர். இப்படி தெரிவிக்கப்படும் குறைகள் அனைத்தும் உடனே தீர்ந்து விடுவதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment